12 மணி நேர வேலை: "அதிமுக கொண்டுவந்த போது எதிர்த்ததை திமுக இப்போது செய்யலாமா?" - கட்சிகள் சொல்வது என்ன?

12 மணி நேர வேலை திருத்த சட்டம்

பட மூலாதாரம், M.K.STALIN

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் பெரும் எதிர்ப்புக்கு நடுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொழிலாளர் நிலையை மேலும் மோசமாக்கும் என தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே சுட்டிக்காட்டுகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கடுமையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதிய சட்டத்திருத்தம் கூறுவது என்ன?

இந்தச் சட்டத்தின் பெயர் 2023ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் என்பதாகும்.

இந்தச் சட்டத்தைப் பொருத்தவரை, மத்திய அரசின் 1948ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் சட்டத்தை அடிப்படையாக வைத்தே இயற்றப்பட்டிருக்கிறது. இது, 1948ஆம் ஆண்டு சட்டத்தின் 65வது விதிக்குக் கீழே புதிய விதி ஒன்றைச் சேர்க்கிறது. இந்த விதி 65 - ஏ என்று அழைக்கப்படும். இது சிறப்பு நேர்வுகளில் விலக்களிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.

அதன்படி, 1948ஆம் ஆண்டு சட்டத்தின் 51, 52, 54, 56, 59ஆம் பிரிவுகளின் விதிகள் சிலவற்றில் இருந்தோ, அல்லது அனைத்திலும் இருந்தோ விலக்களிக்க இந்தச் சட்டத்திருத்தம் வழிவகுக்கிறது.

இப்போது மேலே சொன்ன பிரிவுகள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம். பிரிவு 51 தொழிலாளர்களின் வேலை நேரத்தை வரையறுக்கிறது. எந்த ஒரு பணியாளரும் எந்த ஒரு வாரத்திலும் 48 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது. 52வது பிரிவு வார விடுமுறையை வரையறுக்கிறது. ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பதை இது வலியுறுத்துகிறது.

12 மணி நேர வேலை, சட்டம், தமிழ்நாடு, சட்டப்பேரவை

54வது பிரிவானது, எந்த ஒரு ஊழியரும் ஒரு நாளில் 9 மணி நேரத்திற்கு மேல் பணியாற்ற அனுமதிக்கப்படக்கூடாது என்கிறது. 56வது பிரிவானது, இடைவெளி நேரம் எல்லாவற்றையும் சேர்த்தாலும்கூட, ஒரு நாளில் பத்தரை மணி நேரத்திற்கு மேல் வேலை நேரம் இருக்கக்கூடாது என்கிறது. 59வது பிரிவானது, ஒரு தொழிலாளர் ஒரு நாளில் ஒன்பது மணி நேரத்திற்கு மேல் வேலை பார்த்தால், அவருக்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரட்டிப்புச் சம்பளம் தர வேண்டும் என்கிறது.

மேலே சொன்ன ஐந்து பிரிவுகளும் தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்த பிரிவுகளாகும். இந்த விதிகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு விளக்களிக்க மாநிலஅரசு அனுமதிக்க மேலே சொன்ன சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.

அமைச்சர்கள் சொல்வது என்ன?

12 மணி நேர வேலை, சட்டம், தமிழ்நாடு, சட்டப்பேரவை

பட மூலாதாரம், Facebook/Thangam Thenarasu

இந்த மசோதாவுக்கு தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. இதையடுத்து சட்டமன்றக் கூட்டம் முடிவடைந்ததும் பேரவை வளாகத்திலேயே தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசனும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்வது என்ற தற்போதைய நிலையே நீடிக்கும் என்பதால், வேலை நாட்கள் குறையும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் கூறினார்.

"திருத்தி அமைக்கப்பட்டுள்ள 65-ஏ பிரிவின் படி, நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் நலன் பாதிக்காத வகையில், அவர்களின் ஒப்புதலுடன் மட்டுமே இதை நடைமுறைப்படுத்த முடியும். ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வேலை நேரம்தான் வேலை பார்க்க முடியும். அதில் மாற்றம் ஏதும் இல்லை. எந்த தொழிற்சாலை விரும்புகிறதோ, அந்த தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும்" என்றார்.

இதற்குப் பிறகு பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்ற நிறுவனங்கள் பணி நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்ப்பதாகக் கூறினார். "தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் வேலை நேரத்தில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும். மின்னணுவியல் துறை, தோல் பொருட்கள் இல்லாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னணுவியல் தொகுப்புத் தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணியாற்றுபவர்கள், அவர்கள் வேலை பார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்" என்றார் தங்கம் தென்னரசு.

மேலும், இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் ஒரு வாரத்திற்கான ஒட்டுமொத்த வேலை நேரம் என்பது மாறாது என்றும் இந்த மசோதாவின்படி வேலை செய்பவர்கள், 4 நாட்கள் தினமும் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு, மீதமுள்ள 3 நாட்கள் ஓய்வெடுக்கலாம் என்றும் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார். இந்த மசோதா எந்தெந்தத் தொழிற்சாலைகளுக்குப் பொருந்தும் என்பது குறித்த விதிகள் வகுக்கப்பட்டு, வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். அது தவிர, ஒரு தொழிலாளர் 12 மணி நேரம் வேலை செய்கிறார் என்றால், அதற்கேற்ற வசதிகள் இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்துத்தான் இந்த அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சட்டத்திருத்தத்திற்கு நிலவும் கடும் எதிர்ப்பு

12 மணி நேர வேலை, சட்டம், தமிழ்நாடு, சட்டப்பேரவை

இந்த சட்டத் திருத்தத்திற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றன. இது உழைப்புச் சுரண்டலை ஊக்கப்படும் என கடுமையாக விமர்சித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி. "சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானது. வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், குடும்ப நலன் என்பனவற்றைக் கவனிக்க வேண்டாமா? விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டல்தான்" என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இடதுசாரிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்கும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், "2020ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை தி.மு.க கடுமையாக எதிர்த்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எட்டு மணி நேர வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்தியதற்கு தி.மு.கவின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

நிலைமை இப்படி இருக்கையில், நெகிழ்வுத் தன்மை என்பது தொழிலாளியை ஒட்டச் சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்கு புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது. வேலை நேரம் குறித்த எந்த சட்டத்திற்கும் மதிப்பளிக்க வேண்டியதில்லை என்பதற்கான ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சட்டங்களே தேவையில்லை என்பதற்காக சட்டம் இயற்றுவதாகும். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசோதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டும்" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.

12 மணி நேர வேலை என்ன பாதிப்புகளை ஏற்படுத்தலாம்?

12 மணி நேர வேலை, சட்டம், தமிழ்நாடு, சட்டப்பேரவை

பட மூலாதாரம், Getty Images

இப்போதே தொழிலாளர்களின் நிலை மிக மோசமாக இருக்கும்போது, 12 மணி நேரம் வேலை பார்க்க அனுமதித்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கும் என்கிறார் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சங்கத்தைச் சேர்ந்த கீதா ராமகிருஷ்ணன்.

"இது ஒரு மிக மோசமான சட்டத்திருத்தம். ஏற்கனவே தமிழ்நாட்டில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலைபார்க்க வைக்கப்படுகிறார்கள். திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளிலும் பின்னலாடைத் தொழிற்சாலைகளிலும் 12 முதல் 14 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் வந்துவிட்டால் என்ன ஆகும்?" எனக் கேள்வி எழுப்புகிறார் கீதா.

"ஐரோப்பிய நாடுகளில் 8 மணி நேர வேலைக்குப் பதிலாக ஆறு மணி நேர வேலை என்பதை அமல்படுத்த வேண்டும்; அப்போதுதான் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என விவாதித்துவருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்" என்கிறார் கீதா.

4 நாட்கள் 12 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு, 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினாலும், அப்படி நடக்க எந்தத் தொழிற்சாலையும் அனுமதிக்காது. மேலும் இது குறித்துப் போராட யூனியன்கள் வலுவாக இல்லாத நிலையில், தொழிலாளர் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்கிறார் அவர்.

மத்திய அரசு முதலில் இதுபோல சட்டத்தைத் திருத்தியபோது இந்தியாவில் உள்ள பல்வேறு யூனியன்கள் இதனை எதிர்த்ததால், மாநிலங்களின் பொறுப்பில் இதனை விட்டுவிட்டது. 2020ஆம் ஆண்டு மே மாதம் உத்தரப்பிரதேசத்தில் இதுபோல சட்டம் திருத்தப்பட்ட நிலையில், இதனை எதிர்த்து பொது நல வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், அங்கு அம்மாநில அரசே அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றது.

கடந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இதேபோல தொழிலாளர் நலச் சட்டம் திருத்தப்பட்டது. அப்போது இரண்டு செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்காகவே இந்தச் சட்டம் திருத்தப்பட்டதாக அம்மாநில அரசு வெளிப்படையாகச் சொன்னது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, எந்தத் தொழிற்சாலைக்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்பது சொல்லப்படாவிட்டாலும், எந்தெந்தத் தொழில்துறைகளுக்காக இது கொண்டுவரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"ஆனால், இதுபோல ஒரு திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு முன்பாக, யூனியன்களுடன் பேச வேண்டாமா? யூனியன்களுடன் தொழிலாளர்களுடன் எதுவும் பேசாமல், தொழிற்சாலைகள் சொல்கின்றன என்பதற்காக எப்படி இப்படி ஒரு திருத்தத்தைக் கொண்டுவருகிறார்கள்?" எனக் கேள்வியெழுப்புகிறார் கீதா.

ஆனால், இது பல புதிய சிக்கல்களைக் கொண்டுவரும் என்கிறார் மன நல மருத்துவரான சிவபாலன். "கொரோனா பரவலுக்குப் பிறகு மனநல பாதிப்பு வெகுவாக அதிகரித்திருக்கிறது. முக்கிய காரணம், வீட்டிலிருந்து வேலை பார்ப்பதுதான். வீட்டில் இருந்து வேலை பார்த்தால் நல்லதுதானே என பலர் கருதுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்து வேலை பார்க்கும்போது நேரம் காலம் இல்லாமல் வேலை பார்க்கிறார்கள். காலை 9 மணிக்கு வேலையை ஆரம்பித்தால் இரவு 10 -11 மணிவரைகூட வேலை நீள்கிறது. இது மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மனநல பிரச்சனைகளோடு வரும் ஐ.டி. பணியாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு காரணம் வேலைக்கும் தன் சொந்த வாழ்க்கைக்கும் இடையில் ஒரு சமநிலையை எட்ட முடியாததுதான்.

இப்போது ஐடி நிறுவனங்களில், பெரிய தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் முதல் தலைமுறையாக இம்மாதிரி நிறுவனங்களில் பணியில் சேர்கிறார்கள். அவர்களுக்கு நிறைய பொருளாதார கனவுகள் இருக்கின்றன. இதனால், அதிக நேரம் வேலை பார்க்க ஒப்புக்கொள்கிறார்கள். முடிவில் அது பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. கணவன் - மனைவிக்கு இடையில் பிரச்சனை வருகிறது. குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. வேலை நேரத்தை அரசு ஒழுங்குபடுத்த வேண்டிய காலம் உருவாகிவரும் நிலையில், இப்படி வேலை நேரத்தை அதிகரிப்பது உற்பத்தியை, வேலைத் திறனைக் கடுமையாக பாதிக்கும்" என்கிறார் சிவபாலன்.

பெண்களுக்கு சுமை அதிகரிக்கும்

12 மணி நேர வேலை, சட்டம், தமிழ்நாடு, சட்டப்பேரவை

பட மூலாதாரம், Getty Images

வேலை நேரம் அதிகரிப்பதில் பெண்களுக்குத் தான் சுமை அதிகம் ஏற்படும் என்கிறார் சிவபாலன். ஏனென்றால், அவர்கள் அலுவலக வேலையையும் பார்த்துக்கொண்டு வீட்டு வேலையையும் பார்க்க வேண்டியிருக்கும். இது நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்கிறார் அவர்.

ஆனால், பல தொழில்துறைகளில் வேலை நேரத்தை அதிகரித்து, விடுமுறைகளையும் அதிகரித்துத் தரும் போக்கு உலகம் முழுவதுமே பரவிவருகிறது. நான்கு நாட்கள் வேலை பார்த்தால், மீதமுள்ள மூன்று நாட்கள் தொழிற்சாலை இயங்காமல் இருப்பதன் மூலம் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்; 6 நாட்கள் வீட்டிலிருந்து பயணம் செய்து தொழிற்சாலைக்கு வருவதற்குப் பதிலாக, நான்கு நாட்கள் வந்தால் போதும் என்பதால் வாகன பயன்பாடு குறைந்து சூழல் மேம்படும் என்பது போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.

குறிப்பாக, பல வளர்ந்துவரும் நாடுகளில் முதலீடு செய்யவரும் மின்னணு நிறுவனங்கள், காலணி நிறுவனங்கள் முதலீட்டிற்கான முன் நிபந்தனையாகவே இதனை வைக்கின்றன. அம்மாதிரி ஒரு நிபந்தனை சார்ந்த ஒரு நடவடிக்கையாகவே தற்போது தமிழ்நாடு அரசு தனது தொழிலாளர் நலச் சட்டத்தைத் திருத்தியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: