மனிதர்களுக்கு விலங்குகள் போல் அடர் முடி இல்லாமல் போனது ஏன்? பாலியல் தேர்வு காரணமா?

உடல் முடி

பட மூலாதாரம், Kypros/Getty Images

    • எழுதியவர், ஜோஸ்லின் டிம்பர்லீ
    • பதவி, .

மனிதகுலத்தின் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்கினங்கள் உள்பட பெரும்பாலான பாலூட்டிகள் உடல் மூடும் அளவுக்கு அடர்ந்த முடிக்கற்றைகளைப் பெற்றுள்ளன. அப்படி இருக்கும்போது மனிதர்களின் உடலை மூடியிருந்த அடர் மயிர்க்கற்றைகள் மட்டும், ஏன் எப்படி இல்லாமல் போயின?

வேற்றுக்கிரக உயிரினம் ஒன்று புவிக்கு வந்து மனிதக் குரங்கினங்களுடன், மனிதர்களையும் வரிசையாக நிற்கவைத்துப் பார்த்தால், மனிதர்களையும் பிற விலங்குகளையும் வேறுபடுத்திக்காட்டும் சில விஷயங்கள் இருக்கும்.

மனிதர்கள் இரண்டு காலோடு நிமிர்ந்து நிற்பது, தகவல் பறிமாற்றத்துக்கு மொழியைப் பயன்படுத்துவது ஆகிய இரண்டைத் தவிர, மனிதர்களுக்கு உடலை மூடியிருக்கும் அடர் முடிக்கற்றைகள் இல்லை என்பது பளிச்சென தெரியும் மற்றொரு வேறுபாடாக இருக்கும்.

முடியில்லா துன்னெலி, காண்டாமிருகம், திமிங்கிலம், யானை ஆகிய விலங்குகளுக்கு முடிக்கற்றை இல்லை என்றாலும், விதிவிலக்காக சில மனிதர்களுக்கு அடர் முடிகள் இருக்கும் என்றாலும், பிற பாலூட்டிகளை ஒப்பிடும்போது மனிதர்களே அடர் முடியில்லாத குறிப்பிடத்தக்க விலங்கினம்.

இப்படி முடிக்கற்றைகள் இல்லாத வெற்றுடம்புக்காரர்களாக மனிதர்கள் ஆனது எப்படி? இதனால் மனிதர்களுக்கு ஏதேனும் ஆதாயம் உண்டா? உடலின் சில பகுதிகளில் மட்டும் அடர்ந்த முடி இப்போதும் மனிதர்களுக்கு இருப்பது எப்படி?

இடைவிடாத வேட்டைக் கோட்பாடு

உண்மையில் மனிதர்களுக்கு ஏராளமான முடிகள் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு மனித உடலிலும் 50 லட்சம் மயிர்க்கால்கள் உண்டு. தலையிலும், அக்குளிலும், பாலுறுப்பை ஒட்டியும், ஆண்களுக்கு மட்டும் முகத்திலும் தோன்றும் ஆழமான, தடிமனான மயிர்களைத் தவிர, கிட்டத்தட்ட எல்லா மனித மயிர்க்கால்களும் மெல்லிய, குட்டையான இளமயிர்களையே உற்பத்தி செய்கின்றன.

"துல்லியமாக சொன்னால், நமக்கு உடல் முழுவதும் மயிரும், நுண்ணிய மயிர்க்கால்களும் உண்டு," சவுத் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் மானுடவியலாளர் டினா லசிசி. இவர், மயிர் மற்றும் தோல் தொடர்பான அறிவியலில் வல்லுநராக உள்ளார்.

"நம் உடலைப் பாதுகாப்பதற்குப் பயன்படமுடியாத அளவுக்கு இந்த முடிகள் மெல்லியதாக மாறிவிட்டன” என்கிறார் அவர்.

மனித குலத்துக்கு உடலில் இருந்த தடிமனான முரட்டு அடர் முடிகள் மறைந்து எப்படி, எப்போது மெல்லிய இளமயிர் தோன்றியது என்பது குறித்து விஞ்ஞானிகளுக்கும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், எப்படி இது தொடங்கியிருக்கும் என்பது தொடர்பாக நிறைய கருதுகோள்கள் உள்ளன.

இவற்றில் மிகவும் வலுவானது ‘உடல் குளிர்விப்பு’ கருதுகோள் ஆகும். இதை சவானா (வெப்ப புல்வெளி) கருதுகோள் என்றும் கூறுவார்கள். பிளைஸ்டசீன் யுகத்தில் ஹோமோ எரெக்டஸ், பிந்தைய மனித இனங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் சவானா புல்வெளிப் பகுதிகளில் இடைவிடா வேட்டை முறையை கையாண்டு தங்களது இரையை வேட்டையாடினர். கூர்மையான, நுட்பமான வேட்டைக் கருவிகளை கையாள்வதற்குப் பதில், திறந்தவெளியான சவானா புல்வெளிகளில் தங்கள் இரையை இடைவிடாமல் பல மணி நேரம் துரத்தி அதை சோர்வடைய வைத்து பிறகு கொல்லும் முறை இது. இந்த தொடர் வேட்டை முறையில் வேட்டை நடந்திருப்பதை புதைபடிம ஆய்வுகள் மூலம் பின்னாளில் கண்டுபிடித்தனர்.

