மகாராஷ்டிரா: பாஜகவுக்கு இந்த வெற்றி தேசிய அளவில் வலு சேர்த்துள்ளதா? காங்கிரஸ் நிலை என்ன?

மகாராஷ்டிரா: தேசிய அளவில் பாஜகவுக்கு இந்த வெற்றி வலு சேர்த்துள்ளதா? காங்கிரஸ் நிலை என்ன?

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி ஹிந்தி

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் மகாயுதி என்ற பெயரில் போட்டியிட்ட பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அறுதிப்பெரும்பான்மையுடன் இதுவரையிலான மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அதேநேரம் ஜார்கண்டில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, முன்பைவிட அதிக தொகுதிகளைப் பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய சட்டப் பேரவைத் தேர்தல்கள் இவை. குறிப்பாக மகாராஷ்டிராவின் மீது அனைவரின் பார்வையும் இருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பொதுத் தேர்தலில், காங்கிரஸ், என்சிபி (ஷரத் பவார் பிரிவு) மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) ஆகியோரை உள்ளடக்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்று, பா.ஜ.க கூட்டணி மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்துக் கேள்விகளை எழுப்பியது.

ஆனால் நவம்பர் 23ஆம் தேதி வெளியான முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மகாராஷ்டிராவின் முடிவுகள் ஷரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே போன்ற மூத்த தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

பாஜகவே எதிர்பார்க்காத மாபெரும் வெற்றி

மகாராஷ்டிரா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மகாராஷ்டிராவில் மாபெரும் வெற்றி மூலமாக, தேர்தல் மேலாண்மை மற்றும் மக்களின் துடிப்பைப் புரிந்துகொள்வதில் பா.ஜ.கவுக்கு நிகர் யாரும் இல்லை என்பதை அக்கட்சி நிரூபித்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

​​"நாங்கள் 200 இடங்களை வெல்வோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் ஸ்டிரைக் ரேட் இவ்வளவு நன்றாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. பொதுமக்கள் மகாயுதியின் பணிகளை மீண்டும் அங்கீகரித்துள்ளனர்" என்று பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஜாஃபர் இஸ்லாம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணிக் கட்சிகளை நம்பி ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

​​பத்து ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் சரிவு காலம் தொடங்கிவிட்டது என்று அப்போது கூறப்பட்டது.

ஆனால் அதன் பிறகு நடைபெற்ற ஹரியாணா தேர்தலில் முன்பைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க தன் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியது.

இப்போது மகாராஷ்டிராவில் எதிர்பாராத வெற்றியைப் பெற்றதன் மூலம், தேர்தல் மேலாண்மை மற்றும் மக்களின் துடிப்பைப் புரிந்துகொள்வதில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை அக்கட்சி நிரூபித்துள்ளது.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

“பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் பா.ஜ.க தொடர்ந்து மூன்றாவது முறையாக பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி, பா.ஜ.கவை பெரும்பான்மையை எட்டவிடாமல் தடுத்தது. அப்போது பா.ஜ.கவின் சரிவு தொடங்கிவிட்டதாகப் பேச்சு எழுந்தது,” என்று அரசியல் ஆய்வாளர் ஷரத் குப்தா குறிப்பிட்டார்.

ஹரியாணாவுக்கு பிறகு இப்போது மகாராஷ்டிராவிலும் அமோக வெற்றியைப் பெற்றதன் மூலம் இதுவொரு வெற்றுப்பேச்சு என்பதை பாஜக நிரூபித்துள்ளது.

"ஒரு அரசு வீழ்ச்சியடையத் தொடங்கும்போது ​​அந்த வீழ்ச்சி நின்றதில்லை. வாஜ்பாயின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அதற்குப் பிறகு இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆகியவை அதற்கான உதாரணங்கள்,” என்று ஷரத் குப்தா தெரிவித்தார்.

"ஆளும் கூட்டணி வீழ்ச்சியடையத் தொடங்கும்போது, அது மத்தியில் இருந்தாலும் சரி, மாநிலங்களில் இருந்தாலும் சரி, அந்த வீழ்ச்சிக்கு முடிவு என்பதே இல்லை,” என்றார் அவர்.

“கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் பாஜக பின்னடைவை சந்தித்தது. பிறகு மக்களவையில் அதற்கு இடங்கள் குறைந்தபோது பாஜகவின் சரிவு தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சாத்தியமற்றதாகத் தோன்றிய முடிவுகளை எட்டியபோது, பிரதமர் நரேந்திர மோதியின் வசீகரம் இன்னும் மாறாமல் உள்ளது என்பதோடு கூடவே பாஜகவின் புகழும் மாறாமல் அவ்வாறே உள்ளது என்பது தெளிவாகிவிட்டது,” என்று ஷரத் குப்தா சுட்டிக்காட்டினார்.

ஹரியாணா மற்றும் மகாராஷ்டிராவின் வெற்றியில் ஆர்எஸ்எஸ்-இடம் இருந்து பாஜக பெற்ற ஆதரவும் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக நம்பப்படுகிறது.

பா.ஜ.க மற்றும் ஆர்எஸ்எஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே எந்தப் பதற்றமும் இல்லை என்பதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

"தேர்தல் மேலாண்மை தொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகப் பேச்சு அடிபட்டது. ஆனால் சமீபத்திய தேர்தல் முடிவுகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே எந்தப் பதற்றமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன." வரவிருக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கும்கூட ஆர்எஸ்எஸ் தயாராகி வருவதாக ஷரத் குப்தா குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்குகிறது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக, முன்பைவிட பலவீனமான எதிர்க்கட்சியை இப்போது மக்களவையில் சந்திக்கும். இது பாஜகவுக்கு நிம்மதி தரும் விஷயமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

“மகாராஷ்டிராவில் பாஜக தோல்வியடைந்திருந்தால் மக்களவையில் அது பிரச்னைகளைச் சந்தித்திருக்கும். ஆனால் இப்போது எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் ஆதரவும் இல்லை, எந்தவொரு விவாதமும் இல்லை என்று பாஜக வெளிப்படையாகச் சொல்ல முடியும்,” என்று ஷரத் குப்தா குறிப்பிட்டார்.

மகாராஷ்டிராவில் பா.ஜ.கவின் இந்த மகத்தான வெற்றி அக்கட்சியை மேலும் பலப்படுத்தும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. இந்த வெற்றி நிச்சயமாக பாஜகவை முன்பைவிடப் பலம் வாய்ந்ததாக மாற்றும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சமர் கடஸ்.

பாஜக 132 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது பெரும்பான்மைக்கு சில இடங்களே குறைவு. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் பாஜகவை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மகாராஷ்டிரா: பாஜகவுக்கு இந்த வெற்றி தேசிய அளவில் வலு சேர்த்துள்ளதா? காங்கிரஸ் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஆனால் நவம்பர் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற இருக்கும் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று பாஜகவுடன் தொடர்புடையவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ்தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருப்பதாக ஊகங்களும் வெளியாகி வருகின்றன.

“தேவேந்திர ஃபட்னவிஸ்தான் முதல்வராக வருவார் என நம்பப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் பா.ஜ.கவில் முற்றிலும் மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன,” என்று மூத்த பத்திரிக்கையாளர் சமர் கடஸ் தெரிவித்தார்.

"தேவேந்திர ஃபட்னவிஸை முதல்வர் ஆக்காவிட்டால் அவரை பாஜகவின் தலைவராக ஆக்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், பாஜகவின் உள் அரசியலில் தேவேந்திர ஃபட்னவிஸின் நிலை வலுவடையும்.”

ஒருபுறம் தேவேந்திர ஃபட்னவிஸ் பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்டாலும் மறுபுறம் அமித் ஷாவுடனான அவரது உறவு மிகவும் நன்றாக இல்லை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் மகாராஷ்டிராவின் இந்த மாபெரும் வெற்றி, பாஜகவின் உள் அரசியல் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"தேவேந்திர ஃபட்னவிஸின் கடின உழைப்பு மற்றும் அவரது உத்தியின் தாக்கம் இந்தத் தேர்தல் முடிவுகளில் தெளிவாகத் தெரிவதாக," சமர் கடஸ் கூறுகிறார்.

"பாஜகவின் உள் அரசியலில் அமித் ஷா காரணமாக தேவேந்திர ஃபட்னவிஸ் பலவீனமாகி இருந்தார். ஆனால் இந்த முடிவுகளுக்குப் பிறகு இப்போது அவர் முன்பைவிட வலுவாகிவிட்டார். எதிர்காலத்தில் அவரது பங்கு முக்கியமானதாக இருக்கும்" என்கிறார் சமர் கடஸ்.

எதிர்க்கட்சிகளின் நிலை என்ன?

மகாராஷ்டிரா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மகாராஷ்டிராவின் தோல்வி இந்தியா கூட்டணிக்கு நிலைமையை மிகவும் கடினமாக்கியுள்ளது.

ஷரத் ​​பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவின் கட்சிகளின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவை சேர்ந்த 9 பேரும், ஷரத் பவாரின் என்.சி.பியை சேர்ந்த 8 பேரும் வெற்றி பெற்றனர்.

ஆனால் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இரு தலைவர்களின் கட்சிகளையும் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இவ்வாறான நிலையில் தனது எம்.பி.க்களை தக்கவைத்துக் கொள்வது இக்கட்சிகளுக்கு சவாலாக அமையக்கூடும்.

"ஷரத் பவார் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைப்பது குறித்து சூசகமாகக் கூறியிருந்தார். எதிர்காலத்தில் இது சாத்தியமாகக்கூடும்," என்று சமர் கடஸ் குறிப்பிட்டார்.

"அரசியல் வேறு ஏதாவது திருப்பம் ஏற்பட்டால், தனது எம்.பி.க்களை ஒன்றாக வைத்திருப்பது உத்தவ் தாக்கரேக்கு அவ்வளவு எளிதாக இருக்காது."

இன்னும் சில மாதங்களில் டெல்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் பிகாரில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும்.

மகாராஷ்டிராவின் தோல்வி இந்தியா கூட்டணிக்கு நிலைமையை மிகவும் கடினமாக்கியுள்ளது. மேலும் எல்லா கட்சிகளையும் ஒன்றாக வைத்திருப்பதற்கான சவாலை கூட்டணி எதிர்கொள்ளக்கூடும்.

டெல்லியில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடும். இங்கு அதற்கு கூட்டணிக் கட்சி தேவையில்லை. ஆனால் இணைந்து போட்டியிட ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு அரசியல் நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மகாராஷ்டிரா: பாஜகவுக்கு இந்த வெற்றி தேசிய அளவில் வலு சேர்த்துள்ளதா? காங்கிரஸ் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images

‘‘காங்கிரஸும் ஆம் ஆத்மியும் சேர்ந்து போட்டியிடவில்லை என்றால் அது பாஜகவுக்கு நிச்சயம் பலன் தரும்,” என்று சிஎஸ்டிஎஸ் இயக்குநர் சஞ்சய் குமார் கூறினார்.

"அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் இரு கட்சிகளும் ஒன்றாக வந்தே ஆக வேண்டும். காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் மக்களவைத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிட்டன. ஆனால் ஏழு இடங்களிலும் தோல்வியடைந்தன."

டெல்லி மக்களைப் பொருத்தவரை மக்களவைத் தேர்தலும், சட்டப் பேரவைத் தேர்தலும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

பாஜக தனது கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து அவர்களின் அரசியல் களத்தைப் பறிப்பதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் தான் மிகப்பெரிய கட்சியாக இருந்தாலும், கூட்டணிக் கட்சிகள் தனக்கு முக்கியம் என்ற சமிக்ஞைகளைத் தற்போது பாஜக அளிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக முழு தன்னம்பிக்கையுடன் உள்ளது. பெரிய வெற்றி பெற்றாலும்கூட பாஜக தனது கூட்டணிக் கட்சிகளை உடன் அழைத்துச் செல்ல விரும்புவது தெளிவாகிறது" என்று சஞ்சய் குமார் குறிப்பிட்டார்.

"கூட்டணிக் கட்சிகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட பிறகு அவர்களைக் கைவிட்டு விடுவதாக பாஜக மீது குற்றம் சாட்டப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் பாஜக இந்தக் கருத்தை உடைக்க விரும்புகிறது."

அடுத்த ஆண்டு பிகாரில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலிலும் கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்வது பாஜகவுக்கு முக்கியமானதாக இருக்கும்.

கூட்டணி அரசியலின் வருங்காலம் என்ன?

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியா கூட்டணியின் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து குழப்பத்தில் இருப்பதாகவும், தேர்தல் நெருங்கும் வரை தெளிவான உத்தி எதையும் கூட்டணியால் முன்வைக்க முடியவில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியின் உள் பலவீனங்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"இந்தியா கூட்டணி வலுவான முன்னணியை முன்வைக்கும் என்று நம்பப்பட்டது. அதன் வாய்ப்புகள் இப்போது பலவீனமாகிவிட்டன," என்று ஷரத் குப்தா தெரிவித்தார்.

"இந்தியா கூட்டணிக் கட்சிகள் பரஸ்பர மோதல்களில் சிக்கித் தவிக்கின்றன. வலுவான மாற்றுத் தேர்வை முன்வைக்க முடியாமல் இருக்கின்றன என்ற கருத்து மகாராஷ்டிரா முடிவுகளுக்குப் பிறகு வலுப் பெற்றுள்ளது," என்றார் அவர்.

"இந்தியா கூட்டணியின் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்துக் குழப்பத்தில் உள்ளன. தேர்தல்கள் நெருங்கும் வரை தெளிவான உத்திகளை முன்வைக்க முடியாமல் திணறுகின்றன.”

அதே நேரத்தில், பாஜகவின் மத்திய தலைமை பலவீனமடைந்து வருவதையும், பிராந்திய தலைவர்கள் உருவாகி வருவதையும் மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் காட்டுவதாக காங்கிரஸ் கருதுகிறது.

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி குறித்துப் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராகினி நாயக், “மகாராஷ்டிராவின் தேர்தல் முடிவுகள் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. நாங்கள் புரிந்து கொண்ட எதார்த்தத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது,” என்றார்.

மகாராஷ்டிரா: பாஜகவுக்கு இந்த வெற்றி தேசிய அளவில் வலு சேர்த்துள்ளதா? காங்கிரஸ் நிலை என்ன?

பட மூலாதாரம், ANI

ஆனால் பாஜகவின் மத்திய தலைமையுடன் ஒப்பிடுகையில் பிராந்திய தலைவர்கள் வலுவடைந்து வருவதை இந்த முடிவுகள் சுட்டிக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

”மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோதியை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்ட பாஜக, மகராஷ்டிராவில் 28 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களில் தோல்வியடைந்தது.

ஆனால் இப்போது தேவேந்திர ஃபட்னவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரை முன்னிறுத்திப் போட்டியிட்டபோது மிகப் பெரிய பெரும்பான்மை கிடைத்துள்ளது.”

மகாராஷ்டிரா தேர்தலுக்கு முன், ’ஒன்றுபட்டு இருப்பதே பாதுகாப்பு’, 'பிரிந்தால் நாம் வெட்டப்படுவோம்' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், 'படேங்கே தோ கடேங்கே' (பிரிந்தால் நாம் வெட்டப்படுவோம்) போன்ற முழக்கங்களை எழுப்பி இந்துத்துவ அரசியலுக்கு மேலும் முனைப்பு கொடுக்க முயன்றார்.

ஒருமுனைப்படுத்தலும் ஒரு காரணமா?

மகாராஷ்டிராவில் வாக்குகள் ஒருமுனைப்படுத்தப்பட்டு, இந்துத்துவ அரசியல் வலுப்பெற்றுள்ளது என்பதற்கான தெளிவான அறிகுறியாக இந்தத் தேர்தல் முடிவுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும் அஜித் பவார் உள்பட மகாயுதியின் பல தலைவர்கள் ''இந்துக்கள் பிரிந்து கிடந்தால் தோற்றுவிடுவோம்'' போன்ற முழக்கங்களை வெளிப்படையாக நிராகரித்தனர்.

மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தில் வகுப்புவாத துருவமுனைப்பைக் கட்டுப்படுத்துவதில் பாஜக வெற்றி பெற்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"'பிரிந்தால் நாம் வெட்டப்படுவோம்' ’வாக்கு ஜிகாத்’ போன்ற முழக்கங்களுடன் ஒரு பக்கம் பாஜக மட்டுப்படுத்தப்பட்ட வகுப்புவாதத்தைப் பரப்பியது. மறுபுறம் அஜித் பவார் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இத்தகைய முழக்கங்களில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக்கொண்டு தங்கள் ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெற்றனர்,” என்று சமர் கடஸ் குறிப்பிட்டார்.

"அதாவது பாஜக தனது கூட்டணிக் கட்சிகளை ஒன்றாக வைத்துக் கொண்டே தனது இந்துத்துவ கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி பெற்றது."

மகாராஷ்டிரா: பாஜகவுக்கு இந்த வெற்றி தேசிய அளவில் வலு சேர்த்துள்ளதா? காங்கிரஸ் நிலை என்ன?

பட மூலாதாரம், ANI

இந்துத்துவ அரசியல் மேலும் வலுப்பெற்றால் இந்திய அரசியலில் முஸ்லிம்கள் மேலும் ஓரங்கட்டப்படுவார்கள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"பாஜகவின் இந்துத்துவ அரசியல் ஏற்கெனவே முஸ்லிம்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்திவிட்டது," என்று ஷரத் குப்தா கூறினார்.

ஆனால் இப்போது கூறிவரப்படும் கோஷங்களால் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக மேலும் பலவீனமடைந்துவிடுவார்கள் போலத் தெரிகிறது.

"இருப்பினும், முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்படலாம் என்பது இதன் அர்த்தமல்ல. நன்மை பயக்கும் திட்டங்களால் முஸ்லிம்கள் அதிகம் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திர மோதியே கூறி வருகிறார்."

"தரவுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்த வரை முஸ்லிம்கள் பலவீனமடைந்து வருகின்றனர்."

பாஜகவின் இந்த அணுகுமுறை காரணமாக எதிர்க்கட்சிகள்கூட முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பிரதிநிதித்துவத்தை அளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

"இப்போது மகாராஷ்டிராவின் வெற்றிக்கான பெருமை யோகி ஆதித்யநாத்துக்கும் கொடுக்கப்படுகிறது. அரசியலில் யோகி வலுப்பெற்றால் முஸ்லிம்கள் மீது தாக்கம் ஏற்படக்கூடும்," என்று ஷரத் குப்தா குறிப்பிட்டார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)