"சமூக வலைத்தள தணிக்கை தீவிரப்படுத்தப்படும்" -மாணவர் விசாக்களுக்கு டிரம்ப் நிர்வாகத்தின் புதிய கட்டுப்பாடுகள்

அமெரிக்க மாணவர் விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள், டிரம்ப், சீனா, கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செவ்வாயன்று, ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டத்தை நடத்தினர்.
    • எழுதியவர், பிராண்டன் ட்ரெனான் மற்றும் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
    • பதவி, பிபிசி நியூஸ்

மாணவர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறையை விரிவுபடுத்த அமெரிக்க அரசு தயாராகி வருகிறது. இதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள், மாணவர் விசா நேர்காணல்களுக்கான நியமனங்களை திட்டமிடுவதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர் மற்றும் அந்நிய செலாவணி விசாக்களுக்கான சமூக ஊடக சரிபார்ப்புச் செயல்முறை முடுக்கிவிடப்படும் என்றும், இது தூதரகங்களுக்கு 'குறிப்பிடத்தக்க தாக்கங்களை' ஏற்படுத்தும் என்றும் ஒரு அதிகாரப்பூர்வ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கு எதிராக டிரம்ப் மேற்கொண்ட மிகப்பெரிய அளவிலான நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த கல்வி மையங்கள் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பதாக டிரம்ப் கருதுகிறார். பாலத்தீன ஆதரவு போராட்டங்கள் வளாகங்களில் நடத்தப்பட்டபோது வெளிப்பட்ட யூத எதிர்ப்புக்கு எதிராக, இவை போராடத் தவறிவிட்டதாக டிரம்ப் குற்றம் சாட்டுகிறார்.

இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த சீனா, சர்வதேச மாணவர்களைப் பாதுகாக்க அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது.

"சீனா மாணவர்கள் உள்பட சர்வதேச மாணவர்களின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதில் அமெரிக்க தரப்பு தீவிரமாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்," என்று ஒரு சீன அதிகாரி தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான சீன மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்றனர்.

அமெரிக்க மாணவர் விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள், டிரம்ப், சீனா, கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அதிபர் டிரம்பின் கோபத்தின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது.

அதிக கல்வி கட்டணம் செலுத்தும் வெளிநாட்டு மாணவர்கள்

பல்கலைக்கழகங்களும் கூட இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பல பல்கலைக்கழகங்கள் தங்கள் நிதியில் கணிசமான பகுதிக்கு வெளிநாட்டு மாணவர்களையே நம்பியுள்ளன. ஏனெனில் வெளிநாட்டு மாணவர்கள் பெரும்பாலும் அதிக கல்விக் கட்டணத்தை செலுத்துகிறார்கள்.

அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் பொதுவாக ஒப்புதல் பெறுவதற்கு முன் தங்கள் சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா நேர்காணல்களில் கலந்துகொள்ள வேண்டும்.

"அமெரிக்காவிற்குள் நுழையும் நபர்கள் குறித்த முழுமையான சரிபார்ப்பு செயல்முறையை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், அதை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம்." என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸால் பார்க்கப்பட்ட அந்த அரசுக் குறிப்பில், விசா கோரும் மாணவர்களுக்கான புதிய நேர்காணல்களை திட்டமிட வேண்டாம் என்றும், ஆனால் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான நேர்காணல்களை தொடர்ந்து நடத்தலாம் என்றும் அமெரிக்க தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"அடுத்தகட்ட வழிகாட்டுதல் வழங்கப்படும் வரை இந்த இடைநிறுத்தம் நீடிக்கும்" என்று வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அனைத்து மாணவர் விசா விண்ணப்பங்களுக்கும் பொருந்தக்கூடிய 'அத்தியாவசிய சமூக ஊடக சோதனை மற்றும் சரிபார்ப்பை விரிவுபடுத்துவதற்கு' வெளியுறவுத்துறை தயாராகி வருவதாகவும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அந்த சரிபார்ப்பு செயல்முறையின் குறிப்பிட்ட நோக்கம் என்னவாக இருக்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

அமெரிக்க மாணவர் விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள், டிரம்ப், சீனா, கல்வி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வளாகத்தில் நடத்தப்பட்ட பாலத்தீன ஆதரவு போராட்டங்களில், யூத எதிர்ப்பு தலைதூக்க அனுமதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

மார்ச் மாதத்தில் கார்டியன் நாளேடு வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, 'டிரம்ப் நிர்வாகம், மாணவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு மீதான அதன் கண்காணிப்பை ஏற்கனவே அதிகரித்திருந்தது'. மேலும் அந்த செய்தி அறிக்கை, அமெரிக்காவின் நடவடிக்கையை பல்கலைக்கழக வளாகங்களில் பாலத்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறையுடன் தொடர்புபடுத்தியது.

ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS), "சமூக ஊடகங்களில் யூத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் யூத நபர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவது குடியேற்ற சலுகை கோரிக்கைகளை மறுப்பதற்கான காரணங்களாக கருதப்படும்" என்று கூறியது.

இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, டிரம்பின் குழு பல்கலைக்கழகங்களுக்கான நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் நிதியை முடக்கியுள்ளது மற்றும் மாணவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளது,

அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான விசாக்களை ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் பல நீதிமன்றங்களால் தடுக்கப்பட்டுள்ளன.

சில அமெரிக்க பல்கலைக்கழகங்களின் வளாகத்தில் நடத்தப்பட்ட பாலத்தீன ஆதரவு போராட்டங்களில், யூத எதிர்ப்பு தலைதூக்க அனுமதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

பேச்சு சுதந்திரத்தை மீற டிரம்ப் நிர்வாகம் முயற்சிப்பதாக பல்கலைக்கழகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. சமூக ஊடக சரிபார்ப்பு குறித்த புதிய கொள்கை, அமெரிக்க அரசியலமைப்பின் முதல் சட்டத் திருத்தத்தால் உறுதிப்படுத்தப்பட வேண்டிய உரிமைகளை தொடர்ந்து மீறுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தனது அதிபர் பதவிக் காலம் முழுவதும் தான் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்கவே போராடுவதாக டிரம்ப் கூறி வருகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அதிபர் டிரம்பின் கோபத்தின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது. அவர் ஹார்வர் பல்கலைக்கழகத்திற்கான, 2.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கூட்டாட்சி மானியங்களை முடக்கியுள்ளார். மேலும் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பிற கூட்டாட்சி நிதி ஒதுக்கீடுகளையும் மதிப்பாய்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

"அதிக முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்" என்று அமெரிக்க அரசு கருதும் ஆராய்ச்சிகளை இந்த பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் மேற்கொண்டு வருவதால், டிரம்பின் நடவடிக்கைகள் ஹார்வர்டை மட்டுமல்ல, அமெரிக்காவையும் பாதிக்கும் என்று பல்கலைக்கழகத் தலைவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் டிரம்ப், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் அல்லது மாணவர்களை ஏற்றுக்கொள்வதற்கு தடை விதித்தார். ஆனால், ஒரு ஃபெடரல் நீதிபதி இந்தக் கொள்கையைத் தடுத்தார்.

ஆனால் இறுதியில், டிரம்பின் இந்த நடவடிக்கை அனுமதிக்கப்பட்டால், அது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், ஏனெனில் அதன் 25%க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டினர். செவ்வாயன்று (மே 27) பாஸ்டன் அருகே உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு