தீபாவளி இனிப்புகளை எப்படி, எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது? - 5 எளிய டிப்ஸ்

இனிப்பு தமிழர்களின் வாழ்வில் மட்டுமல்ல, உணவுப் பழக்க வழக்கங்களிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இனிப்பு தமிழர்களின் வாழ்வில் மட்டுமல்ல, உணவுப் பழக்கவழக்கங்களிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறது.
    • எழுதியவர், அன்பு வாகினி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தீபாவளி என்றவுடன் நம் மனதில் வருவது வண்ணமயமான விளக்குகள், வானை பிளக்கும் வெடிச்சத்தம், குழந்தைகளின் சிரிப்பொலி, புதிய ஆடைகளின் மினுமினுப்பு மற்றும் அனைத்துக்கும் மேலாக, வாசனை மிகுந்த இனிப்புகளின் நினைவு. இனிப்பு என்பது தமிழர்களின் வாழ்வில் மட்டுமல்ல, அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களிலும் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்கு வரலாற்று, சமூக மற்றும் கலாசாரக் காரணங்கள் உள்ளன.

பண்டைய காலத்தில், தீபாவளி விவசாய அறுவடைக்குப் பிறகு வரும் காலமாகும். புதிய அரிசி மற்றும் வெல்லத்தைப் பயன்படுத்தி இனிப்புகளைத் தயாரிப்பது, இயற்கை மற்றும் வாழ்வாதாரத்துக்கான நன்றி காட்டும் முறையாகக் கருதப்பட்டது. "உங்கள் வாழ்க்கை இனிப்பாக இருக்கட்டும்" எனும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக தீபாவளியில் இனிப்பு பரிமாறுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. வீடு தோறும் சென்று இனிப்பு பரிமாறுவது, சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் சக்திவாய்ந்த கருவியாக செயல்பட்டது. எனவே, இனிப்புகள் வெறும் உணவுப் பொருள்கள் மட்டுமல்ல; அவை நமது உறவுகளின் இனிமையையும், வாழ்க்கையின் சுவையையும் பிரதிபலிக்கும் கலாசாரச் சின்னங்களாகும்.

ஆனால், இந்த இனிப்பு உணவுகளின் மறுபக்கம் என்ன? இனிப்புகளுடன் ஓர் ஆரோக்கியமான நல்வாழ்வை எப்படி வளர்த்துக்கொள்வது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

பாரம்பரிய தீபாவளி இனிப்பு வகைகள்

தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்பு வகைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் பாரம்பரிய இனிப்பு வகைகள்

தமிழ்நாட்டின் பாரம்பரிய தீபாவளி இனிப்புகள் தனித்துவ சுவை மற்றும் தயாரிப்பு முறைக்கு பிரபலமானவை. அதில் முக்கியமானவை:

  • அதிரசம் : அரிசி மாவு மற்றும் வெல்லத்தால் செய்யப்படும் இந்த இனிப்பு, நீண்ட காலம் கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது. வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் சில தாதுப்பொருட்கள் உள்ளதால், இனிப்புடன் ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
  • எள்ளுருண்டை: எள்ளு மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படும் இந்த உருண்டைகள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகளைக் கொண்டது. குளிர்காலத்தில் உடலுக்கு வெப்பம் அளிக்கும் தன்மை கொண்டது.
  • சீயம் /சுவியம் : பச்சரிசி ,உளுந்து, கடலைப்பருப்பு ,வெல்லம் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த இனிப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் கொன்டுள்ளது.
  • தேங்காய் பர்ஃபி: தேங்காய் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படும் இந்த இனிப்பு, எளிதில் செரிக்கக்கூடியது மற்றும் தேங்காயின் நல்ல கொழுப்புகள் நிறைந்தது.
  • மைசூர் பாக்: கடலை மாவு, நெய் மற்றும் சர்க்கரை கலந்து செய்யப்படும் இந்த இனிப்பு, அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்தது.

இனிப்புகளின் கலோரி அட்டவணை (தோராயமான மதிப்புகள்): ஓர் எச்சரிக்கை

2 துண்டுகள் குலாப் ஜாமூனில் 350 கலோரி உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2 துண்டுகள் குலாப் ஜாமூனில் 350 கலோரி உள்ளது.
  • மைசூர் பாக் - 1 துண்டு - 200 கலோரி
  • அதிரசம் - 1 துண்டு - 150 கலோரி
  • எள்ளுருண்டை - 1 துண்டு - 120 கலோரி
  • கடலை மாவு லட்டு - 1 துண்டு 200 கலோரி
  • கடலை மிட்டாய் - 1 துண்டு - 145 கலோரி
  • அல்வா - 1/2 கப் - 320 கலோரி
  • சாதாரண கேக் - 1 துண்டு - 170 கலோரி
  • குலாப் ஜாமூன் - 2 துண்டுகள் - 350 கலோரி
  • ஜிலேபி - 3-4 துண்டுகள் - 494 கலோரி
  • காஜு கட்லி / பர்ஃபி - 2 துண்டுகள் - 320 கலோரி
  • ரசகுல்லா - 2 துண்டுகள் - 300 கலோரி
  • ரசமலாய் - 2 துண்டுகள் - 320 கலோரி
  • பூந்தி லட்டு - 2 துண்டுகள் - 410 கலோரி
ஒரு ஜிலேபி துண்டில் சுமார் 120-130 கிலோ கலோரிகள் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு ஜிலேபி துண்டில் சுமார் 120-130 கிலோ கலோரிகள் உள்ளது.

ஒரு ஜிலேபி துண்டு சுமார் 120-130 கிலோ கலோரிகளை (kcal) கொண்டுள்ளது. சராசரியான உடல் எடை உள்ள மனிதரின் தினசரி கலோரி தேவை சுமார் 2000 kcal ஆகும்.

ஒருவர் மூன்று ஜிலேபி சாப்பிட்டால், அது அவரது தினசரி கலோரி வரம்பில் 500 கலோரியை (¼ பங்கு) எடுத்துக்கொள்கிறது. மீதமுள்ள 1500 கலோரிகளை மட்டுமே மற்ற உணவுகள் (காய்கறிகள், பழங்கள், தானியங்கள், புரதம்) மூலம் பெற முடியும். உடலுக்குத் தேவையானதை விட அதிகமான கலோரிகளை நாம் சாப்பிடும் போது, பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

அதிக இனிப்பு நுகர்வின் ஆபத்துகள்

தீபாவளி வாரத்தில் இந்தியர்களின் சர்க்கரை உட்கொள்ளல் சராசரியாக 32% அதிகரிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீபாவளி வாரத்தில் இந்தியர்களின் சர்க்கரை உட்கொள்ளல் சராசரியாக 32% அதிகரிக்கிறது.

இனிப்பு என்பது வாழ்க்கையில் இனிமையைக் குறிக்கிறது. ஆனால், அதிகப்படியானது வாழ்க்கையையே நாசமாக்கிவிடும்.

குறுகிய கால பாதிப்புகள்: செரிமானப் பிரச்னைகள், அஜீரணம், இரைப்பை அழற்சி, மற்றும் ரத்த சர்க்கரை அளவில் திடீர் உயர்வு.

நீண்ட கால பாதிப்புகள்: நாள்பட்ட சர்க்கரை நோய் (Diabetes), உடல் பருமன், இதய நோய்கள், கல்லீரல் பாதிப்புகள் (கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோய்) மற்றும் சிறுநீரக பிரச்னைகள்.

2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆரோக்கியத் தரவுப் பகுப்பாய்வின்படி, சாதாரண வாரங்களுடன் ஒப்பிடும்போது தீபாவளி வாரத்தில் இந்தியர்களின் சர்க்கரை உட்கொள்ளல் சராசரியாக 32% அதிகரித்துள்ளது. இதன் நேரடித் தாக்கம் இரத்தச் சர்க்கரை அளவில் காணப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் அல்லது நீரிழிவு முன்நிலை (Pre-diabetes) உள்ளவர்களுக்கு, இந்தக் கூடுதல் சர்க்கரை உட்கொள்ளல், அவர்களின் இலக்கு ரத்தச் சர்க்கரை வரம்பை விட 20% முதல் 40% வரை திடீர் எழுச்சியை ஏற்படுத்தும். இத்தகைய கூர்மையான சர்க்கரை ஏற்றம், கண்கள், நரம்புகள் மற்றும் இதயம் தொடர்பான சிக்கல்களை விரைவாகத் தூண்டும் அபாயத்தை அதிகரிக்கிறது.

இது உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவைப்படும் ஒரு கடுமையான ஆரோக்கிய அபாயமாகும்.

ஆரோக்கியமான முறையில் இனிப்புகளை சாப்பிடுவதற்கான உத்திகள்

இனிப்புகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இனிப்புகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும்.

தீபாவளி போன்ற விழாக்காலங்களில் இனிப்புகளை முற்றிலுமாக தவிர்ப்பது சாத்தியமில்லை அல்லது அவசியமுமில்லை. எனவே, ஆரோக்கியமான முறையில் அனுபவிப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

1. அளவு கட்டுப்பாடு: ஒரு முழு பாக்கெட்டை விட, ஒரு சிறிய துண்டை சுவைப்பது உடல்நலத்துக்கு நல்லது. ஒரு நாளைக்கு 150-200 கலோரிகள் மட்டுமே இனிப்புகளில் இருந்து பெற முயற்சிக்கவும்.

2. சரியான நேரத்தில் சாப்பிடுதல்: இனிப்புகளை காலை 10-11 மணி அல்லது மதியம் 2-3 மணிக்கு இடையே சாப்பிடுவது சிறந்தது. இந்த நேரத்தில் உடலின் ஆற்றல் அதிகமாக இருக்கும். இரவு 7 மணிக்குப் பிறகு இனிப்புகளை தவிர்க்கவும்.

3. முக்கிய உணவில் சமநிலை பேணுதல்: இனிப்பு சாப்பிடும் நாட்களில், மதிய அல்லது இரவு உணவில் சர்க்கரை மற்றும் கொழுப்பு இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். நிறைய பச்சை காய்கறிகள் சாப்பிடுங்கள்.

4. வீட்டில் தயாரித்தல்: வீட்டில் இனிப்புகளை தயாரிப்பதன் மூலம், நீங்கள் பயன்படுத்தும் சர்க்கரை மற்றும் நெய்/எண்ணெய் ஆகியவற்றின் அளவை நீங்களே கட்டுப்படுத்த முடியும். நெய் / எண்ணெய் 25% குறைக்கவும், சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்தவும், முழு கோதுமை மாவு , சிறு தானியங்கள் அல்லது பிற ஆரோக்கியமான மாற்றுகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.

5. உடற்பயிற்சி செய்தல்: இனிப்பு சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு 15-20 நிமிடம் நடப்பது ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவும். தினமும் குறைந்தது 45 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள் மற்றும் நிறைய தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் உடலில் இருந்து அதிகப்படியான சர்க்கரையை வெளியேற்ற உதவும்.

மருத்துவ தேவை உள்ளவர்கள் கவனத்துக்கு

சர்க்கரை நோயாளிகள் இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீரிழிவு நோயாளிகள் இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.

நீரிழிவு நோய், உடல் பருமன், அல்லது இதய நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இனிப்புகளை அணுக வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் (Diabetics):

  • இனிப்புகளை சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.
  • இனிப்பு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து ரத்த சர்க்கரை அளவை சோதிக்கவும்.
  • அதிக நார்ச்சத்து கொண்ட இனிப்புகளை சிறிய அளவில் தேர்வு செய்யலாம்.

உடல் பருமன் அல்லது இதய நோய் உள்ளவர்கள்:

  • ஒரு நாளைக்கு 100-150 கலோரிகளுக்கு மேல் இனிப்புகளில் இருந்து பெற வேண்டாம்.
  • நெய் மற்றும் எண்ணெய் குறைந்த இனிப்புகளை தேர்வு செய்யவும்
  • எண்ணெயில் பொரிக்கப்பட்ட இனிப்புகளை தவிர்க்கவும்.
  • இனிப்பு சாப்பிட்ட பிறகு கட்டாயம் உடற்பயிற்சி செய்யவும்.

பாரம்பரிய இனிப்புகளும், நவீன பேக்கேஜ் பொருட்களும்: ஓர் ஒப்பீடு

பேக் செய்யப்பட்ட இனிப்புகளில் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேக் செய்யப்பட்ட இனிப்புகளில் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளன.

தற்போது பாரம்பரிய இனிப்புகளுக்கு மாற்றாக வந்துள்ள பேக்கேஜ் செய்யப்பட்ட சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புப் பொருட்கள், தங்கள் அழகான தோற்றத்தின் பின்னால் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய பல உண்மைகளை மறைக்கின்றன.

இவை பெரும்பாலும் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, டிரான்ஸ் கொழுப்புகள், செயற்கை நிறங்கள், சுவைகள் மற்றும் பதப்படுத்தும் பொருட்களைக் (preservatives) கொண்டுள்ளன. இந்தச் சேர்மானங்கள் நீண்டகாலமாக உட்கொள்ளப்படும்போது, இதய நோய், பக்கவாதம், இரண்டாம் வகை நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பல் சிதைவு உள்ளிட்ட கடுமையான ஆரோக்கியப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஒரு உணவின் மதிப்பை அதில் உள்ள கலோரிகள் மட்டும் கணக்கில் கொண்டு முடிவு செய்ய முடியாது. "வெற்று கலோரிகள்" என்ற கருத்தைப் புரிந்துகொள்வது இங்கு முக்கியமானது. எடுத்துக்காட்டாக, ஒரு எள்ளுருண்டை மற்றும் ஒரு சிறிய சாக்லேட் பார் இரண்டும் சுமார் 150 கலோரிகளைக் கொண்டிருக்கலாம்.

ஆனால் எள்ளுருண்டை எள்ளிலிருந்து கால்சியம், இரும்பு, நல்ல கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. மறுபுறம், சாக்லேட் பார் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் செயற்கை சேர்மானங்களைக் கொண்டுள்ளது, இது உடலுக்கு எந்தப் பயனுள்ள ஊட்டச்சத்தையும் தராமல், உடலுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, கலோரி மட்டுமின்றி, உணவின் ஊட்டச்சத்துத் தரமே நீண்டகால ஆரோக்கியத்துக்கு முக்கியமானதாகும்.

இனிமையான வாழ்வுக்கு ஆரோக்கியமான தேர்வுகள்

இனிப்புகளை, சிறிய அளவில் சுவைப்பதே நல்லது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இனிப்புகளை, சிறிய அளவில் சுவைப்பதே நல்லது.

தீபாவளி என்பது மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் பங்கிட்டுக் கொள்ளும் காலம். இனிப்பு பண்டங்கள் இல்லாது ,தீபாவளி கொண்டாட்டம் இல்லை என்றே சொல்லலாம். எனினும், இந்த மகிழ்வான நேரத்திலும் நமது ஆரோக்கியத்தை நாம் மறந்துவிடக் கூடாது. ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை, சிறிய அளவில் சுவைப்பதே நல்லது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை, குடும்பத்தினருடன் அமர்ந்து, அளவோடு சுவைத்தால், அந்த நேரம் இன்னும் இனிமையாக மாறும். "ஆரோக்கியமே உண்மையான செல்வம்" என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில், அளவோடு கட்டுப்பாட்டோடு ஒரு இனிப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

- கட்டுரையாளர் உணவுத் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறார். இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துகளே.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு