You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாம்புகளை பார்த்தவுடன் அடித்துக் கொன்றவர், இன்று பாம்புகளின் பாதுகாவலர்
- எழுதியவர், க சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
அன்றிரவு, களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகத்தின் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த காட்டாற்றுக்கு நடுவே, ஒரு பெரிய பாறைக் குவியலில் இரவைக் கழித்தோம். ஓய்வெடுப்பதற்காக பாறையின் ஒருபுறத்தில் போர்வையை விரிக்கச் சென்றேன்.
அருகிலிருந்த சாம்சன், "அண்ணே! போர்வையை விரிக்காதீங்க," என்று கையில் டார்ச் லைட்டோடு வந்து தடுத்தார். அவர் வெளிச்சம் காட்டிய பிறகுதான் தெரிந்தது, படுக்கச் சென்ற இடத்தில் ஹம்ப்நோஸ் பிட் வைப்பர் (Hump nosed pit viper) என்ற நஞ்சுள்ள பாம்பு சுருண்டு படுத்திருந்தது. "பாம்புகள் அதிகமாக உலவும் இதுபோன்ற பகுதிகளில் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒருமுறை சுற்றி பார்க்காமல் எங்கேயும் கை, கால்களை வைக்காதீங்க," என்று அவர் எச்சரித்துக் கொண்டிருக்க, எங்கள் பேச்சுக்குரல்களைக் கேட்ட பாம்பு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டது.
அடுத்த நாள் காலை.
காட்டாற்றின் நீர்மட்டம் நிலையாக இருக்காது. திடீரென நீர்மட்டம் உயரும் பின்னர் குறையும். நீர்மட்டம் அப்படி உயர்ந்தபோது, அந்தப் பாறைக்கு நடுவே சுமார் ஒன்றரை அடி அகலமாகவும் 2 அடி ஆழமாகவும் இருந்த சிறு குட்டைக்குள் சில தண்ணீர்ப் பாம்பின் குட்டிகள் வந்திருக்கின்றன. ஆனால், நீர்மட்டம் குறையும்போது வெளியேறாததால், அவை அதற்குள்ளேயே சிக்கிவிட்டன. இப்போது அவற்றால் வெளியேற முடியவில்லை.
அதைக் கவனித்த சாம்சன், "கண்டங்கண்டை நீர்க்கோலி என்ற இந்த தண்ணீர்ப்பாம்பு குட்டிகள் இதிலிருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளன," என்றவர், பாம்பு குட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து காட்டாற்றுக்குள் விட்டார்.
அம்மாவை இழந்த கோபம் வெறுப்பாக மாறியது
சாம்சன் கிருபாகரன். மதுரையிலுள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில், பால் அறிவியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் முதுகலை பயின்று வருகிறார். சிறு வயதில், அவருடைய அம்மா கண்ணாடி விரியன் பாம்பு கடித்து உயிரிழந்துவிட்டார்.
அப்போதிருந்து, அம்மாவைக் கொன்றது பாம்புதான் என்ற கோபம் அவரை முற்றிலுமாக ஆக்கிரமித்திருந்தது. அந்தக் கோபத்தால், கண்ணில் பட்ட பாம்புகளை எல்லாம் அடித்துக் கொன்றுவிடுவார். அப்படியிருந்தவரிடம், வெளியேற முடியாமல் சிக்கியிருக்கும் பாம்புக் குட்டிகளைக் காப்பாற்றும் அளவுக்கான மாற்றம் எப்படி வந்தது?
"மதுரையிலுள்ள புளியங்குளத்தில்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அப்போது எனக்கு 8 வயது இருக்கும். ஒருநாள், நான், தங்கை, அம்மா மூன்று பேரும் இரவு ஜபத்திற்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தோம். வயல்வெளிக்கு நடுவே இருந்த சிறு மணற்பாதையில் நாங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் நெருங்கியபோது, அம்மாவை பாம்பு கடித்துவிட்டது.
முதலுதவி என்று பாம்பு கடித்த இடத்தை பிளேடால் கீறி, முட்டிக்கு மேலே துணியால் இறுக்கமாகக் கட்டிவிட்டு, வண்டியில் உட்கார வைத்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்பா வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். அம்மா விழுந்துவிடாமல் இருக்க, நான் அவருக்குப் பின்னால் அமர்ந்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முயன்றுகொண்டிருந்தேன். அப்போது, அம்மா வலி தாங்கமுடியாமல் துடித்துக் கொண்டிருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
பிறகு, நானும் தங்கையும் மாமா வீட்டில் இருந்தோம். இரண்டு நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். அப்பா அழுதுகொண்டிருந்ததைப் பார்த்தவுடனே, அம்மா உயிர் பிழைக்கவில்லை என்று புரிந்தது.
காலில் போட்டிருந்த கட்டு கவனிக்கப்படாமல் விட்டதால், நஞ்சுமுறி மருந்து பலனளிக்கவில்லை என ஏதோ கூறினார்கள்," என்று தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் சாம்சன்.
அவர், தன்னுடைய அம்மா உயிரிழக்கும்போது மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். தன் அன்புக்குரியவரைக் கொன்றுவிட்டது என சாம்சனுக்கும், அவர் தந்தைக்கும் பாம்புகளின் மீது அளவில்லாத கோபம் ஏற்பட்டது.
அந்தக் கோபத்தில், அவருடைய அப்பா எங்கு பாம்பைப் பார்த்தாலும் அடித்துக் கொன்றுவிடுவார். நான்காம் வகுப்பின் இறுதியிலிருந்து சாம்சனும் பாம்பைக் கண்டாலே கொல்லத் தொடங்கினார்.
"தவளையை தூண்டிலில் கட்டி தண்ணீர்ப் பாம்பு பிடிப்பேன்"
"இப்படி நடந்துவிட்டதே என்ற வேதனையில், அவற்றின் மீது அப்படியொரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. ஒவ்வொரு பாம்பையும் அடித்துக் கொல்லும்போது, எனக்குள் இருந்த கோபத்திற்குத் தீனி போடுவது போல் இருந்தது.
நான் பாம்பைக் கொல்லுவதைப் பார்த்தவர்கள் இந்த வயதிலேயே தைரியமாக இருக்கிறேன் என்று பாராட்டினார்கள். அது என்னை மேலும் ஊக்குவித்தது. என்னை அவர்கள் ஹீரோவைப் போல் பார்ப்பதை விரும்பத் தொடங்கினேன். பின்னர் அதுவே ஒரு போதையைப் போலானது. பிறரின் பாராட்டுகளுக்காகவே பாம்புகளை அடித்துக் கொல்லத் தொடங்கினேன்."
ஒரு பக்கம் அம்மாவை இழந்த கோபம், இன்னொருபுறம் அந்த வயதுக்கே உரிய துடிப்பு, என்று இரண்டுக்கும் தீனி போடும் வகையில், பதின்பருவ சாம்சன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவ்வளவு சின்ன வயதிலேயே, எண்ணற்ற பாம்புகளை அவர் கொன்றுவிட்டிருந்தார். அவருக்கு, வயதையும் தாண்டிய தைரியத்தை கோபம் கொடுத்திருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அவர் எந்த பாம்புகளைக் கடுமையாக வெறுத்தாரோ, அவற்றின் மீதே ஒருவித ஆர்வம் எழத் தொடங்கியது.
"2014-ம் ஆண்டு. அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது, பச்சைப் பாம்பு ஒன்று அங்கு உலவிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். இந்த முறை கொல்ல வேண்டுமெனத் தோன்றவில்லை. அதனிடம் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக, அதைக் கையில் எடுத்துப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது.
அதன் கழுத்தைப் பிடித்து கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதுதான் பாம்பைப் பார்த்தவுடன் கொல்வதை விட்டுவிட்டு, கையில் எடுத்துப் பார்த்த முதல் அனுபவம். அதன்பிறகு, அவ்வப்போது கிணற்றுக்குள் பாம்பு கிடந்தாலோ, வயக்காட்டில் பார்த்தோலோ அவற்றைப் பிடிக்கத் தொடங்கினேன்.
வீட்டைச் சுற்றியுள்ள கிணறுகளில் கண்டங்கண்டை நீர்க்கோலி என்ற தண்ணீர் பாம்புகளைப் பார்ப்பேன். அவை தண்ணீரில் மீன்களை வேட்டையாடிச் சாப்பிடும் என்றாலும், தவளை அதன் விருப்பமான உணவுகளில் ஒன்று. நான் தவளையை நரம்புக் கயிற்றில் கட்டி, தூண்டிலைப்போல தண்ணீரின் மீது விடுவேன். அதிலுள்ள தவளையை நீர்க்கோலி பிடித்ததும் வெளியே எடுத்து, அதைப் பிடித்து விளையாடுவேன்" என்கிறார்.
பாம்புகளைப் பார்த்தால் அடித்துக் கொன்றுகொண்டிருந்த சாம்சனுக்கு, அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை, அந்த உயிரினங்கள் ஊட்டிக்கொண்டிருந்தன.
கிணற்றிலிருந்து காப்பாற்றிய முதல் நாகப் பாம்பு
"12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் தேர்ச்சி பெறவில்லை. வாழ்க்கையே முடிந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று பேசினர். செய்தித்தாள் போடுவது, தண்ணீர் கேன் போடுவது என பல வேலைகளை பள்ளிக் காலத்தில் செய்துகொண்டிருந்தேன். இனி அதுதான் என் வாழ்க்கை என்றெல்லாம் கூறினார்கள்.
வாழ்க்கையே வெறுப்பாகிப் போயிருந்த அந்த நேரத்தில், என் கவனத்தைப் பாம்புகளின் பக்கம் திருப்பினேன். வயல்வெளி, கிணறுகள், புல்வெளிக்காடு என எல்லா பக்கமும் சுற்றிப் பாம்புகளைப் பிடித்தேன்.
திருநகர் பகுதியில் சகாதேவன், விஷ்வநாத் என்று பாம்புகளை மீட்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று பாம்புகளைப் பற்றிப் பேசுவேன். எங்கள் வீட்டைச் சுற்றி 22 கிணறுகள் இருக்கின்றன. அங்கு அடிக்கடி பாம்புகள் விழுந்துவிடும். அவற்றை மீட்டெடுத்து அவர்களிடம் கொண்டுபோய்க் கொடுப்பேன்.
இது ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, மூன்றாவது முயற்சியில் 12-வது தேர்ச்சி பெற்றேன். ஆனால், கல்லூரியில் சேரும் நேரம் முடிவடைந்துவிட்டதால், ஓராண்டு கழித்துதான் சேர நேர்ந்தது. அது எனக்கு பாம்புகளின் பக்கம் கவனம் செலுத்த இன்னும் அதிக நேரத்தைக் கொடுத்தது.
ஒரு முறைஒரு நாகப் பாம்பு கிணற்றில் சிக்கிவிட்டது, அதுவொரு வறண்டுகிடந்த கிணறு. அது, பயத்தில் அங்கிருந்த ஒரு பொந்துக்குள் ஒளிந்துகொண்டிருந்தது.
நான் கயிற்றைக் கட்டி உள்ளே இறங்கிவிட்டேன். பொந்துக்குள் இருந்து அதை வெளியே கொண்டுவருவதற்காக, நான் வைத்திருந்த தடியால் உள்ளே குத்தினேன். ஒருவழியாக தடியை வைத்துப் பிடித்தாயிற்று. நாகப் பாம்புகளை அதற்கு முன் அடித்துக் கொன்றுள்ளேன். ஆனால் உயிரோடு பிடித்தது அதுவே முதல்முறை. பாம்பும் ஆறடிக்கு இருந்தது. மனதில் ஓர் இனம்புரியாத பதற்றம் தொற்றிக்கொண்டது.
அதுவும் கிணற்றுக்குள் நின்றுகொண்டிருந்ததால், அந்தச் சூழலே அச்சத்தைக் கொடுத்தது. ஆனால், ஒருவழியாக சமாளித்துக்கொண்டு நாகத்தை சாக்குப் பைக்குள் போட்டு கட்டிய பிறகு, மனம் அவ்வளவு நிறைவாக இருந்தது. அதை வார்த்தைகளால் சொல்லமுடியாது." என நினைவுகூர்கிறார் சாம்சன்.
பாம்புகளைக் கொல்வதைத் தவிர்த்துவிட்டு காப்பாற்றும் வேலை
இதுவரை, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு-முண்டந்துரை, ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பல காடுகளுக்குள் உயிரினங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளப் பயணித்திருக்கிறார் சாம்சன். தமிழ்நாட்டிலுள்ள சுமார் 80 சதவீத பாம்புகளை அவரால் அடையாளம் காணமுடியும்.
அதைப் பற்றிப் பேசியவர், "பெரும்பாலும் பாம்புகளின் பெயர்கள் தெரியும். ஒருவேளை தனிப்பட்ட பெயர் தெரியவில்லை என்றாலும், அவற்றின் உடலமைப்பை வைத்து எந்த உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்தவை, நஞ்சுள்ளதா, நஞ்சில்லாததா என அடையாளம் கண்டுவிடுவேன்.
முனைவர் தணிகைவேல் இரவுநேரங்களில் பாம்புகளுடைய வாழ்விடங்களிலேயே அவற்றைக் கவனிக்க அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு, அதிகமாக இரவுநேரங்களில் பாம்பு நடைக்குச் செல்வேன். அப்படித்தான் மலைப்பாம்பை முதல்முறையாக அதன் இயற்கையான வாழ்விடத்திலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது," என்கிறார் சாம்சன் கிருபாகரன்.
இப்படியாக பாம்புகளைக் கொல்வதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு அவற்றை மீட்கத் தொடங்கிய சாம்சன், மதுரையில் சகாதேவன், விஷ்வநாத் ஆகியோர் மூலமாக ஊர்வனம் என்ற பொதுநல அமைப்போடு இணைந்து பயணிக்கத் தொடங்கினார்.
மதுரையில் செயல்பட்டு வரும் ஊர்வனம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஷ்வநாத், "பாம்புகள் மீட்பு, விழிப்புணர்வைத் தாண்டி, அவற்றின் பாதுகாப்பு, ஆவணப்படுத்துதல் என, எதிர்பார்ப்பின்றி உழைக்கக்கூடியவர் சாம்சன்.
சாம்சன் உடனான பழக்கம் கிடைப்பதற்கு முன், பாம்புகள் மீட்பு மற்றும் விழிப்புணர்விலேயே அதிகமாகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். அவர் வந்தபிறகு தான், பாம்பின் செதில்களைக் கணக்கிடுவது, அடையாளப்படுத்துவது, ஆவணப்படுத்துவது என அறிவியல்பூர்வ முன்னெடுப்புகளை மேற்கொள்ளத் தொடங்கினோம்.
நான், சாம்சன், சகாதேவன் மூவருமாகச் சேர்ந்து வெள்ளிக்கோல் வரையன் (Slender Wolf Snake) என்ற ஒருவகைப் பாம்பினுடைய இனப்பெருக்க நடவடிக்கைகளை ஆவணப்படுத்தி, கடந்த மே மாதம் ஸூஸ் ப்ரின்ட் (Zoo's Print) என்ற இதழில் வெளியிட்டோம். பாம்பு மட்டுமில்லை, பூச்சிகள், தவளைகள், பறவைகள் என்று அனைத்து உயிரினங்களைப் பற்றியுமான அவரது தேடல் அபாரமானது.
சாம்சனுக்கு இளம் வயதில் உயிரினங்கள் குறித்து இருக்கும் அறிவைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது. ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராக அவர் வளரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்," என்கிறார்.
"எங்களுடைய அறியாமை வேறு யாருக்கும் இருக்கக்கூடாது"
அவர்களோடு இணைந்து பாம்புகளை மீட்பது, பாம்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வார இறுதி நாட்களில் மரம் நடுவது என பல்வேறு பொதுநலப் பணிகளில் அவர்களின் உதவியோடு சாம்சன் ஈடுபடத் தொடங்கினார்.
ஊர்வனம் அமைப்பில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் கலந்துகொண்டபோதுதான், தன் அம்மாவின் இறப்பு ஒரு விபத்து என்பதையும் அதற்காகப் பாம்புகளைக் குறை கூறக்கூடாது என்பதையும் புரிந்துகொண்டதாகச் சொல்கிறார் சாம்சன். இப்போது அவரும் பொதுமக்களிடையே பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
"என் அம்மாவை பாம்பு கடித்தபோது, காலில் இறுக்கமாகக் கட்டியது, ப்ளேடால் கீறியது போன்றவற்றைச் செய்திருக்கக் கூடாது. டார்ச் லைட் இருந்திருந்தால் அங்கு பாம்பு இருந்தது தெரிந்திருக்குமே என பாம்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தொடங்கிய பிறகுதான் புரிந்துகொண்டேன். பிறகுதான், எங்களுடைய அறியாமை வேறு யாருக்கும் இருக்கக்கூடாது என்று உணர்ந்தேன்.
எனக்கு 20 வயது இருக்கும்போது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நானே நடத்த அனுமதித்தார்கள். பள்ளி, கல்லூரி, பொது நிகழ்வுகள் போன்ற இடங்களுக்குச் சென்று, பாம்புகளை எப்படி அடையாளம் காண்பது, நஞ்சுள்ள பாம்புகள் எவை, அவற்றிடமிருந்து பாதுகாப்பாக இருக்க நாம் என்ன செய்யவேண்டும், பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்யவேண்டும், அருகில் எங்கெல்லாம் பாம்புக்கடிக்கு சிகிச்சை எடுக்கமுடியும் ஆகியவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஊர்வனம் அமைப்பில் மக்களிடையே ஏற்படுத்துகிறோம்," என்றார்.
"பாம்புகள் இருக்கும் இடத்தில் நாம்தான் கவனமாக இருக்கவேண்டும். அறிவியல்பூர்வ உண்மைகளை அனைவரும் தெரிந்துகொண்டால் தான், நாம் பாதுகாப்பாக இருக்கமுடியும். இது தெரியாமல் யாரும் எங்களைப் போல் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது."
பிற செய்திகள்:
- யுக்ரைன் மீது படையெடுக்க தயாராகி வருகிறதா ரஷ்யா?
- இந்தியாவை புகழ்ந்த தாலிபன் - மேலும் உதவிகள் கேட்கும் ஆப்கன் அமைச்சர்
- பாஜகவுக்கு ரூ.100 கோடி கொடுத்தாரா `லாட்டரி' மார்ட்டின்? காங்கிரஸ் குற்றச்சாட்டின் பின்னணி
- பிரிட்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வலியுறுத்தல்
- தும்பிகள் வேகமாக அழிந்து வருவதற்கு காரணம் இதுதான் - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்