பிரசாந்த் கிஷோரின் அரசியல் கட்சி - 5 கொள்கைகள் அறிவிப்பு, கட்சிக் கொடியில் காந்தி, அம்பேத்கர்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிது திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர் தனது 'ஜன்சுராஜ்' கட்சியைத் தொடங்கியுள்ளார்.
அக்டோபர் 2ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் தனது கட்சியைத் தொடங்கியபோது, பிரசாந்த் கிஷோர் ஐந்து வாக்குறுதிகளை அளித்தார்.
பிரசாந்த் கிஷோர் மனோஜ் பாரதியை கட்சியின் முதல் செயல் தலைவராக நியமித்துள்ளார்.
'ஜன்சுராஜ் கட்சி' தொடங்கப்பட்ட பிறகு, பிகாரில் அரசியல் விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன.
பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சி எந்த அரசியல் கொள்கைகளைப் பின்பற்றும்? பிகார் அரசியலில் என்ன மாற்றத்தை உருவாக்கும்?
இப்படியாகப் பல கேள்விகள் எழுகின்றன.

பிரசாந்த் கிஷோர் கட்சியின் "ஐந்து வாக்குறுதிகள்"
- ஆட்சிக்கு வந்த ஒரு மணிநேரத்திற்குள் மது விலக்கை ரத்து செய்வது. அதன் மூலம் கிடைக்கவிருக்கும் வருவாயைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த கல்வி வசதிகளை ஏற்படுத்துவது.
- பிகாரில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் வேலைவாய்ப்பு.
- அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம்.
- பெண்களுக்கு 4% வட்டியில் தொழில் முதலீட்டுத் தொகை வழங்குதல்.
- பிகாரில் விவசாயத்தை லாபகரமாக்குவது
"எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால் அவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கான Right to Recall எனும் உரிமையை வழங்கும் இந்தியாவின் முதல் கட்சி ஜன்சுராஜ் கட்சி. எங்கள் கட்சியில் பொதுமக்களே தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்வார்கள்" என்று பிரசாந்த் கிஷோர் வாக்குறுதிகளை அறிவித்தபோது கூறினார்.
மனோஜ் பாரதியின் பெயரை செயல் தலைவராக அறிவித்த பிரசாந்த் கிஷோர், அவரை 'தன்னைவிட திறமையானவர்' என்று குறிப்பிட்டார்.
மனோஜ் பாரதி யார்?

பட மூலாதாரம், Getty Images
பிகாரின் மதுபனி மாவட்டத்தில் பிறந்த மனோஜ் பாரதி ஓய்வுபெற்ற இந்திய வெளியுறவுத்துறை சேவை (IFS) அதிகாரி. அவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்.
அவர் தனது ஆரம்பக் கல்வியை ஜமுயியில் உள்ள அரசுப் பள்ளியிலும், பின்னர் நேதர்ஹாட்டிலும் பயின்றார். தனது உயர்கல்வியை ஐஐடி கான்பூரிலும் ஐஐடி டெல்லியிலும் மேற்கொண்டார்.
ஐஐடி டெல்லியில் படிக்கும்போது, அவர் இந்திய வெளியுறவுத்துறை சேவையில் தேர்வு செய்யப்பட்டார். அவர் நான்கு நாடுகளில் இந்தியாவின் தூதராகப் பணியாற்றியுள்ளார். இருப்பினும், அரசியல் வட்டாரத்துக்கு மனோஜ் பாரதி என்பது புதிய பெயர்.
மூத்த பத்திரிகையாளர் ஃபைசான் அகமது கூறுகையில், "பிரசாந்த் கிஷோர் கூறியபடி, தலித் ஒருவரை தலைவராக்கியுள்ளார். ஆனால் ஒரு கட்சியை நடத்த, அது மட்டும் போதாது, ஒரு தலைவர் வேண்டும். அது மனோஜ் பாரதி அல்ல. அவர் நன்கு படித்தவர். ஆனால் அரசியலில் அவர் என்ன செய்ய முடியும் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்" என்றார்.
கட்சிக் கொடியில் காந்தி, அம்பேத்கரா?

பட மூலாதாரம், Getty Images
மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் படத்துடன் கூடிய கொடியை கட்சியின் கொடியாக அறிமுகப்படுத்த, தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளது ஜன்சுராஜ் கட்சி.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மகாத்மா காந்தியின் படத்துடன் ஜன்சுராஜ் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது பிரசாந்த் கிஷோர் தனது கொடியில் அம்பேத்கருக்கு இடமளித்தது ஏன் என்ற கேள்வி முக்கியமானது.
பாஜகவின் தேசிய தாழ்த்தப்பட்டோர் முன்னணியின் முன்னாள் தலைவர் சஞ்சய் பஸ்வான் இதை "காலத்தின் கட்டாயம்” எனக் கூறுகிறார்.
"பிரசாந்த் கிஷோர் மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரை ஒன்றிணைத்து புதிய அரசியலைத் தொடங்கியுள்ளார். அவரது நடவடிக்கைகள் மிகவும் தர்க்கரீதியானவை. அவர் ஆளும் கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். தற்போதுள்ள கட்சிகள் இடைநிலை சாதிகளில் கவனம் செலுத்தி வரும் வேளையில், பிரசாந்த் கிஷோர் தைரியமாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக்கியுள்ளார்."
ஏற்கெனவே அரசியல் நோக்கர்கள், பிரசாந்த் கிஷோரின் அரசியலை, தலித், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முஸ்லிம் சமூகங்களை மையமாகக் கொண்டது என்று விவரிக்கத் தொடங்கிவிட்டனர்.
பிகாரில் நடத்தப்பட்ட சாதி கணக்கெடுப்பில், தலித்துகளின் மக்கள்தொகை 19.65 சதவீதமாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 36.01 சதவீதமாகவும், முஸ்லிம்கள் 17.70 சதவீதமாகவும் உள்ளனர்.
ஜன்சுராஜின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் ஹோம் கார்டு இயக்குநருமான ராகேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், "இன்றைய அரசியலில், எங்கள் போராட்டம் மத அரசியல் செய்பவர்களை, குறிப்பாக பாஜகவை எதிர்ப்பதுதான்.
மத அடிப்படையிலான அரசியலால் பிளவுபட்டிருக்கும் அனைவரையும், ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, காந்தியவாதிகளுக்கும் அம்பேத்கரியவாதிகளுக்கும் ஒற்றுமையின் செய்தியைக் கொடுக்க விரும்புகிறோம்," என்று தெரிவித்தார்.
ஏன் பிரசாந்த் கிஷோர் 'பின்னால்' நிற்கிறார்?

பட மூலாதாரம், ANI
ஜன்சுராஜ் கட்சி உருவானதற்கு மிக முக்கியமான நபர் பிரசாந்த் கிஷோர். ஆனால் அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்காமல் பின்னால் நிற்கிறார்.
ஜன்சுராஜ் கட்சி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், "கட்சி உருவாக்கப்பட்ட பிறகும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் செய்து வந்த அதே பணியைத் தொடர்வேன். நான் தற்போது வரை அராரியா, சுபவுல் மாவட்டங்களில் பயணம் செய்துகொண்டிருந்தேன். இரண்டு-மூன்று நாட்களுக்குப் பிறகு, மீண்டும் நான் அதே பகுதிக்குச் சென்று எனது பிரசார பயணத்தைத் தொடர்வேன். மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யும் வரை எனது பயணம் தொடரும்" என்றார்.
பிரசாந்த் கிஷோர் பின்னால் இல்லை, ‘மையத்தில்’ இருக்கிறார் என்கிறார் பிபிசியிடம் விரிவாகப் பேசிய ராகேஷ் குமார் மிஸ்ரா.
“எங்கள் கட்சி செயல்படும் விதம் முற்றிலும் வித்தியாசமானது. எங்கள் வேலையை இரண்டு நிலைகளில் பாருங்கள். முதலாவது ஜன்சுராஜ் அபியான் என்ற இயக்கம், அதன் முக்கியப் பணி பிகார் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வது.
இரண்டாவது ஜன்சுராஜ் கட்சி, அதன் பொறுப்பு மனோஜ் பாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரசாந்த் ஜன்சுராஜ் அபியானின் பணியை வழிநடத்துகிறார். அதுதான் எங்கள் ஆன்மா, எங்களின் கருத்தியல் தளம்" என்றார்.
ஆனால் மூத்த பத்திரிகையாளர் ஃபைசான் அகமது இதை ஏற்க மறுக்கிறார். அவர் இதற்குப் பின்னால் சாதிய காரணிகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
"பிகார் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. எனவே பிரசாந்த் கிஷோர் இப்போதே தனது முகத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. கடந்த 30 ஆண்டுக்கால அரசியலைப் பார்த்தால், உயர் சாதியினரின் பங்கு அதிகம் இல்லை என்பது தெரியும். பிரசாந்த் கிஷோர் ஒரு பிராமணர், அதனால்தான் அவர் தன்னைப் பின்னால் வைத்து ஒரு தலித் முகத்தை முன்னிலைப்படுத்தியுள்ளார்" என்கிறார் அவர்.
'கன்சிராமும் மாயாவதியை முன்னிலைப்படுத்தினார்'

பட மூலாதாரம், Getty Images
இந்தி நாளிதழான தைனிக் ஜாக்ரனில் பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர் அரவிந்த் சர்மா, பகுஜன் கட்சியின் நிறுவனர் கன்சி ராம் செய்ததைக் குறிப்பிடுகிறார்.
"கன்சிராம் மாயாவதியை முன்னிலைப்படுத்தி, உயர் சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் கைகளில் இருந்த உத்தர பிரதேச அரசியலை தலித்துகளின் கைகளுக்குக் கொண்டு வந்தார். இருப்பினும், பிகாரில் தலித் மக்கள் தொகையில் பாஸ்வான் சாதியின் தலைவராக சிராக் பாஸ்வான் உள்ளார் . எனவே பிரசாந்த் கிஷோர் தலித்-முஸ்லிம் என்ற கூட்டணியைக் கையில் எடுத்துள்ளார்."
பத்திரிகையாளர் அரவிந்த் சர்மா இதுகுறித்துப் பேசியபோது, "நிதீஷ் குமாரின் உடல்நிலை, முகமற்ற பாஜக, லாலுவின் நிழலில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவற்றால் பிகார் அரசியலில் வெற்றிடம் உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது கட்சியைத் தொடங்க பொருத்தமான நேரம் இது" என்று சுட்டிக்காட்டினார்.
'பிகார் பொருளாதார வளர்ச்சியில் மகாதலித்துகளின் பங்களிப்பு' என்ற நூலின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான அருண் ஸ்ரீவஸ்தவா, பிரசாந்த் கிஷோர், 'குழப்பத்துடன்' இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
"ஊடகங்கள் பிரசாந்த் கிஷோரை மிகைப்படுத்திக் காட்டுகின்றன. உண்மையில், அவர்களுக்கு அரசியல் பொருளாதாரம் பற்றிய சரியான புரிதல்கூட இல்லை" என்று விமர்சிக்கிறார்.

பட மூலாதாரம், @PrashantKishor
ஜன்சுராஜ் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, அரசியல் விவாதங்களும் தீவிரமடைந்துள்ளன.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அரவிந்த் நிஷாத் கூறுகையில், "பிரசாந்த் கிஷோர் அரசியலில் ஒரு சிறுபிள்ளை. தலித்துகளை முன்னிலைப்படுத்தி தனது அரசியலை கவர்ச்சிகரமானதாக்க நினைக்கிறார்.
நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நாளான அக்டோபர் 2ஆம் தேதியில் அவர் தனது கட்சியைத் தொடங்கினார். ஆனால், அதே நாளில் மதுவிலக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அறிவிக்கிறார்," என்றார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சித்தரஞ்சன் ககன் கூறுகையில், "எங்கள் கட்சியை அழிப்பதாக நினைத்துக் கொண்டு பாஜக அவர்களைக் களமிறக்கியுள்ளது. ஆனால் அவர்கள் பாஜகவுக்கே அச்சுறுத்தலாக இருப்பார்கள், பாஜக செய்தது தற்கொலைக்குச் சமம்" என்கிறார்.
பிரசாந்த் கிஷோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்துள்ளார். அதை அவரால் தேர்தல் வெற்றியாக மாற்ற முடியுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












