டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் முக்கியமான 10 தருணங்கள்

பட மூலாதாரம், Getty Images
பர்படாஸில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.
ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த வெற்றியைத் தான் இந்திய அணியும் கடந்த 11 ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்தது. 11 ஆண்டுகளாக ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட பல போட்டிகளைச் சந்தித்தும் அதில் அரையிறுதி, இறுதிப்போட்டி வரை சென்றும் ஒன்றில்கூட சாம்பியன் பட்டத்தை இந்திய அணியால் வெல்ல முடியாத சூழல் இருந்தது. அந்த ஏக்கத்துக்கும் நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் முக்கியமான 10 தருணங்களைப் பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
1. பவர்ப்ளேவில் சரிந்த 3 விக்கெட்கள்

பட மூலாதாரம், Getty Images
கேசவ் வீசிய 2வது ஓவரில் 2 பவுண்டரிகளை ரோஹித் அடித்த நிலையில், 4வது பந்தில் கிளாசனிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ரிஷப் பந்த் டக்-அவுட்டில் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் 2வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
அடுத்து சூர்யகுமார் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். ரபாடா வீசிய 5வது ஓவரின் 3வது பந்தை பைன் லெக் திசையில் தூக்கி அடிக்கவே அங்கிருந்த கிளாசன் கேட்ச் பிடித்தார். சூர்யா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ஏற்கெனவே ரோஹித் சர்மாவின் கேட்ச்சை பிடித்திருந்த கிளாசன், சூர்யா விக்கெட்டையும் கேட்ச் பிடித்தார்.
இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து அக்ஸர் பட்டேல் களமிறங்கி, கோலியுடன் சேர்ந்தார். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்தது. இந்த சூழ்நிலையில் 150 ரன்களை தாண்டுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்த சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டது கோலி மற்றும் அக்ஸர் பட்டேலின் நிதானமான ஆட்டம் தான்.
2. விராட்- அக்ஸர் கூட்டணி

பட மூலாதாரம், Getty Images
கோலி மற்றும் அக்ஸர் படேல், விக்கெட்டுகளை இழந்து விடக்கூடாது என்ற நோக்கில் நிதானமாக பேட் செய்தனர். மார்க்ரம் ஓவரிலும், மகராஜ் ஓவரிலும் அக்ஸர் படேல் 2 சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார்.
ரபாடா வீசிய 13வது ஓவரில் ஸ்ட்ரைட்டில் ஒரு சிக்ஸரை அக்ஸர் படேல் விளாசியதையடுத்து, இந்திய அணி 100 ரன்களை எட்டியது. அதே ஓவரில் விராட் கோலி தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க அக்ஸரை அழைத்தார். ஆனால், அக்ஸர் ஓடலாமா வேண்டாமா என பாதி பிட்சில் நின்று யோசித்துப் பின்வாங்கினார்.
இதனால் பந்தை ஃபீல்டிங் செய்த டீ காக், ஸ்டெம்பை நோக்கி நேரடியாக எறிந்து அக்ஸரை 47 ரன்னில் ரன் அவுட் செய்தார். 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அருமையாக ஆடிய அஸ்கர் 3 ரன்னில் அரைசதத்தைத் தவறவிட்டார்.
3. விராட் கோலியின் அரை சதம்

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலி 48 பந்துகளில் இந்த உலகக்கோப்பையில் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். இந்த உலகக்கோப்பை முழுவதும் ஃபார்மின்றி தவித்து வந்த கோலி முதல் அரைசதத்தை 48 பந்துகளில் பதிவு செய்தார், இதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.
கோலியின் ஆங்கர் ரோல் குறித்து பல விமர்சனங்கள் வந்தநிலையில் அதைக் கண்டு கொள்ளாமல் நேற்று தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிப்போட்டி, இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் வேறு இல்லை என்பதை உணர்ந்த கோலி ஆங்கர் ரோலிலிருந்து அதிரடிக்கு மாறவே இல்லை.
ரபாடாவின் 18வது ஓவர், யான்சென் ஓவரில்தான் கோலி தனது கியரை மாற்றி சிக்ஸர் விளாசினார். இரு ஓவர்களில் இருந்தும் 33 ரன்கள் கிடைத்தது. கோலி தனது கடைசி 11 பந்துகளில் 26 ரன்களை சேர்த்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். என்னால் ஆங்கர் ரோலும் செய்ய முடியும், இதுபோல் தேவைக்கு ஏற்றார்போல் பேட்டை சுழற்றவும் முடியும் என்பதை நிரூபித்துவிட்டு கிங் கோலி விடைபெற்றார்.
4. பும்ராவின் பந்துவீச்சு

பட மூலாதாரம், Getty Images
177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. ஹென்ட்ரிக்ஸ், டீ காக் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா 2வது ஓவரை வீசினார், 3 பந்திலேயே ஹென்ட்ரிக்ஸ் க்ளீன் போல்டாகி வெளியேறினார். பும்ரா, பந்தை இன்னர்கட் மூலம் வீசி, லேசான அவுட்ஸ்விங்கில் வெளியேற்றி க்ளீன் போல்டாக்கினார்.
கடைசி 18 பந்துகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா 18-வது ஓவரை வீசினார். முதல் இரு பந்துகளில் மில்லர் ரன் சேர்க்காமல் 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார், 4வது பந்தில் யான்சென் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் தென் ஆப்ரிக்கா 2 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒரு விக்கெட்டையும் இழந்தது.
பும்ராவின் ஒவ்வொரு பந்தும் மிகத் துல்லியமாக லைன் லென்த்தில் கச்சிதமாக ஈட்டிபோல் இறங்கின. அதிலும் 18வது ஓவரில் தேய்ந்த பந்தில் யான்சென் விக்கெட்டை இன்கட் மூலம் போல்டாக்கியது, பும்ரா உலகின் முதல்தரமான பந்துவீச்சாளர் என்பதை வெளிக்காட்டியது.
5. கிளாசன் விக்கெட்டை வீழ்த்திய பாண்டியா

பட மூலாதாரம், Getty Images
அக்ஸர் படேல் ஓவரை குறிவைத்து கிளாசன் சிக்ஸர், பவுண்டரி என விளாசி, 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். கிளாசன் தனது காட்டடியால் தேவைப்படும் ரன்கள், பந்துகளை சமன் செய்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆட்டம் மெல்ல இந்திய அணியின் கரங்களில் இருந்து நழுவுவதை கேப்டன் ரோஹித் அறிந்தார். கடைசி 30 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 30 ரன்கள் தான் தேவைப்பட்டது. ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலை இருந்தது.
அப்போது தான் ஹர்திக் பாண்டியாவை 2வது ஓவர் வீச ரோஹித் அழைத்தார். ஹர்திக் பாண்டியா முதல் பந்தை ஆஃப் சைடில் விலக்கி வீசவே அதைத் தேவையின்றி தொட்ட கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
கிளாசன் விக்கெட் வீழ்ந்ததுமே இந்திய அணியினர் மகிழ்ச்சியில் குதித்தனர். கிளாசன் ஆட்டமிழந்தது முதல் தென் ஆப்ரிக்கா நெருக்கடியிலும், அழுத்தத்திலும் சிக்கி பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதை மறந்தது.
6. சூர்யகுமார் யாதவின் கேட்ச்

பட மூலாதாரம், Getty Images
கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. மில்லர் ஸ்ட்ரைக்கில் இருந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்தில் மில்லர் சிக்ஸர் விளாச, எல்லையில் நின்றிருந்த சூர்யகுமார் யாதவ் பந்தை பிடித்து பவுண்டரி எல்லைக்கு அருகே சென்று தூக்கிபோட்டு, மீண்டும் மைதானத்துக்குள் வந்து அருமையான கேட்ச் பிடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வென்றது. அப்போது விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த ஷாட்டில் கேப்டன் கபில் தேவ் ஓடிச் சென்று பிடித்த கேட்ச் இன்றுவரை மறக்க முடியாதது, இன்னும் பேசப்படுகிறது. அதுபோன்ற ஒரு கேட்சைத்தான் சூர்யகுமார் நேற்று எடுத்தார்.
7. வெற்றிக்குப் பிறகான இந்திய வீரர்களின் மனநிலை

பட மூலாதாரம், Getty Images
இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த நொடி கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பெரிதாக எந்தக் கொண்டாட்ட உணர்வும் இல்லை. மைதானத்தில் சிறிது நேரம் படுத்திருந்தார். பின் ஆனந்தக் கண்ணீரில் தேம்பிய ஹர்திக் பாண்டியாவை ஆற்றுப்படுத்தினார், அதன் பின் சில நொடிகள் தனித்துச் சென்றுவிட்டார்.
வெற்றிக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். கடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக பதவியேற்று, மைதானத்தில் நேரடியாக பல்வேறு கேலிகளையும் விமர்சனங்களையும், தொடர் தோல்விகளையும் எதிர்கொண்ட போதும் உணர்ச்சிவசப்படாமல் இருந்தவர், நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரின் கடைசி பந்தை வீசிய பின் அப்படியே கீழே அமர்ந்துவிட்டார்.
கோலியும் அத்தகைய ஒரு மனநிலையிலேயே இருந்தார்.
8. நிறைவேறாமல் போன தென் ஆப்பிரிக்க வீரர்களின் கனவு

பட மூலாதாரம், Getty Images
கடந்த 1992 முதல் ஐந்து முறை ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இதற்கு முன்பு அரையிறுதி வரை தென் ஆப்பிரிக்கா வந்துள்ளது. ஆனால், உலகக்கோப்பையில் அந்த அணி இறுதிப்போட்டிக்கு வந்தது இதுவே முதல் முறை.
இன்றுவரை ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் வலிமையான அணி என்று தென் ஆப்பிரிக்கா பெயரெடுத்தாலும், ஐசிசி நடத்தும் போட்டிகளில் பட்டம் பெறும் களத்தில் தோற்பது அந்த அணிக்கு தீராத பழியாகிவிட்டது. இன்னும் ஒரு ஐசிசி உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தைக்கூட அந்த அணியால் வெல்ல முடியவில்லை.
நேற்றைய தோல்விக்குப் பிறகு, அந்த அணியின் வீரர்கள் அனைவரும் கவலை தோய்ந்த முகத்தோடு காணப்பட்டனர்.
9. வெற்றியுடன் விடைபெற்ற ராகுல் டிராவிட்

பட மூலாதாரம், Getty Images
ஒரு கேப்டனாக, ஒரு வீரனாக எந்த ஒரு ஃபார்மேட்டிலும் கோப்பையை வெல்லாமலேயே ஓய்வு பெற்றவர் ராகுல் டிராவிட். தான் விளையாடிய கடைசி போட்டிகளில்கூட தோல்வியையே சந்தித்தார். ஐபிஎல் போன்ற உள்ளூர் லீக்கும் அவருக்கு கைகூடவில்லை. ஆனால் இந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதன் மூலம், ஒரு பயிற்சியாளராகத் தனது கடைசி ஆட்டத்தில் வென்று கோப்பையுடன் விடைபெற்றார் ராகுல் டிராவிட்.
10. ஓய்வை அறிவித்த கோலி மற்றும் ரோஹித்

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
"சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதைவிடச் சிறந்த தருணம் இருக்காது. 2007இல் நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இப்போது மீண்டும் உலகக்கோப்பையை வென்ற பிறகு, நான் ஓய்வு பெறுகிறேன்" என்று கூறினார் ரோஹித் சர்மா.
ஆட்டநாயகன் விருது வென்ற கோலி பேசுகையில், "இதுதான் என்னுடைய கடைசி சர்வதேச டி20 போட்டி. இதைத்தான் சாதிக்க விரும்பி்னோம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஓட முடியாது என்பது ஒருநாள் நமக்குத் தெரியும். அது நடந்துவிட்டது. அடுத்த தலைமுறை அணியை வழிநடத்தும் நேரம் வந்துவிட்டது. சில வியத்தகு வீரர்கள் வந்து அணியை வழிநடத்தி தேசியக் கொடியை உயரே பறக்கவிடுவார்கள்” எனத் தெரிவித்தார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித், கோலி என்ற இரு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் யாரும் எதிர்பாராதது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












