பிஎம் ஸ்ரீ திட்டம்: பின்வாங்கிய கேரள அரசு - இடதுசாரி கூட்டணியில் விரிசலா?

பட மூலாதாரம், @pinarayivijayan
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கேரளாவும் இணையப் போவதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களோடு இணைந்து மத்திய அரசின் 'தேசிய கல்விக் கொள்கை- 2020'-ஐ எதிர்த்துவந்த கேரள அரசு, அக்கொள்கையின் அடிப்படையில் செயல்படும் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது விவாதங்களை எழுப்பியது.
குறிப்பாக, இந்த அறிவிப்பு கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைமையிலான ஆளும் கூட்டணியான 'இடதுசாரி ஜனநாயக முன்னணி'-க்குள் (எல்டிஎஃப்) சலசலப்பை ஏற்படுத்தியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களை ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்துவிட்டதாக, எல்டிஎஃப் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) குற்றம் சாட்டியது.
"நாம் கையெழுத்திட்டதன் மூலம் 1476.13 கோடி ரூபாய் நிதி கேரள மாநிலத்துக்கு கிடைக்கும். ஒரு கொள்கையில் மட்டும் நம்மால் நிற்க முடியாது. காலக்கட்டத்துக்கு ஏற்ப நாம் மாற வேண்டும். கொள்கையை கூறிக்கொண்டு கோடிக்கணக்கான பணம் நாம் நஷ்டப்பட வேண்டுமா?" என கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
கேரள அரசின் இந்த முடிவை எதிர்த்து, அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு (AIYF) மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (AISF) உள்ளிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த மாணவர் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன. 'கேரளா, பாஜகவிடம் சரணடையக்கூடாது' என்ற பதாகைகளும், கோஷங்களும் அதில் காணப்பட்டன.
இதைத் தொடர்ந்து, கேரளாவில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்துவது நிறுத்திவைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 29) அறிவித்தார்.
இத்திட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய, கேரள கல்வித்துறை அமைச்சர் தலைமையிலான ஒரு குழுவையும் அவர் அறிவித்தார்.
என்ன நடந்தது?
பி.எம்.ஸ்ரீ திட்டம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
'பி.எம். ஸ்கூல்ஸ் ஆஃப் ரைசிங் இந்தியா' என்பதன் சுருக்கமே பி.எம்.ஸ்ரீ பள்ளிகள். இந்தியா முழுவதிலும் 14,500 பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தப் பள்ளிகள், தேசியக் கல்விக் கொள்கையின் அமலாக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டன.
குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் இப்பள்ளிகளை முன்மாதிரி பள்ளிகளாக மாற்றி, அப்பள்ளிகள் அவற்றுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு வழிகாட்டியாக மாறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தப் பள்ளிகள் இருக்கும் என தேசிய கல்விக் கொள்கை-2020இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவோதயா பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட மத்திய/மாநில/யூனியன் பிரதேச அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும். உயர்தர கல்வி, பாதுகாப்பான சூழல், பரவலான கற்றல் அனுபவங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தப் பள்ளிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பள்ளிகளாக உருவாக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என, 2022ஆம் ஆண்டு மத்திய அரசு தெரிவித்தது.
தமிழக அரசு செய்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
தேசியக் கல்விக் கொள்கையை ஏற்பதற்கு தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் வரும் 'மும்மொழிக் கொள்கை', இந்தியை மூன்றாவது மொழியாக திணிக்கும் முயற்சி என்ற வாதத்தை தமிழ்நாடு அரசு முன்வைக்கிறது.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்காததால் 'சமக்ரா சிக்ஷா அபியான்' என்ற ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.
'பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கும் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதிக்கும் சம்பந்தம் இல்லை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி என்ற மத்திய அரசின் நிபந்தனை நியாயமற்றது' என்று தமிழக அரசு கூறியது.
2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காசி தமிழ் சங்க நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என்று வெளிப்படையாக கூறினார்.
2018ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் பிரீ கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாகும். அனைவருக்கும் தரமான சமமான கல்வி கிடைப்பதும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.
'சமக்ரா சிக்ஷா அபியான்' என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் கல்வி ஆண்டுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.2,152 கோடி. இந்தத் தொகையை மத்திய அரசு முறையாக ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது.
தமிழ்நாட்டிற்கான நிதியை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
கேரள அரசின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்

பட மூலாதாரம், V Sivankutty/Facebook
தமிழ்நாடு போலவே, கேரள அரசும் 'தேசியக் கல்விக் கொள்கையை' தொடர்ந்து எதிர்த்து வந்தது. "கேரள அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாது. இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால் தேசிய கல்விக் கொள்கை 2020 இன் பல்வேறு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டியிருக்கும்." என கடந்த ஜூன் மாதம் கேரள கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில் தான், கடந்த வாரம் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைவதாக கேரள அரசு அறிவித்தது.
இடதுசாரி ஜனநாயக முன்னணியின் முக்கிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உடனடியாக இந்த முடிவை திரும்பப் பெறக் கோரியது.
அக்கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், "யாரிடமும் விவாதிக்காமலும், ஆலோசனை கேட்காமலும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து எல்டிஎஃப் கூட்டணியிலும் விவாதிக்கப்படவில்லை. இதுபற்றி தெரிந்துகொள்ளும் உரிமை கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் உண்டு." எனக் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து கேரள அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மாணவர் அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது.
'கேரளா பாஜகவிடம் சரணடையக் கூடாது' என்ற பதாகையை ஏந்தி, ஏஐஎஸ்எப் (AISF) மற்றும் ஏஐஒய்எப் (AIYF) உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 25) திருவனந்தபுரத்தில் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டியின் அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்தினர். கேரளாவின் வேறு சில இடங்களிலும் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பட மூலாதாரம், T T Jismon/Facebook
கேரள அரசு விளக்கம்
மறுபுறம் கேரள அரசின் இந்த முடிவு குறித்து விளக்கம் அளித்த அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, "நமது குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மத்திய நிதியை நிறுத்தி வைப்பதன் மூலம் கேரளாவை நிதி ரீதியாக நசுக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை முறியடிப்பதற்கான ஒரு முடிவு இது. கேரளாவின் பொதுக் கல்வி கட்டமைப்பை அழிக்கும் எந்த நடவடிக்கையையும் இந்த அரசு அனுமதிக்காது. அதே நேரத்தில், நமது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய ஒரு ரூபாயைக் கூட இழக்க நாங்கள் தயாராக இல்லை." என்று கூறியிருந்தார்.
மேலும், "பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாததற்காகச் சமக்ரா சிக்ஷா திட்டத்திற்குக் கேரளாவிற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது. பி.எம்.ஸ்ரீ திட்டம் மார்ச் 2027-ல் முடிவடையும். இப்போது கையெழுத்திடுவதன் மூலம், மாநிலத்திற்கு ரூ.1,476 கோடியே 13 லட்சம், அதாவது சமக்ரா சிக்ஷாவின் நிலுவைத் தொகை மற்றும் இரண்டு ஆண்டு பிஎம் ஸ்ரீ நிதி உள்ளிட்டவை கிடைக்கும்." என்று விளக்கமளித்தார்.
அதேசமயம், தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் கேரளா அரசு தெளிவாக உள்ளது என்று கூறிய அவர், "பிஎம் ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், கேரளப் பொதுக்கல்வியின் முதுகெலும்பாக இருக்கும் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் அறிவியல் உள்ளடக்கத்தில் எந்த சமரசமும் இருக்காது என்று கேரள மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.
இருப்பினும், கேரள அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸிடமிருந்து கூட எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் தான், "மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் குறித்து கவலைகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், மாநிலத்தில் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மறுஆய்வு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது." என முதலமைச்சர் பினராயி விஜயன் புதன்கிழமை (செப்டம்பர் 29) அறிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கூறுவது என்ன?

பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான முடிவுகளில் கேரள அரசு தமிழ்நாடு அரசைப் பின்பற்றியிருக்க வேண்டும் என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்.
"தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ திட்டம் ஆகிய விஷயங்களில் தமிழ்நாடு அரசு உறுதியான எதிர்ப்பைக் காட்டியது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. அதுபோன்ற ஒரு எதிர்ப்பை கேரள அரசும் பதிவு செய்திருக்க வேண்டும். அதைச் செய்ய எல்டிஎஃப் அரசு தவறியது தான் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆனால், இப்போது அதை நிறுத்திவைத்து, மறுஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது." என்கிறார் வீரபாண்டியன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து
ஆனால், இந்த விஷயத்தில் தமிழ்நாட்டைப் போல கேரளா செயல்பட முடியாது என்கிறார் தமிழ்நாடு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ்.
"நாம் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறோம். ஆனால், கேரள அரசு அதை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறது. தொடக்கம் முதலே அங்கு அதற்கு பெரிய எதிர்ப்பு இல்லை. அதுபோல தான் மாநிலங்களுக்கு ஏற்ப சில விஷயங்கள் மாறுபடுகின்றன." என்று கூறுகிறார் அவர்.
மும்மொழிக் கொள்கை முதலில் கோத்தாரி தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய கல்வி ஆணையத்தால் (1964-66) முன்மொழியப்பட்டது. 1968-ல் கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டின் முதலாவது தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்டார்.
"பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான கேரள அரசின் முடிவு என்பது நிர்வாக காரணங்களுக்காக எடுக்கப்பட்டது. ஆனால், கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் உள்ளதைப் புரிந்துகொண்டதால் தான், கேரள அரசு அதை நிறுத்திவைத்துள்ளது." என்று கூறுகிறார் கனகராஜ்.
இடதுசாரி கூட்டணியில் விரிசலா?

பட மூலாதாரம், M A Baby/Facebook
பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பான முடிவால் கேரள எல்டிஎஃப் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், பிபிசி தமிழிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், கேரளாவின் முன்னாள் கல்வி அமைச்சருமான எம்.ஏ. பேபி அதை மறுத்துள்ளார்.
"கேரள மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, மத்திய அரசு நிதியை கையில் வைத்துக்கொண்டு 40 லட்சம் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதை வேடிக்கை பார்க்க முடியாதல்லவா? அதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு அதில் விருப்பமில்லை எனும்போது, உடனடியாக அதை நிறுத்திவைக்க அரசு உத்தரவிட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே எந்த விரிசலும் இல்லை எனக்கூறிய அவர், "ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் தான் அவ்வாறு செய்திகளை பரப்பின. இடதுசாரிகள் ஒன்றுபட்டே நிற்கிறோம். இந்த விஷயம் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டோம்." என்றார்.
மத்திய இணையமைச்சர் கூறியது என்ன?

பட மூலாதாரம், X/George Kurian
கேரள பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சருமான ஜார்ஜ் குரியன், வளர்ச்சித் திட்டங்களில் அரசியல் நுழைவதை அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
காசர்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வளர்ச்சி என்று வருகையில் மத்திய அரசும் மாநில அரசும் ஒன்றுதான். நாம் ஒரே பாதையில் பயணிக்கிறோம். நாம் ஒன்றுபட்டு பணிபுரிய வேண்டும். கேரள அரசின் இந்த முடிவு மாநிலத்தின் பொது கல்வி கட்டமைப்புக்கு மிகப்பெரிய அடியாக மாறக்கூடும். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர்வதை மறுபரிசீலனை செய்வதாக கேரள அரசு கூறியிருப்பது மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.
"2023-24ஆம் கல்வியாண்டில், கேரளாவில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கென ரூ.1,071 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. அந்த நிதியைக் கொண்டு ஸ்மார்ட் பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இருந்து இப்போது விலகினால் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் தடைபடும். மாநிலத்தில் ஏற்கனவே பல பள்ளிகள் மத்திய பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. அரசுப்பள்ளி மாணவர்கள் அந்த பள்ளிகளுக்கு மாறிவிடுவார்கள். இது அரசுப் பள்ளிகளை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே நான் நினைக்கிறேன்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அதில் இருந்து வெளியேறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. இல்லாவிட்டால் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் செல்லும். அதுபோன்ற முடிவுகள் ஏதும் எடுக்கப்பட்டுள்ளனவா என்று எனக்குத் தெரியாது" என்று அவர் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












