தோனி 40 வயதைக் கடந்த பிறகும் ஐ.பி.எல். ஆடும் ரகசியம் என்ன? கோலி, ரோகித் எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது. இந்த ஐபில் டி20 தொடர் நடக்கும்போது மக்களவைத் தேர்தலும் நடக்க இருப்பதால், முதல் 21 போட்டிகளுக்கான தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஐபிஎல் தொடரும் ஒவ்வொரு விதமான ஸ்வாரஸ்யங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த ஐபிஎல் டி20 தொடரில் பல வீரர்கள் அணி மாறியுள்ளனர், பல வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர், இளம் வீரர்கள் அறிமுகமாகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் பல வீரர்களுக்கு இந்த ஐபிஎல் டி20 தங்களின் திறமையை உரசிப்பார்க்கும் உரைகல்லாக மாற இருக்கிறது. ஏனென்றால், இந்த ஐபிஎல் டி20 தொடரில் அந்த குறிப்பிட்ட வீரர்கள் சரியாக விளையாடாத பட்சத்தில் பட்சத்தில் இது அவர்களுக்கு கடைசி ஐபிஎல் தொடராக அமையக்கூடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
வீரர்களுக்கு ஒரு ஐபிஎல் தொடர் கடைசித் தொடராக மாறுவதற்கு அவர்களின் வயது, உடற்தகுதி, களத்தில் எவ்வாறு விளையாடுகிறார்கள் ஆகிய அளவு கோள்களும் பொருந்தும். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு அணியலும் பல வீரர்களின் பட்டியல் நீள்கிறது.

பட மூலாதாரம், Getty Images
நட்சத்திர வீரர்களுக்கு சோதனையா?
இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற ‘ஐகான்’ வீரர்களும், வெளிநாட்டு நட்சத்திர வீரர்களுக்கும் கூட இந்த ஐபிஎல் தொடர் என்பது கம்பி மீது நடப்பதுபோலத்தான். சரியாக விளையாடமல் போகும்பட்சத்தில் கிரிக்கெட் எதிர்காலம் முடிவுக்கு வரக்கூடும்.
ஐபிஎல் டி20 தொடரரில் வீரர்கள் சரிவர செயல்படாவிட்டால் அடுத்த ஆண்டு நடக்கும் ஏலத்தில் அந்த வீரர்களை வாங்கத் நிர்வாகம் தயங்குவார்கள் என்பது நிதர்சனம். இது கடந்த காலங்களில் நடந்துள்ளது.
2024 ஐபிஎல் டி20 தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 7-ஆம் தேதிவரை நடப்பதற்கான போட்டி அட்டவணையை மட்டும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி மே 26-ஆம் தேதி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்த 5 நாட்களுக்குப்பின் டி20 உலகக் கோப்பைத் தொடரும் தொடங்குகிறது. ஜூன் 1-ஆம் தேதி, கரிபியன் தீவுகளிலும், அமெரிக்காவிலும் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்குகிறது.
அதனால், இந்த ஐபிஎல் டி20 தொடர் ஒவ்வொரு நாட்டு தேசிய அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
4 டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள்
இந்திய அணியைப் பொறுத்தவரை, ஐபிஎல் டி20 தொடரில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களில் பலருக்கு டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கவும் வாய்பப்புண்டு. டி20 உலகக் கோப்பைக்கு அணியைத் தேர்வு செய்வதில் ஐபிஎல் தொடரும் அளவுகோலாக தேர்வுக்குழுவினரால் பார்க்கப்படலாம்.
இதில் ஐபிஎல் டி20 தொடரின் 2வது போட்டித் தொடர் அட்டவணை, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் ஐபிஎல் நிர்வாகம் வெளியிடுகிறது. இந்த 21 நாட்கள் நடக்கும் போட்டியில் 4 நாட்களில் 2 போட்டிகள் நடக்கின்றன.
மார்ச் 22-ஆம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. அதன்பின் நடக்கும் மற்ற ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டபுள் ஹெட்டர்ஸ் என்று அழைக்கப்படும் இரு போட்டிகள் நடக்கும் நாளில், முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கும், 2-வது ஆட்டம் இரவு 7.30 மணிக்கும் தொடங்குகிறது.
மார்ச் 23, 24 ஆகிய இரு நாட்களில் டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடக்கின்றன. அதன்பின் மார்ச் 31, ஏப்ரல் 7-ஆம் தேதிகளில் டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்ன்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் தங்களின் 14 போட்டிகளில் 5 ஆட்டங்களை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் விளையாடி முடித்துவிடுவர். கொல்கத்தா அணி 3 போட்டிகளிலும், மற்ற அணிகள் 4 போட்டிகளிலும் விளையாடும்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வழக்கமாக தங்களின் மொஹாலி மைதானத்தில் ஆட்டத்தைத் தொடங்காமல், சண்டிகாரின் புறகநரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
மார்ச் முதல்வாரத்தில் சென்னையில் தோனி பயிற்சி
முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, ஆர்சிபியுடன் மோதுகிறது. இந்தத் தொடரின் பயிற்சிக்காக மார்ச் முதல்வாரத்தில் தோனி சென்னை வந்து, அணியினருடன் பயிற்சியில் ஈடுபடுகிறார். கடந்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே கோப்பையை வென்றவுடன் தோனி முழங்கால் அறுவைசிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் இதுவரை எந்தவிதமான போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.
ஹர்திக் பாண்டியா கடந்த 2 சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தநிலையில் இந்தமுறை மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்புகிறார்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின், மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும், முழு தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 4 ப்ளே ஆஃப் ஆட்டங்கள் உள்பட 74 போட்டிகள் நடைபெற உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
அணிகள் மீதான எதிர்பார்ப்புகள் என்ன?
இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் பல புதிய வீரர்கள் வந்துள்ளனர். அந்த வகையில் புதிய வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிஎஸ்கே - ரச்சின் ரவீந்திரா, ரிஸ்வி,டேரல் மிட்ஷெல்
சிஎஸ்கே அணியில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, உ.பியைச் சேர்ந்த சமீர் ரிஸ்வி ஆகியோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் ரூ.8.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள சமீர் ரிஸ்வி வலதுகை சுரேஷ் ரெய்னா என்று அழைக்கப்படுகிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பாகும். இதுதவிர ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள நியூசிலாந்து வீரர் டேரல் மிட்ஷெல், ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தோனி கைகளில் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஹர்திக் பாண்டியா, கோட்ஸி
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். ரோஹித் சர்மா கேப்டனாகத் தொடர்வார் என்பது அவர் மீது நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இது தவிர தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் கோட்ஸி ஏலத்தில் எடுத்திருப்பது பந்துவீச்சில் பெரிய பலத்தை காட்டுகிறது.
கேகேஆரும் ஸ்டார்க்கும்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.24 கோடிக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கை வாங்கியுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பஞ்சாப்புக்கு வலுசேர்ப்பாரா ஹர்ஷல் படேல்?
பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை ரூ.11.4 கோடிக்கு ஹர்ஷல் படேலை விலைக்கு வாங்கியுள்ளதால், அவரின் பந்துவீச்சு எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தவிர ரூஸோ, கிறிஸ் வோக்ஸ் என பந்துவீச்சாளர்களையும் அந்த அணி வாங்கியுள்ளது.
ராவ்மென் பாவல் வருகை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கெனவே ஸ்திரமான அணியாக இருந்தபோதிலும் கூட, ஏலத்தில் ரோவ்மென் பாவல் ரூ.7.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இவரின் வருகை பேட்டிங்கை எந்த அளவுக்கு பலப்படுத்தும் என்பது தெரியவில்லை.
ஷாருக்கான்,ஓமர்ஜாய், ரூ.10 கோடி ஜான்சன்
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த ஷாருக்கான் இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். பிக் ஹிட்டரான ஷாருக்கான் வருகை, ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓமர்ஜாய் ஆகியோரின் வருகையும் பலம் சேர்க்கும். ஸ்பென்சர் ஜான்சன் ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயம் செய்வாரா மாவி?
லக்னோ சூப்பர் ஜெயிட்ஸ் அணி ஏலத்தில் ஷிவம் மாவியை ரூ.6.4 கோடி கொடுத்து வாங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியது. இந்த சீசனில் மாவியின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கும், பிற அணியின் பேட்டர்களுக்கு எந்த அளவுக்கு சிம்மசொப்னமாக மாறும் என்பது எதிர்பார்ப்பு.
டெல்லி கேபிடல்ஸ் நிலை என்ன?
டெல்லி கேபிடல்ஸ் அணி, மார்க்கெட் இழந்த ஹேரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஹை ரிச்சர்ட்சன், ஷாய் ஹோப் ஆகியோரின் வருகையும் டெல்லி அணிக்கு வலு சேர்க்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.
பந்துவீச்சில் அதிக கவனம்
ஆர்சிபி அணி இந்த ஏலத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோஸப்பை ரூ.11 கோடிக்கு வாங்கி பந்துவீச்சை பலப்படுத்த முயன்றுள்ளது. இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாலை ரூ.5 கோடிக்கு வாங்கி பந்துவீச்சு மீது கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதபோல நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஷன் வருகையும் ஆர்சிபிக்கு கூடுதல் பலத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சன்ரைசர்ஸ் அணியின் நிலைமை என்ன?
சன்ரைசர்ஸ் அணி எப்போதுமே இளைஞர்கள் மீது அதிக கவனத்தைச் செலுத்தும். இந்த முறை ரூ.20 கோடிக்கு பாட் கம்மின்ஸை வாங்கியுள்ளது. உலகக் கோப்பையில் பட்டையக் கிளப்பிய டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கும், ஹசரங்கா ரூ.1.50 கோடிக்கும், உனத்கட் ரூ.1.60 கோடிக்கும் வாங்கியுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் பேட்டர்களைவிட, பந்துவீச்சாளர்களே அதிகம் இருப்பதால், யாரைத் தேர்ந்தெடுத்து விளையாட வைக்கப்போகிறது, ப்ளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
40 வயது கடந்தும் தோனி விளையாடுவாரா?
ஐபிஎல் தொடரில் உள்ள ஒவ்வொரு அணியிலும் ஐகான் வீரர்களைத் தவிர 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள், விளம்பு நிலை வீரர்கள் அதாவது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடும் வீரர்கள், சில சீசன்களாக திறமையை வெளிப்படுத்தாத வீரர்களுக்கு இந்தத் சீசன் கடைசியாக இருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
40 வயதைக் கடந்தாலும் தோனிக்கு இருக்கும் பிராண்ட் மதிப்பு, விளம்பரம், வர்த்தகரீதியான மதிப்பு ஆகியவை அவரை இன்னும் விளையாட வைக்கலாம். அதேபோல கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தாலும், ரசிகர்களின் மத்தியில் இருக்கும் வரவேற்பால், இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடலாம். ஆனால், இவை அனைத்துமே கணிப்பாகத்தான் இருக்குமே தவிர நிதர்சனத்தில் ஏதும் மாறலாம்.
ஐபிஎல் தொடரை வைத்து வீரர்கள் இந்திய அணிக்குள், அல்லது பிற அணிகளுக்குள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா என்ற கேள்விக்கு விளையாட்டுத்துறை மூத்த பத்திரிகையாளர் முத்து குமார் பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் “ ஐபிஎல் தொடர் என்பது முழுமையான வர்த்தக நோக்கோடு நடத்தப்படும் தொடர். இதை வைத்து ஒவ்வொரு நாட்டு அணியும், பிசிசிஐ நிர்வாகமும் வீரர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால் அணிக்குள் வந்திருக்கலாம். ஆனால், இது அளவுகோலாக கருத முடியாது” எனத் தெரிவித்தார்.
ஐகான் வீரர்களுக்கு வயதாகிவிட்டதால் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்களா என்று கேட்டபோது “ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத வெளிநாட்டு வீரர்கள், வயது காரணமாக ஆண்டுதோறும் வீரர்கள் செல்வது இயல்புதான். ஆனால், இதில் தோனி, கோலி, ரோஹித் சர்மா, ஷகர் தவண் இவர்களைக் கணக்கில் சேர்க்க முடியாது. இதில் இஷன் கிஷன், ரிஷப் பந்த் ஆகியோரும் வருவார்கள்.
"இவர்கள் மீது கோடிக்கணக்கான முதலீடுகளை விளம்பர நிறுவனங்கள் செய்துள்ளன. இவர்களே நினைத்தாலும்கூட ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு இவர்கள் மீது பிராண்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐபிஎல் கட்டமைப்பும் ஒரு காரணம்,” என்றார் முத்துக்குமார்.
"ஐபிஎல் முழுக்க முழுக்க வணிக ரீதியில்தான் நடத்தப்படுகிறது. அணிகளின் நிர்வாகங்களுக்கு லாபம்தான் முழுமையாக நோக்கமாக இருக்கிறது,” என முத்துக்குமார் தெரிவித்தார்.
‘தோனி நினைத்தாலும் ஓய்வு பெற முடியாது’
தோனி, கோலி, ரோஹித் சர்மாவுக்கு வயதாகிவிட்டதால் அவர்களுக்கு இந்தத் தொடர் கடைசியாக இருக்குமா என்று கேட்டபோது, “ தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் ஐகான் வீரர்கள். இவர்கள் மீது வர்த்தகரீதியான அழுத்தம் விழுந்துள்ளது. ஆதலால், ஓய்வு என்பது ஐகான் வீரர்களின் தனிப்பட்ட முடிவு இல்லை என்பது என்னுடைய கருத்து,” என்றார் முத்துக்குமார்.
“ஆதலால், தோனி, ரோஹித், கோலி ஆகியோர் இன்னும் சில ஆண்டுகள்கூட விளையாடலாம்,” என்கிறார் அவர்.
மேலும், “விளம்பு நிலை வீரர்கள், ஐபிஎல் தொடரை மட்டுமே நம்பி இருக்கும் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இந்தத் தொடரில் சரியாக விளையாடாவிட்டால் அடுத்த சீசனில் நீக்கப்படலாம். குறிப்பாக ஆந்த்ரே ரஸல், சுனில் நரேன், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, பியூஷ் சாவ்லா, ஷமி, மணிஷ் பாண்டே, ஆகியோர் வயது காரணமாகவும், உடற்தகுதி காரணமாகவும் அடுத்தசீசனில் காணாமல் போகலாம் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால், ஐகான் வீரர்களுக்கான மார்க்கெட் இருக்கும்வரை ஐபிஎல் தொடரில் விளையாடலாம்,” எனத் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












