ஹெச்-1பி விசா கட்டண உயர்வு: டிரம்ப் உத்தரவு பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

ஹெச்-1பி விசா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா சர்ச்சை, ஹெச்-1பி விசா தடை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் புதிய உத்தரவு இந்தியா போன்ற நாடுகளில் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ளது.

அமெரிக்காவின் ஹெச்-1பி விசா தொடர்பான டிரம்பின் புதிய உத்தரவு இந்தியா போன்ற நாடுகளில் மிகப்பெரிய விவாதப் பொருளாகியுள்ளது.

செப்டம்பர் 21-ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு புதிய விசா விண்ணப்பதாரர்களும் 1 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.88 லட்சம்) அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த அறிவிப்பு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்வினையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சகம், ஹெச்-1பி விசா திட்டம் மீதான கட்டுப்பாடுகள் பற்றிய செய்திகளை கவனித்து வருவதாகவும் அதன் தாக்கங்களைப் புரிந்துகொள்ள முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

குழப்பங்களைத் தொடர்ந்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யூஎஸ்சிஐஎஸ்) சனிக்கிழமை இரவு விளக்கமளித்துள்ளது. அதில், "புதிய விதிகள் இனி சமர்ப்பிக்கப்பட உள்ள விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். செப்டம்பர் 21-ஆம் தேதிக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு இது பொருந்தாது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ள இந்த உத்தரவு பற்றி அமெரிக்க ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

நீதிமன்றத்தில் இந்த உத்தரவு தாக்குப்பிடிக்குமா?

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் இணையதளப் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தி, டிரம்பின் புதிய உத்தரவு நிறுவனங்களை குழப்பத்தில் ஆழ்த்தி தற்காலிக பணியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கிறது.

அந்தச் செய்தியில், "பல குடியேற்ற வல்லுநர்களும் கார்ப்பரேட் அதிகாரிகளும் உத்தரவின் 'தெளிவற்ற வரிகள்' மீது கவலை தெரிவித்துள்ளனர். புதிய உத்தரவைத் தொடர்ந்து நிறுவனங்கள் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் தங்களின் பயணத் திட்டங்களை உடனடியாக குறைத்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளன." எனக் கூறப்பட்டுள்ளது.

ஹெச்-1பி விசா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா சர்ச்சை, ஹெச்-1பி விசா தடை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த உத்தரவு நிலைக்குமேயானால் அமெரிக்காவிற்கு சட்டப்பூர்வமாக குடியேறுவதற்கான முக்கியமான வழி மூடப்படும் என வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்கள் 1 லட்சம் டாலர் செலுத்தவில்லையென்றால் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பல நிறுவனங்கள் அச்சப்படுவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பற்றி ஜோ பைடன் நிர்வாகத்தில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பின் இயக்குநருக்கு மூத்த ஆலோசகராக இருந்த டக் ரேண்டின் கருத்தும் வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் இடம்பெற்றுள்ளது. அவர், "இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிச்சயம் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியின்படி, இந்த உத்தரவு நிலைக்குமேயானால் அமெரிக்காவிற்கு சட்டப்பூர்வமாக குடியேறுவதற்கான முக்கியமான வழி மூடப்படும்.

'அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்திய உத்தரவு'

நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் இணையதளப் பக்கத்தில் வெளியான செய்தியில், இந்தக் கொள்கை மாற்றம் நிறுவனங்கள், உள்ளூர் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் தர நிர்பந்திக்கும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பல கார்ப்பரேட் நிறுவனங்களும் தொழில் அமைப்புகளும் இதைப் பற்றி கவலை தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. சேம்பர் ஆஃப் காமர்ஸின் செய்தி தொடர்பாளர் மேட் லெட்டோர்னோ, "தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் மீது ஏற்படும் தாக்கம் பற்றி நாங்கள் கவலை கொண்டுள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.

ஹெச்-1பி விசா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா சர்ச்சை, ஹெச்-1பி விசா தடை

பட மூலாதாரம், Getty Images

சேம்பர் ஆஃப் ப்ராக்ரஸின் நிறுவனர் ஆடம் கோவாசெவிச் கூறுகையில், "இதன் அர்த்தம் நாம் சீனாவுக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு போரை நமது கைகளை பின்பக்கம் கட்டிக்கொண்டு மேற்கொள்ளப்போகிறோம் என்பது தான். செயற்கை நுண்ணறிவுத் துறையில் திறமையானவர்கள் மிகவும் குறைவானவர்களே, அதில் சிலர் வெளிநாட்டில் பிறந்தவர்கள்." என்கிறார்.

அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர் ஜெஃப் ஜோசப் பிற அமைப்புகளுடன் சேர்ந்து இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த அமைப்பின் செயல் இயக்குநர் பெஞ்சமின் ஜான்சன், "எங்கள் உறுப்பினர்கள் குழப்பத்தில் உள்ளனர். அச்சம் மற்றும் குழப்பத்தை மட்டுமே என்னால் கேட்க முடிகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

'குடியேற்ற வழக்கறிஞர்களிடம் கூட பதில்கள் இல்லை'

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி டிரம்ப் நிர்வாகத்தின் முடிவு கவலை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலக்கெடுவிற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்களும் நிறுவனங்களும் துரிதமாகச் செயல்பட நிர்பந்திக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

"அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் இதர நிறுவனங்கள் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் தங்களின் ஊழியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறும் சனிக்கிழமைக்குப் பிறகு நாடு திரும்புவது கடினமாகிவிடும் என்பதால் வெளிநாட்டில் இருப்பவர்கள் உடனடியாக அமெரிக்காவுக்கு வருமாறும் கூறியுள்ளனர்," என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் மனித வளப் பணியாளர்கள் தேவைப்படும் பட்சத்தில் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்ய தங்கள் ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணியிலிருக்கும் இடங்களின் பட்டியலை அவசரம் அவசரமாக தயாரித்ததாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியேற்ற வழக்கறிஞர்களும் கூட சரியான பதில்கள் இல்லாமல் இருப்பதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்-1பி விசா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா சர்ச்சை, ஹெச்-1பி விசா தடை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த மாற்றம் ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது

ஃபிஷர் பிலிப்ஸ் சட்ட நிறுவனத்தின் குடியேற்ற பிரிவின் இணை தலைவர் ஷேனன் ஆர் ஸ்டீவன்சன் புதிய உத்தரவு பற்றி கூறுகையில், "இந்த முடிவு எந்த எச்சரிக்கையும் இல்லாமல் வந்துள்ளது, அது கொடூரமானதாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தச் செய்தியில், "பல நிறுவனங்களும் இந்த அறிவிப்பை புரிந்துகொள்ள முயற்சித்து வந்தனர், இதற்கிடையே தான் வெள்ளை மாளிகையிலிருந்து விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே நிறுவனங்கள் புதிய திட்டங்களைத் தயார் செய்துவிட்டன பல ஊழியர்களின் பயணத் திட்டங்களும் மாற்றப்பட்டன." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'வெளிநாட்டு பணியாளர்கள் வேலை தேடுவதை கடினமாக்கிய உத்தரவு'

டிரம்பின் புதிய உத்தரவால் வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்காவில் வேலை தேடுவது என்பது இனி மாறும் என அமெரிக்க வணிக ஊடகமான ஃபாக்ஸ் பிசினஸின் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்லது இதர பெரிய நிறுவனங்கள் இனிமேலும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க மாட்டார்கள் என்பது தான் இதன் பின் உள்ள நோக்கம். அவர்கள் அரசாங்கத்திற்கு 1 லட்சம் டாலரைச் செலுத்திவிட்டு, அதன் பிறகு ஊழியர்களுக்கு சம்பளமும் கொடுக்க வேண்டும். இது பொருளாதார ரீதியாக உகந்தது அல்ல," என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

ஹெச்-1பி விசா, டிரம்ப் உத்தரவு, அமெரிக்கா விசா சர்ச்சை, ஹெச்-1பி விசா தடை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட்

"இந்த கட்டணம் புதிய ஹெச்-1பி விண்ணப்பங்களுக்கு அடுத்த சுழற்சியிலிருந்து தான் பொருந்தும் என்றும் விசா புதுப்பித்தலுக்கும் ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களும் பொருந்தாது," என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வருடாந்திர கட்டணமல்ல என்றும் விண்ணப்பிக்கும்போது செலுத்தும் ஒருமுறை கட்டணம் தான் என்றும் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தெரிவித்துள்ளார்.

"ஏற்கெனவே ஹெச்-1பி விசாவுடன் தற்போது அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் நாட்டிற்குள் நுழையும்போது அவர்கள் 1 லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை," என்றார்.

தொடர்ந்து பேசிய கரோலின், "ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் எப்போதும் போல வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பலாம், அதிபரின் உத்தரவால் அது பாதிக்கப்படாது. இந்த விதி புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும்," என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு