ஆர்ட்டெமிஸ்: இந்த தசாப்தத்தில் நிலவில் மனிதர்கள் வாழமுடியும் என எதிர்பார்க்கும் நாசா

ஓரியோன்

பட மூலாதாரம், NASA

    • எழுதியவர், ராப் கார்ப், லாரா குயென்ஸ்பெர்க் உடன்.
    • பதவி, பிபிசி

இந்த தசாப்தத்திலேயே நிலவில் மனிதர்கள் நீண்ட காலகட்டத்துக்கு வாழும் நிலை ஏற்படும் என ஒரு நாசா அதிகாரி பிபிசியிடம் கூறினார்.

நாசாவின் ஓரியன் சந்திரன் விண்கலம் திட்டத்தின் தலைவராக இருக்கும் ஹோவர்ட் ஹூ இதனைத் தெரிவித்தார். நிலவில் வாழும் மக்களுக்கு அறிவியல் இயந்திரங்களின் உதவித் தேவைப்படும்

அவர் இது குறித்து பிபிசியின் ‘லாரா குயென்ஸ்பெர்க் உடன் ஞாயிறு’ என்ற நிகழ்ச்சியில் பேசும்போது, ஓரியனை எடுத்துச் சென்ற ஆர்ட்டெமிஸ் ராக்கெட் புதன் கிழமையன்று ஏவப்பட்டது மனித விண்வெளி பயணத்துக்கான வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள் என்று கூறினார்.

இப்போது ஓரியன் நிலவில் இருந்து 1,34,000 கிலோ மீட்டர் (83,300 மைல்) தொலைவில் இருக்கிறது.

100 மீட்டர் உயரம் கொண்ட ஆர்ட்டெமிஸ் ராக்கெட், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது. விண்வெளி வீர ர்களை மீண்டும் நிலவுக்கு கொண்டு செல்வதற்கான நாசாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக இது ஏவப்பட்டது.

ஆகஸ்ட், செப்படம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய இரண்டு ஏவல் முயற்சிகளைத் தொடர்ந்து புதன் கிழமை வெற்றிகரமாக ராக்கெட் ஏவப்பட்டது. செப்டம்பர் மாதம் ஏவப்படும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுன்டவுனின் போது ராக்கென் ஏவுதல் கைவிடப்பட்டது.

லாரா குயென்ஸ்பெர்க்கிடம் பேசிய ஹூ, ஆர்ட்டெமிஸ் ஏவப்பட்ட நொடிகளில் அதனை பார்த்துக் கொண்டிருந்தது நம்ப முடியாத உணர்வாக, ஒரு கனவு போல இருந்தது என்றும் கூறினார்.

“இந்த முதல் படியில் வெறுமனே அமெரிக்காவுக்காக மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலகத்துக்காகவும் நீண்டகால ஆழமான விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொள்கின்றோம்,” என்றார் அவர்.

“நாசாவுக்கு இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ள நாள் என்று நினைக்கின்றேன். தவிர ஆழமான விண்வெளி ஆராய்ச்சிகள், மனித விண்வெளிப் பயணம் ஆகியவற்றை விரும்பும் அனைத்து மக்களுக்கும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்,” என்றும் கூறினார்.

“நாம் மீண்டும் நிலவுக்கு செல்லப் போகிறோம். ஒரு நீடித்த திட்டத்தை நோக்கி நாங்கள் பணியாற்றுகிறோம். இந்த வண்டி ஆட்களை சுமந்து செல்லும், மீண்டும் நம்மை நிலவில் தரையிறக்கும்,” என்று பெருமிதத்துடன் கூறினார்.

ஹு

பட மூலாதாரம், NASA

இப்போதைய ஆர்ட்டெமிஸ் பயணம் வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில், அடுத்ததாக அது விஞ்ஞானிகளுடன் அனுப்பப்படும். 1972ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோ 17 திட்டத்தில் முதன் முறையாக விண்வெளி வீரர்கள் பயணித்ததைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பயணிக்க உள்ளனர்.

இப்போதைய திட்டம் நல்லமுறையில் செயல்பட்டால், அனைத்து முறைகளும் திட்டமிட்டபடி செயலாற்றினால், இந்த திட்டக் குழுவினர் ஆர்ட்டெமிசின் அடுத்த பயணத்துக்கு தயாராவார்கள். திங்களன்று மதிய உணவு நேரத்தில் விண்கலன் சந்திரனின் சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

உற்சாகத்தைத் தருகிறது

பூமியில் இருந்து இந்த ஒரியன் திட்டத்தை காண்பது, ஆர்வமுள்ள பெற்றோராக இருப்பது போல் இல்லை என்று ஹூ ஒப்புக்கொண்டார். ஒரியனில் இருந்து கிடைக்கும் வீடியோக்கள், புகைப்படங்களைப் பார்க்கும்போது, உண்மையில் வாவ், நாங்கள் மீண்டும் நிலவுக்குச் செல்கிறோம் என்ற அந்த உற்சாகத்தையும் உணர்வையும் தருகிறது,” என்றார்.

ஓரியன் விண்கலத்தை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பக் கொண்டுவருவதுதான் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் மிகவும் சிக்கலான கட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. மணிக்கு 38,000 கிலோ மீட்டர் வேகத்தில் அல்லது ஒலியின் வேகத்தை காட்டிலும் 32 மடங்கான வேகத்தில் கிரகத்தின் வளிமண்டலத்தில் இது மீண்டும் நுழையும். , அதன் அடிப்பகுதியில் உள்ள கவசம் 3,000செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ராக்கெட்

ஆர்ட்டெமிஸின் கூறுகள் மற்றும் பாதுகாப்பு முறைகளின் பரிசோதனை ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டால், இந்த தசாப்தத்தில் நிலவில் மனிதர்கள் வாழ வேண்டும் என்பது திட்டமாக இருக்கும் என ஹூ கூறினார்.

நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் ஏதும் இருக்கிறதா என்பதை கண்டறிவதே நிலவுக்கு மீண்டும் செல்வதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது என்றார் அவர்.

“நிலவில் தரையில் இறங்கும் வகையில் நாங்கள் மனிதர்களை அனுப்ப உள்ளோம். நிலவின் வெளியில் அவர்கள் வாழ உள்ளனர். அவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள்,” என்று ஹூ கூறினார்.

“நமது புவியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் கொஞ்சம் கற்றுக்கொள்வதற்கு உண்மையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகிறது. மேலும் செவ்வாய்க்கு செல்லும் போது இது ஒரு பெரிய முன்னெடுப்பாக இருக்கும்,” என்றார்.

“ஒரு நிலையான தளம் மற்றும் போக்குவரத்து அமைப்பு அந்த விண்வெளி சூழலில் எவ்வாறு செயல்படுவது என்பதை அறிய ஆர்ட்டெமிஸ் பணிகள் எங்களுக்கு உதவுகின்றன," என்றும் கூறினார்.

ஓரியன் விண்கலம் டிசம்பர் 11 அன்று பூமிக்கு திரும்ப உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: