இந்தியாவை எதிர்க்க பிலாவல் பூட்டோ பின்பற்றும் 'தாத்தா வழி அரசியல்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இக்பால் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் அறிக்கை ஒன்று சமீப நாட்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளது. 2022 டிசம்பர் 15 ஆம் தேதி நடந்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்திற்குப் பிறகு அவர் பிரதமர் நரேந்திர மோதியை 'குஜராத்தின் கசாப்புக்காரர்’ என்று அழைத்தார். முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பாகிஸ்தானை 'பயங்கரவாதத்தின் மையம்' என்று குறிப்பிட்டிருந்தார். ஜெய்சங்கரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, மோதிக்கு எதிராக பிலாவல் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார். பிலாவல் பூட்டோவின் அறிக்கைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அது நாகரீகமற்றது என்றும் கூறியது. கடந்த திங்கள்கிழமை பிலாவலின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய இந்திய வெளியுற அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பாகிஸ்தானிடமிருந்து இதைத்தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்று கூறினார். பிலாவல் பூட்டோவின் தாயார் பெனாசிர் பூட்டோ இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்துள்ளார். பெனாசிர் பூட்டோவின் அப்பா ஜுல்ஃபிகர் அலி பூட்டோ பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சராகவும், அதிபராகவும் (1971-73) மற்றும் பிரதமராகவும் (1974-1977) இருந்துள்ளார். இதற்கு முன் பெனாசிர் பூட்டோ (1953-2007), ஜூல்ஃபிகர் பூட்டோ (1928-1979) ஆகியோரும் இந்தியாவைப் பற்றி பல சர்ச்சைக்குரிய அறிக்கைகளை அளித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அவர்கள் இந்தியாவுடன் நல்லுறவையும் கொண்டிருந்தனர் என்பதும், ஜூல்ஃபிகர் பூட்டோவாக இருந்தாலும் சரி, பெனாசிர் பூட்டோவாக இருந்தாலும் சரி, அவர்களுடைய நெருங்கிய மற்றும் குடும்ப நண்பர்கள் பலர் இந்தியர்களாக இருந்துள்ளனர் என்பதும் உண்மை.
பாகிஸ்தானின் அதிகாரத்தில் அமர்ந்து இந்தியாவுக்கு எதிராக அவர்கள் எந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், இந்தியாவுடனான பூட்டோ குடும்பத்தின் உறவு நான்கு தலைமுறைகள் பழமையானது என்பதை மறுக்க முடியாது. ஷாநவாஸ் பூட்டோ லட்கானாவின் (சிந்து) பெரிய நில உரிமையாளராக இருந்தார். அவரிடம் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சிந்து, பம்பாய் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக இருந்தது, எனவே தற்போதைய இந்தியாவுடன் ஷாநவாஸ் பூட்டோவின் உறவும் நன்றாக இருந்துள்ளது. ஷாநவாஸ் பூட்டோ லாக்கி பாய் என்ற இந்து ராஜ்புத் பெண்ணை மணந்தார். அவர் இஸ்லாத்திற்கு மாறி குர்ஷித் பேகம் என்று அறியப்பட்டார். ஷாநவாஸ் மற்றும் குர்ஷித் பேகத்திற்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். ஷாநவாஸ் மற்றும் குர்ஷித் பேகத்தின் மூன்றாவது மகன் ஜூல்ஃபிகர் அலி பூட்டோ.
ஷாநவாஸ் பூட்டோவின் நிறைய சொத்துக்கள் பம்பாயிலும் இருந்தது. அதனால்தான் அவர் ஜூல்ஃபிகர் அலி பூட்டோவை ஆரம்ப கல்விக்காக பம்பாயின் கதீட்ரல் பள்ளிக்கு அனுப்பினார். இந்தியாவின் சுதந்திரத்தின் போது, ஷாநவாஸ் பூட்டோ, ஜூனாகர் சமஸ்தானத்தின் திவானாக (பிரதம மந்திரி) இருந்தார். 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரமடைந்தது. இதனுடன் பாகிஸ்தான் உருவானது. பின்னர் ஜுனாகர் சமஸ்தானத்தின் கடைசி நவாப் மூன்றாம் முகமது மஹாபத் கான், தனது சமஸ்தானத்தை பாகிஸ்தானுடன் இணைக்க முடிவு செய்தார். பாகிஸ்தானும் செப்டம்பரில் அதை ஏற்றுக்கொண்டது. ஆனால் ஜூனாகட்டின் இந்து பெரும்பான்மை மக்கள் அதை எதிர்த்தனர், பின்னர் ஜூனாகட் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது. இதற்குப் பிறகு ஜுனாகட் நவாப் மற்றும் ஷாநவாஸ் பூட்டோ இருவரும் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டனர். ஜூல்ஃபிகர் அலி பூட்டோ பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரானார். 1963 இல் அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்வரன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
பேச்சுவார்த்தைகளின் அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் இல்லை. ஆனால் இந்திய நிர்வாகத்தின் கீழ் இருந்த காஷ்மீரில் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான கோரிக்கையை திரும்பப் பெற பூட்டோ ஒப்புக்கொண்டதாகவும், இதற்கு பதிலாக வேறு வழியை பின்பற்ற தயாராக இருந்தாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை குறிப்பு (ஜனவரி 27, 1964) தெரிவிக்கிறது. மறுபுறம் காஷ்மீர் பிரச்னை சர்ச்சைக்குரியது என்பதை ஏற்க இந்தியாவும் தயாராக இருந்தது. ஆனால் இந்தப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பாகிஸ்தான், ஐநா பாதுகாப்பு சபையில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பியது. இதற்கிடையில் ஆபரேஷன் ஜிப்ரால்டரை நடத்த திட்டம் தீட்டியதாக பூட்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன் நோக்கம் பயிற்சி பெற்ற போராளிகளை இந்திய நிர்வாக காஷ்மீருக்கு அனுப்புவதாகும். 1965-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. பின்னர் ஐநாவின் மேற்பார்வையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. 1966 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும், பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. வெளியுறவு அமைச்சராக இருந்த பூட்டோ இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார். பூட்டோவின் அரசியல் ஏற்றம், தாஷ்கண்ட் ஒப்பந்தத்தை எதிர்ப்பதில் இருந்து தொடங்கியது என்று பூட்டோ குடும்பத்தை மிக நெருக்கமாக அறிந்தவரும், ஜூல்ஃபிகர் அலி பூட்டோவின் வாழ்க்கை வரலாற்றை (மை ப்ளட்) எழுதியவரும், மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் ஆய்வாளருமான ஃபரூக் சுஹைல் கோயிண்டி குறிப்பிடுகிறார். இதற்கிடையில் 1967-ல் ஓர் அரசியல் பேரணியில், ’இந்தியாவுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிடுவோம்’ என்று பூட்டோ கூறியது மிகவும் பிரபலமானது.60களில் பாகிஸ்தானில் இந்திய எதிர்ப்பு அரசியல் அலை இருந்தது. பூட்டோ தனது அரசியல் வாழ்வில் முன்னேற அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று ஃபரூக் சுஹைல் கோயிண்டி கூறுகிறார். 1971 டிசம்பர் 15 ஆம் தேதி இந்திய ராணுவம் டாக்காவை (கிழக்கு பாகிஸ்தானின் தலைநகரம். பின்னர் பங்களாதேஷின் தலைநகராக மாறியது) கைப்பற்றிய நாளில் பூட்டோ அமெரிக்காவில் இருந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்பந்தத்தை எதிர்த்த அவர் அந்த ஒப்பந்தத்தின் காகிதத்தை கிழித்து எறிந்துவிட்டு ஐநா கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். ஆனால் அதே பூட்டோ அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் 1972 இல் சிம்லா உடன்படிக்கையை செய்துகொண்டார். அதில் காஷ்மீர் பிரச்சனையை இரு நாடுகளும் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும் மூன்றாம் தரப்பினர் தேவையில்லை என்றும் பாகிஸ்தான் முதல் முறையாக ஏற்றுக்கொண்டது. சிம்லா உடன்படிக்கைக்குப் பிறகு அவர் பிரெஞ்சு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். பத்திரிக்கையாளர் ஆயிரம் வருட போர் மற்றும் சிம்லா ஒப்பந்தம் பற்றி கேள்வி கேட்டபோது, பூட்டோ தனது அறிக்கையில் இருந்து பின்வாங்கி ’இந்திய துணைக் கண்டத்தில் முஸ்லிம்களின் வரலாறு ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தான் இதைத்தான் குறிப்பிட்டதாகவும், இந்தியாவுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிடுவதாக சொல்லவில்லை என்றும் அவர் பதில் அளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1974 இல், இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியபோது, பூட்டோ (அப்போது பிரதமர்) உடனடியாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்திய துணைக் கண்டம் இப்போது பாதுகாப்பற்றதாக மாறிவிட்டது, எனவே பாகிஸ்தானும் அணுசக்தி சக்தி நாடாக உருவாகும் என்று கூறினார். நாங்கள் புல் சாப்பிடும் நிலைமைக்கு வந்தாலும் கண்டிப்பாக அணுகுண்டுகளை தயாரிப்போம் என்று அவர் விடுத்த மற்றொரு அறிக்கையும் மிகவும் பிரபலமாக ஆனது. பூட்டோவின் இந்த சித்தாந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் பாகிஸ்தானின் உள் அரசியல் என்கிறார் ஃபரூக் சுஹைல் கோயிண்டி. ”பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பதால், இந்தியாவின் அரசியல் அதன் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பாகிஸ்தானின் தலைவர் ஒருவர் பஞ்சாபில் பிரபலமாக இல்லையென்றால் அவர் முழு பாகிஸ்தானின் தலைவராக கருதப்படமாட்டார்,” என்று அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சி PPP, சிந்துவின் கட்சியாகக் கருதப்படுவதால், எந்த ஒரு அரசியல்வாதியும் பஞ்சாபில் பிரபலமாக இருப்பதற்கு இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுப்பது அவசியம். ”தாஷ்கண்ட் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி அயூப் கானுக்கு எதிராக ஜூல்ஃபிகர் அலி பூட்டோ ஒரு இயக்கத்தைத் தொடங்கினார். பாகிஸ்தான் மக்கள் முன் காஷ்மீரின் ஹீரோவாக தன்னைக் காட்டிக் கொண்டார்,” என்று லாகூரைச் சேர்ந்த மூத்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் சையத் மும்தாஜ் அகமது கூறுகிறார். முதலில் தாஷ்கண்ட், பின்னர் ஐநாவில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த (1971) ஒப்பந்த காகிதத்தை கிழித்தெறிந்தது மற்றும் சிம்லா ஒப்பந்தம் - பூட்டோவின் அரசியல் சிந்தனையில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? பஞ்சாப் மாகாண மக்களுக்கு தான் பாகிஸ்தானுக்கு எதிரானவன் அல்ல என்ற செய்தியை கொடுக்க அவர் விரும்பியதாக ஃபரூக் சுஹைல் கோயிண்டி கூறுகிறார். பாகிஸ்தான் நிர்வாகம், வலதுசாரி மதக் குழுக்கள் மற்றும் குறிப்பாக ராணுவம், பூட்டோ குடும்பத்தை சந்தேகக்கண்களுடன் பார்க்கின்றன. பூட்டோ சந்தேகத்துடன் பார்க்கப்படுவதற்கான ஒரு காரணத்தை ஃபரூக் சுஹைல் கோயிண்டி விளக்குகிறார்.”1967 இல் பூட்டோ தொடங்கிய இயக்கம் மிகவும் புரட்சிகரமான இயக்கம். இது இடதுசாரி சித்தாந்தத்தால் முற்றிலும் கவரப்பட்டு மதக் குழுக்களையும் ராணுவத்தையும் எதிர்த்தது. இந்த இயக்கத்தில் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்கள் ஈடுபட்டனர்,”என்று அவர் கூறினார். இருப்பினும் 1971 போரில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பிறகு பாகிஸ்தான் ராணுவம் பலவீனமடைந்துவிட்டதால், பூட்டோ மீது அதிக அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்று சையத் மும்தாஜ் அகமது கூறுகிறார். ”அதனால்தான் பூட்டோ இந்தியாவுடன் சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ராணுவம் எதுவும் செய்யவில்லை. ஆனால் சிம்லாவிலிருந்து லாகூர் வந்த பிறகு, காஷ்மீர் தொடர்பான தனது கொள்கையில் பாகிஸ்தான் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று பூட்டோ அறிக்கையை வெளியிட்டார் என்பதும் உண்மை,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனது தாய்க்காக பரிந்து பேசிய பூட்டோ

