மகிழ்ச்சியான நாடு: மக்களின் இன்பத்தை எப்படி அளக்கிறார்கள்?

மகிழ்ச்சி, அரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், குர்பிரீத் சைனி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?

பதில் - பின்லாந்து.

இது எப்படி முடிவு செய்யப்பட்டது என்று நீங்கள் யோசிக்கலாம். ஒரு நாட்டின் மகிழ்ச்சியை எப்படி அளவிட முடியும்? உணர்வை அதுவும் ஒட்டுமொத்த நாட்டின் உணர்வை எப்படி அளவிட முடியும்?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஐ.நா ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. எந்த நாட்டில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை கூறுகிறது. இந்த அடிப்படையில் நாடுகளும் வரிசைப்படுத்தப்படுகின்றன. இந்த அறிக்கை கடந்த பத்து ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது.

'உலக மகிழ்ச்சி அறிக்கை' என்று பெயரிடப்பட்ட இந்த ஆண்டறிக்கையை, ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு என்ற பிரிவு வெளியிடுகிறது.

இந்த அறிக்கை உலகின் பல்வேறு நாடுகளின் மகிழ்ச்சியை பல தேசிய மற்றும் சர்வதேச அம்சங்களின் அடிப்படையில் அளவிடுகிறது. மகிழ்ச்சிக் குறியீடு, நாடுகளின் மகிழ்ச்சியை 0 முதல் 10 வரையிலான அளவுகோலில் வரிசைப்படுத்துகிறது.

பின்லாந்து தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 7.8 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து, இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

இஸ்ரேல், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நியூசிலாந்து ஆகியவை முதல் 10 பட்டியலில் உள்ள மற்ற நாடுகள்.137 நாடுகளில் ஆப்கானிஸ்தான் எல்லாவற்றையும் விட கீழே உள்ளது . அதாவது இது மிகவும் மகிழ்ச்சியற்ற நாடு என்று அறிக்கை கூறுகிறது.

இது தவிர, லெபனான், ஜிம்பாப்வே, காங்கோ ஜனநாயகக் குடியரசு போன்ற நாடுகள் பட்டியலில் கீழே உள்ளன.

இந்த ஆண்டு இந்தியா 125வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தியாவின் தரவரிசையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஆனால் பட்டியலில் அதன் இடம், அண்டை நாடுகளான நேபாளம், சீனா மற்றும் வங்கதேசத்தை விட கீழே உள்ளது. ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே சண்டை நடந்துவரும் போதும்கூட இந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை விட முன்னே உள்ளன. ரஷ்யா 70வது இடத்திலும், யுக்ரேன் 92வது இடத்திலும் உள்ளன.

மகிழ்ச்சி எப்படி அளக்கப்படுகிறது?

மகிழ்ச்சி, அரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

உலக மகிழ்ச்சிக் குறியீட்டின் வரிசை, ஆய்வு தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஆய்வை கெல்லப் வேர்ட் கணக்கெடுப்பு முகமை நடத்துகிறது.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒன்று முதல் மூவாயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அது அதன் மாதிரி அளவு ஆகும். இவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த கேள்விகளுக்கான பதில்களின் அடிப்படையில், தரவு தயாரிக்கப்படுகிறது.

இந்தக் கேள்விகளுக்கு 0 முதல் 10 வரையிலான அளவுகோலில் பதிலளிக்க வேண்டும். 0 என்றால் மோசம் மற்றும் 10 என்றால் மிகச்சிறந்த அனுபவம்.

இந்தக் கேள்விகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பெருந்தன்மை, சமூக ஆதரவு, சுதந்திரம் மற்றும் ஊழல் போன்ற ஆறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை.

இதுபோன்ற சில கேள்விகள் ஆய்வில் கேட்கப்படுகின்றன.

நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டபோது உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாராவது உங்களுக்கு உதவி செய்தார்களா? இதற்கான பதிலை, நீங்கள் பூஜ்ஜியத்தில் இருந்து 10 வரை மதிப்பிட வேண்டும்.

உதவிக்காக உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளீர்கள் என்பதை இந்த அளவு காட்டுகிறது. உங்கள் பதில் 10 என்றால் நீங்கள் அவர்களை 100% நம்புகிறீர்கள் என்று அர்த்தம்.

மகிழ்ச்சி, அரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

வாழ்க்கையில் நமக்கு விருப்பமான விஷயங்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் நம் மகிழ்ச்சியில் அடங்கியுள்ளது. தொழிலைப் போலவே, மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம், விருப்பமான உணவை உண்ணும் சுதந்திரம், விருப்பமான ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். அதனால்தான் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒன்றையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று ஒரு கேள்வியும் கேட்கப்படுகிறது. இது 0 முதல் 10 வரையிலான அளவிலும் மதிப்பிடப்பட வேண்டும்.

இது தவிர, கடந்த ஒரு மாதத்தில் ஏதாவது தொண்டு நிறுவனத்திற்கு பணம் கொடுத்தீர்களா என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும் ஒருவர் மற்றவர்களுக்கு உதவவும், தானம் செய்யவும் முன்வருவார் என்று நம்பப்படுகிறது. ஆய்விலும் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுவதற்கு இதுவே காரணம்.

ஊழல் தொடர்பான கேள்வியும் இருக்கும். உங்கள் நாட்டின் ஆட்சியில் எவ்வளவு ஊழல் இருக்கிறது, வியாபாரத்தில் எவ்வளவு ஊழல் இருக்கிறது? ஏனெனில் நாட்டில் ஊழல் இல்லாதது செழிப்பைக் குறிக்கிறது என்று நம்பப்படுகிறது.

இது போன்ற பல கேள்விகளை கேட்டு, இந்த ஆய்வில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கையில் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.

மகிழ்ச்சியை அளப்பதன் நோக்கம் என்ன?

மகிழ்ச்சி, அரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

2011 ஜூலையில் ஐக்கிய நாடுகள் சபை, "மகிழ்ச்சி: வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையை நோக்கி" என்ற தலைப்பில் ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன், மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எல்லா அரசுகளிடமும் ஐநா கூறியது.

2012 ஏப்ரலில் பூட்டானின் மன்னராட்சி அரசு, உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டியது. அதில் மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை ஒரு பொருளாதார அம்சம் போலப் பார்க்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதற்காக ஒரு கமிஷனை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது, அதை பூட்டான் பிரதமர் ஜிக்மே தின்லே ஏற்றுக்கொண்டார்.

ஐக்கிய நாடுகள் சபையும் இந்த கமிஷனுக்கு இணை உரிமையாளராக இருக்க வேண்டும் என்றும் இந்த கமிஷன், ஐநா பொதுச் செயலாளருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.

பூட்டான் பிரதமர் ஜிக்மே தின்லே மற்றும் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி டி.சாக்ஸ் ஆகியோர் தலைமையில் உலக மகிழ்ச்சி தினத்தின் முதல் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இந்த தரவரிசை அனைவரின் பேசுபொருளாக இருந்துவருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: