You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிறந்தநாள் கேக்குகளில் கலக்கும் செயற்கை இனிப்பூட்டி - குழந்தைகளுக்கு என்ன ஆபத்து?
சமீபத்தில் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பிறந்தநாளில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் கொடுத்த தகவலின் அடிப்படையில், `சம்பவத்தன்று, சிறுமியின் பிறந்தநாளையொட்டி உணவு விநியோக செயலி மூலம் கேக் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கேக் வெட்டிக் கொண்டாடிய பின்னர், அனைவரும் அந்த கேக்கை சாப்பிட்டனர்.
கேக் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் பலனின்றி சிறுமி உயிரிழந்துவிட்டார்' எனத் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் பேக்கரி உரிமையாளர் மற்றும் இது தொடர்பான பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பஞ்சாப் சுகாதார அமைச்சர் டாக்டர். பல்பீர் சிங் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். பேக்கரியில் உள்ள கேக் மாதிரிகளை எடுத்து விசாரணை நடத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
உயிரிழந்த சிறுமியின் பெயர் மான்வி, ஐந்தாம் வகுப்பு மாணவியான மான்விக்கு மார்ச் 24 அன்று பிறந்த நாள். ஆசையாக பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாடிய மான்வி, கேக்கை சாப்பிட்ட சில மணிநேரங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி மார்ச் 25ஆம் தேதி உயிரிழந்தார்.
சிறுமி மான்வி உயிரிழப்பதற்கு முந்தைய இரவு, மகிழ்ச்சியாக கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
பிபிசியிடம் பேசிய பாட்டியாலா மாவட்ட சுகாதார அதிகாரி விஜய் ஜிண்டால், அந்த பேக்கரியில் இருந்து சோதனைக்காக எடுத்து வரப்பட்ட நான்கு கேக்குகளில் இரண்டு கேக்குகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டது. கேக்கில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 'சாக்கரின்' கலக்கப்பட்டுள்ளது.
'சாக்கரின் (செயற்கை இனிப்பூட்டி)' உண்ணக்கூடிய பொருள் என்றும் அது ஒரு வகையான செயற்கை இனிப்பூட்டி என்றும் அவர்கள் கூறுகிறார்கள். சிறுமி இறந்த சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 1ஆம் தேதி கேக் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுமி சாப்பிட்ட கேக், பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006இன் கீழ் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. உள்ளுறுப்பு பகுப்பாய்வு (Viscera report) மற்றும் தடயவியல் அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உணவு விநியோக செயலியான ஜொமேட்டோ வருத்தம் தெரிவித்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இந்த வழக்கில் இதுவரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள, பேக்கரியில் இருந்து எடுக்கப்பட்ட கேக் மாதிரியில் கண்டறியப்பட்ட அந்த செயற்கை இனிப்பூட்டியான 'சாக்கரின்' என்னவென்று தெரிந்து கொள்வோமா?
செயற்கை இனிப்பூட்டி என்றால் என்ன? அது சர்க்கரையைவிட சிறந்ததா?
செயற்கை இனிப்பூட்டி அல்லது சர்க்கரை அல்லாத இனிப்பூட்டி என்பது செயற்கையான முறையில் அல்லது இயற்கைக்கு மாறான முறையில் தயாரிக்கப்படும் வேதிப்பொருள். இது உணவை இனிப்பாக்கும் தன்மையுடையது.
ஊட்டச்சத்து சர்க்கரை (Nutritional sugar), ரசாயன கலவை சர்க்கரை (Chemically synthesized sugar) என இரண்டு வகையான செயற்கை இனிப்பூட்டிகள் உள்ளன.
இவற்றுடன், இயற்கை சர்க்கரை என்று அழைக்கப்படும் ஸ்டீவியா சர்க்கரையும் பயன்பாட்டில் உள்ளது. இது ஸ்டீவியா என்று அழைக்கப்படும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
பிபிசி குட்ஃபுட்டில் வெளியான கட்டுரைப்படி, உடலின் சர்க்கரை அளவு மற்றும் கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதற்காக, சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்பூட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சாக்கரின் என்றால் என்ன? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
சாக்கரின் என்பது நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு வகை செயற்கை இனிப்பூட்டி.
பிபிசி குட்ஃபுட் கட்டுரைப்படி, அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாக்கரின் போன்ற செயற்கை சர்க்கரைகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன.
இவை ஊட்டச்சத்து அற்ற பொருட்கள் (non-nutritive) என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லை.
இது வழக்கமான சர்க்கரையைவிட மிகவும் இனிப்பாக இருக்கும். மேலும் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது.
செயற்கை இனிப்பூட்டிகள் விளைவிக்கும் ஆபத்துகள் என்ன?
மே 2023இல், உலக சுகாதார அமைப்பு (WHO) சாக்கரின், ஸ்டீவியா மற்றும் அஸ்பார்டேம் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தியது. அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இந்த அறிவுரையை உலக சுகாதார அமைப்பு வழங்கியது.
இத்தகைய செயற்கை சர்க்கரைகள், டைப் 2 நீரிழிவு, இதய நோய், எடை அதிகரிப்பு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. உயிரிழக்கும் அபாயத்தைக்கூட ஏற்படுத்தும் என சான்றுகள் காட்டுகின்றன.
அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய மருத்துவ நூலகம் என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இது 1879ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சாக்கரின் சர்க்கரையைவிட 300 மடங்கு இனிப்பானது.
அதே ஆய்வின்படி, சாக்கரின் குளிர்பானங்கள், வேகவைத்த உணவுகள் மற்றும் ஜாம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. சாக்கரின் சூடுபடுத்தினாலும் அதன் இனிப்புத் தன்மையை இழக்காது. சர்க்கரைக்கு மாற்றாக குறைந்த கலோரி உள்ளதால் இது பயன்பாட்டுக்கு வந்தது.
கால்சியம் சாக்கரின், பொட்டாசியம் சாக்கரின் மற்றும் அமில சாக்கரின் எனப் பல்வேறு வகைகளில் இது கிடைக்கிறது. இவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகை சோடியம் சாக்கரின்தான்.
நைட்ரஸ் அமிலம், சல்பர் டை ஆக்சைடு, குளோரின், அம்மோனியாவுடன் மெத்தில் ஆந்த்ரானிலேட் கலக்கும்போது 'சாக்கரின்' என்ற கலவை உருவாகிறது.
நிபுணர்கள் சொல்வது என்ன?
பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உணவுத் தொழில்நுட்பத் துறையின் தலைவர் டாக்டர் பல்விந்தர் சுச் கூறுகையில், சாக்கரின் அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது மற்றும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
இதற்கு அமெரிக்க தர நிர்ணய அரசு நிறுவனமான 'எஃப்டிஏ' (FDA) மற்றும் பிற நாடுகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள். சாதாரண சூழ்நிலையில் இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த இனிப்பூட்டி பொதுவாக பேக்கரிகளில் பயன்படுத்தப்படுகிறது.
இதைத் தொடர்ச்சியாக நீண்ட காலத்துக்கு உட்கொள்ளும்போது, நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஜூலை 2023இல், உலக சுகாதார அமைப்பு, புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உணவு சேர்க்கைகளுக்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்புக் குழு ஆகியவை செயற்கை இனிப்பூட்டியான அஸ்பார்டேமை 'புற்றுநோயை உண்டாக்கும்' பொருட்களின் பட்டியலில் சேர்த்தன.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி அறிக்கைப்படி, ஜூலை 2023இல் 'செயற்கை இனிப்பூட்டிகளுக்கு' இந்தியா தனது சொந்த தரநிலைகளை நிர்ணயிக்கும் என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)