அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறதா? - நினைவாற்றல் அதிகரிக்க இதையெல்லாம் செய்யுங்கள்

அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், லாரா ப்ளிட்
    • பதவி, பிபிசி

பைக், கார் சாவியை எங்கே வைத்தோம்? திருமணத்தில் சந்தித்த அந்த தூரத்து உறவினரின் பெயர் என்ன? நேற்று ஓடிடியில் பார்த்த அந்தப் படத்தின் பெயர் என்ன?

நாம் பல நேரங்களில் இப்படி குழம்பிப்போவோம். வயதாக ஆக பலவற்றையும் நினைவில் வைப்பது கடினமாகிக்கொண்டே போகிறது.

இருப்பினும், இந்தத் தேய்மானம் தவிர்க்க முடியாதது என்று அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஹாஸ்பிடல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் அண்ட் ஹெல்த் நரம்பியல் நிபுணரும் பேராசிரியருமான ரிச்சர்ட் ரெஸ்டாக் கூறுகிறார்.

உடலுக்கு உடற்பயிற்சி செய்வதுபோல் நமது மூளைக்கு தினமும் பயிற்சி அளிப்பது மூலம் அதை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும் என்கிறார் 81 வயதிலும் குறைபாடற்ற நினைவாற்றலை உடைய ரிச்சர்ட் ரெஸ்டாக்.

பிபிசி உடனான உரையாடலில், ரெஸ்டாக் நமது நினைவாற்றலைப் பயிற்றுவிக்கவும் வலுப்படுத்தவும் சில முக்கிய குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

புத்திக் கூர்மை- ஞாபக மறதி

பட மூலாதாரம், Getty Images

1. புனைவு கதை புத்தகங்களைப் படியுங்கள்

புனைவு கதை அல்லாத புத்தகங்கள் அறிவு, தகவல்களின் சிறந்த ஆதாரமாக உள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த புனைகதைகள் மிகவும் உதவியாக இருக்கும்.

"புனைவற்ற புத்தகங்களுக்கு நினைவாற்றல் அதிகம் தேவைப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, நீங்கள் உள்ளடக்க அட்டவணையை படிக்கலாம், உங்களுக்கு விருப்பமானவற்றில் கவனம் செலுத்தலாம்," என்று ரெஸ்டாக் கூறுகிறார்.

"மாறாக, புனைவுகளைப் படிப்பதற்கு நினைவாற்றல் அதிகம் தேவைப்படுகிறது. குறிப்பாக ஒரு சிக்கலான நாவலை படிக்கும்போது, அங்கு, பாத்திரங்கள் தோன்றி மறைந்துவிடும். இரண்டாவது அத்தியாயத்தில் நீங்கள் ஒரு நபரைச் சந்திக்கலாம். அதன்பிறகு பத்தாவது அத்தியாயம் வரை அவர் அந்நாவலில் இடம்பெறாமல் போகலாம்.

கதையின் தொடர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது, கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தின் விவரங்களுக்கு இடையிலான இணைப்புகள் ஆகியவற்றை நினைவில் வைத்துகொள்ள அதிக நினைவாற்றல் தேவைப்படும் .

புத்திக் கூர்மை- ஞாபக மறதி

பட மூலாதாரம், RICHARD RESTAK

படக்குறிப்பு, ரிச்சர்ட் ரெஸ்டாக்

2. வார்த்தைகளை படங்களாக மாற்றவும்

இதுவோர் அடிப்படைக் கொள்கை. எடுத்துக்காட்டாக, ஒருவரின் கடைசிப் பெயர் கிரீன்ஸ்டோன் என்று வைத்துகொள்வோம். இதை நினைவில் வைத்துகொள்ள, உங்கள் மனதில் ஓர் ஆழமான பச்சைக் கல்லைக் கற்பனை செய்து பாருங்கள் என்று ரெஸ்டாக் பரிந்துரைக்கிறார்.

இந்த எளிய உத்தி எந்த பிரச்னையும் இல்லாமல் இதை நினைவில் வைக்க உதவும்.

நிபுணர்கள் பயன்படுத்தும் மற்றொரு தந்திரம் என்னவென்றால், அவர்கள் நினைவில் கொள்ள விரும்பும் விஷயங்களுடன் அவற்றை இணைக்க, அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான இடங்களின் மன வரைபடத்தை உருவாக்குவது.

பால், ரொட்டி வாங்குவதை நினைவில் வைத்துக்கொள்வதே குறிக்கோளாக இருந்தால், மறக்க முடியாதபடி தனது மன வரைபடத்தில் உள்ள இரண்டு இடங்களுடன் இந்த வார்த்தைகளை ஒப்பிட்டுக்கொள்வேன் என்று ரெஸ்டாக் கூறுகிறார்.

"எனது வீட்டின் புகைபோக்கியில் இருந்து பால் வெளியேறி தெருவில் சிந்துவதாக நான் கற்பனை செய்துகொள்வேன். இதேபோல் நூலகத்தைக் கடக்கும்போது, அதன் அலமாரிகளில் புத்தகங்களுக்கு பதிலாக பிரெட் இருப்பதாக நான் கற்பனை செய்துகொள்வேன்," என்று அவர் கூறுகிறார்.

புத்திக்கூர்மை

பட மூலாதாரம், Getty Images

3. உங்கள் நண்பர்களுடன் மைண்ட் கேம்களை விளையாடுங்கள் (நீங்கள் தனியாக இருக்கும்போதும்)

குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருக்கும்போதோ அல்லது ஏதாவது ஒரு விருந்து நிகழ்விலோ விளையாடுவதற்கு ரெஸ்டாக்கின் விருப்பமான விளையாட்டாக இது உள்ளது. இதை `20 கேள்விகள்` என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு நபரோ அல்லது ஒரு குழுவோ ஒரு நபர் குறித்தோ, ஓர் இடம் குறித்தோ அல்லது ஒரு பொருள் குறித்தோ நினைத்துக்கொள்ள வேண்டும். மற்ற நபர் அல்லது குழுவினர் 20 கேள்விகளுக்குள் இதை கண்டுபிடிக்க வேண்டும். இருபது கேள்விகளுக்கும் ஆம், இல்லை என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும்.

இந்த விளையாட்டின் சிரமம் என்னவென்றால், தவறான தகவல்களை கொடுக்காமல் இருக்க இரு தரப்புமே கேள்விகள், பதில்கள் இரண்டையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் ஒரு விளையாட்டு காதலராக இருந்தால், உங்களுக்குப் பிடித்த அணியின் அனைத்து வீரர்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை மனதில் வைத்தவுடன், அகரவரிசையில் விளையாடி, அந்த வரிசையில் வீரர்களைப் பட்டியலிட முயற்சி செய்யுங்கள்.

புத்திக் கூர்மை- ஞாபக மறதி

பட மூலாதாரம், Getty Images

4. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் (ஆனால் புத்திசாலித்தனமாக)

நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் வாங்க விரும்பும் பொருட்களின் பட்டியலையோ அல்லது நீங்கள் இதுவரை வாங்காத, வாங்க விரும்பும் பொருளின் புகைப்படத்தையோ மொபைலில் எடுத்துச் செல்வது தவறான யோசனையல்ல.

திறன்பேசி மற்றும் பிற சாதனங்களின் பயன்பாடு நமது நினைவகத்தைப் பலவீனப்படுத்தினாலும், தொழில்நுட்பத்தை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும்போது, எதையாவது மறந்துவிடாமல் இருக்க, முதலில் எதை வாங்கப் போகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு நாம் தயாரித்து வைத்துள்ள பட்டியலில் பார்க்கலாம் என்று ரெஸ்டாக் பரிந்துரைக்கிறார்.

"நினைவற்றாலுக்கு மாற்றாக கருவிகளைப் பயன்படுத்தலாம் என்பது இதன் பொருள் அல்ல. மாறாக, முதலில் மூளையைப் பயன்படுத்தவும் பின்னர் அதன் செயல்திறனைச் சரிபார்க்கவும் இதைப் பயன்படுத்தலாம்."

புத்திக் கூர்மை- ஞாபக மறதி

பட மூலாதாரம், Getty Images

5. குட்டித் தூக்கம் அவசியம்

நினைவாற்றலுக்கு உதவ சிறிய தூக்கம் அவசியம் எனப் பல்வேறு ஆய்வுகளும் காட்டுகின்றன.

வழக்கமாக தினமும் குட்டித் தூக்கம் எடுக்கும் ரெஸ்டாக், இது தகவலை உள்வாங்கவும் திடப்படுத்தவும் நினைவில் சேமிக்கவும் உதவுவதாகக் கூறுகிறார். பின்னர், தேவைப்படும்போது அதை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

"நாங்கள் இரண்டு குழுக்களாக மாணவர்களை அழைத்துச் சென்று, அவர்களில் ஒரு குழுவினரை ஏதாவது கற்றுக்கொண்ட பிறகு தூங்க அனுமதித்தோம். மற்றொரு தரப்பினருக்கு தூங்க அனுமதி வழங்கப்படவில்லை. இதில், குட்டித் தூக்கம் எடுத்தவர்கள் நன்றாகக் கற்றுக்கொண்டதைக் கண்டோம்," என்று ரெஸ்டாக் விளக்குகிறார்.

20 முதல் 40 நிமிடங்கள் வரை தூங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. "இந்த அளவைத் தாண்டி துங்குவது உங்கள் இரவு தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மதியம் குட்டித் தூக்கம் தூங்கும்போது அலாரம் வைத்துக்கொள்வது அல்லது குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தூங்கினால் எழுப்பிவிடும்படி பிறரிடம் சொல்வது நல்லது."

6. நல்ல உணவுகளைச் சாப்பிடுங்கள்

அதிகப்படியான கொழுப்புகள், உப்புகள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற சில உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம் என்று ரெஸ்டாக் கூறுகிறார்.

"இந்த உணவுகள் நினைவாற்றலுக்கு நல்லதல்ல, ஏனெனில் அவை நீண்ட காலத்திற்கு நினைவகத்துடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் ரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றன, அவை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயை ஏற்படுத்துகின்றன."

"இவை அனைத்தும் டிமென்ஷியாவுக்கு (நினைவாற்றல் பாதிப்பு) வழிவகுக்கும் காரணங்கள்," என்று ரெஸ்டாக் விளக்குகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: