You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரப்பான் பூச்சிகளுக்கு அணுகுண்டு வெடிப்பில்கூட ஒன்றும் ஆகாதா? உண்மை என்ன?
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
கரப்பான் பூச்சி.
இந்த வார்த்தையைக் கேட்டதுமே சிலர் பதறியடித்துக் கொண்டு துள்ளுவதைப் பார்த்திருப்போம். ஆனால், இந்தக் கரப்பான்களின் வாழ்க்கைச் சுழற்சியில் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை.
கரப்பான் பூச்சிகளின் 'தலையை வெட்டினாலும் சில நாட்களுக்கு அவை உயிருடன் இருக்கும்' என்று சொல்லப்படும் ஒரு தகவல் பற்றிய சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது. குறிப்பாக, ஒரு கரப்பான் பூச்சியால் எத்தனை நாட்களுக்கு உணவு, தண்ணீரின்றி இருக்க இயலும் என்ற சந்தேகமும் உண்டு.
அதைப் போலவே, கரப்பான் பூச்சிகளால் ஓர் அணுகுண்டு வெடிப்பில்கூட உயிரிழக்காமல் பிழைத்திருக்க முடியும் என்ற கூற்றுகளையும் சமூக ஊடகங்களில் காண முடிந்தது.
இவையெல்லாம் உண்மையா என்பதைத் தெரிந்துகொள்ள ஆய்வாளர்கள், உயிரியல் நிபுணர்களின் உதவியை நாடினோம். அவர்கள் தந்த விளக்கங்கள் கரப்பான்கள் பற்றிய பல ஆச்சர்யகரமான தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவின.
கரப்பான் பூச்சிகளுக்கு அணுகுண்டு வெடிப்பில்கூட ஒன்றும் ஆகாதா?
பிபிசியின் சயின்ஸ் ஃபோகஸில் இதுகுறித்து விளக்கமளித்த உயிரியலாளர் லூயிஸ் வில்லஸோன், நிச்சயமாக அப்படி இல்லை என்றும் அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதில் முதலாவது காரணம், கரப்பான்களின் கதிர்வீச்சைத் தாங்கும் திறன். அவை மனிதர்களைவிட உறுதியானவை என்பது உண்மைதான். ஆனால், இந்தக் கூற்று கிட்டத்தட்ட அனைத்து பூச்சிகளுக்குமே பொருந்தும். அவற்றின் எளிமையான உடலமைப்பு இந்தத் திறனை வழங்குகின்றது.
ஆனால், ஒரு கரப்பான் பூச்சியால் மனிதர்களுக்கு ஆபத்தான கதிர்வீச்சு அளவைவிட ஆறு முதல் 15 மடங்கு வரை மட்டும்தான் தாங்க முடியும் என்கிறார் லூயிஸ். "ஹப்ரோபிராகன் என்ற ஒட்டுண்ணிக் குளவி மட்டுமே இதிலிருந்து வேறுபடுகிறது. அவற்றால் மனிதர்களுக்கு ஆபத்தான அளவைவிட 180 மடங்கு அதிகமான கதிர்வீச்சைச் சமாளிக்க முடியும்."
கரப்பான்களால் அணுகுண்டு வெடிப்பில் உயிர் பிழைக்க முடியாது என்பதற்கான இரண்டாவது காரணமாக, அவை மனிதர்களுடன் இணைந்து வாழத் தகவமைத்துக் கொண்டதை லூயிஸ் வில்லஸோன் குறிப்பிடுகிறார்.
"மனிதர்கள் அணுகுண்டுகளால் அழிக்கப்பட்டவுடன், அவற்றுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய உணவுகள் அனைத்தையும் வேகமாக எடுத்துக் கொள்வதால், கரப்பான்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
அதைத் தொடர்ந்து அந்த உணவின் இருப்பு மனிதர்கள் இல்லாத காரணத்தால் தொடர்ச்சியாகக் கிடைக்காது. அதனால் அவற்றின் எண்ணிக்கையில் வியத்தகு வீழ்ச்சி ஏற்படும். ஒருவேளை அதிலிருந்து சிறிதளவு பிழைத்தாலும், இயற்கைப் பொருட்களையே முற்றிலுமாகச் சார்ந்து வாழும் பூச்சிகளைவிடச் சிறிய அளவிலேயே அவை இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
சரி, ஒரு கரப்பான் பூச்சியால் எவ்வளவு காலத்திற்கு உணவு, தண்ணீரின்றி பிழைத்திருக்க முடியும்? அவற்றின் உடலமைப்பு எப்படிப்பட்டது?
கரப்பான் பூச்சிகள் உணவு, தண்ணீர் இன்றி உயிர் பிழைப்பது எப்படி?
ஒரு கரப்பான் பூச்சி நீண்டகாலத்திற்கு உணவு, தண்ணீர் கிடைக்காத சூழலில் சிக்கிக்கொண்டால் உயிர் பிழைப்பதற்கு ஏற்ற தகவமைப்பு அவற்றின் உடலில் இருப்பதாகக் கூறுகிறார் அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் கரப்பான் பூச்சிகளின் உடலமைப்பு குறித்து ஆய்வு செய்தவருமான முனைவர் ஜோசப் குன்கெல்.
கரப்பான்களின் வெளிப்புற உடலில் ஒரு மெழுகுப் பூச்சு போன்ற படலம் இருக்கும். "அது உடலில் இருந்து நீர் வெளியேறுவதைத் தடுக்க உதவுகிறது. அதனால்தான் அவற்றால் அதிக காலத்திற்குத் தண்ணீர் இன்றி இருக்க முடிகிறது" என்று விளக்கினார் முனைவர் ஜோசப் குன்கெல்.
அதோடு, ஒரு கரப்பான் பூச்சி அதன் ஆரம்பக்கட்ட வாழ்வில் அதிகளவிலான உணவு கிடைத்து நன்றாகச் சாப்பிட்டால், ஒவ்வொரு பருவத்திலும் அவற்றுக்குச் சுமார் 4 மணிநேரம் மட்டும் சாப்பிட்டால் கூடப் போதுமானது என்ற ஆச்சர்யமான உண்மையையும் அவர் குறிப்பிட்டார்.
அவை தமது உடலில் சேமிக்கப்பட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்து, புரதம் அல்லது ஆற்றலின் மூலமாகப் பயன்படுத்தும். அத்துடன், ரத்தத்தில் இருக்கும் ட்ரெஹலோஸ் எனப்படும் குளுக்கோஸ் மூலக்கூறுகளால் ஆன சர்க்கரையும் ஆற்றல் மூலமாகச் செயல்படுவதாக விளக்கினார் முனைவர் ஜோசஃப்.
இவைபோக, கரப்பான் பூச்சிகளின் கொழுப்புத் திசுக்களில் வாழும் பாக்டீரியாக்கள் கிட்டத்தட்ட ஒரு வைட்டமின் தொழிற்சாலை போலச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"கரப்பான்களின் உடலில் உள்ள பாக்டீரியோசைட்டுகள், சிறப்பு செல்களை கொண்டுள்ளன. இவற்றால் கரப்பான் பூச்சிக்குத் தேவையான அனைத்து வைட்டமின்களையும் உற்பத்தி செய்ய முடியும். எனவே, அது ஊட்டச்சத்துகளுக்காக வெளிப்புற உணவை அவை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டியதில்லை."
அதேவேளையில், கரப்பான்கள் குறித்து ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, சில உயிரினங்கள் மேற்கொள்ளும் குளிர்கால நீண்ட உறக்கநிலையில் எப்படி ஆற்றல் சேமிக்கப்படுகிறதோ, அதேபோன்ற செயல்பாட்டை கரப்பான் பூச்சிகள் மேற்கொண்டிருக்கலாம் என்று கூறினார் கோவாவில் உள்ள ஆரண்யா சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் பூச்சியியலாளர் முனைவர் ப்ரொனோய் பைத்யா.
பொதுவாக விலங்குகள், நீர்நில வாழ்விகள், பூச்சிகள் மத்தியில் குளிர்கால உறக்கம் (Hibernation) என்றொரு பழக்கம் உள்ளது. அதாவது, உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவக்கூடிய குளிர்காலத்தின்போது ஆழ்ந்த உறக்கநிலைக்கு அவை சென்றுவிடும். அதுவே குளிர்கால உறக்கம் எனப்படுகிறது. குளிர்காலம் முடிந்த பிறகு அந்த உயிரினங்கள் விழித்தெழுந்து தனது வாழ்வைத் தொடரும்.
அப்படி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது விலங்குகளின் உடல் வெப்பநிலை 1 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் வரை குறையக்கூடும். இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 8 முதல் 50க்கும் கீழே குறைந்துவிடும். இதன் மூலம் தனது உடலில் சேமிக்கப்பட்ட ஆற்றலை வீணாக்காமல் ஆழ்ந்த உறக்கத்திலேயே குளிர்காலத்தை அவை கடந்துவிடுகின்றன.
இத்தகைய ஆழ்ந்த உறக்கநிலைக்குச் செல்லும் பழக்கம் கரப்பான்பூச்சிகளுக்கு இல்லை என்றாலும், அதில் மேற்கொள்ளப்படும் ஆற்றல் சேமிப்பு குணாதிசயம் கரப்பான்களுக்கு இருப்பதாகத் தெரிவித்தார் முனைவர் ப்ரொனோய் பைத்யா.
அதே நேரத்தில், ஒருவேளை அவற்றுக்குத் தண்ணீர் தேவைப்பட்டாலும், அதைப் பருகித்தான் ஆக வேண்டும் என்றில்லை. ஏனெனில், "கரப்பான்கள் பிற உயிரினங்களைப் போல தண்ணீரைப் பருகினாலும், காற்றிலுள்ள ஈரப்பதத்தில் இருந்தும் அவற்றால் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ள முடியும் என்பதால், அந்த வழிகளில் அவை நீர்ச்சத்துகளைப் பெற்று பிழைத்திருக்க வாய்ப்புள்ளது" என்று விளக்கினார் கேரளா வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியலாளர் முனைவர் பிரதாபன்.
கரப்பான் பூச்சிகள் தலை இல்லாமலும் உயிருடன் இருப்பது எப்படி?
சாப்பிடாமலும் உயிர் வாழும் திறன் கரப்பான் பூச்சிக்கு இருப்பது எளிதில் மரணிப்பதைத் தடுப்பதாகக் குறிப்பிட்டார் பெங்களூருவில் செயல்படும் அசோகா சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளரான முனைவர் ப்ரியதர்ஷன் தர்மராஜன்.
இருப்பினும் அவை தலையின்றி உயிருடன் இருக்க முடிவதற்கு அது மட்டுமே காரணமில்லை என்று குறிப்பிட்டார் அவர். அதாவது, "கரப்பான்களின் நரம்பு மண்டலம் மையப்படுத்தப்படாத, உடல் முழுக்கப் பரவியிருக்கும் தன்மை கொண்டது. தலை வெட்டப்பட்டாலும் அவை சிறிது காலத்திற்குப் பிழைத்திருக்க இதுவே முக்கியக் காரணம்" என்றும் அவர் விளக்கினார்.
அடிப்படையில் பூச்சிகளின் உடலியல் அமைப்பு மற்ற விலங்குகளுக்கோ மனிதர்களுக்கோ இருப்பதைப் போலானது இல்லை.
"மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் நரம்பு மண்டலம் மையப்படுத்தப்பட்ட ஒன்று. அதாவது, நரம்பு மண்டலத்தின் மொத்த கட்டுப்பாடும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் (மூளையில்) குவிந்திருக்கும். ஆனால், பூச்சிகளுக்கு அப்படியல்ல. அவை மையப்படுத்தப்படாத நரம்பு மண்டலத்தைக் கொண்டவை. அதனால், அவற்றின் மூளை சுவாசத்தையோ, உடல் முழுக்க ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவதையோ கட்டுப்படுத்துவது இல்லை.
இந்த வகையிலான உடலியல் அமைப்பில், உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நியூரான்கள் உடல் முழுவதும் பரவியிருக்கும். ஆகவே, தலை வெட்டப்பட்டாலும் உடலின் முழு இயக்கமும் உடனடியாக நின்றுவிடாது. உடல் மொத்தமும் செயலிழக்கச் சில மணிநேரம் முதல் சில நாட்கள் வரைகூட ஆகலாம்," என்று முனைவர் ப்ரியதர்ஷன் விளக்கினார்.
கரப்பான் பூச்சியின் தலை துண்டிக்கப்பட்ட பிறகு உடலில் என்ன நடக்கும்?
கரப்பான்கள் மட்டுமின்றி பூச்சிகளில் பலவும் தலை துண்டிக்கப்பட்ட பிறகும்கூட சிறிது காலம் எப்படி உயிர் வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அது ஏன் மனிதர்கள் உள்பட பாலூட்டி உயிரினங்களால் முடிவதில்லை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அடிப்படையில் பாலூட்டிகளின் தலை துண்டிக்கப்பட்டால், ரத்த இழப்பு அதீதமாக நடக்கிறது. இதன் காரணமாக உடலின் முக்கிய திசுக்களுக்கு ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துகளும் கொண்டு செல்லப்படுவது தடைபடுகிறது.
அதோடு, பாலூட்டிகள் வாய் மற்றும் மூக்கு வழியாகவே சுவாசிக்கின்றன. இந்தச் செயல்பாட்டைப் பிரதானமாகக் கட்டுப்படுத்துவது மூளைதான். ஆகையால், தலை துண்டிக்கப்பட்டால் முதலில் சுவாசம் தடைபடும்.
ஒருவேளை ரத்த இழப்பைத் தடுத்து, சுவாசத்திற்கு வழி செய்தாலும்கூட மனித உடலால் தலையின்றிச் சாப்பிட முடியாது, சாப்பிடாமல் உயிர் வாழவும் முடியாது. இப்படி ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட பல காரணிகள் சில நிமிடங்களிலேயே உயிரிழப்பை ஏற்படுத்தக் காரணமாகின்றன.
ஆனால், கரப்பான்களுக்கு மனிதர்களைப் போன்ற உடலமைப்பு கிடையாது. கரப்பான்கள் நம்மைப் போல வாய் அல்லது மூக்கு வழியாகச் சுவாசிப்பது இல்லை. அவற்றின் உடலில் பரவியிருக்கும் காற்றுக் குழாய்களின் (tracheae) வழியாகச் சுவாசிக்கின்றன. உடலின் பக்கவாட்டில் உள்ள சிறிய திறப்புகளுடன் இந்தக் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இவை வால்வுகளை போலச் செயல்பட்டு, உடலின் திசுக்களுக்கும் பிற உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகின்றன. இவற்றுக்கு பாலூட்டிகளைப் போல மூக்கு அல்லது வாய் மூலம் சுவாசித்து, ரத்தம் வழியாக ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் நுண்குழாய் அமைப்பு இல்லை. ஆகையால், உடலில் அழுத்தமும் குறைவாக இருக்கும். இதன் காரணமாகவே தலையை வெட்டிய பிறகும், கழுத்துப் பகுதி வேகமாக உறைந்து, காயம் மூடப்பட்டுவிடும். இது கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கை தவிர்ப்பதோடு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் வரத்தையும் தடை செய்வதில்லை.
அதோடு, "கரப்பான்களின் மூளை ஒரு சில செயல்பாடுகளை மட்டுமே கட்டுப்படுத்துகிறது. கரப்பான் பூச்சியின் தலையை வெட்டுவது அவற்றின் பார்வை, உணர்கொம்புகள் மற்றும் சில சிக்கலான நடத்தைகளை நிர்வகிக்கும் அதன் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியை மட்டுமே நீக்குகிறது. ஆனால், நரம்பு மண்டலம் உடல் முழுக்கப் பரவலாக இருப்பதால் உடலின் மீதமுள்ள பகுதிகள் தொடர்ந்து செயல்படுகின்றன," என்கிறார் ஜோசஃப் குன்கெல்.
இந்தக் காரணங்களால்தான், சில வேட்டையாடிகளால் இரையாக்கப்படாத வரை, தலை துண்டாக்கப்பட்ட ஒரு கரப்பான் பூச்சியால் சில நாட்களுக்கு உயிருடன் இருக்க முடிகிறது. ஆனால், அப்படி ஒரு வேட்டையாடியிடம் இருந்து தப்பிக்க அவை துரிதமாகச் சிந்தித்துச் செயலாற்றி, தப்பிக்க வேண்டும். அதற்கும் மூளையின் உதவி அவசியமில்லை என்கிறார் ஜோசஃப்.
அதாவது மூளையே இல்லாமல், கரப்பான் பூச்சிகளால் ஆபத்துக்கு எதிர்வினையாற்ற முடியும் என்கிறார் அவர். "அவற்றின் பின்புற முனையில் சென்சார்கள் உள்ளன. அந்த சென்சார்கள் காற்றின் இயக்கத்தை உணர்ந்து, ஏதேனும் வேட்டையாடி உயிரினம் பின்புறமாகத் தாக்க வந்தால் அதைக் கண்டறிந்துவிடும். இந்த சென்சார்கள் மூளைக்கு அல்ல, உடலில் உள்ள நரம்பு மையங்களுக்கு நேரடியாக சமிக்ஞைகளை அனுப்பிச் செயல்பட வைக்கின்றன."
இது மூளை இல்லாமலும்கூட துரிதமாகச் செயல்பட்டு உயிரைக் காத்துக்கொள்ள கரப்பான்களுக்கு உதவுகின்றன.
இருந்தாலும், தலை வெட்டப்பட்ட பிறகான அவற்றின் நிலையை 'உடலில் உயிர் இன்னும் இருக்கிறது' என்று கூற முடியுமே தவிர, அவை "வாழ்ந்து கொண்டிருப்பதாக" கருத முடியாது என்கிறார் முனைவர் ப்ரியதர்ஷன் தர்மராஜன்.
ஏனெனில் அவரைப் பொருத்தவரை, "அவை உயிர் பிழைத்திருக்கவில்லை. சாகவும் முடியாமல், பிழைக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன."
(இந்த கட்டுரை கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 08, 2025) பிபிசி தமிழில் வெளியானது. எடிட்டோரியல் தரத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டுரையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10, 2025) சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு