ஆப்ரிக்காவில் இந்த நாட்டை தாக்கப் போவதாக டிரம்ப் அச்சுறுத்துவது ஏன்? முழு பின்னணி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஒலாராங்கே ஆலோ, சியாமகா எனெண்டு & இஜியோமா இண்டுக்வே
- பதவி, பிபிசி குளோபல் டிஸ்இன்ஃபர்மேஷன் பிரிவு & லாகோஸில் இருந்து
நைஜீரியாவை குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அச்சுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். நைஜீரிய அரசாங்கம் "கிறிஸ்தவர்களை கொல்வதற்கு அனுமதித்தால்" அந்நாட்டுக்கு எதிராகக் "கடுமையான நடவடிக்கையை எடுப்பேன்" என்று அவர் கூறியுள்ளார்.
தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் அவர் வெளியிட்ட ஒரு காணொளியில், "நைஜீரியா மீது அந்நாடு விரும்பாத நடவடிக்கைகளை எடுத்து, முழு ஆயுத பலத்துடன் உள்ளே நுழைவேன்" என்று கூறியுள்ளார்.
நைஜீரியாவில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் தொடர்பான இந்த விஷயத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆர்வம் திடீரெனத் தோன்றிவிடவில்லை.
பல மாதங்களாக, வாஷிங்டனில் உள்ள சில அரசியல்வாதிகள் மற்றும் பிரசாரகாரர்கள் நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய ஆயுதக் குழுவினர் வேண்டுமென்றே கிறிஸ்தவர்களை தாக்குவதாகக் கூறி வருகின்றனர்.
இருப்பினும், இத்தகைய முடிவுக்கு வருவதற்கு வித்திட்ட தகவல்களை உறுதி செய்வது கடினம் என்பதையும் இந்தக் கூற்றை ஆதரிக்கப் பயன்படுத்தப்படும் தகவல்கள் முற்றிலும் துல்லியமாக இருக்காது என்றும் பிபிசி கண்டறிந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில், அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான பில் மஹர் இந்தப் பிரச்னை குறித்துப் பேசினார். நைஜீரியாவில் நடப்பது ஓர் "இனப் படுகொலை" என்று அவர் விவரித்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் போகோ ஹராம் குழு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளதாகவும், 18,000 தேவாலயங்களை அழித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தரவுகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றைச் சரிபார்ப்பது கடினம்.
நைஜீரிய அரசு இந்தக் கூற்றுகளை நிராகரித்து, "உண்மைக்குப் புறம்பான தவறான புரிதல்" என்று கூறியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நைஜீரியாவில் கடுமையான வன்முறைச் சூழல் இருப்பதை அரசாங்கம் மறுக்கவில்லை. ஆனால், ஆயுதக்குழுவினர் தங்கள் நம்பிக்கைகளைப் பின்பற்ற மறுக்கும் அனைவரையும், அதாவது முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் எந்த மதத்தையும் சாராதவர்கள், என அனைவரையும் தாக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நைஜீரியாவில் வன்முறை சம்பவங்களை ஆய்வு செய்யும் பிற அமைப்புகள், கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சமூக ஊடகங்களில் கூறப்படுவதைவிட மிகக் குறைவு எனக் கூறுகின்றன. ஜிஹாதி குழுக்களால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் உண்மையில் முஸ்லிம்கள்தான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கிறிஸ்தவர்கள் மீது சில தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், அவை அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும் நோக்கத்துடனான பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என்று கிறிஸ்டியன் ஏனி என்ற நைஜீரிய பாதுகாப்பு நிபுணர் விளக்கினார். கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தின் காரணமாக மட்டுமே தாக்கப்படுகிறார்கள் என்பதற்குத் தெளிவான ஆதாரம் இல்லை என்கிறார் அவர்.
"ஜிஹாதி குழுக்களின் தாக்குதல்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் நைஜீரியாவில் பல பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு வெவ்வேறு காரணங்கள் உள்ளன. எனவே அவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கக்கூடாது," என்றும் அவர் கூறினார்.
நைஜீரியாவில் சுமார் 220 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி என்ற அளவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் உள்ளனர். பெரும்பாலான முஸ்லிம்கள் நாட்டின் வடக்குப் பகுதியில் வசிக்கின்றனர். அங்குதான் பெரும்பான்மை தாக்குதல்கள் நடக்கின்றன.

பட மூலாதாரம், AFP via Getty Images
அமெரிக்க அரசியல்வாதிகள் கூறுவது என்ன?
சில அமெரிக்க அரசியல்வாதிகள் நைஜீரியாவில் நடக்கும் வன்முறைகள் பற்றி அதிகம் பேசி வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் டெக்சாஸை சேர்ந்த செனட்டர் டெட் க்ரூஸ். அவர் நீண்ட காலமாக இந்தப் பிரச்னை குறித்துப் பேசி வருகிறார். அக்டோபர் 7ஆம் தேதி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "2009 முதல் நைஜீரியாவில் 50,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 18,000க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் மற்றும் 2,000 கிறிஸ்தவ பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன," என்று பதிவிட்டார். இந்தத் தரவுகள் தொலைக்காட்சி தொகுப்பாளர் பில் மஹர் முன்பு குறிப்பிட்டதைப் போன்றது.
மஹரை போல அவர் இந்த நிலைமையை "இனப் படுகொலை" என்று அழைக்கவில்லை. அதற்கு மாறாக "அடக்குமுறை", அதாவது "நியாயமற்ற நடவடிக்கை அல்லது மதத்தின் காரணமாக நிகழும் தாக்குதல்கள் என்று குறிப்பிட்டார்" என்று க்ரூஸின் அலுவலகம் பிபிசியிடம் கூறியது.
இஸ்லாமிய ஆயுதக்குழுவினரால் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை நைஜீரிய அதிகாரிகள் "புறக்கணிப்பதாக அல்லது ஆயுதக் குழுவுக்கு உதவி செய்வதாக" க்ரூஸ் குற்றம் சாட்டினார். டொனால்ட் டிரம்ப் அவருடன் உடன்பட்டு நைஜீரியாவை "அவமானகரமான நாடு" என்று அழைத்தார். அந்நாட்டு அரசாங்கம் "கிறிஸ்தவர்களை கொல்லத் தொடர்ந்து அனுமதிப்பதாக" குற்றம் சாட்டினார்.
நைஜீரிய அரசு இதைக் கடுமையாக மறுத்தது. இஸ்லாமிய குழுக்களை எதிர்த்துப் போராடுவதற்குத் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமிய குழுக்கள் மற்றும் குற்றக் கும்பல்களைத் தடுப்பதற்கு நைஜீரியாவின் பாதுகாப்புப் படைகள் மிகவும் சிரமப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும், தாக்குதல்கள் அல்லது கடத்தல்கள் பற்றிய புதிய தகவல்கள் வருகின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிபோக் பள்ளி மாணவிகளைக் கடத்தியதற்காக அறியப்பட்ட போகோ ஹராம் குழு, 2009 முதல் செயல்பட்டு வருகிறது. அந்தக் குழு ஈடுபடும் வன்முறைகளில் பெரும்பாலானவை நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் நிகழ்கின்றன. அங்கு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். பிற ஜிஹாதி குழுக்களும் அதே பிராந்தியத்தில் செயல்படுகின்றன.
அந்நாட்டில் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறித்துச் சில அமெரிக்க அரசியல்வாதிகள் பகிரும் தரவுகள் மிகவும் தீவிரமானவை. ஆனால், அந்தத் தரவுகள் சரியானவையா என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்வது மிகக் கடினம்.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அரசியல்வாதிகள் கூறும் எண்ணிக்கை எங்கிருந்து வருகிறது?
இந்தத் தரவுகளின் மூலத்தைப் பொறுத்தவரை, செப்டம்பரில் ஒரு பாட்காஸ்டில், நைஜீரியா முழுவதும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் அரசு சாரா அமைப்பான இன்டர்சொசைட்டி (InterSociety) என்று அழைக்கப்படும் சர்வதேச சிவில் உரிமைகள் மற்றும் சட்ட விதிகள் அமைப்பின் 2023 அறிக்கையை க்ரூஸ் நேரடியாகக் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பான ஆன்லைன் கட்டுரைகளுக்கான பல இணைப்புகளையும் அவரது அலுவலகம் பிபிசிக்கு அனுப்பியது. அவற்றில் பெரும்பாலானவை இன்டர்சொசைட்டியை சுட்டிக்காட்டின.
தனது புள்ளிவிவரங்களின் மூலம் என்ன என்ற பிபிசியின் கேள்விக்கு மஹர் பதிலளிக்கவில்லை. ஆனால் க்ரூஸ் பயன்படுத்தியவற்றுடன் சில ஒற்றுமைகள் இருப்பதால், அவரும் இன்டர்சொசைட்டியின் ஆதாரங்களையே பயன்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
நைஜீரியாவுக்கான அமெரிக்க கொள்கையை வடிவமைக்கக் கூடிய வகையிலான இந்தத் தரவுகளைப் பொறுத்தவரை, இன்டர்சொசைட்டியின் பணி தெளிவற்றதாக உள்ளது.
ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அந்த அமைப்பின் அறிக்கையில், முந்தைய ஆராய்ச்சி மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவுகளின் கலவையாக, நைஜீரியாவில் ஜிஹாதி குழுக்கள் 2009 முதல் 16 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களை கொன்றதாகக் கூறியது.
இந்தக் காலகட்டத்தில் 60,000 "மிதவாத முஸ்லிம்களும்" இறந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.
இன்டர்சொசைட்டி தனது ஆதாரங்களின் வகைப்படுத்தப்பட்ட பட்டியலைப் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால் அது தெரிவிக்கும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கையைச் சரிபார்ப்பது கடினமாக உள்ளது.
இந்த விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, "2010ஆம் ஆண்டுக்கு முந்தைய எங்கள் அனைத்து அறிக்கைகளையும் அவற்றின் குறிப்புகளையும் மீண்டும் உருவாக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அவற்றின் சுருக்கமான புள்ளிவிவரங்களைத் தேர்ந்தெடுத்து, புதிய கண்டுபிடிப்புகளில் சேர்த்துக்கொள்வதே எங்கள் எளிதான முறை" என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால், இன்டர்சொசைட்டி அதன் அறிக்கைகளில் மேற்கோள் காட்டிய தரவு மூலங்கள் அவர்களால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களைப் பிரதிபலிக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
2025இல் நடந்த படுகொலைகளின் நிலை என்ன?
ஜனவரி மற்றும் ஆகஸ்ட் வரையிலான இந்த ஆண்டின் காலகட்டத்தில், 7,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதாக இன்டர்சொசைட்டி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்துப் பேசுவதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வரும் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிலே எம். மூர், இதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவர்கள் மீது 2025ஆம் ஆண்டில் நடந்த தாக்குதல்கள் குறித்த ஆய்வுக்கு சுமார் 70 ஊடக செய்திகளை ஆதாரங்களாகப் பயன்படுத்தியதாக இன்டர்சொசைட்டி தெரிவித்தது. இருப்பினும், இந்தச் செய்திகளில் பாதி, பாதிக்கப்பட்டவர்களின் மதம் குறித்து ஏதும் குறிப்பிடவில்லை.
உதாரணமாக, வடகிழக்கு நைஜீரியாவில் நடந்த தாக்குதல் குறித்து அல் ஜசீராவில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியை இன்டர்சொசைட்டி மேற்கோள் காட்டியது. அவர்களின் கூற்றுப்படி, அல் ஜசீராவில் வெளியான செய்தி, "குறைந்தது 40 விவசாயிகள், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள், போர்னோ மாநிலத்தின் டம்போவாவில் போகோ ஹராமால் கடத்தப்பட்டனர்," என்று கூறியது. ஆனால், அதை பிபிசி சரிபார்த்தபோது, அல் ஜசீராவின் செய்தி பாதிக்கப்பட்டவர்கள் "பெரும்பாலும கிறிஸ்தவர்கள்" என்று கூறவில்லை.
உள்ளூர் சமூகங்கள் பற்றிய தனது அறிவையும், கிறிஸ்தவ ஊடக ஆதாரங்களில் இருந்து வரும் தகவல்களையும் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் மதப் பின்னணியைக் கண்டறிய கூடுதல் ஆய்வுகளை செய்வதாக இன்டர்சொசைட்டி பிபிசியிடம் தெரிவித்தது. இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் மதத்தை அந்த அமைப்பு எவ்வாறு அடையாளம் கண்டது என்பதைத் தெளிவாக விளக்கவில்லை.
இன்டர்சொசைட்டி பயன்படுத்திய 70 ஊடக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இறப்புகளையும் பிபிசி ஒன்றிணைத்துக் கணக்கிட்டபோது மொத்தமாக 7,000 அல்ல சுமார் 3,000 இறப்புகளே பதிவாகியிருந்தன. சில தாக்குதல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கணக்கிடப்பட்டதாகத் தெரிகிறது.
சிறை பிடிக்கப்பட்டு இருந்தபோது இறந்திருக்கக் கூடிய மக்களின் மதிப்பீடுகளும், பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாத நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகளும் இதில் அடங்கும் என்று கூறி இன்டர்சொசைட்டி, எண்ணிக்கையில் உள்ள வித்தியாசத்திற்கு விளக்கம் தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
படுகொலைகளுக்கு பின்னால் இருப்பது யார்?
நைஜீரியாவில் நடந்த கொலைகளுக்குப் பொறுப்பானவர்களில் போகோ ஹராம் போன்ற இஸ்லாமிய ஆயுதக் குழுக்களும், சில ஃபுலானி மேய்ப்பர்களும் அடங்குவர் என்று இன்டர்சொசைட்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஃபுலானிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள். அவர்கள் மேற்கு ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். கால்நடைகள் மற்றும் செம்மறி ஆடுகளை மேய்க்கும் மரபைச் சேர்ந்தவர்கள்.
இன்டர்சொசைட்டி தனது அனைத்து அறிக்கைகளிலும் ஃபுலானி மேய்ப்பர்களை "ஜிஹாதிகள் (இஸ்லாமிய ஆயுதக்குழுவினர்)" என்று அழைக்கிறது. ஆனால், படுகொலைகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து நைஜீரியாவில் நிலவும் சில சர்ச்சைகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.
அங்கு நிலவும் வன்முறைச் சூழலை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், ஃபுலானி மேய்ப்பர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான சண்டைகள் பொதுவாக நிலம் மற்றும் தண்ணீர் பற்றியது என்றும் நம்பிக்கை சார்ந்தது அல்ல எனவும் விளக்குகிறார்கள். ஃபுலானி மேய்ப்பர்கள் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுடன் மோதியுள்ளனர்.
கிறிஸ்டியன் ஏனி என்ற நைஜீரிய பாதுகாப்பு நிபுணர், மேய்ப்பர்களை "ஜிஹாதிகள்" என்று அழைப்பது சரியல்ல என்றார். "இங்கு வன்முறைகள் பெரும்பாலும் குற்றவியல் மற்றும் முரட்டுத்தனமான (சட்டவிரோத) குழுக்களால் ஏற்படுகிறது, மத நோக்கங்களால் இல்லை" என்று கூறுகிறார் அவர்.
ஆப்பிரிக்க ஆராய்ச்சிக் குழுவான எஸ்.பி.எம் இன்டெலிஜென்ஸில் பணியாற்றும் மற்றோர் ஆய்வாளரான, கான்ஃபிடன்ஸ் மெக்ஹாரி, இந்த மோதல்களில் பல பூர்வீகக் குழுக்கள் இடையிலான இனப் பதற்றங்கள் மற்றும் நிலம் மற்றும் வளங்களுக்கான போட்டியால் ஏற்படுவதாகக் கூறினார்.
"இது ஓர் இனப் பிரச்னையாகத் தொடங்கலாம். அவர்கள் நிலத்தைக் கையகப்படுத்த அல்லது தங்கள் பிரதேசத்தை விரிவுபடுத்த விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் கிராமங்கள் அல்லது வழிபாட்டுத் தலங்களைத் தாக்கும்போது, மக்கள் அதை ஒரு மத மோதலாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள்," என்று அவர் விளக்கினார்.
இன்டர்சொசைட்டி நைஜீரியாவில் கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் குழுக்களையும் குறிப்பிடுகிறது. இவர்கள் பெரும்பாலும் நாட்டின் வடமேற்கில் இருந்து வந்த ஃபுலானி ஆண்கள் எனவும் அவர்கள் கடத்தல் மற்றும் கொலையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தது. இந்தக் கொள்ளையர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இரு தரப்பையும் தாக்கியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்த விஷயத்தை அதிகம் பேசுவது யார்?
நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்து குறித்துப் பல மக்களும் அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களில் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச கிறிஸ்தவ அமைப்புகளும் அடக்கம். அவர்கள் பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில், நைஜீரியாவில் தடை செய்யப்பட்ட ஒரு குழுவான பியாஃப்ரா பழங்குடி மக்களால் (ஐபாப்) அமெரிக்காவிலும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. நைஜீரியாவின் தென்கிழக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒரு தனிநாட்டை உருவாக்க ஐபாப் விரும்புகிறது.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அறிக்கை அளிக்கும் குழுவான இன்டர்சொசைட்டி, ஐபாப்புடன் தொடர்புடையது என்று நைஜீரிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இன்டர்சொசைட்டி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
நாடு கடந்த பியாஃப்ரா குடியரசு என்று அழைக்கப்படும் மற்றொரு பியாஃப்ரன் பிரிவினைவாதக் குழு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் "கிறிஸ்தவ இனப்படுகொலை" என்ற கருத்தைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பிரசாரத்தின் ஒரு பகுதி என்று கூறியுள்ள அந்தக் குழு, இதுகுறித்த செய்தியை வெளியிடுவதற்காக, பரப்புரை நிறுவனங்களை நியமித்ததாகவும், செனட்டர் டெட் க்ரூஸ் உள்பட அமெரிக்க அதிகார மட்டத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்ததாகவும் கூறியது.
செனட்டர் க்ரூஸிடம் இதுகுறித்து பிபிசி கருத்து கேட்டபோது, அவர் பதிலளிக்கவில்லை.

பிற ஆய்வுக் குழுக்கள் கூறுவது என்ன?
நைஜீரியாவில் எத்தனை கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறித்த இன்டர்சொசைட்டியின் எண்களில் இருந்து மிகவும் மாறுபட்ட தரவுகளை மற்ற ஆய்வுக் குழுக்கள் கண்டறிந்துள்ளன.
ஆக்லெட் (ஆயுத மோதல் இருப்பிடம் மற்றும் நிகழ்தரவு திட்டம்) என்று அழைக்கப்படும் ஒரு முக்கிய அமைப்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் நடக்கும் வன்முறைகளை உன்னிப்பாக ஆய்வு செய்கிறது. அதன் தரவு மற்றும் ஆதாரங்களை எளிதாகச் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
ஆக்லெட்டின் மூத்த ஆய்வாளார் லாட் செர்வாட், இன்டர்சொசைட்டியின் அறிக்கைகள் குறித்து நேரடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், சமூக ஊடகங்களில் பெரும்பாலும் பகிரப்படும் ஒரு லட்சம் இறப்புகள் என்ற எண்ணிக்கையில் நைஜீரியாவில் நிகழ்ந்த அனைத்து வகை அரசியல் வன்முறைகளும் அடங்கும் என்று பிபிசியிடம் அவர் கூறினார். அதாவது, 2009 முதல் ஒரு லட்சம் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறுவது உண்மையல்ல என்பதே இதன் பொருள்.
