முகத்தை அழகாக்க 'ஸ்மைல் கரெக்சன்' சிகிச்சை செய்த ஆந்திர இளைஞர் உயிரிழப்பு - என்ன காரணம்?

பட மூலாதாரம், UGC
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
சமீபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த விஞ்சம் லக்ஷ்மிநாராயணா என்ற இளைஞர் ஸ்மைல் டிசைனிங் சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பலரும் அறிந்திராத இந்த ஸ்மைல் டிசைனிங் சிகிச்சை என்பது பல் மருத்துவர்கள் அல்லது அதற்கென்று தனியாக இயங்கி வரும் மருத்துவ மையங்களில் செய்யப்படும் ஒன்றாகும்.
ஆனால், இதனால் ஒருவர் உயிரிழக்கும் அளவிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதா? இது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? இதன் வழிமுறைகள் மற்றும் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்மைல் சர்ஜரி
உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரியான உடலமைப்பை கொண்டவர்கள் அல்ல. அப்படிதான் அவர்களின் பல்லின் வடிவமைப்பும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பல்வரிசை அல்லது பற்கள் இருப்பதில்லை. சொல்லப்போனால் ஒரே நபரின் பற்களே ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை.
ஆனால், ஒரு மனிதனுக்கு முகம் எப்படி முக்கியமோ அதே போல் பல்வரிசையும் மிக முக்கியம். உணவு உண்ணுதல் உள்ளிட்ட முக்கியமான பணிகளையும் தாண்டி மனிதர்களின் புன்னகையை தீர்மானிப்பதில் அவை காரணமாக இருக்கின்றன.
ஆனால், ஒரு சிலரின் பல்வரிசை அமைப்பின் காரணமாக அவர்கள் எதிர்பார்க்கும் முகத்தோற்றம் கிடைக்கவில்லை என்பதற்காக அவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் மூலம் அதை மாற்றியமைத்து கொள்கின்றனர். அப்படியான ஒரு சிகிச்சைதான் ஸ்மைல் சர்ஜரி.
ஆனால், இதன் பெயர் உண்மையில் ஸ்மைல் கரெக்சன் (Smile Correction) சிகிச்சை என்று கூறுகிறார் பல் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஆர்.ஜெய பிரசன்னா.
“இதில் அறுவைசிகிச்சையை போல வலி, குணமாகும் காலம் உள்ளிட்டவை இருப்பதால் இது சர்ஜரி என்றும் அழைக்கப்படுகிறது. பழைய வழக்கப்படி பற்களில் பிரேஸ்கள்(Braces) அமைத்து பல் அமைப்பை சரிப்படுத்த ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும். ஆனால், தற்போதைய ஸ்மைல் கரெக்சன் சிகிச்சையின் மூலம் குறைந்தது 1 வாரம் முதல் அதிகபட்சம் 3 மாதங்களில் இதை சரி செய்ய முடியும்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், R.JEYA PRASANNA
ஸ்மைல் கரெக்சன் என்றால் என்ன?
ஸ்மைல் கரெக்சன் என்பது, சிகிச்சை மூலம் உங்களது பல்அமைப்பை உங்கள் விருப்பத்தேர்வுக்கு ஏற்றவாறு மாற்றுதலே ஆகும். பல் அமைப்பு ஒழுங்காக இல்லாதவர்கள், கூடுதல் முக அழகுத்தோற்றத்தை விரும்புபவர்கள், இயற்கையாக பிரச்னை உள்ளவர்கள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் இதை செய்துகொள்ளலாம்.
ஆனால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுவதாக கூறுகிறார் மருத்துவர் ஜெய பிரசன்னா.
அடிப்படையாக இந்த சிகிச்சையில் டீத் வொயிட்டனிங்(teeth whitening) எனப்படும் பற்களை சுத்தப்படுத்தும் முறை, காம்போஸிட் வெனீர்ஸ்(Composite veneers, porcelain veneers) எனப்படும் ஒழுங்கில்லாத பற்களின் வரிசை அமைப்பை சரிப்படுத்தும் முறை, கிரௌன்ஸ் & பிரிட்ஜஸ் (Crowns & Bridges), டென்டல் இம்பிளான்ட் (Dental Implant) உள்ளிட்ட பல்வேறு முறைகள் உள்ளதாக குறிப்பிடுகிறார் மருத்துவர்.
“ஸ்மைல் கரெக்சன் என்பது வெறும் பற்களோடு மட்டும் தொடர்புடையது அல்ல. ஈறுகளை மறுவடிவமைப்பு செய்வதற்கான தேவைகளும் ஏற்படும் என்பதால் அதற்கான சிகிச்சைகளும் இதில் உள்ளது.”

பட மூலாதாரம், SPOORTHI ARUN
அனஸ்தீசியா எப்போது தேவைப்படும்?
பொதுவாக அறுவைசிகிச்சைகளின் போது, அறுவை சிகிச்சை செய்யப்படும் நபருக்கு அனஸ்தீசியா என்று அழைக்கப்படும் மயக்கமருந்து அளிக்கப்படும். இதில் குறிப்பிட்ட இடத்தை மட்டும் மரத்து போக செய்யும் லோக்கல் அனஸ்தீசியாவில் தொடங்கி, அந்த நபரை முழுமையாக மயக்க நிலையில் ஆழ்த்தும் தீவிரமான அனஸ்தீசியாக்கள் வரை உள்ளது.
ஆனால், ஸ்மைல் கரெக்சன் சிகிச்சை உள்ளிட்ட பெரும்பாலான பல் சிகிச்சைகளுக்கு பொதுவாகவே லோக்கல் அனஸ்தீசியாவே வழங்கப்படும் என்று கூறுகிறார் மருத்துவர் ஜெய பிரசன்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பற்களை சுத்தப்படுத்தும் செயல்முறைக்கு அனஸ்தீசியா தேவைப்படாது. ஆனால், வெனீர் செயல்முறை அல்லது டென்டல் இம்ப்ளான்ட் என்ப்படும் செயற்கைப் பல் பொருத்தும் செயல்முறையின் போது லோக்கல் அனஸ்தீசியா வழங்கப்படும்.”
“காரணம் வெனீர் சிகிச்சையில் ஒழுங்கில்லாத பல்லின் ஒரு பகுதியை எடுத்துவிட்டு அதில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பல் போன்ற அமைப்பை பொருத்துவோம். டென்டல் இம்ப்ளான்ட் முறையில் குறிப்பிட்ட பல்லை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஸ்க்ரூ பதித்து செயற்கை பல்லை பொருத்துவோம். எத்தனை பல் என்பதை பொறுத்து எவ்வளவு அனஸ்தீசியா என்பது தீர்மானிக்கப்படும். உதாரணத்திற்கு ஒரு இம்ப்ளானட் செயல்முறைக்கு 2.5மிலி அனஸ்தீசியா கொடுக்க வேண்டும்” என்கிறார் அவர்.
இதை பல் மருத்துவரே பரிந்துரைக்கலாம். ஆனால், ஜெனரல் அனஸ்தீசியா என்று வரும்போது அதற்கான நிபுணர் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர்.

பட மூலாதாரம், Getty Images
சிகிச்சையை பொறுத்து மாறும்
ஒரு நபருக்கு எந்தளவிற்கான சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை பொறுத்து என்ன மாதிரியான அனஸ்தீசியா கொடுக்க வேண்டும் என்பது தீர்மானிக்க படும் என்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.
“உதாரணத்திற்கு சிறிய அளவிலான சிகிச்சை என்று வரும்போது அவருக்கு லோக்கல் அனஸ்தீசியா போதுமானது. அதை பல் மருத்துவரே வழங்கலாம். இதுவே தாடை எலும்பு வரை சிலருக்கு சிகிச்சை தேவைப்படும். அப்போது அனஸ்தீசியா நிபுணர் பரிந்துரைப்படி அதற்கேற்ற வகை அனஸ்தீசியா வழங்கப்படும்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், UGC
விஞ்சம் லக்ஷ்மிநாராயணா இறந்து எப்படி?
பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர்கள் இருவரின் கூற்றுப்படியும் இந்த சிகிச்சையானது அரிதான வகையிலேயே பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்று தெரிவிக்கிறார்கள். ஆனால், அரிதிலும் அரிதான வழக்குகளில் இது போன்று இறப்புகள் நிகழலாம் என்று கூறுகிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.
விஞ்சம் லக்ஷ்மிநாராயணாவுக்கு சிகிச்சை அளித்த எப்எம்எஸ்(FMS) பல் மருத்துவமனை மருத்துவர்களின் தகவலின்படி, “சம்பந்தப்பட்ட நபர் ஒரு வருடத்திற்குள் வேறு மருத்துவமனையில் ரூட் கெனால் சிகிச்சை எடுத்துள்ளார். அங்கு கண்டிப்பாக அவருக்கு அனஸ்தீசியா வழங்கப்பட்டிருக்கும். எனவே அவருக்கு எதுவும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பில்லை என்று மிக குறைந்த அளவில் இரண்டு தவணையாக 1.1மிலி அளவு அனஸ்தீசியாவே வழங்கினோம்” என்று கூறியுள்ளனர்.
ஆனால், சம்மந்தப்பட்ட நபருக்கு முந்தைய சிகிச்சையில் அலர்ஜி ஏற்படவில்லை என்றாலும், இந்த முறை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பல்ஸ் ஹார்ட் சென்டர் மருத்துவர் ஏ.எஸ். முகர்ஜி மடிவாடா, எம்.டி.
இதே கருத்தை தெரிவித்த ஸ்பூர்த்தி அருண், இந்த வழக்கில் சிகிச்சை பெற்றவருக்கு அலர்ஜி ஏற்பட்டு அவர் இறந்துள்ளதற்கு வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். அனாபிலாக்ஸிஸ் எதிர்வினையால் அவர் இறந்திருக்கலாம் என்கிறார் அவர். இந்த எதிர்வினையால் உங்கள் தொண்டைப்பகுதி முழுமையாக மூடிக்கொள்ளும். இதனால் உங்களது சுவாசப்பாதைகளும் அடைத்துக்கொள்ளும். இது தீவிரமாகி உங்களை இறக்க செய்யலாம். ஆனால் இது அரிதிலும் அரிது என்றே அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பாதிப்பை தடுப்பது எப்படி?
இது குறைந்தளவிலான அறுவை சிகிச்சை முறை கொண்ட சிகிச்சை என்பதால் இதில் பெரியளவிலான பக்க விளைவுகள் ஏற்படாது. சரியான வழிமுறைகளை பின்பற்றி, தேவையான அமர்வுகள் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துகொண்டலே இது பாதுகாப்பானதாக இருக்கும் என்கிறார் மருத்துவர் ஜெய பிரசன்னா.
ஆனால், உடனே எனக்கு முடிவுகள் வேண்டும் என்று அவசரப்பட்டு சிகிச்சையை வேகமாக முடிக்க நினைத்தால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.
எந்த சிகிச்சையாக இருந்தாலும் ஏதோ ஒரு பக்க விளைவு இருக்கிறது. குறிப்பிட்ட சிகிச்சையால் என்ன ஏற்படும் என்பதை மருத்துவர்கள் சிகிச்சைக்கு முன்னரே நோயாளிகளுக்கு விளக்கி விடுவார்கள். எனவே முடிவெடுப்பதற்கு முன்பு இது கட்டாயம் அவசியமா என்பதை நோயாளிகள் முடிவு செய்வது நல்லது என்கிறார் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்.
இந்த சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகிறது?
பொதுவாகவே அழகு சார்ந்த சிகிச்சைகளுக்கு பெரியளவில் பணம் செலவு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் இந்த ஸ்மைல் கரெக்சன் சிகிச்சையும் காஸ்மட்டிக் வகையில் தான் வருகிறது.
எத்தனை பற்களை சரி செய்கிறோம் அல்லது என்ன அளவிலான சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தே இதற்கான கட்டணம் என்ன என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், இதற்கான செல்வது ரூ. 10000 முதல் லட்சங்கள் வரை ஆகலாம் என்று கூறுகிறார் ஜெய பிரசன்னா.

பட மூலாதாரம், Getty Images
சர்க்கரை நோயாளிகள் செய்து கொள்ள முடியுமா?
ஸ்மைல் கரெக்சன் செய்து கொள்ள விரும்பும் நபர்கள் யார் வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், இதுவே சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் எனும்போது அவர்களின் சர்க்கரை அளவோ அல்லது ரத்த அழுத்தமோ கட்டுக்குள் இருக்க வேண்டும். அதற்கான பரிசோதனைகள் எடுக்கப்படும். அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கான சிகிச்சையும் வழங்கப்படும் என்று கூறுகிறார் மருத்துவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












