கத்தார்: இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரின் குற்றத்தை கூறாமலே மரண தண்டனையா?

பகல சுகுணாகர்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, பகல சுகுணாகர் உள்ளிட்ட இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கு கத்தாரில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசிக்காக

உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் இந்திய கடற்படையின் எட்டு முன்னாள் ஊழியர்களுக்கு கத்தாரில் உள்ள கத்தார் முதன்மை நீதிமன்றம் அக்டோபர் 26 அன்று மரண தண்டனை விதித்தது. இவர்களில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பகல சுகுணாகரும் ஒருவர்.

கைது செய்யப்பட்டவர்களில், நவ்தேஜ் சிங் கில், சவுரப் வசிஷ்ட் மற்றும் பிரேந்திர குமார் வர்மா ஆகியோர் கேப்டன்களாகவும், பூர்ணேந்து திவாரி, அமித் நாக்பால், ராகேஷ் மற்றும் சுகுணாகர் ஆகியோர் தளபதிகளாகவும் பணிபுரிந்தனர்.

இவர்கள் அனைவரும் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இத்தாலியிடமிருந்து மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் கத்தாரின் ரகசியத் திட்டத்தின் விவரங்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் கைது செய்யப்பட்டதாக பகல சுகுணாகரின் உறவினர் கபூர் கல்யாண சக்ரவர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார்.

கபூர் கல்யாண சக்ரவர்த்தியின் சகோதரி முன்னாள் இந்திய கடற்படைத் தளபதி பகல சுகுணாகரை மணந்தார்.

சுகுணாகரின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாகப் பதிலளித்து சுகுணாகரையும் மற்ற ஏழு பேரையும் சேர்த்து விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும் கல்யாண சக்கரவர்த்தி கேட்டுக் கொண்டார்.

கத்தார் சிறையில் இருக்கும் சுகுணாகருடன் தனது சகோதரியைத் தவிர வேறு யாரும் பேச முடியாது என்றும் அவர் கூறினார்.

உண்மையில் பகல சுகுணகர் யார்? இந்த வழக்கின் மற்ற விவரங்கள் என்ன? இந்த வழக்கில் குடும்ப உறுப்பினர்களின் வாதம் என்ன? இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் கல்யாண சக்கரவர்த்தி மற்ற விவரங்களை விளக்கினார். கீழே தொகுக்கப்பட்டுள்ள அனைத்தும் அவருடைய சொற்களில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன.

சுகுணாகர் இந்திய கடற்படையில் விசாகப்பட்டினம், மும்பை மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் பணியாற்றினார். கடந்த 2013ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற சுகுணாகர், பின்னர் கத்தாரை சேர்ந்த அல் தஹ்ரா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோஹாவில் கைது செய்யப்பட்டார்.

அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் 7 பேருக்கு அக்டோபர் 26ஆம் தேதி மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் சுகுணாகர் உள்ளிட்ட 8 பேருக்கும் அவர்கள் மீதான குற்றச்சாட்டையே பகிரங்கமாக கூறாமல் மரண தண்டனை என்று அறிவிப்பது எந்த அளவுக்கு நியாயம்?

பகல சுகுணாகர்

பட மூலாதாரம், ANI

இந்த எட்டு பேரும் கத்தாரில் உள்ள அல் தஹ்ரா நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிறுவனம் கத்தார் கடற்படைக்கு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. இத்தாலிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் ரகசியத் திட்டத்திற்காக அல் தஹ்ரா நிறுவனம் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரை பணியமர்த்தியிருந்தது.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கடந்த ஆகஸ்ட் 30 அன்று கத்தாரின் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். அன்று இரவு அவர்கள் வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து சில மின்னணு ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை மார்ச் 29ஆம் தேதி உள்ளூர் நீதிமன்றத்தில் தொடங்கியது. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி 8 மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் அந்த மனுக்களை நிராகரித்தது. இதற்கிடையில், கடந்த 26ம் தேதி, 'கத்தார் முதன்மை நீதிமன்றம்' அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது.

பகல சுகுணாகர்
படக்குறிப்பு, அல் தஹ்ரா நிறுவனத்தின் பழைய இணையதளம் தற்போது செயல்படுவதில்லை.

நிறுவனத்தின் இணையதளம் செயல்படவில்லை

அல் தஹ்ரா நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் தோஹாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது. கத்தார் கடற்படைக்கு பயிற்சி, பராமரிப்பு மற்றும் தளவாட உதவிகளை வழங்குவதாக இந்நிறுவனத்தின் பழைய இணையதளம் கூறியுள்ளது. ஆனால், தற்போது அந்த இணையதளம் செயல்படுவதில்லை. புதிய இணையதளத்தில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகளின் விவரங்களும் அதில் இடம்பெறவில்லை. நிறுவனத்தின் பெயரும் தஹ்ரா க்ளோபல் (Dahra Global) என மாற்றப்பட்டுள்ளது. நான் எப்போதும் இந்த இணையதளத்தை கவனித்து வருகிறேன். அதனால்தான் என்னால் இவற்றைச் சரியாகச் சொல்ல முடிகிறது.

இந்த 8 பேரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதத்திற்குப் பிறகு இந்திய தூதரகத்திற்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 30 ஆம் தேதி, எட்டு பேருக்கும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் சிறிது நேரம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

மற்ற ஊழியர்களின் கைது குறித்து சுகுணாகர் கவலை தெரிவித்ததால், இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் அக்டோபர் 3ஆம் தேதி அவர்களைச் சந்தித்தார். அப்போதிருந்து, குடும்ப உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒரு முறை தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் தோஹாவில் இருந்தால், அவர்கள் சிறைக்குச் சென்று அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இவர்கள் இஸ்ரேல் சார்பில் ரகசிய ஏஜென்டுகளாகச் செயல்பட்டதாக இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை.

பகல சுகுணாகர்
படக்குறிப்பு, சுகுணாகர் விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்ததாக அவரது மைத்துனர் கல்யாண சக்கரவர்த்தி கூறுகிறார்.

உளவு பார்த்தாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் விசாகப்பட்டினம் பகல சுகுணாகர் ஒருவர் ஆவார். விசாகப்பட்டினத்தில் பிறந்து வளர்ந்த அவர், அங்கு தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர், கொருகொண்டா சைனிக் பள்ளியில் பயின்றார். அதன்பின், கடற்படை பொறியியல் கல்லூரியில் படித்து, கடற்படையில் சேர்ந்தார். தனது கடும் உழைப்பால் பின்னர் தளபதி பதவிக்கு உயர்த்தப்பட்டார். அவரது பணிக்காலத்தில் ஒரு முறை, விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படையில் சில காலம் பணியாற்றினார். அதன் பிறகு ஓய்வு பெற்று தஹ்ரா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் சமீபத்தில் என் சகோதரி சிறைக்குச் சென்று சுகுணாகரைச் சந்தித்தார். அவர் சொன்ன விவரங்களின்படி, அங்கே உடல்நலம் குறித்த விஷயங்களைத் தவிர வேறு எதுவும் பேசக் கூடாது. அதற்கும் மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது. கல்யாண சக்ரவர்த்தி இதுகுறித்து கூறுகையில், ‘‘சுகுணாகருடன் பேச, சந்திக்க எனது சகோதரியைத் தவிர வேறு யாருக்கும் கத்தார் அரசு வாய்ப்பளிக்கவில்லை,” என்றார்.

பகல சுகுணாகர்

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

படக்குறிப்பு, மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற பிரதமர் மோதி கத்தார் எமிருடன் பேசவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பிரதமர் பேசினால் போதும்

முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்துக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தங்களுக்கு முன் உள்ள அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

'அல் தஹ்ரா நிறுவனத்தில் பணிபுரிந்த எட்டு இந்திய ஊழியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். முழு தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்ட நிபுணர்களிடம் நாங்கள் தொடர்ந்து பேசிவருகிறோம். இது குறித்து கத்தார் அதிகாரிகளிடமும் பேசுவோம்” என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கத்தார் அரசிடம் பிரதமர் மோதி பேசினால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று கல்யாண சக்கரவர்த்தி கூறினார். இந்த வழக்கில் அரசு ஏற்கனவே தீவிரம் காட்டிவருவதாகவும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அரசை விட விரைவாக வேலை செய்ய விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்திய அரசின் பதில் என்ன?

இந்த வழக்கு தொடர்பாக சுகுணாகரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் விசாகப்பட்டினத்தில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யான ஜி.வி.எல். நரசிம்ம ராவை சந்தித்தனர். அவர்கள் அனைவரையும் விடுவிக்க இந்திய அரசு கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் கத்தாருக்கான இந்திய தூதர் விபுலிடம் பேசியதாக ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தெரிவித்தார்.

கத்தார் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரத்தை அறிந்த எம்.பி ஜி.வி.எல். நரசிம்ம ராவ், இந்த உத்தரவின் இரண்டு வரிகள் மட்டுமே நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமைக்குள் முழு தீர்ப்பும் கிடைக்கும் என்றும் உள்ளூர் நீதிமன்றம் கூறியதாக தெரிவித்தார்.

15 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கத்தாரில் அதிகாரம் மிக்க "கோர்ட் ஆஃப் கேசேஷன்" நடைமுறையும் இருக்கும் இருக்கும் என்றும் ஜிவிஎல் நரசிம்ம ராவ் நினைவூட்டினார். அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னாள் கடற்படை ஊழியர்களை விடுவிக்க “முயற்சித்து வருகிறோம்” என்றார் அவர்.

முன்னாள் கடற்படை வீரர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த இந்திய அரசு, குறிப்பாக வெளியுறவு அமைச்சகம் தேவையான உதவிகளை வழங்கும் என்று அவர் கூறினார். ஜி.வி.எல். நரசிம்மராவ், ராஜ்யசபா எம்பி மட்டுமல்லாது, வெளியுறவுத் துறைக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)