இப்படி நீண்ட நேரம் இடைவிடாமல் வேட்டையில் ஈடுபட்டதால் அவர்கள் உடல் சூடு மிதமிஞ்சி செல்லும் ஆபத்து ஏற்பட்டு, அதில் இருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக, திறம்பட வேர்த்து, விரைவாக உடல் சூட்டைத் தணித்துக்கொள்வதற்கு ஏதுவாக அடர் முடிகள் குறையத் தொடங்கியிருக்கலாம் என்பதுதான் இந்த உடல் குளிர்விப்புக் கருதுகோள் ஆகும்.

குறிப்பிட்ட செல்கள் வியர்வை சுரப்பிகளாகவோ, மயிர்க்கால்களாகவோ ஆகின்றனவா என்பதை தீர்மானிக்கும் சில ஜீன்களுக்கான சுவிட்சுகளைக் கண்டுபிடித்த ஆராய்ச்சிகள் மூலம் இந்தக் கருதுகோளுக்கான ஆதாரம் கிடைக்கிறது.

அடர் முடி

பட மூலாதாரம், David Trood/Getty Images

நிமிர்ந்து நின்றது காரணமா?

"எனவே, இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய வளர்ச்சிப் பாதையின் வாயிலாக வருகின்றன," என்கிறார் லசிசி.

"மனித தோல் நிறமிகளை அதிகரிக்கச் செய்த சில ஜீன்கள் குறித்து நாம் கணிக்க முடிந்த சில விஷயங்களோடு இவற்றை இணைத்துப் பார்க்கும்போது, 20 லட்சம் ஆண்டுகள் முதல் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக மனித இனங்கள் தங்களது உடலின் அடர் முடியை இழந்தன என்று உறுதியாக, அடிப்படையாக நாம் யூகிக்க முடியும்” என்கிறார் அவர்.

1980களில் முன்மொழியப்பட்ட தொடர்புடைய இன்னொரு கோட்பாடு வேறொரு பார்வையை முன்வைக்கிறது. இரு கால்களால் நடக்கும், நிமிர்ந்து நிற்கும் முறைக்கு மனித குலம் மாறிய பிறகு, கதிர்வீச்சை நம் உடலுக்குள் வாங்காமல் பிரதிபலித்து அடர் முடிகள் செய்துவந்த ஆதாயம் குறைந்துவிட்டது. அடர் முடிகள் இல்லாமல் நம்மால் திறம்பட வேர்க்க முடியும் என்பதால், அடர் முடி இருப்பதை விட இல்லாமல் இருப்பது ஆதாயமாகிவிட்டது.

உடல் குளிர்விப்பு கருதுகோள், மிகவும் ஏற்புடையதாகத் தோன்றினாலும், சில கோணங்களில் இந்தக் கருதுகோள் சறுக்குகிறது என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த, பரிணாம வளர்ச்சி உயிரியலாளரான மார்க் பாகல்.

"நம் உடலின் சூட்டை 24 மணி நேர காலத்துக்கு ஆராய்ந்து பார்த்தால், இரவில் நாம் விரும்புவதைவிட அதிகமான வெப்பத்தை இழக்கிறோம். இதனால், அடர் முடிகளை நாம் இழந்ததன் நிகர விளைவு என்னவென்றால், எப்போதும் நாம் ஆற்றல் குறைபாட்டில் இருக்கிறோம் என்பதுதான்” என்கிறார் அவர்.

உடல் முடி

பட மூலாதாரம், kokouu/Getty Images

ஒட்டுண்ணிகள் காரணமா?

ப்ளைஸ்டசீன் யுகத்தில் நடந்ததைப் போல இடைவிடாமல் ஓடி வேட்டையாடும் வழக்கத்தை பெருமளவிலான மனித குலங்கள் கைவிட்டு பல பத்தாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஏராளமானோர் இப்போது மிகுந்த குளிரான பகுதிகளில் வாழ்கிறார்கள். ஆனாலும், மீண்டும் இவர்களுக்கு அடர் முடி முளைக்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

மனிதர்கள் பரிணாம வளர்ச்சி மூலம் உருவான நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள ஆப்பிரிக்காவில் நிலவும் குறைவான உடல் வெப்பத்தைவிடவும், மிகை உடற்சூடு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்திருக்கலாம் என்கிறார் லசிசி.

“உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ளத் தேவையான அளவைவிட அதிகமாக உடல்சூடு செல்லாமல் பார்த்துக்கொள்வதற்கான வலுவான அழுத்தம் இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது,"என்கிறார் அவர்.

அத்துடன் குளிர்ப்பிரதேசங்களுக்கு மனிதர்கள் வந்து சேர்வதற்கு முன்பாகவே அவர்களது சில மரபணு குணங்கள் திரும்ப பழைய நிலைக்கு வரமுடியாதபடி பல்வேறு காரணங்களால் ஆகியிருக்கலாம்; உடலை சூடாக வைத்துக்கொள்வதற்கு நெருப்பு, ஆடை போன்ற தொழில்நுட்பங்களை அவர்கள் உருவாக்கிவிட்டதாலும் இது நடந்திருக்கலாம். உடலை குளிருக்குப் பொருத்திக்கொள்ளும் பிரௌன் ஃபேட் அடாப்டேஷன் போன்ற சில பொருத்துதல் முறைகள் உருவாகியிருக்கலாம் என்கிறார் அவர்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பாகல் மற்றும் வால்டர் போட்மர் ஆகியோர் புற ஒட்டுண்ணிக் கருதுகோள் என்ற ஒரு கோட்பாட்டை 2003ம் ஆண்டு வெளியிட்டனர். அடர் முடி இல்லாத மனிதக் குரங்குகள் குறைவான ஒட்டுண்ணித் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம், இது ஒரு பெரிய சாதகமாக உருவெடுத்திருக்கலாம் என்பதே அந்தக் கோட்பாட்டின் அடிப்படை.

"கடிப்பதன் மூலமும், நோய்ப்பரப்புவதன் காரணமாகவும் இன்றைக்கும்கூட புற ஒட்டுண்ணிகள் பெரிய பிரச்சனையாக இருப்பதைக் காண முடியும்," என்கிறார் பாகல்.

"அடர் முடிகளில் அடைக்கலம் புகுந்து அங்கேயே வாழ்ந்து முட்டையிடுவதில் கைதேர்ந்த ஈக்கள் உள்ளன. இயற்கைத் தேர்வு முறையைத் தீர்மானிக்கும் மிகவும் வலுவான சக்திகளாக ஒட்டுண்ணிகள் நமது பரிணாம வரலாறு நெடுகிலும் இருந்துள்ளன. இன்னும் இருக்கின்றன," என்று கூறும் பாகல், தாமும் போட்மரும் இந்தக் கருதுகோளை உருவாக்கியதில் இருந்து இந்தக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் எந்த வாதமும் முன்வைக்கப்படவில்லை என்கிறார்.

அடர் முடிகள் இல்லாமல் போனதற்கு பங்களித்த பிற காரணிகளைப் புறக்கணிக்க முடியாது என்று கூறும் லசிசி, அதே நேரம், புற ஒட்டுண்ணிக் காரணி ஏன் மனிதர்களைத் தவிர, சிம்பன்சிகளிலோ, போனோபோஸ்களிலோ, கொரில்லாக்களிலோ அடர் முடி இழப்புக்கு காரணமாக அமையவில்லை என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளவேண்டும் என்கிறார்.

பனி ஆடை

பட மூலாதாரம், on Koene/Getty Images

டார்வின் என்ன சொன்னார்?

"பிற மனிதக் குரங்குகளில் நிகழாத குணாதிசயங்களோ, இடப் பெயர்வுகளோ மனிதர்களுக்கு மட்டும் எப்படி அடர் முடி இழப்பை ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதை பரிந்துரைக்கும் கருதுகோள்களை உருவாக்குவதிலேயே நான் ஆர்வம் காட்டுகிறேன்,” என்கிறார் லசிசி.

பிற விலங்குகளின் முடிகளைப் பயன்படுத்தி செய்யப்பட்டு, அணியவும், கழற்றவும் துவைக்கவும் சாத்தியமாக இருந்த ஆடைகள் மனிதர்களின் அடர் முடி இழப்புக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்பது ஒரு கோணம். மனிதர்களின் ஆடைகளில் வாழும் பேன்கள் எப்போது தோன்றின என்ற கணக்கின் அடிப்படையில் பார்த்தால், மனிதர்களின் அடர் முடிகள் போனது 2 லட்சம் முதல் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்திருக்கும். உடற்சூடு குறைப்பு கருதுகோள் கணிக்கும் காலத்தை விட மிகவும் பிந்திய காலம் இது.

நம்முடைய முடி இழப்புக்கு பாலினத் தேர்வுதான் முதன்மையான காரணமாக இருக்கும் என்று சார்லஸ் டார்வின் கருதினார். காரணம், குறைவான முடியுடைய துணையைத்தான் மனிதர்கள் நாடினர் என்பதால் காலப்போக்கில் குறைவான முடியுடைய மனிதர்களே உருவாகியிருப்பார்கள் என்ற இந்தக் கோட்பாட்டை அடர் முடி இழப்புக்கான முதன்மையான விளக்கத்தைத் தரும் கோட்பாடாக யாரும் இப்போது ஏற்பதில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: