'கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை டிவி பார்த்தே அறிந்து கொண்டேன்' - இந்திய கடற்படை வீரரின் சிறை அனுபவம்

 இந்திய கடற்படை வீரர்கள்
    • எழுதியவர், ராஜேஷ் டோப்ரியல்
    • பதவி, பிபிசி இந்தி

கத்தாரில் தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை செய்தி சேனல் மூலம் பார்த்து தான் தெரிந்து கொண்டதாகவும் சிறையில் தனிமையில் இருப்பது தான் ஒருவருக்கு வழங்கப்படும் மிகவும் கடினமான தண்டனை எனவும் கூறுகிறார் கேப்டன் வஷிஷ்தா.

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய எட்டு இந்திய கடற்படை வீரர்களில் ஒருவர் கேப்டன் சௌரப் வஷிஷ்தா. பிபிசிக்கு அளித்த நேர்காணலில் கத்தாரில் நடைபெற்றது குறித்து விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

பள்ளிப்படிப்பை முடித்து இந்திய கடற்படையில் பொறியாளராகச் சேர்ந்த கேப்டன் சௌரப் வஷிஷ்தா 26 வருடங்கள் பணியாற்றினார். இந்திய கடற்படையிலிருந்து 2018ம் ஆண்டு விருப்ப பணி ஓய்வு பெறும் போது, பிரிகேடியருக்கு இணையான கமோடர் பதவியில் இருந்தார். பின், 2019ம் ஆண்டு கத்தாரில் வேலை கிடைத்து அங்கு பணியாற்ற தொடங்கினார்.

2022ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி அவரும் வேறு சிலரும் கத்தாரில் திடீரென்று கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பிறகு அந்த தண்டனை குறைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நாளிலிருந்து விடுவிக்கப்படும் வரை கேப்டன் சௌரப் வஷிஷ்தா 17 மாதங்கள் கத்தார் சிறையில் இருந்துள்ளார்.

 இந்திய கடற்படை வீரர்கள்

பட மூலாதாரம், CAPTAIN (RETD) SAURABH VASHISHTHA

"ஏன் கைது செய்யப்பட்டோம் என இப்போதும் தெரியவில்லை"

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தாஹ்ரா குளோபல் என்ற நிறுவனத்தில் வஷிஷ்தா பணிபுரிய ஆரம்பித்தார். அவர் கத்தார் சென்று ஆறு மாதங்கள் கழித்து அவரது மனைவியும் இரண்டு மகள்களும் கூட கத்தார் வந்தடைந்தனர்.

பிறகு அவரது மனைவிக்கு கத்தாரில் சுகாதாரத்துறை சார்ந்த பணி கிடைத்தது. அவரது மகள்களும் அங்கே பள்ளிப்படிப்பை மேற்கொண்டு வந்தனர். 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இது தான் கேட்டன் வஷிஷ்தாவின் வாழ்க்கையாக இருந்தது.

அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி கைது செய்யப்பட்டவர் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். தான் ஏன் கைது செய்யப்பட்டோம் என்று இப்போது வரை தெரியவில்லை என்கிறார் வஷிஷ்தா.

“எனது கைதுக்கான காரணம் குறித்து எனக்கு இப்போது கூட முழு தகவல் தெரியவில்லை” என்றார்.

கத்தாரில் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற நடைமுறைகளில் பங்கேற்றிருந்தாலும் கூட என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்கிறார் அவர். “நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தும் அரபி மொழியிலேயே நடைபெறும். எனவே என்ன நடக்கிறது என்பதே புரியாது” என்றார்.

வஷிஷ்தா தனது குடும்பத்தினரை அல்லது தூதரக அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்கப்பட்ட போது, என்ன நடக்கிறது என்பது பற்றி சில அடிப்படை தகவல்கள் மட்டுமே கிடைக்கும் என்கிறார்.

“பதினேழு மாதங்கள் ஏன் சிறையில் இருந்தேன் என இப்போதும் கூட தெரியவில்லை” என்கிறார் கேப்டன் சௌரப் வஷிஷ்தா. “அது மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவமாக இருந்தது. இப்போது விடுதலையாகி உள்ளோம் என்பது ஆறுதலாக இருக்கிறது. புதிய வாழ்க்கை கிடைத்தது போல் உள்ளது” என்றார்.

இந்திய கடற்படை வீரர்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நாடு திரும்பிய கேப்டன் சௌரப் வஷிஷ்தாவை குடும்பத்தினர் வரவேற்றனர்.

"மரண தண்டனை செய்தியை டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்"

2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்களுக்கு கத்தார் நீதிமன்றம் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி முன்னாள் மரண தண்டனை விதித்தது. கேப்டன் சௌரப்க்கு அதற்குள் தொலைக்காட்சி வசதி வழங்கப்பட்டிருந்தது. மரண தண்டனை விதிக்கப்பட்டதை இந்திய செய்தி சேனல்களை பார்த்தே தெரிந்து கொண்டதாக அவர் தெரிவிக்கிறார்.

“நாங்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் போது இருந்தோம். ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அரபி மொழியிலேயே நடைபெறும். அதுவும் வேகமாக பேசுவார்கள். எனவே எதுவும் புரியவில்லை. ஏதோ குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு விட்டதால், நாட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் அல்லது சிறிது காலம் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தான் நினைத்திருந்தேன்."

"அன்று மாலை செய்தி சேனல்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்திய செய்திகளை வழங்கும் ஒரே ஒரு சேனல் மட்டுமே அங்கு பார்க்க முடியும். மாலை 6.30 மணியளவில் செய்திகளை பார்க்கும் போது தான், எங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதே தெரிந்தது. எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. எங்களால் நம்பவே முடியவில்லை. என்ன நடக்கிறது, ஏன் மரண தண்டனை விதிக்கப்பட்டது என புரியவே இல்லை. மரண தண்டனை விதிக்கப்படும் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை” என்றார்.

தான் சிறையில் இருந்த காலத்தில் பெரும்பாலும் தனியாகவே கழித்ததாக கேப்டன் சௌரப் கூறுகிறார். சில காலம் மட்டுமே ஒரே அறையில் இருவர் இருந்ததாக கூறுகிறார்.

“தனியாக இருப்பது தான் ஒருவருக்கு வழங்கப்படும் மிகவும் கடினமான வன்மையான தண்டனை என நினைக்கிறேன். விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டால் கூட பரவாயில்லை. ஆனால் ஒரு சிறு அறையில் தனியாக இருப்பது கொடுமை. என் எதிரிக்கு கூட அப்படி ஒரு தண்டனை கிடைக்கக் கூடாது. ஒருவரின் மனநிலையை தனிமை மிகவும் பாதித்து விடும்” என்றார்.

 இந்திய கடற்படை வீரர்கள்

பட மூலாதாரம், HARISH RAWAT/FB

படக்குறிப்பு, உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் கேப்டன் சௌரப் குடும்பத்தினரை நேரில் சந்தித்தார்.

"மன உறுதி தளராமல் இருந்தேன்"

கேப்டன் சௌரப், “நான் என் மன உறுதி தளராமல் இருக்க சில பழக்கங்களைக் கடைப்பிடித்தேன். நான் தினமும் பிரார்த்தனை செய்தேன். ஹனுமன் சலிசா தொடர்ந்து படித்து வந்தேன். பிறகு என் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசும் போது அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன். என் மனைவி என்னிடம் பேசும் போது எல்லாம் எதிர்மறையாக எதுவும் சிந்திக்கக் கூடாது என்று கூறுவார். நமது மகள்களை எண்ணி அவர்களுக்காக மீண்டும் வர வேண்டும் என்று ஊக்கமளிப்பார்” என்றார்.

அவரது தந்தையிடம் பேசியது எப்படி அவருக்கு மனஉறுதியைத் தந்தது என பகிர்ந்து கொள்கிறார் கேப்டன் சௌரப்.

“எனது பெற்றோர்களுடன் வாரத்தில் ஒரு முறை சிறிது நேரம் பேசுவேன். கடவுளின் இல்லத்தில் தாமதம் இருக்கலாம், ஆனால் இருள் இருக்காது என்பார். ஒவ்வொரு முறை போன் செய்யும் போதும், இதை அவர் கூறுவார். இந்த தாமதம் எப்போது முடியும் என்று நான் யோசிப்பேன். கடைசியாக அவருடன் பேசும் போது கடவுள் மீது நம்பிக்கைக் கொள், இந்த இருண்ட மேகங்கள் விலகிவிடும் என்று கூறினார். இவை எல்லாம் எனக்கு மனஉறுதியைக் கொடுத்தது” என்றார்.

“தினசரி வழக்கம் ஒன்றை கடைப்பிடித்தேன். தினமும் எட்டு முதல் ஒன்பது மணி நேரங்கள் பிரார்த்தனை செய்வேன். சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வேன், சிறிது நேரம் யோகாவும் தியானமும் செய்வேன். தொலைக்காட்சி வசதி கிடைத்தவுடன் இந்தி சேனல்கள், இந்தி திரைப்படங்கள் பார்ப்பேன். இந்தியா சம்பந்தமாக எதுவாக இருந்தாலும் பார்ப்பேன். அதை பார்க்கும் போது ஒரு நாள் அங்கே செல்வோம் என்ற நம்பிக்கை வரும். அந்த நாள் எப்போது வரும் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் நான் நம்பிக்கை இழக்காமல் இருந்தேன்” என்றார்.

 இந்திய கடற்படை வீரர்கள்

பட மூலாதாரம், CAPTAIN (RETD) SAURABH VASHISHTHA

“நான் திரும்பி வந்ததற்கு கடவுளுக்கு தான் முதலில் நன்றி. இருண்ட நாட்கள் அனைவர் விதியிலும் எழுதப்பட்டிருக்கும், ஆனால் அவை ஒரு நாள் முடிவுக்கு வரும்” என்றார் கேப்டன் சௌரப்.

கடவுளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்தார். “அவர் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நாங்கள் விடுவிக்கப்பட்டிருக்க மாட்டோம்” என்றார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், கத்தாரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் முயற்சிக்கு நன்றி தெரிவித்த அவர், தன் குடும்பத்துக்கு அவர்கள் அளித்த ஆதரவை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தார். கத்தாருக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் நல்ல உறவும் கூட கை கொடுத்தது என்கிறார்.

வெளிநாட்டில் இப்போது நல்ல வேலை கிடைத்தால் நீங்கள் செல்வீர்களா என்று கேட்டதற்கு, “இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் கூட நான் இந்தியாவிலேயே இருக்க விரும்புகிறேன். என் வாழ்க்கையில் நான் இழந்த ஒன்றரை ஆண்டு காலத்தை சமன் செய்ய நான் இந்தியாவிலேயே இருக்கப் போகிறேன், நான் வெளியே செல்ல விரும்பவில்லை” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)