மகாராஷ்டிரா: பாஜக கூட்டணிக்கு முன்பு காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது ஏன்? - ஓர் அலசல்

மகாயுதி கூட்டணி மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மகாயுதி கூட்டணி மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது
    • எழுதியவர், சுமேதா பால்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ‘மகாயுதி’ கூட்டணி வரலாற்றுபூர்வ வெற்றியை பெற்றுள்ளது.

இந்த கூட்டணியில் உள்ள பாஜக 132 இடங்களை வென்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களையும் வென்றுள்ளது. இதன்மூலம், மகாயுதி கூட்டணி 230 இடங்களுடன் வலுவான வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

மற்றொருபுறம், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமாகவே 46 இடங்களை பெற்று மோசமான தோல்வியை அடைந்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாக, இரு கூட்டணிகளுக்கும் இடையே ‘கடும் போட்டி’ நிலவும் என்றே ஆய்வாளர்கள் பலர் கணித்திருந்தனர்.

அதனால், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக இரு கூட்டணிகளிலும் உள்ள தலைவர்கள் கலக்கத்துடனேயே இருந்தனர்.

மகாயுதி கூட்டணிக்கு இத்தகைய உறுதியான வெற்றி கிடைப்பதற்கு திருப்புமுனையாக அமைந்தது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பெண் வாக்காளர்களின் ஆதரவு

மகாயுதி கூட்டணியின் வெற்றிக்கு மகளிர் உதவித்தொகை திட்டம் பெரும் பங்கு வகித்ததாக நம்பப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வருமான கொண்ட குடும்பங்களின் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட்டது.

தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே இத்திட்டத்தின் கீழ் 30 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைந்தனர். ரூ. 3,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இதுதவிர தேர்தல் சமயத்தில் மகாயுதி கூட்டணி இத்திட்டத்தை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்தது. இந்த அறிவிப்பும் அக்கூட்டணிக்கான ஆதரவு அலையை உருவாக்கியது. தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் மாதம் ரூ. 2,100 ஆக உதவித்தொகை அதிகரிக்கப்படும் என மகாயுதி கூட்டணி அறிவித்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது, இந்த தேர்தலில் வாக்களித்த பெண்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 6 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகரித்திருப்பது, இத்திட்டத்திற்கு ஆதரவானதாக பார்க்கப்படுகிறது.

“தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது ஊரகப்பகுதிகளில் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டிருக்கும். இதை எதிர்க்கட்சிகளின் கூட்டணி தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களின் தோல்விக்கு அதுதான் மிகப்பெரிய காரணம்” என்றார் மூத்த பத்திரிகையாளர் தீபக் லோகண்டே.

தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே

அடிமட்ட அளவில் பணியாற்றிய சங் பரிவாரம்

இந்த முறை பாஜகவுக்காக ஆர்.எஸ்.எஸ் தன் முழு சக்தியையும் ஈடுபடுத்தியது. மக்களவைத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் பங்கு இதனுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்தது. எனினும், நகர்ப்புற வாக்காளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். பெரியளவில் பிரசாரத்தை மேற்கொண்டது.

நாக்பூர் மற்றும் புனே போன்ற நகர்ப்புற பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பாஜகவுக்காக வீடு, வீடாக பிரசாரம் மேற்கொண்டனர்.

“ அஜித் பவாருடன் பாஜக கூட்டணி வைத்ததால் சங் பரிவாரம் அதிருப்தியில் இருந்தது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் கருத்து வேறுபாடுகளை மறந்து களத்தில் பணியாற்றினர். சங் பரிவாரம் மற்றும் பாஜகவின் கூட்டு முயற்சிகள் மகாயுதி கூட்டணிக்கு இந்த வெற்றியை பெற்று தந்துள்ளது” என்றார் மூத்த அரசியல் ஆய்வாளர் ஹேமந்த் தேசாய்.

மகாராஷ்டிரா தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

பாஜகவின் முழக்கம்

சனிக்கிழமை, தேர்தல் முடிவுகளின் ஆரம்ப போக்குகள் வெளிவந்தபோது, பாஜக அலுவலகத்தில் எதுவும் நடக்கவில்லை.

பாஜக அலுவலகத்தில் மதியம் ‘ராமர்’ குறித்த முழக்கங்கள் ஆரம்பித்தன. இந்த வெற்றி இந்துத்துவாவின் வெற்றி என பாஜக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் பிரசாரங்களில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி முன்வைத்த முழக்கங்கள் இந்துத்துவா அரசியலை வலுப்படுத்தியது. “நாம் பிரிந்து இருந்தால் வீழ்த்தப்படுவோம், ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்” என்ற முழக்கங்கள் பாஜகவின் இந்துத்துவா நோக்கத்தை மேலும் கூர்படுத்தியது.

இந்த முறை, “வோட் ஜிகாத்’ என்ற சொல்லும் பிரபலமாக இருந்தது. மக்களவை தேர்தலில் தோல்விக்கு இதுதான் முக்கிய காரனம் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். இம்முறை இதனை நிறுத்த பாஜகவினர் முயற்சித்தனர். அத்துடன், தேர்தல் பிரசாரங்களில் பல ஆவேசமான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தங்களின் தீவிர ஆதரவாளர்களை ஒன்றிணைக்க இத்தகைய ஆக்ரோஷமான பிரசாரங்கள் பாஜகவுக்கு உதவியதாக மூத்த பத்திரிகையாளர்கள் பலர் தெரிவித்தனர்.

அதனுடன், மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக உள்ளூர் பிரச்னைகளை முன்வைத்தது.

மற்றொருபுறம், “அரசியலமைப்பை காக்க போராடுவோம்” என, மக்களவை தேர்தலில் கூறியதையே சட்டமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி முன்வைத்தார். சட்டமன்ற தேர்தலில் அரசியலமைப்பு விவகாரம் திறம்பட செயல்படவில்லை.

தங்களின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து மகாயுதி கூட்டணி மக்களிடம் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், மற்றொருபுறம் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் பிரசாரத்தில் ஒற்றுமையுடன் இருப்பதில் மகா விகாஸ் அகாடி தோற்றுவிட்டது.

அக்கூட்டணி கட்சிகளுக்கிடையே வித்தியாசங்கள் மற்றும் உத்தி ரீதியான தவறுகள் ஆகியவை, பாஜகவுக்கு தேர்தல் பாதையை எளிதாக்கியது.

மேலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான ராகுல் காந்தி, தேர்தல் களத்தில் முதன்முறையாக போட்டியிடும் பிரியங்கா காந்திக்காக வயநாட்டில் கடுமையாக பணியாற்றினார்.

உத்தவ் தாக்கரே தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் மக்களிடம் செல்ல ஆரம்பித்தார்.

அதேசமயம், “நிலையான வளர்ச்சி” எனும் முழக்கத்தின் மூலம் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே மக்களின் நம்பிக்கையை பெற்றனர்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து அக்கூட்டணி அதிகமாக பேசியது. இது அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு சாதகமாக அமைந்தது.

வெற்றிக்கு பின் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “எங்களின் வளர்ச்சி பணி மீது மக்களின் நம்பிக்கையை இந்த வெற்றி காட்டுகிறது. ஒவ்வொரு தரப்பும் எங்களின் பணிகளை பார்த்து, எங்களுக்கு வாக்கு செலுத்தியுள்ளனர்” என்றார்.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

காங்கிரஸின் அதீத நம்பிக்கை

ஐந்து மாதங்களுக்கு முன்பு மக்களவை தேர்தலில் தேசியளவில் 99 இடங்களை வென்று மீண்டு வருவதற்கான அறிகுறிகளை காங்கிரஸ் காட்டியது.

ஆனால், இந்த தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிராவில் அக்கட்சிக்கு மோசமான தோல்வியை பெற்றுள்ளது. இதற்கு முன்பு, காங்கிரஸ் ஹரியாணாவிலும் தோல்வியை சந்தித்தது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணி தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குற்றம் சாட்டினர். பொதுமக்கள் பிரச்னைகள் மீதான தோல்வி இது என அவர்கள் கூறினர். அதேசமயம், காங்கிரஸின் அதீத நம்பிக்கையால் இந்த தோல்வி நேர்ந்ததாக நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.

“மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தியதால்தான் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தோல்வியை தழுவியது” என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அசோக் தவாலே.

“தொகுதி பங்கீட்டை அவர்கள் தாமதப்படுத்தினர். அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதற்காக இழுபறி நடந்தது. ஆனால், பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வகுப்புவாதம் மற்றும் பண பலத்தை நாடின”என்றார் அவர்

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் “எதிர்பாராதது” என கூறிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தங்கள் கட்சி முடிவுகளை விரிவாக ஆராயும் என தெரிவித்தார்.

தலைமை மீதான தவறுகள்

“மக்களவை தேர்தலின் போது மகாயுதி கூட்டணிக்கு நிலவிய எதிர்மறையான சூழல் முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது அக்கூட்டணி மீதான கோபத்தை மக்கள் வெளிப்படுத்தினர்” என்கிறார் அரசியல் ஆய்வாளர் தீபக் லோகண்டே

“ஆனால், மக்களவை தேர்தல் முடிந்தபின் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் வானில் பறந்தனர். மாநிலமே தங்கள் கைகளுக்குள் வந்துவிட்டதாக காங்கிரஸ் நினைத்தது. முதலமைச்சர் யார் என்பதற்கான விவாதங்களையும் முன்பே நடத்தின.” என்றார் அவர்

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

மராத்தா இயக்கத்தின் தாக்கம்

இந்த தேர்தலில் மராத்தா இட ஒதுக்கீடு இயக்கமும் முக்கிய விவாதமாக இருந்தது. மனோஜ் ஜராங்கே-பாட்டீல் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிக்கைக்கான முக்கிய முகமாக வளர்ந்தார்.

ஆகஸ்ட் 29, 2023 அன்று அந்தர்வாலி - சாராடி பகுதியில் அவர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற போலீஸ் தடியடியால் அந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

தேர்தல் சமயத்தில் அந்த இயக்கத்தின் தாக்கம் வலுவிழந்தது. ஜூலை 2024-ல் ஜராங்கே உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். தேர்தலில் போட்டியிட போவதில்லை என அவர் முடிவெடுத்தார்.

“மராத்தா இயக்கம் தற்போது தணிந்துவிட்டது. மக்களவை தேர்தலின் போது இந்த இயக்கம் முழுவீச்சில் நடந்தது. அப்போது, மனோஜ் ஜராங்கே-பாட்டீல் பல கருத்துகளை தெரிவித்தார்” என்றார் மகாராஷ்டிரா அரசியல் குறித்து எழுதும் நிபுணரான ஜிதேந்திர தீக்‌ஷித்.

“ஆனால், கடந்த மூன்று-நான்கு வாரங்களாக இந்த இயக்கம் வலுவிழந்துவிட்டது. சட்டமன்ற தேர்தலில் அது எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை. அத்துடன், விதர்பா பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசு திட்டங்கள் மூலம் நிவாரணங்களை பெற்றனர். இது அரசுக்கு எதிரான அலையை ஓரளவுக்குக் குறைத்தது.” என்கிறார் அவர்.

ஒட்டுமொத்தமாக, மகா விகாஸ் அகாடியின் தோல்விக்கு அக்கூட்டணியின் அதீத நம்பிக்கை, கூட்டணியின் பலவீனம் மற்றும் பொதுமக்கள் பிரச்னைகள் மீது கவனம் செலுத்தத் தவறியது ஆகியவைதான் காரணமாக பார்க்கப்படுகிறது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)