இந்தியாவில் கொதிக்கும் வெயிலுக்கு பறிபோகும் உயிர்கள் – மக்கள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதது ஏன்?

கொதிக்கும் வெயில்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி இந்தியா

2020ஆம் ஆண்டு அதிகம் விற்கப்பட்ட நாவலான ‘தி மினிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்” நாவலை, அறிவியல் புனைவு எழுத்தாளர் கிம் ஸ்டான்லி ராபின்சன், 'இந்தியாவில் ஒரு மோசமான வெப்ப அலை ஏற்பட்டு லட்சக்கணக்கானவர்கள் உயிரிழப்பது' போல தொடங்கியிருப்பார்.

“வானம் ஒரு அணுகுண்டை போல வெடித்து, அதீத வெப்பம் முகத்தில் அறைகிறது. கண்கள் எரிந்து தள்ளுகிறது. எங்கும் தாங்க முடியாத வெள்ளை நிறம்.”

“நீரும் கொதிக்கிறது....அது காற்றைக் காட்டிலும் சூடாக இருக்கிறது. மக்கள் முன்பைவிட வேகமாக இறந்து கொண்டு இருக்கிறார்கள்.” என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

புவி வெப்பமடைதல் குறித்த ராபின்சனின் இந்த கதை ஒரு திகிலான எச்சரிக்கையாக உள்ளது.

முன்னதாக மகராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பையில் இந்த வார தொடக்கத்தில் அரசால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 12 பேர் அதீத வெப்பத்தால் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியா, வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய ஒரு நாடாகவுள்ளது. இங்கே பகல் பொழுது மட்டுமின்றி இரவும் அதிக உஷ்ணத்துடன் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 2050ஆம் ஆண்டுக்குள் இந்த நிலை இரண்டு அல்லது நான்கு மடங்கு வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலைகளும் கணிக்கப்பட்ட நாட்களுக்கு முன்னதாக வரும் என்றும், அதிக நாட்களுக்கு நீளமான வெப்ப அலை தொடரும் எனவும் கூறப்படுகிறது.

மே மாதம் முடியும் வரை வழக்கத்திற்கு மாறான வெப்பமும் வெப்ப அலைகளும் இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

1901 – 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தியாவின் சராசரி வெப்ப அளவு 0.7 சதவீத அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு பருவநிலை மாற்றமும் ஒரு காரணம்.

1992 – 2015ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அதீத வெப்ப அலையால் 22 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். “இருப்பினும் வெப்பம் குறித்தும், வெப்பத்தால் உயிரிழப்பது குறித்தும் இந்தியாவில் தீவிரமாக கருத்தில் கொள்ளப்படவில்லை,” என்கிறார் குஜராத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தின் இயக்குநர் திலிப் மெளலங்கர். இறப்பு எண்ணிக்கையை நாம் சரியாக கணக்கிடுவதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம் என்கிறார் அவர்.

2010ஆம் ஆண்டு ஆமதாபாத் நகரில் ‘பல காரணங்களால் நடந்த உயிரிழப்புகளின்’ எண்ணிக்கை 800 ஆக பதிவாகியது. கடந்த வருடத்தை காட்டிலும் அந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் பேர் உயிரிழந்தனர் என்பதால் இந்த 800 ஒரு அதிக எண்ணிக்கையாக பதிவானது.

வெப்பத்தால் பலர் உயிரிழந்தனர் என்பது உறுதி. ஆய்வாளர்கள், அந்த நாளில் பதிவான அதிகப்படியான வெப்பத்துடன் இறப்பு எண்ணிக்கைகளை ஒப்பிட்டு மூன்று நிற எச்சரிக்கையை வெளியிட்டனர். 45 செல்சியஸுக்கு மேல் பதிவான வெப்பத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை வழங்கப்படுகிறது.

வெப்பம்

பட மூலாதாரம், Getty Images

இந்த தரவுகளால் உந்தப்பட்ட பேராசிரிய மெளலங்கர், ஆமதாபாத் நகரில் வெப்பத்தை சமாளிக்கும் செயல்திட்டத்தை உருவாக்கினார்.

திட்டம் 2013ஆம் ஆண்டில் தொடங்கியது. அதில் வீட்டிலேயே தங்குவது, நிறைய நீர் அருந்துவது, வெளியில் செல்வதற்கு முன்பும் அதிக நீர் அருந்துவது, ஏதேனும் உடல் நிலை சரியாக இல்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது போன்ற அடிப்படையான விஷயங்கள் இருந்தன. 2018ஆம் ஆண்டு பல காரணங்களால் ஏற்படும் இறப்புகள் மூன்று மடங்கு குறைந்தது.

ஆனால் கெட்ட செய்தி என்னவென்றால் இந்தியாவின் வெப்பத்தை சமாளிக்கும் செயல்திட்டம், சரியாக செயல்படவில்லை என்பதுதான். நவி மும்பையில் அத்தனை பேர் கூடுவதற்கு முன்பு அதிகாரிகள் சரியான செயல்திட்டத்தை வைத்திருந்தனரா என்பதும் தெரியவில்லை.

நகரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் 37 வெப்ப செயல்திட்டங்களை ஆராய்ந்து, ஆய்வுக்கழகமான சென்டர் ஃபார் பாலிசி ரிசர்ச்சின் ஆதித்ய வலியதன் பிள்ளை மற்றும் தமண்ணா தலால், பல குறைபாடுகளை கண்டறிந்தனர்.

இதில் பல திட்டங்கள், “உள்ளூர் நிலைகளை ஆராய்ந்து வகுக்கப்படவில்லை. அதேபோல ஆபத்துகள் குறித்து அதிக தாக்கத்துடன் விவரிக்கப்படவிலை.”

தண்ணீர்

பட மூலாதாரம், Getty Images

37-ல் 10 ஆய்வுகள் மட்டுமே உள்ளூர் வெப்பநிலை குறித்து விவரித்தது. ஆனால் அதிலும் ஈரப்பதம் ஆகியவற்றை கணக்கில் எடுத்து கொண்டார்களா என தெரியவில்லை.

“பருவநிலை கணிப்புகளை உள்ளடக்கி வெப்பத்தின் அபாயத்தை நுணுக்கமாக தெளிவுப்படுத்த வேண்டும்” என்கிறார் பிள்ளை.

இதற்கு ஒரு வழி, கிராமங்களில் தானியங்கி வானிலை மையங்களை நிறுவ வேண்டும் என்கிறார் பேராசிரியர் மெளலங்கர்.

அதேபோல கிட்டத்தட்ட அனைத்து திட்டங்களும், அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்புள்ளவர்களை கண்டறிவதில் மோசமாக செயல்பட்டுள்ளன என அராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கட்டட தொழிலாளிகள், திறந்த வெளியில் வேலை செய்வோர், கர்ப்பிணி பெண்கள், முதியோர், மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் பட்டியலில் வருகின்றனர்.

சுமை தூக்கும் தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

நான்கில் மூன்று பங்கு இந்திய தொழிலாளிகள் அதிகம் வெப்பத்தை எதிர்கொள்ளக்கூடிய கட்டட வேலை, சுரங்க வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

“புவி வெப்பமடைதலால் திறந்தவெளியில் பாதுகாப்பாகவும், திறன்படவும் பணிபுரியும் திறனை பணியாளர்களை இழந்துவருகின்றனர். அதிக வெப்பம் நிறைந்த நாட்களில் அதிக வேலை செய்யும்போது உருவாகும் உடல் வெப்பத்தை, இந்த பணியாளர்களால் தனிக்க முடியவில்லை” என்கிறார் வடக்கு கரோலினாவில் உள்ள ட்யூக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லூக் பார்சன்ஸ்.

அதிக வெப்பத்தில் பணி செய்யக்கூடிய நபர்கள் எங்கே அதிகம் உள்ளனர். அவர்களால் கூலர் போன்ற சாதனங்களை வாங்க முடியுமா அல்லது பணியிலிருந்து விடுப்பு எடுக்க முடியுமா போன்ற விரிவான புரிதல் இந்தியாவுக்கு தேவை என்கிறார் பிள்ளை.

“சில இடங்களில் அந்த பகுதியின் 3 சதவீத அளவில் 80 சதவீத அளவு அதிகம் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் இருக்கலாம்.” என்கிறார் அவர். மேலும், இந்த திட்டங்கள் பலவற்றும் போதுமான நிதி இல்லை என்றும், வெளிப்படையானதாக இல்லை என்றும் பிள்ளை மற்றும் தலால் கண்டறிந்துள்ளனர்.

பல சமயங்களில் மரம் நடுதல் போன்ற எளிய தீர்வை நாம் கடைப்பிடிக்கலாம். அல்லது கட்டடங்களை வெப்பத்திற்கு ஏற்றாற்போல வடிவமைக்கலாம்.

heatwave

பட மூலாதாரம், Getty Images

சில சமயங்களில் ஏசி இல்லாத மருத்துவமனைகளில் உயர் மாடியிலிருந்து கீழ் மாடிக்கு நோயாளிகளை மாற்றுவது போன்ற சிறிய நடவடிக்கைகளும் கைக் கொடுத்துள்ளதாக அகமதாபாத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பணியிடங்களில் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்வதும், அல்லது அதிக வெப்பம் இருந்தால் பணியை தாமதப்படுத்துவதும், அதிக வெப்பநிலையில் பாதுகாப்பாற்ற சூழலிலும் பணி செய்ய வேண்டும் என்ற மனநிலையை பணியாளர்களுக்கு வழங்காது என்கிறார் பார்சன்ஸ்.

இந்தியாவில் 2000-2024 மற்றும் 2017 – 2021 காலப் பகுதியில் அதிக வெப்பத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 55 சதவீத அளவு அதிகரித்துள்ளதாக சமீபமாக லான்செட் மருத்துவ சஞ்சிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

2021 அதிகப்படியான வெப்பத்தால் 167.2 பில்லியன் பணி நேரம் வீணாகப்போனது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4% வருமானத்தை இழப்பதற்கு சமம்.

இருப்பினும் இந்தியர்கள் வெப்பத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வது போல தெரியவில்லை.

செய்திகளின்படி, ஞாயிறன்று நவி மும்பையில் அரசால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி நடைபெறும்போது 38 செல்சியஸ் வெப்பநிலை. இருப்பினும் அத்தனை பேர் திறந்தவெளியில் அமர்ந்திருப்பதை காணமுடிகிறது. இதில் சிலரின் கைகளில் தான் குடைகளும் துண்டுகளும் இருந்தன.

“நான் டெல்லியில் வாழ்கிறேன் இங்கு வெப்பநிலை 50டிகிரி செல்சியஸ் வரை கூட பதிவாகும். ஆனால் ஒரு சிலரே குடை கொண்டு வருவதை நம்மால் பார்க்க முடியும்.” என்கிறார் பிள்ளை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: