You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோலியஸ்: உங்கள் உடலின் இந்தப் பகுதி இரண்டாவது இதயம் என அழைக்கப்படுவது ஏன் தெரியுமா?
- எழுதியவர், ரஃபேல் அபுசைப்
- பதவி, பிபிசி உலக சேவை
பொதுவாக சோலியஸ் தசை (சோலியஸ் தசை - Soleus) குறித்து மக்களுக்கு அதிகம் தெரிவதில்லை. ஆனால் அதன் செயல்பாடுகள் சக்தி வாய்ந்தவை. நிற்கவும் நடக்கவும் உதவுவதை தாண்டி உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு சோலியஸ் துணைப்புரிகிறது.
காலின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சோலியஸ் தசை, கெண்டைக்கால் தசையின் (Calf) ஒரு பகுதியாகும். பன்முக இயக்கங்களை மேற்கொள்ளும் உறுப்புகளில் ஒன்றாகும், நாம் நிமிர்ந்து நிற்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இரண்டு முக்கியமான நரம்புகளைக் கொண்டுள்ளது. இந்த காரணத்திற்காக தான் வல்லுநர்கள் சோலியஸ் தசையை "இரண்டாம் இதயம்" என்று வரையறுத்துள்ளனர்.
பார்சிலோனா பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மருத்துவப் பள்ளியில் நிபுணரான டாக்டர் கார்லஸ் பெட்ரெட், பிபிசி முண்டோவுக்கு அளித்த பேட்டியில், "சோலியஸ் தசையில் காணப்படும் ஆக்கக் கூறுகள் தான் அதன் சிறப்பம்சம்” என்கிறார்.
"சோலியஸ் தசை பிற தசைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பெரியது. அதிகளவிலான தசை நிறை (muscle mass) கொண்டுள்ளது. இணைப்பு திசுக்களாக இல்லாமல் முற்றிலும் தசை நார்களால் ஆனது" என்றும் அவர் விவரித்தார்.
நிலைத்தன்மை
”நின்று கொண்டு செய்யும் செயல்பாடுகள், நடப்பது, ஓடுவது என எந்த ஒரு செயலுக்கும் சோலியஸ் தசை மிக அவசியம் ” என்று டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் மார்க் ஹாமில்டன் பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.
நம் உடலில் உள்ள தசைகள் ஒவ்வொன்றும் அதன் செயல்பாட்டை பொறுத்து, பல்வேறு தசை நார்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.
உதாரணமாக, உங்கள் முதுகு பகுதியில் அமைந்திருக்கும் தசைகள் உடலின் கட்டமைப்பைப் பராமரிக்கும் தசைகள் ஆகும். அது, உங்கள் முதுகுத் தண்டுவடத்தை நேராக வைத்திருக்க உதவும். எனவே, அந்த தசை மெதுவாக சுருங்கும் தசை நார்களை கொண்டிருக்கும் (slow-twitch fibers).
மேலும் இந்த தசைகள் திடீர் அசைவுகளை செய்ய உருவாக்கப்படவில்லை என்றாலும், நீண்ட நேர அசைவுகளுக்கு உதவும். நீண்ட தூரம் ஓடுவது, நடப்பது, நிற்பது, உட்காருவது உள்ளிட்ட நீண்ட நேர அசைவுகளுக்கு அனுமதிக்கிறது.
மறுபுறம், உங்கள் கைகள், கால்கள், தோள்பட்டைகள் ஆகியவற்றில் இருக்கும் தசைகள் வேகமாக சுருங்கும் தசை நார்களை (fast-acting fibers) கொண்டிருக்கின்றன, அதாவது, நம்மால் இயன்ற அதிக எண்ணிக்கையிலான இயக்கங்களை குறுகிய காலத்தில் மேற்கொள்ள ஏதுவாக தசைகள் வேகமாக சுருங்கி விரிந்து செயல்படும்.
கெண்டைக்காலில் அமைந்திருக்கும் சோலியஸ் தசை, நீங்கள் நிமிர்ந்து இருக்க உதவும் ஒரு கட்டமைப்பு தசையாகும். இது, மெதுவாக சுருங்கும் தசை நார்களின் (slow-twitch fibers) பெரிய கலவையைக் கொண்டுள்ளது. எனவே சோலியஸ் தசை, நீண்ட நேர இயக்கங்களை சோர்வடையாமல் செய்ய அதிக அளவு ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது.
கெண்டைக்கால் தசையான சோலியஸில் அதிக அளவிலான தசை நார்கள் உள்ளன. மேலும், அந்த தசை நார்களில் ஆற்றல் உருவாக்கத்திற்கு முக்கியமாக தேவைப்படும் மைட்டோகாண்ட்ரியா உள்ளது. அதிக எண்ணிக்கையிலான மைட்டோகாண்ட்ரியா இருப்பதால், நம் செயல்பாடுகள் மூலம் அதை தூண்டும் போது, அதிக அளவு ஆற்றலை உருவாக்கும்" என்று மருத்துவர் பெட்ரெட் விளக்குகிறார்.
இந்த தசை நார்களின் அடர்த்தி, உடல் எடையில் 1% மட்டுமே இருக்கும். ஆனால், உடலில் உள்ள பல உறுப்புகளை விட அதிக ஆற்றல் திறன் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
இதயத்திற்கு உதவும் சோலியஸ்
சோலியஸ் ஒரு முக்கிய செயல்பாட்டை கொண்டுள்ளது. உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்து எடுத்து செல்லும் பணியில் இதயத்திற்கு உதவுகிறது.
சோலியஸ் தசை இதயத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை மருத்துவர். ஹாமில்டன் பிபிசி முண்டேவிடம் விளக்கினார்:
"சோலியஸ் தசையின் உடற்கூறியல் மற்ற தசைகளை காட்டிலும் வேறுபட்டது. உங்கள் கெண்டைக்காலில் சில பெரிய நரம்புகள் உள்ளன. நம் உடல் அமைப்பின்படி சோலியஸினுள் அந்த நரம்புகள் அமைந்திருப்பது ஒரு முக்கிய காரணத்திற்காக தான். அதாவது, புவியீர்ப்பு விசை உங்கள் கெண்டைக்கால்களிலும் கணுக்கால்களிலும், கால்களிலும் ரத்தத்தை தேங்கி நிற்க செய்கிறது . வயதானவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம். உடல் இயக்கம் குறைந்த இளைஞர்களுக்கு கூட ஏற்படலாம்."
ஆனால் நம் இயற்கை புத்திசாலித்தனமாக, மனித உடல் அமைப்பில், இந்த நரம்புகளை சோலியஸினுள் வைத்துள்ளது. இதனால் தசைகள் சுருங்கும்போது அவை அழுத்தம் அடைகின்றன. தசைகள் அழுத்தம் அடையும் போது, அந்த நரம்புகள் ரத்தத்தால் நிரப்பப்பட்டு காலியாகி, மீண்டும் அந்த திரவத்தை இதயத்திற்குள் அனுப்புகின்றன."
அடிப்படையில், நீங்கள் நடக்கும்போது, உங்கள் ஒவ்வொரு அடியிலும் உங்கள் கால்களில் இருக்கும் இரத்தத்தை மீண்டும் இதயத்திற்குத் தள்ளுகிறீர்கள். இந்த அமைப்பில் பாதத்தில் இருக்கும் பல நரம்புகள் மற்றும் காஸ்ட்ரோக்னீமியஸ் தசைகளும் இணைந்து செயல்படும். இந்த செயல்பாட்டை 'பாப்லைட்டல் பம்ப்’ (popliteal pump) என்று அழைக்கப்படுகிறது.
சிறந்த பராமரிப்பு
உடலில் உள்ள அனைத்து தசைகளையும் போலவே, சோலியஸ் தசைகளுக்கும் ஆரோக்கியமாக இருக்க இயக்கம் அவசியம். ஆனால் வேகமாக சுருங்கும் தசை நார்கள் போலல்லாமல் சோலியஸின் தசைகள் மெதுவாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். எனவே வேகமான இயக்கங்களுக்கு உட்படுத்தாமல், நிலையான இயக்கங்களை மேற்கொள்வது நல்லது”
இதற்காக நடைப்பயிற்சி செய்வது சிறந்தது என்கிறார் மருத்துவர் பெட்ரெட்.
"கெண்டைக்காலில் இருக்கும் தசைகள் நிறைய வேலை செய்வதன் மூலம் பலப்படும், ஆரோக்கியமாக இருக்கும் என்பது பலரின் கருத்து. ஆனால் அது சற்று மிருதுவான ஒரு தசை, அதற்குத் தேவையானது நீடித்த செயல்பாடு தான், நாம் அதனை அதிகமான இயக்கங்களுக்கு ஆட்படுத்த கூடாது."
"சோலியஸுக்கு தேவைப்படுவது வெறுமனே மெதுவான இயக்கங்கள் மட்டும் தான். ஆனால் இயக்கங்கள் இன்றி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது மாதிரியான வாழ்க்கை முறை சோலியஸ் தசைகளை மோசமாக பாதிக்கும். அதன் வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். சோலியஸை பொறுத்தவரை, கடுமையான இயக்கங்களும் வேண்டாம். இயக்கங்களே இல்லாத வாழ்க்கை முறையும் வேண்டாம்"
இந்த விதி நம் அனைத்து தசைகளுக்கு பொருந்தும் பொற்கால விதியாகும், இது நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு இந்த விதி முக்கியம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
"மக்கள் பொதுவாக வயதான காலத்தில் நல்ல மன ஆரோக்கியத்துடன் இருப்பதை சிறந்த வாழ்க்கைத் தரமாக சொல்கிறார்கள். அது முற்றிலும் உண்மை. ஆனால் என்னை பொறுத்தவரையில் சிறந்த வாழ்க்கைத் தரத்தை தீர்மானிப்பது, நம் ஆரோக்கியமான தசைகள் தான்" என்று பெட்ரெட் மீண்டும் வலியுறுத்துகிறார்.
"அதாவது, தசைகள் தொடர்ந்து வேலை செய்வது உடலின் ஆரோக்கியமான பராமரிப்புக்கு அதிக அளவு நன்மைகளை வழங்குகிறது. நல்ல தசை செயல்பாடு மற்றும் நல்ல தசை நிறையை (Muscle tone) பராமரிப்பது முழு வளர்சிதை மாற்ற அமைப்பும் சிறப்பாக செயல்பட வைக்கிறது. இது நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதனால் மூளையும் சிறப்பாக செயல்படுகிறது, எனவே, டிமென்ஷியா அபாயமும் குறையும், அதாவது மன நலனுக்கு வழிவகுக்கும்"
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)