You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மார்பகத்தை பெரிதாக்க பெண்கள் போடும் ஹார்மோன் ஊசியால் ஏற்படும் விபரீதம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்
- எழுதியவர், மருத்துவர் பிரதீபா லக்ஷ்மி
- பதவி, பிபிசிக்காக
ஆந்திராவின் விஜயநகரத்தில் அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தனது மகளை கதாநாயகியாக்க வேண்டும் என்று விரும்பிய பெண் ஒருவர் மகளுக்கு ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தி வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத மகள் இதுதொடர்பாக குழந்தைகள் உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு கூறியதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது சிறுமி, அரசு பாதுகாப்பு காப்பக்கத்தில் உள்ளார்.
பணம், பெயர், புகழ் மீதான பேராசை என்பதைத் தாண்டி பரிந்துரை இல்லாமல் மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள் தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாததையும் இந்த விவகாரத்தில் நாம் காண முடிகிறது.
உண்மையில், மருந்துகளால் செயற்கையாக உடலையோ உடல் உறுப்புகளையோ பெரிதுபடுத்துவது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
பெண் குழந்தைகள் பருவம் அடையும்போது, ஹார்மோன்களின் தாக்கத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது பொதுவாக பத்து வயதில் தொடங்கி பதினான்கு வயது வரை நீடிக்கும்.
இந்த மாற்றங்கள் எட்டு வயதிற்கு முன்பாகவோ அல்லது பத்து வயதுக்கு முன் மாதவிடாய் ஏற்படுவதாகவோ தோன்றினால், அது "முன்கூட்டிய பருவமடைதல்" எனப்படும்.
பருவமடைதல் காரணமாக ஏற்படும் மாறுதல்கள் என்ன?
- மார்பகம் பெரிதாகுதல்
- அக்குள், பிறப்புறுப்பு பகுதியில் முடி (Pubic Hair) வளரத் தொடங்குதல்.
- உயரம் அதிகரித்தல்
இதற்குப் பிறகு, அவர்களுக்கு மாதவிடாய் தொடங்குகிறது.
அதேவேளையில், ஒரு சில காரணங்களால் உயரத்தை அதிகரிக்க செயற்கையாக ஹார்மோன் வழங்கும் தேவை ஏற்படும்போது ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுகின்றன.
இதனால், மாதவிடாய் தாமதமாகி உயரம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் மீண்டும் தொடங்கிவிட்டால், உயரம் அதிகரிக்கும் செயல்முறை குறைந்துவிடுகிறது.
உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை
பொதுவாக, உடல் உறுப்புகளை வளர்ச்சியடைய வைப்பதற்காக மருத்துவர்கள் எவ்வித மருந்துகளையும் தருவதில்லை.
ஈஸ்ட்ரோஜன் (பெண் பாலின ஹார்மோன்) சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அது பல பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.
மார்பகங்களில் வலி, உடல் முழுவதிலும் வலி, மாதாந்திர ரத்தப்போக்கு போன்ற தற்காலிக பிரச்னைகள் மற்றும் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், நீரிழிவு போன்ற நீண்ட கால பிரச்னைகள் ஏற்படலாம்.
மார்பக வளர்ச்சியைத் தூண்டுவதற்காக ஈஸ்ட்ரோஜனை செயற்கையாகச் செலுத்தினால், அது வளர்ச்சியை நிறுத்தும் அபாயம் உள்ளது.
அதேபோல், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை கருத்தடை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது சில நேரங்களில் பெண்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும்.
இவற்றை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோயுடன் சேர்ந்து பக்கவாதம், மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான பிரச்னைகளும் ஏற்படலாம்.
அதனால்தான், மருத்துவர்கள் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, ஆபத்துகள் குறித்துத் தெரிவித்த பின்னரே இந்த சிகிச்சைகளை தொடங்குகின்றனர்.
ஹார்மோன் தெரப்பி என்றால் என்ன?
உடல் எடை, கொழுப்பை அதிகரிக்க இன்சுலின், கார்டிசோல் கொடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில், அவை எலும்புகள் பலமிழப்பது, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
பிற பிரச்னைகளுக்கான சிகிச்சையாக இவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாகவும் பலரும் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்கள் பலரும் தங்களது உடல் தசையை வலிமையாக வைத்துக் கொள்வதற்காக ஸ்டீராய்டுகளை (டெஸ்டோஸ்டிரோன்) உட்கொள்வதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தேவையில்லாதபட்சத்தில் எந்த ஹார்மோனையும் செயற்கையாக எடுத்துக் கொள்வது நிச்சயம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
தேவை ஏற்படும்பட்சத்தில்....
எனவே, கட்டாயம் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு தேவையான நாட்களுக்கு, தேவையான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஈஸ்ட்ரோஜனை கொடுப்பதற்கு முன் பரிசோதிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்ணின் தாய் அல்லது ரத்த உறவினர்கள் யாருக்கும் மார்பக அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு ஹார்மோன்கள் கொடுப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.
அழகுக்கான சில அளவுகோல்களைக் கருத்தில் கொண்டு, அவற்றை செயற்கையாகப் பெறுவதற்கு தேவையில்லாமல் இதுபோன்ற முறைகளைக் கையாண்டால், ஆரோக்கியம் கெட்டு, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகலாம்.
அப்படி வாழ்க்கையை இழந்த சில ஹீரோயின்களும் உண்டு. கிளாமர் துறையில் இவர்களின் வாழ்வாதாரமே அழகு. அவர்களைப் பார்த்து சாமானியர்கள் அவசரப்பட்டு இப்படிச் செய்யக்கூடாது.
அவர்கள் அனைத்துப் பரிசோதனைகளையும் நிபுணத்துவ மருத்துவர்களின் மேற்பார்வையில் எடுத்துக்கொண்டு சரியான மருந்தை, சரியான அளவில் எடுத்துக்கொள்கிறார்கள்.
இத்தகைய சிகிச்சைகள் மீது கட்டுப்பாடு இல்லாதது உயிருக்கு ஆபத்தாக அமையும். சிகிச்சை என்ற பெயரில் அறிவியல்பூர்வமற்ற மருந்துகளை வழங்கும் தகுதியற்ற நபர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருந்து கடைகளில் முறையான மருந்து சீட்டு இல்லாமல் ஹார்மோன் மருந்துகளை விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்கும் அபாயம் உள்ளது.
(கட்டுரையாளர் ஒரு மருத்துவர், இந்த கட்டுரை இந்தத் தலைப்பைப் பற்றிய பொதுவான புரிதலுக்காக)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்