ஜைனப்: இஸ்லாமிய வரலாற்றில் செல்வாக்குமிக்க ராணி, மந்திரவாதி என அழைக்கப்பட்டது ஏன்?

ஜைனப்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்

சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில், வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு பள்ளியின் புகைப்படத்தின் மீது அரபு மொழியில் எழுதப்பட்ட வார்த்தைகள் என்னை கவனிக்க வைத்தது.

இந்த மொழியைப் பற்றி ஓரளவு அறிந்திருப்பதால், இந்த வார்த்தைகள் என்னவென்று தெரிந்தது. அதில், 'ஜைனப் அல்-நஃப்சாவியா - பெண்களுக்கான மேல்நிலைப் பள்ளி' என எழுதப்பட்டிருந்தது.

அருகிலுள்ள பலகையில் உள்ள புகைப்படத்திலிருந்து, 1009 முதல் 1106 வரை வாழ்ந்த இந்த ராணி, யூசுப் பின் தாஷ்ஃபினின் மனைவி என்பது தெரியவந்தது. தத்துவஞானியும் வரலாற்றாசிரியருமான இபின் கல்தூனின் கூற்றுப்படி, “அவருடைய அழகு மற்றும் தலைமைத்துவத்திற்காக உலகம் முழுவதும் பிரபலமான பெண்களில் ஒருவராக" அறியப்படுகிறார்.

பாரம்பரிய நீல தலைப்பாகை அணிந்த, எளிய பாலைவனம் மற்றும் பெர்பர் இனத்தின் சிறந்த தளபதியின் ராஜ்ஜியம், ஆப்பிரிக்காவின் சிறிய மற்றும் பாதுகாப்பற்ற பகுதியிலிருந்து இன்றைய மொராக்கோ, அல்ஜீரியா மற்றும் ஸ்பெயினின் பகுதிகள் வரை பரவியது என்று யூசுப் பின் தாஷ்ஃபீனைப் பற்றி படித்திருக்கிறேன்.

இபின் கல்தூன் ஜைனபின் தலைமைத்துவத்தைப் பற்றிப் பேசியதால், அவர் குறித்தத் தகவல்களைப் பெற விரும்பினேன். இஸ்லாமிய வரலாற்றின் புகழ்பெற்ற பெண் தலைவரான ஜைனப் அல்-நஃப்ஸாவியாவின் வாழ்க்கையை அறியும் எனது பயணத்தில் கிடைத்தவற்றை இங்கு தருகிறேன்.

மொராக்கோ எழுத்தாளர் ஃபாத்திமா மர்னிஸ்ஸி தனது 'ஃபார்காட்டன் குயின்ஸ் ஆஃப் இஸ்லாம்' (Forgotten Queens of Islam) புத்தகத்தில் அந்த ராணிக்கு முக்கிய இடம் அளித்துள்ளார்.

1061 மற்றும் 1107-க்கு இடையில் வட ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயின் வரை பரவிய மிகப் பெரிய ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக ஜைனாப் அல்-நஃப்ஸாவியா இருந்தார். மேலும் அவர் தன் கணவர் யூசுப் பின் தாஷ்ஃபினுடன் ஆட்சி செய்தார்.

வரலாற்றாசிரியர்கள் ஜைனப்பை 'அல்-குய்மா பம்லகிஹி' என்று அழைத்தனர், அதாவது, அவரது கணவரின் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர் அல்லது அதை இயக்கும் முக்கிய கதாபாத்திரம் என இதற்கு அர்த்தம்.

ஜைனப் அல்-நஃப்ஸாவியா

பட மூலாதாரம், @ERIC_CALDERWOOD/X

புத்திசாலி ஆலோசகர்

ஜைனப் தென்னாப்பிரிக்க பழங்குடியினமான நஃப்சாவாவைச் சேர்ந்த பணக்கார தொழிலதிபரின் மகள். அவர் அக்மட்டில் (மொராக்கோ நகரம்) பிறந்தார், அங்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார்.

அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு அவர் ஆப்பிரிக்க அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்டார். அப்பெண், மருத்துவ மூலிகைகள் குறித்து ஜைனபுக்கு கற்றுக் கொடுத்தார்.

இபின் கல்தூனின் கூற்றுப்படி, அவர் அகமத்தின் அமீர் (தலைவர்) லகுத் அல்-முக்ராவியை மணந்தார். லகுத் ஒரு போரில் கொல்லப்பட்டதையடுத்து அவரது செல்வங்கள் ஜைனபிற்கு சென்றது.

அவர் அல்-முராவி அபுபக்கர் இப்னு உமரை இரண்டாவதாக மணந்தார்.