ஆக்லெட்டின் தரவுகள்படி, 2009 முதல் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என 53,000க்கும் குறைவான பொது மக்கள், இலக்கு வைக்கப்பட்ட அரசியல் வன்முறையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலகட்டத்தை மட்டும் பார்த்தால், கடத்தல்கள், தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் மற்றும் குண்டுவெடிப்புகளில் சுமார் 21,000 மக்கள் கொல்லப்பட்டதாக ஆக்லெட் கூறுகிறது.
அதே காலகட்டத்தில், கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்பட்ட 384 சம்பவங்களை ஆக்லெட் கண்டறிந்தது. இந்தத் தாக்குதல்களில், 317 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். இதன் பொருள், அனைத்து இறப்புகளிலும் ஒரு சிறிய பகுதியளவு மட்டுமே, கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தின் காரணமாக வேண்டுமென்றே தாக்கப்பட்ட சம்பவங்கள்.
ஆக்லெட் அதன் தகவல்களை பாரம்பரிய செய்தி நிறுவனங்கள், சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக அறிக்கைகள், மனித உரிமை குழுக்கள் மற்றும் நைஜீரியாவுக்குள் இருந்து தரவுகளை வழங்கும் உள்ளூர் அமைப்புகளிடம் இருந்து சேகரிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் தரவுகள் சொல்வது என்ன?
கடந்த வெள்ளிக்கிழமையன்று ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், நைஜீரியாவில் 3,100 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார்.
உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை ஆய்வு செய்யும் தன்னார்வ அமைப்பான ஓபன் டோர்ஸின் அறிக்கையில் இருந்து டிரம்ப் இந்த எண்ணிக்கையை மேற்கோள் காட்டுவதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் விளக்கினார்.
ஓபன் டோர்ஸின் கூற்றுப்படி, அக்டோபர் 2023 முதல் 12 மாதங்களில், நைஜீரியாவில் 3,100 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால், அதே அறிக்கையில் அதே காலகட்டத்தில் 2,320 முஸ்லிம்களும் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
வன்முறைக்குக் காரணமான குழுக்களில் ஒன்றாக "ஃபுலானி ஆயுதக் குழுவை" ஓபன் டோர்ஸ் பட்டியலிட்டுள்ளது. அந்த 12 மாத காலகட்டத்தில் நடந்த கிறிஸ்தவர்கள் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குக்கு இந்தக் குழு காரணமாக இருந்ததாகக் கூறியது.
ஓபன் டோர்ஸின் மூத்த ஆய்வாளரான ஃபிரான்ஸ் வீர்மன், "கிறிஸ்தவர்கள் இன்னும் தாக்கப்படுகிறார்கள். ஆனால் இப்போது அதிகமான முஸ்லிம்களும் ஃபுலானி ஆயுதக் குழுவினரால் குறிவைக்கப்படுகிறார்கள்" என்றார்.
நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள மசூதிகள் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மீது பல வன்முறைத் தாக்குதல்கள் நடந்துள்ளன என்பதை பாதுகாப்பு நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
மற்றோர் ஆய்வாளரான கான்ஃபிடன்ஸ் மெக்ஹாரி, "இது நைஜீரியாவில் உள்ள பரந்த பாதுகாப்பின்மை பிரச்னையின் ஒரு பகுதி. தாக்குதல் நடத்தியவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் முஸ்லிம்கள் என்பதால் மக்கள் பொதுவாக இந்தத் தாக்குதல்களை மத ரீதியான ஒன்றாகப் பார்ப்பதில்லை," என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












