You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உயிர் தப்பியவர் பயணித்த 11ஏ இருக்கை விமானத்தில் எங்கே இருக்கும்? அவசர காலத்தில் பயணிகள் என்ன செய்ய வேண்டும்?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
ஆமதாபாத் விமான விபத்தில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தில் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் தப்பியுள்ளார். தன்னுடன் பயணித்த 241 பேரும் சில நொடிகளில் உடல் கருகி உயிரிழந்த நிலையில், இவர் மட்டும் விமான விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து சிறு காயங்களுடன் எழுந்து ஆம்புலன்சை நோக்கி நடந்து சென்ற காட்சிகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இருக்கை 11ஏ, போயிங் விமானத்தின் அவசர கால வழிக்கு அருகில் அமைந்திருப்பதாகும். அதாவது விஸ்வாஸ் குமாரின் இடது புறத்தில் கை நீட்டும் தூரத்தில் அவசர கால வழி இருந்துள்ளது.
11ஏ என்பது எகானமி கிளாஸ் பகுதியின் முதல் இருக்கையாகும் (இடதுபுறத்திலிருந்து). அதாவது பிசினஸ் கிளாஸ் பகுதி முடிந்து எகானமி கிளாஸ் தொடங்கும் இடத்தில் இருக்கும் இருக்கை என்பதால், மற்ற எகானமி இருக்கை வரிசைகளுடன் ஒப்பிடும்போது அங்கு அதிக இடைவெளி இருக்கும். அது ஒருவர் நடந்து செல்லும் அளவிலான இடைவெளி என்பதால், அந்த இடத்தில் தடைகள் எதுவும் இல்லாமல் ஒருவரால் உடனே எழுந்து நிற்க முடியும்.
அவசர கால வழிகளுக்கு அருகில் அமர்பவர்கள் பொதுவாக நல்ல உடல்நிலையுடன் இருப்பவர்களா என்பதை விமானக்குழுவினர் உறுதி செய்துக் கொள்வர். முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அந்த இருக்கையில் அமர வழக்கமாக அனுமதிக்க மாட்டார்கள். ஒரு அவசர நிலையில் பயணிகள் என்ன செய்ய வேண்டும் என்று பொதுவாக வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் போக, அவசர காலவழிக்கு அருகில் இருப்பவர் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தனியாக அறிவுறுத்தப்படும்.
அந்த அவசர கால கதவை அவரால் திறக்க இயலுமா என்பதை கேட்டறிந்து கொண்டு, அதை எப்படி இயக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் விமானக்குழுவினர் அவருக்கு தெரிவிப்பார்கள். இவை எல்லாம் விமானம் புறப்படுவதற்கு முன் அந்த இருக்கையில் அமர்ந்திருப்பவருக்கு சொல்லப்படும்.
உயிர் தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஸ்வாஸ் குமார், அவசரகால கதவு உடைந்த பிறகு, அது வழியாக வெளியே வந்ததாக தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார். விமானம் விபத்துக்குள்ளான போது, தனது இருக்கையான 11ஏ, விமானம் மோதிய கட்டடத்தின் தரை தளத்தில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். பிறகு தனது சீட் பெல்டை கழற்றி, விமானத்திலிருந்து வெளியே வந்ததாகவும், தனது இடது கையில் தீக்காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"நான் அமர்ந்திருந்த இருக்கை, விடுதியின் பக்கம் இல்லை. நான் கட்டடத்தின் தரை தளத்தில் இருந்தேன். எனக்கு பிறரை பற்றி தெரியவில்லை. ஆனால் நான் அமர்ந்திருந்த இடம் தரையில் இருந்தது. எனது அருகே இருந்த கதவு உடைந்தவுடன், அங்கே கொஞ்சம் இடம் இருப்பதை பார்த்தேன். அதன் வழியாக வெளியே வந்தேன். விமானத்தின் எதிர்ப்புறம் ஒரு கட்டடத்தின் சுவர் இருந்தது. விமானத்தின் மறுபுறம் அந்த சுவரின் மீது முழுவதும் மோதியிருந்தது. எனவே தான் அங்கிருந்து யாரும் வெளியே வர முடியவில்லை என்று நினைக்கிறேன். நான் இருந்த இடத்தில் மட்டுமே இடம் இருந்தது. நான் எப்படி பிழைத்தேன் என்று தெரியவில்லை" என்று விஸ்வாஸ் குமார் ரமேஷ் கூறியுள்ளார்.
"விமானம் புறப்பட்ட பிறகு ஐந்து -பத்து நொடிகள் எல்லாம் நின்று போனது போல இருந்தது. விமானத்தில் பச்சை மற்றும் வெள்ளை விளக்குகள் எரிய தொடங்கின. மேல் எழும்புவதற்காக விமானத்தின் வேகம் அதிகரிக்கப்பட்டிருக்கலாம், பிறகு விடுதி கட்டிடத்தில் மோதியது. எல்லாம் என் கண் முன்னே நடந்தது." என்று அவர் பார்த்ததை விவரித்தார்.
விமானத்தில் அவசர நிலையின் போது பயணிகள் என்ன செய்ய வேண்டும்?
இந்த விமான விபத்தில் விஸ்வாஷ் குமார் உயிர் தப்பியது உண்மையிலேயே அதிசயம் தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் எல்லா நேரமும் அதிசயத்திற்காக காத்திருக்க முடியாது, அவசர காலங்களில் விமான பயணிகள் செய்ய வேண்டியவற்றை தெரிந்து கொள்வது அவசியமாகும். விமானம் புறப்படும் முன், விமானக் குழுவினர் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கவனம் சிதறாமல் கவனிப்பது முக்கியமாகும்.
விமானங்களை பொருத்தவரை incident (சம்பவம்), accident (விபத்து) என்று இரண்டு வகையில் நிகழ்வுகளை பிரித்துப் பார்க்கலாம் என்கிறார் டாக்டர் அசோகன். இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் ஏரோநாடிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையின் தலைவராக இருக்கும் அவர், "பயணத்தின் போது தீவிர அதிர்வுகள் உணரப்பட்டு, அதனால் விமானத்தை தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அதுபோன்ற சூழலில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விடுவார்கள், விமானத்துக்கும் எந்த சேதமும் ஏற்படாது. அது போன்ற நிகழ்வு incident எனப்படும். அதுவே, விமானத்துக்கோ, பயணிகளுக்கோ பாதிப்பு ஏற்படும் வகையிலான நிகழ்வாக இருந்தால் அது accident (விபத்து) எனப்படும். இரண்டு விதமான நிலைகளிலும் பயணிகள் விமானக்குழுவினரின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்" என்கிறார்.
அவசர நிலைக்கான முதல் சில அறிகுறிகள் என்ன?
விமான பயணத்தின் போது ஒரு அவசர நிலைக்கான முதல் சில அறிகுறிகளில் ஒன்று அதிர்வுகள் ஆகும். "விமானம் சீராக செல்லும் உணர்வை தராமல், நீங்கள் அமர்ந்திருக்கும் போது சில நேரம் அதிர்வுகளை உணரலாம். அப்படி என்றால் சற்று கவனமாக இருக்க வேண்டும். எல்லா அதிர்வுகளும் ஆபத்தாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேகத்தின் உள்ளே செல்லும் போதும் லேசான அதிர்வுகள் ஏற்படலாம். அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதுவே தீவிரமாக இருந்தால் சில பாதிப்புகள் ஏற்படலாம்" என்கிறார் அசோகன்.
விமான பயணத்தில் ஆபத்து ஏற்படும் போது, அடுத்து நடப்பது விமானத்தை தரையிறக்கி, அதிலிருந்து வெளியேறுவது. எப்போது எப்படி வெளியேற வேண்டும் என்பதை விமானக்குழுவினரின் அறிவுறுத்துவார்கள்.
விமானம் தரையிறங்க தயாராகும் போது, சீட்பெல்ட் சரியாக அணிந்துக் கொள்ள வேண்டும். தரையிறங்கும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக அங்கும் இங்கும் அலைபாயாத வகையில் சீட்பெல்ட் உடலை இறுக்கப் பற்றியிருக்க வேண்டும். விமானம் ஒரு இடத்தில் நிறுத்தப்படும் வரை சீட்பெல்ட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
'Brace For Impact' (ப்ரேஸ் ஃபார் இம்பாக்ட்) என்று விமானியும் விமானக்குழுவினரும் அறிவுறுத்தும் போதும், அமர்ந்த நிலையில், தலை குனிய வேண்டும், பிறகு கால் இரண்டையும் ஒன்றாக தரையில் வலுவாக அழுத்தி வைக்க வேண்டும். கால்களை உயர்த்தியோ, மடக்கியோ வைத்திருக்கக் கூடாது. குனிந்த தலைகளின் மேல், அவற்றை பாதுகாக்கும் வகையில் கைகளை வைக்க வேண்டும். அல்லது கால்களுடன் சேர்ந்து கைகளை கட்டிக் கொள்ளலாம். இந்த நிலையில், பாதிப்பு குறைவாக இருக்கக்கூடும்.
விமானம் தரையிறங்கிய பின், வெளியேறுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டால், அதை முறையாக பின்பற்ற வேண்டும்.
"பயணத்தை தொடங்கும் போதே, உங்கள் இருக்கைக்கு அருகில் உள்ள அவசர கால வழிகள் எவை என்று பார்த்துக் கொள்ளவும். எந்த திசையில் நாம் வெளியேற வேண்டும் என்ற கடைசி நேர குழப்பத்தை தவிர்த்துக் கொள்ளலாம். அவசர நிலையின் போது, தரையில் எரியும் விளக்குகள் அருகில் இருக்கும் அவசர கால கதவுகளை நோக்கி வழி நடத்தும். அதையும் கவனித்துக் கொள்ளலாம்" என்கிறார் அசோகன்.
ஆக்சிஜன் முகக் கவசம் எப்போது பயன்படுத்த வேண்டும்?
விமானத்தின் உள்ளே இருக்க வேண்டிய அளவுக்கும் கீழே காற்றின் அழுத்தம் குறையும் போது, பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புண்டு, ஏனென்றால் உள்ளிருக்கும் ஆக்சிஜன் அளவு அப்போது குறைந்துவிடும். பொதுவாக விமானம் அதிக உயரத்தில் பறக்கும் போது ஆக்சிஜன் குறையக் கூடும். அது போன்ற சூழலில் ஒவ்வொருவரின் இருக்கையின் மேலும் இருக்கும் ஆக்சிஜன் முகக் கவசம் (ஆக்சிஜன் மாஸ்க்) தானாக கீழிறங்கி தொங்கும்.
முகத்துக்கு நேராக தொங்கும் அந்த ஆக்சிஜன் முகக் கவசத்தை எடுத்து முகத்தில் வாய் மற்றும் மூக்குப் பகுதியை மறைக்கும் வண்ணம் அணிந்து கொள்ள வேண்டும். அந்த முகக்கவசத்தின் மூலம் பயணிகளுக்கு ஆக்சிஜன் சீராக கிடைக்கும். விமானத்தின் அழுத்தம் குறையும் நேரம் மட்டுமல்லாமல், ஏதாவது காரணத்தினால் விமானத்தின் உள்ளே புகை சூழ ஆரம்பித்தாலும், ஆக்சிஜன் முகக்கவசத்தை பயன்படுத்துமாறு விமானக்குழுவினர் அறிவுறுத்துவார்கள்.
விமானம் புறப்படும் முன், இவற்றை மிக தெளிவாக விமானக்குழுவினர் செய்து காண்பிப்பார்கள்.
விமானம் நிலத்தில் இறங்கும் போதும், தண்ணீரில் இறங்கும் போதும் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகள் வெவ்வேறாக உள்ளன.
"தண்ணீரில் தரையிறங்கும் போது உயிர் காக்கும் ஜாக்கெட் அணிந்துக் கொள்ள வேண்டும். நிலத்தில் இறங்கும் போது இது தேவைப்படாது. இந்த ஜாக்கெட்டுகள் இருக்கைகளுக்கு அடியில் அல்லது பக்கவாட்டில் வைக்கப்பட்டிருக்கும். (விமானம் புறப்படும் முன்னே இதுகுறித்து விமானக் குழுவினர் பயணிகளுக்கு எடுத்துரைப்பார்கள். அந்த அறிவுறுத்தல்களை கவனமாக கேட்கவும்) அதை எடுத்து உடலின் மேல் பாகத்தில் அணிந்து கொள்ள வேண்டும். தண்ணீரில் விமானம் இறங்கும் போது, விமானம் நீரின் மேற்பரப்பை தொடும் வரை அவசரகால வழிகள் திறக்கப்படாது. விமானத்தை விட்டு வெளியே செல்லும் வரை அல்லது விமானக்குழுவினர் சொல்லும் வரை நாம் அணிந்திருக்கும் உயிர் காக்கும் ஜாக்கெட்டுகளில் காற்று ஊதக் கூடாது" என்றார் அசோகன்.
- ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்கள் யார் யார்?
- ஆமதாபாத் விமான விபத்து – மகனை காப்பாற்ற முயன்று தீயில் சிக்கி காயமடைந்த தாய்
- ஆமதாபாத் விமான விபத்தில் இருந்து இவரை காப்பாற்றிய அந்த '5 நிமிடங்கள்' - என்ன நடந்தது?
- ஏர் இந்தியா விமானம் மோதிய விடுதியில் இருந்தவர்களின் நிலை என்ன? - ஆமதாபாத்தில் இன்று என்ன சூழல்?
அவசர கால கதவுகள் எப்போது யாரால் திறக்கப்படும்?
அவசர கால கதவுகளை விமானக்குழுவினரின் அறிவுறுத்தல் இல்லாமல் எப்போதும் திறக்கக் கூடாது.
பயணிகள் சீக்கிரமாக விமானத்தை விட்டு வெளியேறும் வகையில், சாதாரண வழிகளை விட கூடுதல் அகலத்துடன் அது வடிவமைக்கப்பட்டிருக்கும். விமானத்தின் முன்னும் பின்னும் என விமானத்தின் நீளத்தைப் பொருத்து எத்தனை கதவுகள் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.
இந்த கதவுகளை விமானக்குழுவினர் அல்லது விமானக்குழுவினரின் அறிவுறுத்தலின் பேரில், அந்த கதவுக்கு அருகில் இருப்பவர் திறக்கலாம்.
"குறிப்பாக விமானம் நடுவானில் இருக்கும் போது பயணிகள் தானாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. நடுவானில் ஒரு அவசர நிலை ஏற்பட்டால், விமானக்குழுவினர் கூறுவதை அப்படியே கேட்பதை தவிர பயணிகளுக்கு வேறு வழியில்லை" என்கிறார் அசோகன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு