அமெரிக்காவில் இருந்து புதிய சமிக்ஞை - இந்தியாவுக்கு 50% வரி பிரச்னை தீர வாய்ப்பு

இந்தியா, அமெரிக்கா, 50 சதவீத வரி, வணிகம், பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு சிக்கலானது என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.

இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ள போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது.

வரி விதிக்கப்பட்ட அன்றே, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், ஃபாக்ஸ் பிசினஸ் சேனலுக்கு இது குறித்த சமிக்ஞையைக் கொடுத்தார்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் சிக்கலானவை என்றாலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒருமித்த கருத்துக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 'வரி பிரச்னையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான வழிகள் திறந்தே உள்ளன, மீண்டும் அனைத்தும் சரியான பாதைக்கு திரும்பும் என்று நம்புகிறோம்' என்று இந்திய அரசின் வட்டாரங்கள் கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா முன்னதாக இந்தியா மீது 25% வரி விதித்திருந்தது. ஆனால் ஆகஸ்ட் 6-ஆம் தேதி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டது.

இந்த வரிகள் ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் அமலுக்கு வந்துள்ளன.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா லாபம் ஈட்டுவதாகவும், இரு நாடுகள் இடையேயான இந்த வர்த்தகம், யுக்ரேன் போரில் ரஷ்யாவிற்கு உதவுவதாகவும் அமெரிக்கா வாதிடுகிறது.

'இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக செயல்படும்'

இந்தியா, அமெரிக்கா, 50 சதவீத வரி, வணிகம், பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 2025-இல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி

ஃபாக்ஸ் பிசினஸ் சேனலுக்கு பேட்டி அளித்த ஸ்காட் பெசன்டிடம் வரிகள் குறித்து கேட்டபோது, ​​இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மிகவும் சிக்கலானது, ஆனால் இரு நாடுகளும் இறுதியில் ஒன்றாக செயல்படும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

இந்தியாவிற்கு எதிராக அபராதம் விதிப்பதை பெசன்ட் கடுமையாக ஆதரித்து வருகிறார்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சமீபத்திய பதற்றம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் மட்டுமல்ல, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தாமதமும் காரணம் என ஸ்காட் பெசன்ட் சுட்டிக்காட்டினார்.

"விடுதலை தினத்திற்குப் (Liberation day) பிறகு உடனடியாக இந்தியா வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது, ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. மே அல்லது ஜூன் மாதத்திற்குள் ஒப்பந்தம் செய்யப்படும் என்று நினைத்தேன். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அது பேச்சுவார்த்தைகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தது. இதற்கிடையில், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் அது பெரும் லாபம் ஈட்டிக் கொண்டிருந்தது" என்று பெசன்ட் கூறினார்.

"இங்கே பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதாரம். இந்த நாடுகள் இறுதியில் ஒன்றிணைந்து தான் செயல்பட வேண்டும்" என்று பெசன்ட் கூறினார்.

இருப்பினும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறிவைப்பது 'நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு மாறானது' என்று இந்தியா விவரித்துள்ளது.

"இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் என்பது இதுவரை நடைமுறைக்கு வராத ஒன்றாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவிற்கு இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை உள்ளது. இவ்வளவு உபரி உள்ள இந்தியா போன்ற ஒரு நாடு, எப்படி ஒப்பந்தம் செய்வது என்பது குறித்து கவலைப்பட வேண்டும். இந்தியா நமக்கு பொருட்களை விற்பனை செய்கிறது, ஆனால் அதன் நாட்டில் வரிகளை அதிகமாக வைத்திருக்கிறது" என்று அவர் கூறினார்.

இந்தியா பிரிக்ஸ் நாடுகளுடன் டாலருக்குப் பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்யும் என்று கவலைப்படுகிறீர்களா என்று பெசன்டிடம் கேட்டபோது, ​​"எனக்கு வேறு பல கவலைகள் உள்ளன. ஆனால் ரூபாய் இருப்பு நாணயமாக மாறுவது அவற்றில் ஒன்றல்ல. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மிகவும் வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது" என்று கூறினார்.

'பேச்சுவார்த்தைக்கான வழிகள் திறந்திருக்கிறது'

இந்தியா, அமெரிக்கா, 50 சதவீத வரி, வணிகம், பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்காவுடனான வரி பிரச்னைகளை சமாளிக்க முயற்சிப்பதாக இந்தியா கூறியுள்ளது.

பெசன்ட்டின் கருத்துகளுக்கு மத்தியில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக நிறுத்தப்படவில்லை என்று இந்தியாவின் வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரிகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய அமைச்சகம் தொழில்துறையுடன் இணைந்து செயல்படுகிறது.

வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக அமெரிக்க பிரதிநிதிகள் ஆகஸ்ட் 25 அன்று இந்தியாவுக்கு வருகை தரவிருந்தனர். ஆனால் ஆகஸ்ட் 6-ஆம் தேதி அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரியை அறிவித்ததை அடுத்து இந்த பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோதி வாஷிங்டனுக்கு விஜயம் செய்த உடனேயே இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் திட்டங்களை இரு தலைவர்களும் அறிவித்திருந்தனர். இந்தியாவும் அமெரிக்காவும் இதற்காக 'குறிப்பு விதிமுறைகளில்' (Terms of Reference) கையெழுத்திட்டன.

இந்தியா தன்னிடமிருந்து விவசாயப் பொருட்களை வாங்க வேண்டும், நடுத்தர-அளவு கார்களுக்கு அதன் சந்தையைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. இந்தியா இதற்குத் தயாராக இல்லை.

தற்போது, ​​இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்து, எரிசக்தி பொருட்கள் மற்றும் மின்னணு பொருட்கள், வரி தொடர்பான புதிய விதிகளுக்கு அப்பாற்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கு அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. 2024-25-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதிச் சந்தை மதிப்பு 437.42 பில்லியன் அமெரிக்க டாலர்கள், இதில் கிட்டத்தட்ட 20 சதவீதம் அமெரிக்காவிற்கு மட்டுமே சென்றது.

இந்தியாவின் ஏற்பாடுகள்

இந்தியா, அமெரிக்கா, 50 சதவீத வரி, வணிகம், பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா தனது நடுத்தர-அளவு வாகனங்களுக்கான சந்தையைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

இதற்கிடையில், செய்தி முகமையான பிடிஐ-இன் படி, 'இந்த விஷயத்தில் பலரும் அஞ்சுவது போல் நிலைமை மோசமாகாது' என்று இந்தியா அரசு அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரச்னை தீர்க்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர்கள், ஏற்றுமதி குறைவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய முயற்சிகள் நடந்து வருவதாகக் கூறினர்.

இந்தியா தனது ஏற்றுமதிகளுக்கு புதிய சந்தைகளைத் தேடுவதால், ஏற்றுமதியாளர்கள் பீதியடையத் தேவையில்லை என்று சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது.

வர்த்தக அமைச்சக வட்டாரங்களின்படி, ஆடை ஏற்றுமதியை அதிகரிக்க 40 நாடுகளுடன் சிறப்பு தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த நாடுகளிலிருந்து ஆடைகள் மற்றும் துணிகளின் இறக்குமதி 590 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும். இதில் இந்தியாவின் பங்கு தற்போது ஆறு சதவீதம் மட்டுமே.

இருப்பினும், அதிக வரிகள் காரணமாக தங்கள் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். வங்கதேசம், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா குறைந்த வரிகளை விதித்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவின் போட்டி நாடுகளிலிருந்து பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகும்.

பிடிஐ செய்தி முகமையின்படி, 'அமெரிக்காவிற்கு 10.3 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஜவுளித் தொழில்துறை மிகவும் பாதிக்கப்படும்' என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் பொதுச் செயலாளர் மிதிலேஷ்வர் தாக்கூர் கூறினார். மேலும், 'தோல் பொருட்கள் தொழிலுடன் தொடர்புடைய ஏற்றுமதியாளர்கள், அமெரிக்காவில் அந்தத் தயாரிப்புகளை வாங்குபவர்கள் இப்போது 20 சதவீதம் வரை தள்ளுபடி கோருவதாகக்' கூறினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அமெரிக்காவின் புதிய வரிகள் இந்தியாவின் ஏற்றுமதியில் 66 சதவீதத்தை பாதிக்கும் என்று பொருளாதார சிந்தனைக் குழுவான ஜிடிஆர்ஐ, பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 2025-26-ஆம் ஆண்டில் 49.6 பில்லியன் டாலர்களாகக் குறையக்கூடும்.

பெரும்பாலான இந்திய ஏற்றுமதியாளர்கள் 10–15 சதவீத வரியே தாங்கிக்கொள்ள முடியாதது என்றும், 50 சதவீத வரி என்பது அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

ஜப்பானிய ப்ரோக்கரேஜ் நிறுவனமான நோமுரா ஒரு செய்திக் குறிப்பில், "50 சதவீத வரி காரணமாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2 முதல் 0.4 சதவீதம் வரை குறையக்கூடும். இதன் காரணமாக, இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆறு சதவீதத்திற்கும் கீழே செல்லக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க சந்தையில் வரிகள் குழப்பத்தை ஏற்படுத்துமா?

இந்தியா, அமெரிக்கா, 50 சதவீத வரி, வணிகம், பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிக வரிகள் அமெரிக்க சந்தையில் பொருட்களின் விலைகளை அதிகரிக்கக்கூடும்.

இந்தியாவின் மீதான வரிகள் அமெரிக்க சந்தையில் பொருட்களை விலை உயர்ந்ததாக மாற்றும் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான டொனால்ட் டிரம்பின் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாக இருக்கலாம்.

சில நாட்களுக்கு முன்பு, விளையாட்டு காலணிகள் தயாரிப்பாளரான அடிடாஸ், வரிகள் காரணமாக அமெரிக்க நுகர்வோருக்கு தங்கள் தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தப்போவதாகக் கூறியது.

அந்த நிறுவனத்தின் பாதிக்கும் மேற்பட்ட தயாரிப்புகள் வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில் தயாரிக்கப்படுகின்றன, அவை முறையே 20 மற்றும் 19 சதவீத வரிகளுக்கு உட்பட்டுள்ளன.

விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான நைக், அமெரிக்காவில் தனது தயாரிப்புகளின் விலைகள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

வரிகள் காரணமாக அதன் செலவுகள் 1 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கக்கூடும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

சில நிறுவனங்கள் வெளிநாட்டுப் பொருட்களை சிறிய அளவில் இறக்குமதி செய்கின்றன. இதனால் ஏற்கனவே சந்தையில் கிடைக்கும் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாகங்கள் தேவைப்படும் அமெரிக்க பொருட்களின் விலைகளும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வரிகள் அமெரிக்க எல்லையில் சுங்க சோதனைகளையும் கடுமையாக்கும், இதனால் பொருட்கள் எல்லையைக் கடக்கும் செயல்முறையும் இனி தாமதமாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு