“சோர்வாக இருக்கிறேன், என்னால் இதைச் செய்ய முடியாது” - நம்மில் பலர் இப்படி சொல்ல என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
இன்றைய இளம் தலைமுறையினர் பலர், “எனக்கு எப்போதும் சோர்வாக இருக்கிறது”, “என்னால் ஆக்டிவாக இருக்க முடியவில்லை” என்று பல நேரங்களில் கூறக் கேட்டு இருப்போம்.
இப்படி சொல்லும் பதின்ம வயதினரை அவர்களின் பெற்றோர்கள் சோம்பேறி என்று வசைவுச் சொற்களால் திட்டுவதும் பல வீடுகளில் நடக்கிறது.
ஆனால் இப்படி சோர்வாக இருக்கிறது, சோம்பேறித்தனமாக இருக்கிறது என்று சொல்லும் இளம் தலைமுறையினருக்கு உண்மையாகவே ஒரு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே இப்படி ஆகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
இரும்புச் சத்துக் குறைபாடு

பட மூலாதாரம், Getty Images
2021ஆம் ஆண்டு இந்திய குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட ஆய்வுகளின்படி, 15-19 வயதாகும் பெண்களில் 59.1% பேருக்கும், 15-19 வயதுடைய ஆண்களில் 31.1% பேருக்கும் இரும்புச் சத்து குறைபாடால் ரத்த சோகை (Anemia) இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது பதின்ம வயதுகளில் உள்ள பெண்களில் சராசரியாக இரண்டில் ஒருவருக்கும், ஆண்களில் மூன்றில் ஒருவருக்கும் இரும்புச் சத்து குறைபாடால் ஏற்படும் ரத்த சோகை இருக்கிறது.
ஒருவருக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுவதால் ரத்த சோகை ஏற்படுகிறது என்று பிபிசி தமிழிடம் பேசினார் பொது மருத்துவர் பூபதி ஜான்.
இரும்புச் சத்து என்பது உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளில் ஒன்று. இந்த சத்து உடலில் குறையும் போது, நமக்கு சோர்வு, அயற்சி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது, என்று அவர் விளக்கினார்.
ஆண்களை விட பெண்களுக்கு தினசரி தேவைப்படும் இரும்புச் சத்து அதிகமாக தேவைப்படுகிறது. சராசரியாக ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 8 மில்லி கிராம் இரும்புச் சத்து தேவைப்படுகிறது.
பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 15 முதல் 18 மில்லி கிராம் வரை இரும்புச் சத்து தேவைப்படுகிறது. இது பெண்களின் வயது, கர்ப்பமாக இருப்பது, பாலூட்டும் தாய்மார்கள் போன்ற காரணிகளின் அடிப்படியில் மாறுபடுகிறது.
உலகில் அதிகமாக காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டில் இரும்புச் சத்து குறைபாடு முதன்மை குறைபாடாக இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலக மக்கள் தொகையில் 30% மக்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு உள்ளது.
இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை மிகவும் பொதுவான வகை. இது உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது. உடலில் ரத்த சிவப்பணுக்கள் உருவாவதில் இரும்பு மிக முக்கியமான மூலப்பொருள். அதனால் ஏற்படும் குறைபாடு உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகைக்கு வழிவகுக்கிறது.
இரும்புச் சத்து குறைபாடால் என்ன பாதிப்பு?

பட மூலாதாரம், Getty Images
எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும் களைப்பாக உணருவது, வேலை செய்யும் போது விரைவாக சோர்வடைவது போன்ற பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால் இவை இரும்புச் சத்து குறைபாடாக இருக்கலாம் என்று மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி தலைச்சுற்றல், அதிக சோர்வு, சுவாசிப்பதில் சிரமம், தலைவலி போன்ற உடல் உபாதைகளும் இரும்புச் சத்து குறைபாடு இருக்கும் நபர்களுக்கு ஏற்படும்.
மேலும் சிலருக்கு வாயில் வெடிப்பு, புண், காகிதம் சேறு போன்றவற்றை சுவைக்க ஏற்படும் முனைப்பு போன்றவையும் இந்த குறைபாடு இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் முதற்கட்ட பாதிப்புகள் ஆகும்.
இதுபோன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதில் ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் அதற்கு உரிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச் சத்து பரிசோதனை மேற்கொள்வது அவசியம் எனக் கூறும் மருத்துவர் பூபதி, இந்தக் குறைபாட்டை கவனிக்கத் தவறினால் மகப்பேறு காலத்தின் போது ரத்தப்போக்கு, குழந்தைக்கு எடை குறைதல், தாய்ப்பால் சுரப்பது குறைவது போன்ற பாதிப்புகள் ஏற்படும் என எச்சரித்தார்.
வேறு எந்த சத்து குறைபாட்டால் களைப்பு ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக இரும்புச் சத்து குறைபாடு இல்லாமல், வேறு சில ஊட்டச்சத்து குறைபாடுகளாலும் மனிதர்களுக்கு களைப்பு ஏற்படுகிறது.
குறிப்பாக வைட்டமின் A, வைட்டமின் B12, வைட்டமின் D போன்ற ஊட்டச்சத்துகளின் குறைப்பாடுகள் சோர்வை ஏற்படுகின்றனர். ஆனால் இவை ஏற்படுவதற்கான காரணங்கள் வேறாக இருக்கின்றன.
உடலுக்கு போதிய சூரிய ஒளி கிடைக்காமல் போகும் போது வைட்டமின் D உயிர்சத்து குறைவாக கிடைக்கிறது. இதனால் தோல்களில் உள்ள நிறமிகளில் பாதிப்பு ஏற்படுவதுடன், சோர்வு போன்ற பாதிப்பும் ஏற்படுகிறது.
வைட்டமின் A சத்துக் குறைபாடு குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பின் காரணமாக குழந்தைகளில் செயல்திறன் குறைந்து சில நேரங்களில் சோர்வாக காணப்படுவர்.
வைட்டமின் B12 சத்து குறைபாடு, உணவுப் பொருட்களில் இருந்து உடலுக்கு தேவையான சத்துகளை உறிஞ்ச முடியாத போது ஏற்படுகிறது. இதனால் மூட்டுகளில் உணர்வின்மை, கை, கால்களில் தசை விறைப்பு, தற்காலிக நினைவு இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற சத்துக் குறைபாடு ஏற்படும் போது குறிப்பிட்ட காலத்திற்கு மருத்துவரின் பரிந்துரை அடிப்படையில் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் பாதிப்புகளை தவிர்க்கலாம் என மருத்துவர் பூபதி தெரிவித்தார்.
எந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்?

பட மூலாதாரம், Getty Images
பதின்ம வயதினருக்கு ஏற்படும் இரும்புச் சத்து குறைபாட்டை உணவு பழக்கம் மூலம் மாற்ற முடியும். இரும்புச் சத்து உள்ள உணவை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த சத்துக் குறைப்பாட்டை சரி செய்ய முடியும். குறிப்பாக பெண்கள் இரும்புச் சத்து குறைபாட்டை சற்று கவனமாக எடுத்துக் கொண்டு உடல்நலத்தை பேண வேண்டும் என்றார் மருத்துவர் பூபதி ஜான்.
பழங்கள், காய்கறிகளை விட அசைவ உணவுகளில் இரும்புச் சத்து மிகுதியாக இருக்கிறது என்று கூறிய அவர் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என பட்டியலிட்டார்.
- ஆட்டிறைச்சி
- பன்றி இறைச்சி
- மாட்டிறைச்சி
- முட்டை
- மீன்
- கீரை வகைகள்
- பேரிச்சம் பழம்
- முளை கட்டிய பயிறு
- வெல்லம்
- ஆரஞ்சு பழம்/பழச்சாறு

பட மூலாதாரம், Getty Images
இரும்புச் சத்தை உடலுக்கு பெற காய்கறிகளை விட மாமிச உணவுகள் சிறந்த தேர்வாக இருக்கும். காய்கறிகளில் இருந்து உடலுக்கு தினசரி தேவையான இரும்புச் சத்தை பெற நிறைய காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற உணவுகளின் மூலம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து குறைந்த அளவில் எடுத்துக் கொண்டாலும் கிடைக்கிறது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