பழங்குடியினரின் கிளர்ச்சியை நசுக்க அபுபக்கர் தெற்கே பாலைவனத்திற்குச் சென்றபோது, ​​​​அவர் வெளியேறும் முன் மேற்கில் தனது படைகளின் பிரிவை அவரது உறவினர் யூசுப் பின் தாஷ்ஃபினுக்கு வழங்கினார். நீடித்த போரின் அச்சம் காரணமாக, அவர் ஜைனபை விவாகரத்து செய்தார்.

இத்தாத் (விவாகரத்துக்குப் பிறகு தடை செய்யப்பட்ட காலம்) முடிந்த பிறகு யூசுப்பை ஜைனப் மணந்தார். யூசுப்பின் வாழ்க்கைத் துணையாக மட்டுமல்ல, புத்திசாலித்தனமான ஆலோசகராகவும் மாறினார் ஜைனப்.

அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து அல்ஜீரியா, செனகல் மற்றும் முஸ்லிம் ஸ்பெயினுக்கு அப்பால் பரவிய இந்த மாபெரும் அல்-முராவி சுல்தானகத்தின் அடித்தளம் யூசுப்பின் ராணுவத் திறனால் அமைக்கப்பட்டது.

மறுபுறம், ஜைனபின் அறிவுரையும் அரசியல் புரிதலும் இதில் முக்கிய பங்களிப்பைக் கொண்டிருந்தது.

இப்னு அசாரி, அல்-பக்ரி மற்றும் இபின் கல்தூன் உட்பட பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஜைனப் மிகவும் அழகாகவும், ஆற்றல் நிரம்பியவராகவும், வழக்கத்திற்கு மாறாக திறமையானவராகவும் இருந்தார்.

கொள்கை விஷயங்களில் அவருக்கு விரிவான அறிவு இருந்தது. இந்த காரணத்திற்காக வரலாற்றாசிரியர்கள் அவரை 'மந்திரவாதி' என்று அழைத்தனர்.

ஜைனப் அல்-நஃப்ஸாவியா

பட மூலாதாரம், GETTY IMAGES

யூசுப் பின் தஷ்ஃபீனின் படையை தயார் செய்ய உதவி

மேற்கு ஆப்பிரிக்காவில் பதினோராம் நூற்றாண்டின் சிறந்த ஆளுமைகளில் ஒருவராக ஜைனபை குறிப்பிடுகிறார் வரலாற்றாசிரியர் இபின் ஹவ்கல். அரசியல் விஷயங்களைப் பற்றிய விரிவான அறிவின் காரணமாக, அவர் இடைக்கால 'மக்ரிப்' வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தார்.

மக்ரிப் என்பது அரபு உலகின் மேற்குப் பகுதி, இது 'அரபு மக்ரெப்' என்றும் அழைக்கப்படுகிறது. இது அல்ஜீரியா, லிபியா, மொரிட்டானியா, மொராக்கோ மற்றும் துனிசியா மற்றும் மேற்கு சஹாராவின் சர்ச்சைக்குரிய பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு மற்றும் மத்திய-வட ஆப்பிரிக்காவின் பகுதி.

வெற்றியைத் தொடர யூசுப்பிடம் வலுவான படை இல்லை. ரிச்சர்ட் சி. பேனலின் கூற்றுப்படி, ஜைனப் தனது செல்வத்தை யூசுப்பிற்கு ராணுவத்தை மறுசீரமைப்பதற்காக கொடுத்தார். மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து வரிகளை வசூலிக்கும்படி அவருக்கு அறிவுறுத்தினார்.

இதன்மூலம் பல்வேறு குழுக்களை இணைத்து படையை தயார் செய்தார்.

ஜைனபின் உத்தரவின் பேரில், யூசுப் மேற்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றியதாகவும், ஜைனப் பேச்சுவார்த்தை நடத்தும் வேலையைச் செய்ததாகவும் இப்னு அபி-ஸார் தனது 'ரௌஸ் அல்-கர்தாஸ்' புத்தகத்தில் எழுதுகிறார். பேச்சுவார்த்தையில் நிபுணத்துவம் பெற்றதால் அவர் 'மந்திரவாதி' என்றும் அழைக்கப்பட்டார்.

மர்ரகேஷ் (மொராக்கோ) நகரத்தை யூசுப் கட்டினார். இது வளர்ந்து வரும் நாட்டின் தலைநகராக மாறியது. ஜைனப் தான் இந்த இடத்தை தேர்வு செய்ய பரிந்துரைத்ததாக தெரிகிறது.

இந்தப் புதிய தலைநகரம் ஜைனப் வசிக்கும் இடத்திலிருந்து வெகு தொலைவில் இல்லை. பல இடங்களில் அவருக்காக 'கஸ்ர் அல்-ஹஜ்ர்' (கல் கோட்டை) கட்டப்பட்டதாகவும், யூசுப் அவர்களே தனது கைகளால் அதன் கட்டுமானத்திற்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.

ஜைனப் அல்-நஃப்ஸாவியா

பட மூலாதாரம், @ERIC_CALDERWOOD/X

திரும்பி வந்த இரண்டாவது கணவர் அபுபக்கர்

அபுபக்கர் இப்னு உமர், தான் போரில் இருந்து திரும்பியதை தனது உறவினர் யூசுப்பிற்கு தெரிவித்தார். நிச்சயமாக அவர் தனது அதிகாரத்தையும் மனைவியையும் திரும்பப் பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.

அபுல் ஹசன் இபின் அபு ஜஹர் அல்-ஃபாஸி, ஜைனப் தலையிட்டு, கானாவின் கறுப்பினக் காவலர்களுடன் அபுபக்கரை வரவேற்கும்படி யூசுப்பை அறிவுறுத்தினார் என்று எழுதுகிறார்.

யூசுப் குதிரையில் அமர்ந்து அவரை ஒரு ராஜா போல வரவேற்றார், பல பரிசுகளையும் வழங்கினார்.

இத்தகைய செல்வத்தைக் கண்டு வியந்த அபுபக்கர், யூசுப்பின் பெருந்தன்மைக்கான காரணத்தைக் கேட்டதற்கு, "புதிய சாகசங்கள் உனக்காகக் காத்திருக்கும் பாலைவனத்தில் எதையும் தவறவிடக் கூடாது என்பதற்காகத்தான்" என்று பதிலளித்தார்.

அபுபக்கர் இந்தச் செய்தியின் பொருளைப் புரிந்துகொண்டு, பரிசுகளை ஏற்றுக்கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று நம்பினார்.

அக்மத்தில் சிறிது காலம் தங்கிய பிறகு, அவர் அதிகாரத்தை மாற்றுவதற்கான ஆவணத்தை எழுதினார். மேலும் அவர் கானா மற்றும் சூடானின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய பாலைவனத்தை நோக்கி நகர்ந்தார்.

இதற்குப் பிறகு, அல்-முராவி 1087-ல் இறக்கும் வரை சுல்தானகத்தின் அதிகாரபூர்வ தலைவராக இருந்தார்.

ஜைனப் அல்-நஃப்ஸாவியா

பட மூலாதாரம், GETTY IMAGES

பெண்களுக்கு உரிய இடம் கொடுப்பதில் ஜைனபின் பங்கு

யூசுப் பின் தாஷ்ஃபின் 'மக்ரிபின்' மறுக்கமுடியாத ஆட்சியாளராகவும், ஒரு பெரிய சுல்தானகத்தின் உரிமையாளராகவும் ஆனார். சார்லஸ் நோயலின் கூற்றுப்படி, ஜைனபின் சக்திவாய்ந்த செல்வாக்குக்குப் பின்னால் பல காரணிகள் இருக்கலாம்.

முதலாவதாக, ஜைனப் கல்வி கற்றார் மற்றும் யூசுப்பின் குறைந்த அரபு அறிவு ஜைனபிற்கு ஒரு நன்மையைக் கொடுத்தது.

இரண்டாவதாக, ஜைனப் தனது ஆளுமை வலிமை மற்றும் முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றில் கணவரின் நம்பிக்கையால் அரசியல் செல்வாக்கு பெற்றார்.

மூன்றாவது காரணி, யூசுப் இல்லாத நேரத்தில் அவர்களைச் செயல்பட அனுமதித்த ராணுவப் பிரசாரங்களாக இருக்கலாம்.

அல்-முராவி சுல்தானகத்தில் பெண்களின் நிலையை பெரிதும் பாதித்த குடும்பத்தையும் அதன் சடங்குகளையும் உருவாக்க ஜைனப் உதவினார்.

அவர்களின் சொந்த மரபுகளின்படி, அல்-முராவி வம்சத்தின் போது மொராக்கோவில் பெண்கள் உயர் பதவியில் இருந்தனர்.

இளவரசி நிர்வாக விஷயங்களில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். இதன் மூலம் பெண் கல்வி பொதுவானதாக மாறியது.

அலிசன் பேக்கரின் கூற்றுப்படி, குறைந்தது இரண்டு பெண்கள் மருத்துவர்களாக இருந்ததாக நம்பப்படுகிறது. இதேபோல், இளவரசி ஃபினு 1147-ல் அரச குடும்பத்தின் வீழ்ச்சியின் போது தலைநகரின் பாதுகாப்பில் பங்கேற்றார்.

சமீபத்திய தசாப்தங்களில், ஜைனப் அல்-நஃப்சாவியாவின் வாழ்க்கை தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பேசப்படுகிறது. ஆனால் அவரது பாரம்பரியத்தின் நீடித்த தன்மை பெண்கள் கல்வி கற்கும் பள்ளிகளில் பிரதிபலிக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)