பட மூலாதாரம், Getty Images
ஜூல்ஃபிகர் அலி பூட்டோவின் தாயார் ஒரு இந்து ராஜ்புத் பெண். பின்னர் அவர் இஸ்லாத்திற்கு மாறினார். இதன் காரணமாகத்தான் பூட்டோ சில அழுத்தங்களுக்கு உள்ளானாரா? தான் இந்தியாவுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை அளிக்க விரும்பினாரா? ”தனது தாயார் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதை பூட்டோ எப்போதும் அறிந்திருந்தார். ’நான் ஒரு ஏழைத் தாயின் மகன். சமூகம் ஏழைகளை எப்படி நடத்துகிறது என்பதை நான் பார்த்திருக்கிறேன்' என்று கூறுவது வழக்கம்,” என்று ஃபரூக் சுஹைல் கோயிண்டி குறிப்பிட்டார். ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியினரும் அதன் செய்தித்தாள்களும், அவரது இந்து தாயின் காரணமாக பூட்டோவை எப்போதும் குறிவைத்து வந்தனர் என்று லாகூரைச் சேர்ந்த பாகிஸ்தானின் மூத்த பத்திரிக்கையாளர் சையத் மும்தாஜ் அகமது கூறினார். ஒரு சம்பவத்தை விவரித்த அவர், ”1977 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பூட்டோ ஒரு பேரணியில், 'என் அரசியல் எதிரிகள் என் தாயை தினமும் வசை பாடுகிறார்கள். அதனால் இன்று அவர்களை திட்டிப்பேச என் மனம் விரும்புகிறது' என்று கூறினார்,” என்று குறிப்பிட்டார். பேரணியில் இருந்த பெண்களிடம் மாலை ஆகிறது, எனவே வீட்டிற்குச் செல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் அவதூறு பேச்சுக்களுக்கு ஆளாவதை நான் விரும்பவில்லை என்று பூட்டோ கூறியதாக மும்தாஜ் அகமத் தெரிவிக்கிறார். அந்தப்பேரணியில் பூட்டோ தனது அரசியல் எதிரிகளை நோக்கி ஒரு பஞ்சாபி அவதூறு வார்த்தையை பயன்படுத்தியதாக மும்தாஜ் அகமது குறிப்பிட்டார். ஆயினும் அவரது தாயார் இந்துவாக இருந்தது, பூட்டோவின் அரசியல் முடிவுகளில் எந்த இடையூறையும் ஏற்படுத்தவில்லை என்று இந்த இரண்டு அரசியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
பெனாசிர் பூட்டோ
பெனாசிர் பூட்டோ இரண்டு முறை பாகிஸ்தானின் பிரதமராக இருந்தார். இதன் போது தேசிய தொலைக்காட்சியில் காஷ்மீர் பிரச்னையை எழுப்பி ஆசாதி, ஆசாதி, ஆசாதி(விடுதலை) என கோஷம் எழுப்பினார். ஆனால் பின்னர் அவரது சிந்தனையும் மாறியது. எனக்கு மூன்று முன்மாதிரிகள், தன் தந்தை ஜூல்ஃபிகர் அலி பூட்டோ, ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் இந்திரா காந்தி என்று பெனாசிர் எப்பொழுதும் கூறுவார். அரசியலில் இணைவதற்கு முன்பு மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் பாகிஸ்தானில் 1978-82க்கு இடையில் வெளியுறவுத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1971-க்கு முன்பான பாகிஸ்தானின் சிந்தனை, வங்கதேம் உருவான பிறகு முற்றிலும் மாறிவிட்டதாக மணிசங்கர் ஐயர் கூறுகிறார். "1971க்கு முன்பு பாகிஸ்தானில், ’ஒரு முஸ்லிம் (சில நேரங்களில் நான்கு, நாற்பது, சில நேரங்களில் 400 என்று சொல்லப்படுகிறது) இந்துக்களை எதிர்த்து போட்டியிடமுடியும்.’ ’நாளை மாலைக்குள் செங்கோட்டையில் இஸ்லாமியக் கொடி ஏற்றப்படும்’ என்று கூறப்பட்டு வந்தது," என்று மணிசங்கர் ஐயர் கூறுகிறார், ஆனால் தான் பாகிஸ்தானில் இருந்தபோது அப்படி யாரும் பேசவில்லை என்றும், ஜெனரல் ஜியா-உல்-ஹக்கும் இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்பியதாகவும் மணிசங்கர் ஐயர் தெரிவித்தார். ராஜீவ் காந்தி 1988 டிசம்பரில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். 1989 ஜூலையில் மீண்டும் சென்றார். அப்போது பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் பிரதமராக இருந்தார். முன்னதாக 1960-ல் ஜவஹர்லால் நேரு பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.
முதன்முறையாக ராஜீவ் காந்தி சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றார். ஆனால் 1989 ஜூலையில் பெனாசிர் பூட்டோவின் அழைப்பின் பேரில் அவர் சென்றார் என்று மணிசங்கர் ஐயர் கூறுகிறார். சார்க் மாநாட்டின் போது பெனாசிர், ராஜீவ் காந்தியையும் சோனியா காந்தியையும் தனது இல்லத்தில் விருந்துக்கு அழைத்தார். இங்கிலாந்தில் பல்கலைக்கழக நாட்களில் பெனாசிர் பூட்டோவின் நெருங்கிய நண்பராக இருந்த புகழ்பெற்ற இந்திய பத்திரிகையாளர் கரண் தாப்பர் அந்த இரவு உணவு பற்றிக்குறிப்பிடுகிறார். பெனாசிரின் மரணத்திற்குப் பிறகு, தாப்பர் ஆங்கில நாளிதழான ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதிய ஒரு கட்டுரையில்," ராஜீவ் காந்தியும் பெனாசிரும் திருமணம் செய்துகொண்டு இருநாடுகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று ஒரு நகைச்சுவையான பேச்சு இருந்தது. இரவு விருந்தின்போது இதைப்பற்றிப்பேசி நாங்கள் மிகவும் சிரித்தோம். ராஜீவ் (காந்தி) மிகவும் அழகானவர் ஆனால் அதே அளவு கடினமானவர் என்று பெனாசிர் என்னிடம் கூறினார்." என்று குறிப்பிட்டுள்ளார். பெனாசிர் பூட்டோ எல் கே அத்வானியின் குடும்பத்துடனும் நட்பு கொண்டிருந்தார் என்று கரண் தாப்பர் கூறுகிறார். 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெனாசிரை தான் சந்தித்தாகவும், பெனாசிர் ஒரு புத்தகத்தை (அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் கப்லானின் புத்தகம்) அத்வானிக்கு பரிசளிக்கும்படிகூறி தன்னிடம் அளித்தாகவும் தாப்பர் தெரிவித்தார். அதற்குப்பிறகும் கூட பெனாசிர், அத்வானிக்கு பல அன்பளிப்புகளை தன் மூலம் அனுப்பி இருப்பதாக கரண் தாப்பர் கூறினார். கரண் தாப்பர் 2018 ஆம் ஆண்டு வெளியான தனது புத்தகத்தில் (டெவில்ஸ் அட்வகேட்: தி அன்டோல்ட் ஸ்டோரி) பெனாசிர் பூட்டோ பற்றி ஒரு முழு அத்தியாயத்தை எழுதியுள்ளார்.
பூட்டோ குடும்பத்தை இந்திய எதிர்ப்பாளர்கள் என்று கூறலாமா?

பட மூலாதாரம், Getty Images
”ஜூல்ஃபிகர் அலி பூட்டோ இந்தியாவை வெறுக்கவில்லை என்றாலும், அவருக்கு இந்தியா மீது அன்பு அல்லது சிறப்பு பற்று இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை,” என்று இந்தியாவின் பிரபல சமூக ஆர்வலரும், எழுத்தாளரும், திட்டக் கமிஷனின் உறுப்பினரும், ஜுல்ஃபிகர் அலி பூட்டோ பற்றிய(Born to be hanged) புத்தகத்தை எழுதியவருமான சயீதா சையதைன் ஹமீத் கூறுகிறார். ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் போது தனது 11 வயது மகன் முர்துசா பூட்டோவின் பெயரை குறிப்பிட்டு, இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் (சரணடைதல் ஆவணம்) காகிதத்துடன் பாகிஸ்தானுக்குத் திரும்ப வேண்டாம் என்று அவன் தன்னிடம் கூறியதாக ஜூல்ஃபிகர் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார். மரணதண்டனைக்கு முன் பூட்டோ வெளியிட்ட கடைசி அறிக்கையிலும் இந்தியாவைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று சயீதா ஹமீத் கூறுகிறார். ஆனால் பூட்டோ ஜவஹர்லால் நேருவை மிகவும் விரும்பினார் என்றும் ஒரு வகையில் நேருவை அவர் தனது ஆதர்ச அரசியல்வாதியாகக் கருதினார் என்று கூறுவதில் தவறில்லை என்றும் மும்தாஜ் அகமது கூறுகிறார். ஜெனரல் ஜியா, பூட்டோவை தூக்கிலிட முடிவு செய்தபோது, இந்திரா காந்தி அறிக்கை வெளியிட்டு அதை எதிர்த்தார். அந்த நேரத்தில் இந்திரா காந்தி எதிர்க்கட்சியில் இருந்தார். ஆனால் ஜெனரல் ஜியாவை ஆதரித்த அப்போதைய இந்தியப் பிரதமர் மொரார்ஜி தேசாய், பூட்டோவின் மரணதண்டனைக்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இந்திய அரசியல்வாதியான பீலு மோதி, ஜூல்ஃபிகர் அலி பூட்டோவின் குழந்தைப் பருவ நண்பர். பம்பாயில் அவருக்கு நகர்ப்புற பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்த வழிகாட்டியாகவும் இருந்தார். அவர்களின் நட்பு பல ஆண்டுகள் நீடித்தது. பீலு மோதி 'ஜூல்ஃபி, மை ஃப்ரெண்ட்' என்ற ஒரு புத்தகத்தையும் எழுதினார். பீலு மோடிக்கு மட்டுமே ஜூல்ஃபிகர் அலி பூட்டோவை ’ஜூல்பி’ என்று அழைக்கும் உரிமை இருந்தது. அவர் காலமாவதற்கு ஒரு நாள் முன்னதாக பீலு மோடியை தான் பேட்டி கண்டதாக ஃபரூக் கோயிண்டி கூறுகிறார். பூட்டோ தனது இளமைக் காலத்தில் பம்பாயில் துணிக்கடை திறக்க விரும்பியதாக பீலு மோடி அப்போது அவரிடம் கூறினார். "ஜூல்ஃபிகர் அலி பூட்டோ அதிகம் படிக்காமல் இருந்திருந்தால் இன்று பம்பாயில் அவரது குடும்பமும், ஒரு துணிக்கடையும் இருந்திருக்கக்கூடும்,” என்று ஃபரூக் கோயிண்டி கூறுகிறார்.
பிலாவலின் சமீபத்திய அறிக்கை
பிலாவல் பூட்டோவின் சமீபத்திய அறிக்கை குறித்து கருத்துத்தெரிவித்த மும்தாஜ் அகமது, பாகிஸ்தான் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் அளித்த அறிக்கைக்குப் பிறகு பிலாவலுக்கு வேறு வழி இல்லை. அவர் இப்படி ஏதாவது பதிலைத்தான் சொல்லவேண்டிஇருந்திருக்கும் என்றார். "1965 இன் ஜூல்ஃபிகர் அலி பூட்டோவின் பாரம்பரியத்தை புதுப்பிக்க பிலாவல் பூட்டோவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் பிலாவலுக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்தால், அவரது அரசியல் வாழ்க்கை முன்னேறும்."என்று அவர் குறிப்பிட்டார். "நாம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினால், பாகிஸ்தானிடமிருந்தும் கடுமையான பதிலடி வரும் என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்," என்று மணிசங்கர் ஐயர் தெரிவித்தார்.
முன்னோக்கிய பாதை
1971க்கு முந்தைய சிந்தனைக்கு பாகிஸ்தான் திரும்பிவிடுமோ என்று தான் பயப்படுவதாகவும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதே இதற்கு ஒரே தீர்வு என்றும் மணிசங்கர் கூறுகிறார். தனிப்பட்ட நபரின் அறிக்கை மற்றும் சிந்தனைக்கு பதிலாக, இந்தியாவின் நலன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். பாகிஸ்தானின் ஒவ்வொரு அரசியல்வாதியும் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறார்கள். ஆனால் அங்குள்ள அமைப்புகள் அதாவது ராணுவம் இதை விரும்பவில்லை. அதன் சிந்தனையில் மாற்றம் வராவிட்டால், இந்திய -பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த முடியாது என்று பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் சையத் மும்தாஸ் அகமது சுட்டிக்காட்டினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












