You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செவ்வாயில் உயிரினங்கள்: 300 கிராம் மாதிரியை பூமிக்குக் கொண்டுவர ரூ. 91,800 கோடி செலவு - என்ன செய்யப் போகிறது நாசா?
- எழுதியவர், ஜானதன் அமோஸ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களின் தடயங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வதற்கு அங்கிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர வேண்டும் என்பது நாசாவின் நீண்ட கால திட்டம்.
தற்போது அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் நாசா பெரிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது.
தற்போது உள்ள நிதியை வைத்து 2040-ஆம் ஆண்டுக்கு முன் செவ்வாயின் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர முடியாது என்றும், இத்திட்டத்திற்கு 91,800 கோடி ரூபாய் (11 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) வரை செலவழிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்தத் தொகையை விட குறைந்த செலவில், விரைவாக இத்திட்டத்தை செயல்படுத்த, மாறுபட்ட சிந்தனைகளுக்கான (‘அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ ஐடியா) தேடலை நாசா தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்குள் புதிய திட்டத்திற்கான மாதிரி உருவாக்கப்படும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் கோள்கள் தொடர்பான ஆராய்ச்சியில், செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது. விண்வெளி ஆய்வில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும்.
அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் அங்கிருந்து பூமிக்கு கொண்டுவந்த பாறைகள், ஆரம்பகாலக் கட்டத்தில் சூரிய குடும்பம் பற்றிய நமது புரிதலில் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின.
அதேபோல சிவப்பு கோளான செவ்வாய் கிரகத்தில் இருக்கும் பாறை மாதிரிகள், பூமியைத் தாண்டி வேற்று கிரகங்களில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை தெளிவுபடுத்தும்.
ஆனால், தற்போதைய நிதி சூழலில், செவ்வாய் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டுவருவது கடினம் என்பதை நாசா ஒப்புக் கொண்டுள்ளது.
நாசாவின் ‘செவ்வாய் கிரகத் திட்டம்’ என்ன?
கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 15) டெலிகான்ஃபரன்சிங் வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய நாசா நிர்வாகியும் அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பில் நெல்சன், "11 பில்லியன் டாலர் என்பது பெருஞ்செலவு. மேலும் பாறைகளைக் கொண்டுவர 2040-ஆம் ஆண்டு வரை பாறை காத்திருப்பது மிக நீண்ட காலமாகும்," என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் “செவ்வாய் கிரக திட்டத்திற்காக நாசாவின் மற்ற அறிவியல் பணிகளை பலி கொடுக்க முடியாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன்,” என்று கூறினார்.
எனவே, நாசா உறுப்பினர்களிடமும் பிற தொழில்துறை வல்லுனர்களிடமும் இந்தச் செவ்வாய் கிரகத் திட்டத்தை செயல்படுத்தக் கூடிய புதிய மாற்றுச் சிந்தனையைக் கொண்டுவருமாறு நெல்சன் கேட்டிருக்கிறார்.
'மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன்’ அல்லது 'MSR’ திட்டம் என்பது நாசா, ஐரோப்பிய விண்வெளி மையம் (Esa) இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சியாகும்.
இந்தப் பணித்திட்டம் தற்போது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. அதாவது நாசாவின் பெர்சிவெரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் பாறை மாதிரிகளைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அந்த மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவர இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில், செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ராக்கெட் அனுப்பப்பட உள்ளது.
பெர்சிவெரன்ஸ் செவ்வாய் கிரகத்தில் சேகரித்த பாறை மாதிரிகள், மார்ஸ் அசெண்ட் வாகனம் (Mars Ascent Vehicle) என்று சொல்லக்கூடிய இந்த ராக்கெட்டில் ஏற்றப்படும். அதன் பின்னர், அவை விண்ணில் செலுத்தப்படும். அதன்பின் அந்த மாதிரிகள் ஐரோப்பாவால் கட்டமைக்கப்பட்ட விண்கலத்தால் கைப்பற்றப்படும். இறுதியாக அந்த ஐரோப்பிய விண்கலத்தின் உதவியோடு அப்பாறை மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்படும்.
திட்டத்தில் இருந்த தவறு
இப்படிச் சேகரிக்கப்படும் சுமார் 300 கிராம் அளவு எடையிலான செவ்வாய் கிரகத்தின் மாதிரி ஒரு கொள்கலனில் பாதுகாக்கப்பட்டு, 2033-இல் மேற்கு அமெரிக்காவின் யூட்டா (Utah) என்னும் பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு தனியார் ஆய்வு நிறுவனம், செவ்வாய் கிரக பணித் திட்டம் செயல்படுத்தப்பட்ட விதத்தில் தவறுகளைக் கண்டறிந்தது. இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அட்டவணையை பின்பற்ற முடியுமா என்று சந்தேகிக்கப்பட்டது. அவ்வாறு பின்பற்ற முடிந்தாலும், அதற்கான செலவுகள், $8bn முதல் $11bn (இந்திய மதிப்பில் ரூ.66,800 கோடியிலிருந்து ரூ.91,800 கோடி ரூபாய் வரை) அதிகரிக்கும் என எச்சரித்தது.
கடந்த திங்களன்று இந்த ஆய்வறிக்கைக்கு பதிலளித்த நாசா, அந்த ஆய்வு நிறுவனத்தின் கருத்தோடு உடன்பட்டது. தற்போதுள்ள பணித்திட்டம் ஓரளவு எளிமைப்படுத்தப்படலாம். ஆனால், பாறை மாதிரிகள் 2040-க்கு முன்னர் பூமிக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் என்றது. அதற்கு புதிய அணுகுமுறை தேவை என்றும் குறிப்பிட்டது.
நாசாவின் அறிவியல் இயக்குநரகத்தின் இயக்குனர் முனைவர் நிக்கோலா ஃபாக்ஸ் பேசுகையில், "செவ்வாய் கிரகத்தின் பாறை மாதிரிகளை குறைந்த செலவில் பூமிக்கு கொண்டு வரும் சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். இது நிச்சயமாக பெரிய இலக்கு தான். புதிய செயல்திட்டத்தை வடிவமைக்க மாற்றுச் சிந்தனைகள் அவசியம். அந்தச் செயல் திட்டத்தின் முடிவில் செவ்வாய் கிரகத்துக்கு பயணிக்கும் சிறியளவிலான, எளிமையான ஒரு ராக்கெட் உருவாக்கப்படலாம். அதற்கான தேடலில் உள்ளோம்,” என்றார்.
பிபிசி-யிடம் பேசிய முனைவர் ஃபாக்ஸ், ‘’ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (Esa) இந்தத் திட்டத்தின் மையமாகச் செயல்படுகிறது. உண்மையில், இது ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும் - எர்த் ரிட்டர்ன் ஆர்பிட்டர் (ERO) தற்போது எதிர்பார்த்ததை விடச்சற்று தாமதமாக, 2030-இல் ஏவப்படலாம்,” என்றார்.
ஐரோப்பிய விண்வெளி மையத்தின், செவ்வாய் கிரக ஆய்வுக் குழுவின் தலைவரான முனைவர் ஆர்சன் சதர்லேண்ட், நாசாவின் பணித் திட்டத்தை தனது அமைப்பு கவனமாக மதிப்பாய்வு செய்யும் என்றார்.
"எம்.எஸ்.ஆரின் (Mars Sample-Return Mission) தலைசிறந்த அறிவியல் நோக்கங்களை அடையவும், செவ்வாய் கிரகத்திற்கான எதிர்கால ஆய்வுப் பணிகளுக்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் சிறந்த பாதையை உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமையாக உள்ளது," என்றும் அவர் கூறினார்.
நாசா எம்எஸ்ஆர்-க்கு முற்றிலும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார் நெல்சன்.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளனவா?
எவ்வாறாயினும், இத்திட்டம் ஒரு சாத்தியமான பட்ஜெட் வரம்புக்குள் பொருந்த வேண்டும், என்று நெல்சன் குறிப்பிட்டார். பட்ஜெட்டை 5 பில்லியன் டாலர்களிலிருந்து 7 பில்லியன் டாலர்களுக்குள் (இந்திய மதிப்பில் ரூ.41,700 கோடியிலிருந்து ரூ.58,471 கோடிக்குள்) நிர்ணயிக்க பரிந்துரைத்தார்.
சமீபகாலமாக, பெர்சிவெரன்ஸ் ரோவர் விண்கலத்தின் ஆய்வு வெளியீடுகள், செவ்வாய் கிரக ஆய்வின் முக்கியத்துவத்தை தெளிவாக அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
இந்த விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் ‘ஜெஸெரோ’ எனப்படும் ஒரு பெரிய பள்ளத்தை ஆய்வு செய்து வருகிறது. அவ்விடத்தில் சுமார் 380 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய ஏரி இருந்ததற்கான அடையாளம் உள்ளது. இதனல் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன.
பெர்சிவெரன்ஸ் ரோவர், அந்த ஏரியின் ஓரத்தில் உள்ள பாறைகளை துளையிட்டுச் சேமித்து வைக்கிறது. இந்தத் திட்டத்தின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான பர்த்யூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ப்ரையனி ஹோர்கன், இந்தப் பாறை மாதிரிகள் உற்சாகம் அளிப்பதாக கூறினார்.
"தற்போது பெர்சிவெரன்ஸில் சிலிக்கா மற்றும் கார்பனேட் பூச்சுக் கொண்ட பாறைகளின் மூன்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பூமியில் இருக்கும் இதேபோன்ற பாறைகளில் நாம் கடந்த காலத்தின் உயிர்ச்சுவடுகள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன," என்று அவர் பிபிசி-யிடம் கூறினார்.
"பெர்சிவெரன்ஸ் ரோவர் சேகரித்துள்ள சில மாதிரிகள் பண்டைய ஏரியில் இருந்த மணல் கற்களாக இருக்கலாம். பிற சாத்தியங்களையும் மதிப்பீடு செய்து வருகிறோம். எதுவாக இருந்தாலும் இந்தப் பாறைகள் செவ்வாய் கிரகத்தில் இருந்து கிடைத்த அற்புதமான மாதிரிகள். அவற்றை பூமியில் உள்ள எங்கள் ஆய்வகங்களுக்கு கொண்டு வர விரும்புகிறோம்," என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)