திங்கள் வந்தாலே சலிப்பாக இருக்கிறதா? வாரத்தின் முதல் நாளை உற்சாகமாக தொடங்குவது எப்படி?

women

பட மூலாதாரம், Getty Images

அலுவலக நாட்களின் முதல் நாளான திங்கட்கிழமையை நினைத்தாலே உங்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறதா? பரவாயில்லை; அப்படியான வெறுப்பு உங்களுக்கு மட்டுமல்ல இங்கு பெரும்பாலான மக்களும் அதே மனநிலையில்தான் இருக்கின்றனர்.

வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ விடுப்பு எடுத்து கொண்ட பிறகு மீண்டும் வேலைக்கு செல்வதையும், அதன் வழக்கமான செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதையும் இங்கு பலர் கடினமாக உணரலாம். இன்னும் சிலருக்கு அதனால் மனச்சோர்வும் , பதற்றமும் கூட ஏற்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் "சண்டே சிண்ட்ரோம்" (Sunday Syndrome)” என்று குறிப்பிடுகின்றனர்.

உங்களது திங்கட்கிழமைகளை அழகாக்க, ஒவ்வொரு வாரமும் உங்களுடைய வேலையின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் உங்களால் புதிது புதிதாக மாற்றிக்கொண்டிருக்க முடியாது. ஆனால் அதற்கு பதிலாக உங்களுடைய மூளையின் செயல்பாடுகளை உங்களால் மாற்றியமைக்க முடியும். அதாவது அந்தந்த குறிப்பிட்ட வாரங்கள் துவங்கும்போது, புதிய கோணத்தில் உங்களது மூளையை சிந்திக்க வைக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது கணிக்கக்கூடிய தன்மையையும், முறையான செயல்பாடுகளையும் நாம் தினசரி உருவாக்கிக்கொள்வதை நமது மூளை விரும்புகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

நம்முடைய அன்றாட நாட்களில் முறையான வாழ்க்கை பழக்கவழக்கங்களும், நடைமுறை செயல்பாடுகளும் இல்லாமல் இருப்பது, நம்மிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தி, உடல்நலம் குன்றுவதற்கு மற்றொரு காரணமாய் அமைகிறது என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நம்முடைய வாரயிறுதி நாட்களை மிகுந்த உற்சாகத்துடன் கழித்துவிட்டு, அதன்பின் மறுநாள் திடீரென வேலைகளுக்குள் ஈடுபடுவதை கையாள்வதற்கு, மனிதர்களின் மூளை கடினமாக உணர்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதேசமயத்தில் இத்தகைய நிலையில் எளிதாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கையளிக்கின்றனர். மூளைகளின் செயல்பாடுகளை மாற்றியமைத்து, அதனை அழுத்தம் இல்லாமல் செயல்பட வைப்பதற்கு நாம் சிறியளவு முயற்சிகளை எடுக்க துவங்கினாலே போதுமானது எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முறையான நடைமுறைகளை கடைபிடியுங்கள்

தூக்கம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

வாரயிறுதி நாட்களுக்கு பின் துவங்கும் புதிய வாரத்தை அழகாக மாற்றுவதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். உங்களது அன்றாட நாட்களில் பின்பற்றும் வகையில் முறையான நடைமுறை பழக்கவழக்கங்களை வடிவமைக்க வேண்டும். அப்படி நீங்கள் வடிவமைக்கும் அந்த அன்றாட நடைமுறை பழக்கவழக்கங்கள், உங்களது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி தொடரை காண்பது, தோட்டங்களை பராமரிப்பது அல்லது உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வது என எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம்.

இதுபோன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் . இப்படியான பழக்கவழக்கங்களை தொடர்ச்சியாக நாம் கடைபிடிக்கும்போது, நமக்குள்ளேயே ஓர் இணக்கமான உணர்வு ஏற்பட்டு, அன்றைய நாளில் நிலவும் மற்ற குழப்பங்களிலிருந்தும் தெளிவு கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக இத்தகைய பழக்கவழக்கங்களில் நாம் ஈடுபடும்போது, அது வேலை நாட்களாக இருந்தாலும் சரி, விடுமுறை நாட்களாக இருந்தாலும் சரி, நாம் அவற்றை தொடர்ந்து செய்துதான் ஆக வேண்டும். இது நம்மை நாமே மேம்படுத்திகொள்ள உதவும்.

காலை எழும் நேரத்தில் மாற்றம் இருக்கக்கூடாது

தூக்கம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

உங்களது வாரத்தை அழகாக மாற்றுவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு விஷயம், முறையான தூக்க நேரத்தை கடைபிடிப்பது.

தினமும் முறையான தூக்க நேரங்களை நீங்கள் கடைபிடித்தால், உங்களது தூக்கத்தின் திறன் அதிகரிக்கப்பட்டு, அதுவே ஆழமான உறக்கத்திற்கும் வழிவகுக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தினமும் ஆழமான உறக்கத்திற்கு நாம் செல்லும்போது, நமது மூளை உற்சாகமாக செயல்படுகிறது எனவும், அதுவே வார துவக்க நாட்களை மகிழ்ச்சியாக எதிர்கொள்வதற்கு உதவி செய்கிறது எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தூக்க நேரங்களில் தொடர்ச்சியாக மாற்றங்கள் ஏற்படும்போது மனிதர்களுக்கு சிக்கல்கள் உருவாகின்றன. குறிப்பாக வாரயிறுதி நாட்களில் பலரும் மிக தாமதமாகவே உறங்கச் செல்கின்றனர். இரவு நேரங்களின்போது சமூக வலைதளங்களில் அதிகமான நேரத்தை கழிப்பதற்கும் அதுவே காரணமாக அமைகிறது.

விடுமுறை நாட்களில் நாம் தூங்கும் நேரத்திற்கு மாறாக மிக தாமதமாக தூங்குவதும், வழக்கத்திற்கு மாறாக அதிகமான நேரத்தை உறக்கத்தில் செலவிடுவதும் நமது உடலில் பல முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நமது உயிரியல் கடிகார செயல்பாடுகளில் (Biological Clock) ஏற்படும் இத்தகைய மாற்றங்கள், அன்றாட வாழ்வில் நமக்கு இருக்கும் பொறுப்புகளை சரியாக மேற்கொள்ளவிடாமல் செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுவே திங்கட்கிழமையன்று காலை நாம் எழுந்தவுடன், நமக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு முக்கியமான காரணமாக அமைகிறது.

எனவே சரியான நேரத்திற்கு தூங்கி, சரியான நேரத்திற்கு எழுவதை நாம் முறையாக பின்பற்ற வேண்டும். பகல் நேரங்களில் இடையிடையே தூங்குவதையும் நாம் தவிர்க்க வேண்டும்.

தூங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே மொபைல் ஃபோன், கணிணி போன்ற டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவதை நாம் நிறுத்தவேண்டும். நமது மனதை அமைதியாக்கும் வழிகளில் நமது கவனத்தை செலுத்த வேண்டும்.

ஹார்மோன்களை கட்டுக்குள் வைத்திருங்கள்

தூக்கம், உடல்நலம், ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் நாம் சோர்வாக உணர்வதற்கு நமது ஹார்மோன்களும் முக்கிய காரணமாக இருக்கின்றன.

குறிப்பாக நமது உடலில் இருக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன், நமது உடலின் மெட்டபாலிசத்தை சீராக பராமரித்து, முறையான தூக்க நேரத்தை கடைபிடிப்பதற்கு உதவி செய்கிறது.

இந்த கார்டிசோல் ஹார்மோன்தான் நாம் தினமும் விழிப்பதற்கு காரணமாகிறது. அதாவது தூக்கத்திலிருக்கும் நாம் விழிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்த ஹார்மோன் சுரக்க துவங்குகிறது. அதன் பின்புதான் நமக்கு விழிப்புநிலை ஏற்படுகிறது. நாம் எழுந்த பிறகு, மீண்டும் அடுத்த நாள் காலை வரை இதன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்குகிறது. ஒருவேளை நாம் மன அழுத்தத்தில் இருந்தால், இதன் அளவில் மாறுபாடுகள் ஏற்படும்.

நாம் மன அழுத்தத்தில் இருக்கும்போது கார்டிசோல் மட்டுமல்லாமல், அட்ரினலின் என்ற ஹார்மோனும் சுரக்க துவங்குகிறது. நமது இதயம் வேகமாக துடிக்கும்போது, பாதங்களில் வியர்க்க துவங்கும்போது , ஏதேனும் இடத்திற்கு அவசர அவசரமாக நாம் கிளம்பும்போது ஆகிய படபடப்பான சூழ்நிலைகளில் இந்த அட்ரினலின் ஹார்மோன் நமது உடலில் சுரக்கிறது.

நமது மூளையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய இடத்தில், சுரக்கும் இந்த அட்ரினலின் ஹார்மோன், நமது மூளையின் செயல்பாடுகளை குழம்பச் செய்கிறது.

நமக்கு மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில், நமது மூளை சிந்தித்து செயல்படுவதற்கு முன்பாகவே, உணர்ச்சிகரமான உணர்வுகளை இது நம்முடைய மூளைக்கு கடத்துகிறது.

இதன் காரணமாகவே நம்முடைய உணர்வுகளுக்கும், நம்முடைய சிந்தனைகளுக்குமிடையே எப்போதும் ஒரு பெரும் சண்டை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. நாம் மிகுதியான மன அழுத்தத்திலும், மனச்சோர்விலும் இருக்கும் நாட்களில், திடீரென நடு இரவில் தூக்கம் கலைந்து எழுவதற்கும் இதுவே காரணமாகிறது.

இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ”திங்கள், செவ்வாய் போன்ற வேலை நாட்களில் நம்முடைய உடலில் கார்டிசோலின் அளவு அதிகமாகவும், ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அதன் அளவு குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது”

இதுபோன்ற முரண்பாடுகளை கலைவதற்கு நாம் ஒரு யுக்தியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, நமது மூளையில் உள்ள ப்ரீஃப்ரன்டல் கார்டெக்ஸ் பகுதியில் (prefrontal cortex) என்ற பகுதியின் செயல்பாட்டை நாம் தூண்டிவிட வேண்டும்.

அதற்கு நாம் நம்முடைய மனதை அமைதியடைய செய்வதற்கு தேவையான வேலைகளில் ஈடுபட வேண்டும். திங்கட்கிழமைகளில் நமக்கு பிடித்தமான வேலைகளில் நம்முடைய நாளை நாம் துவங்கும்போது, அது நம் மனதின் அழுத்தத்தை போக்குவதற்கு உதவி செய்கிறது.

இயற்கையுடன் நம்மை நாம் ஒருங்கிணைத்து கொள்வதும் நம் மனதின் அமைதிக்கு உதவியாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் வெளியில் செல்வது, உணவு இடைவேளையின்போது வெளியே சென்று ஒரு சிறிய நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற பழக்கங்கள் அதற்கு உதவலாம்.

இதுபோன்ற வழிமுறைகளை நாம் முறையாக பின்பற்றுவதன் மூலம், வாரயிறுதி நாட்களை போலவே, வார துவக்க நாட்களையும் மகிழ்ச்சியாக நாம் வரவேற்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: