You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலில் 171 ட்ரில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள்: உயிர்க் குலத்தை அச்சுறுத்தும் 'மிதக்கும் நோய்'
- எழுதியவர், ஜியார்ஜினா ரன்னார்டு
- பதவி, பிபிசி கால நிலை, அறிவியல் செய்தியாளர்
உலக பெருங்கடல்களில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் மொத்த எண்ணிக்கையை அறிவியல்பூர்வமாக மதிப்பிட்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு வேலையற்ற வேலை என்று தோன்றுகிறதா?
அந்த பிளாஸ்டிக் உங்களை, நம்மை என்ன செய்யும் என்று படித்துவிடுங்கள். பிறகு அப்படி நினைக்கமாட்டீர்கள்.
சரி மீண்டும் எண்ணிக்கைக்கு வருவோம்.
கடலுக்கு ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு பெயர். ஆனால், இருப்பது ஒரே கடல்தான். இந்த எளிய உண்மை எல்லோருக்கும் தெரியும். இப்படி புவியின் பரப்பில் சுமார் மூன்றில் இரண்டு பகுதியில் பரவியிருக்கும் கடலில் மொத்தம் மனித குலம் சிந்தியிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை, 171 ட்ரில்லியன் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
1 ட்ரில்லியன் என்பது லட்சம் கோடி. வேறொரு விதமாக சொன்னால், 1.71 கோடி-கோடி.
கடல் எப்போதும் இப்படி குப்பையாக இருந்ததில்லை. 2005ம் ஆண்டு கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை வெறும் 16 ட்ரில்லியனாக இருந்தது. 2019இல், அதாவது பதினான்கே ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 171 ட்ரில்லியன் குப்பைகளாக அதிகரித்திருக்கிறது. அது மட்டுமல்ல. எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், இந்த எண்ணிக்கை 2040இல் மூன்று மடங்காக உயரும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
பிளாஸ் ஒன் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வு முடிவில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சரி இதனால், சாமானியனுக்கு என்ன பிரச்சனை என்கிறீர்களா?
இந்தப் பிளாஸ்டிக் குப்பைகள் மீன்களைக் கொல்கின்றன. மீன்களை மட்டுமல்லாமல் பிற கடல்வாழ் உயிரினங்களைக் கொல்கின்றன.
கடலில் உள்ள இந்த உயிர்ச்சூழல், மனிதர்கள் வாழ்வதற்குத் தேவையான சுற்றுச்சூழலை தாங்கிப் பிடித்திருக்கின்றன. தவிர, மீன் வளம் குறைவது என்பது அவற்றை உணவுத் தேவைக்காக சார்ந்திருக்கும் மனித குலத்துக்கு மோசமான செய்திதானே.
தவிர, இந்த பிளாஸ்டிக் துணுக்குகள், மட்கி, ஆபத்தற்ற பொருளாக சிதைவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும்.
யு.என். ஹைசீஸ் ட்ரீட்டி என்று ஆங்கிலத்தில் அறியப்படும், ஐ.நா. ஆழ்கடல் ஒப்பந்தத்தை கடந்த வாரம் ஐ.நா. உறுப்பு நாடுகள் இறுதி செய்தன. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் 30 சதவீத கடலைக் காப்பாற்றுவதுதான்.
இப்போது வெளியாகியுள்ள, புதிய பிளாஸ்டிக் குப்பை மதிப்பீட்டை எட்டுவதற்கு 1979ஆம் ஆண்டு முதல் திரட்டப்பட்ட தரவுகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர். பிறகு, சமீப காலத்தில் டிராலர்களையும், வலைகளையும் பயன்படுத்தி திரட்டப்பட்ட கடற்குப்பைகள் குறித்த தரவுகளையும் அத்துடன் இணைத்து முடிவுகளையும் இறுதிப்படுத்தினர்.
இந்த ஆய்வுப் பயணங்களின்போது வலையில் சிக்கும் பிளாஸ்டிக் எண்ணிக்கையைக் கொண்டு உலகம் முழுவதும் கடலில் குப்பைகளின் எண்ணிக்கையைக் கண்டறிவதற்காக ஒரு கணித மாதிரியை உருவாக்கினார்கள்.
இந்த முறையில், 171 ட்ரில்லியன் பிளாஸ்டிக் துணுக்குகள் கடலில் இருப்பதாக முடிவுக்கு வந்தார்கள். இதில், சமீப காலத்தில் கடலில் வீசப்பட்ட புதிய குப்பைகளும், கடந்த காலத்தில் வீசப்பட்டு சிதைந்து சிறு துகள்கள் ஆனவை எல்லாமும் அடக்கம் என பிபிசியிடம் தெரிவித்தார், இந்த ஆய்வுக்கு தலைமை வகித்தவரும், 5 Gyres இன்ஸ்டிடியூட்டை சேர்ந்தவருமான டாக்டர் மார்கஸ் எரிக்சன்.
பாட்டில்கள், பொட்டலப் பொருள்கள் (பேக்கேஜிங் மெட்டீரியல்), மீன்பிடிப் பொருள்கள் போன்ற ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் காலப்போக்கில் சூரிய ஒளி காரணமாகவும், பொறியமைப்பு சிதைவு காரணமாகவும் சிறு சிறு துணுக்குகளாக நொறுங்கி விடுகின்றன.
திமிங்கிலங்கள், கடற்பறவைகள், கடல் ஆமைகள், மீன்கள் போன்றவை இந்த பிளாஸ்டிக் குப்பையை தவறாக உணவு என்று நினைத்து விழுங்கிவிடுகின்றன. காலப்போக்கில் இந்த பிளாஸ்டிக் பொருள்கள் வயிற்றில் அடைத்துக்கொள்ள, அவை பட்டினியால் இறக்க நேரிடுகிறது.
இந்தக் குப்பைகள், மீன்கள், பறவைகள் உள்ளிட்டவற்றின் உடல் வாயிலாகப் பயணித்து நம் குடிநீரில் கலக்கின்றன.
இப்படிப் பயணித்து வரும் மைக்ரோ பிளாஸ்டிக் என்று அறியப்படும் நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனிதர்களின் நுரையீரலில், ரத்தக் குழாயில் இவ்வளவு ஏன் வயிற்றில் இருக்கும் மனித சிசுவையும், தாய் உடலையும் இணைக்கும் (‘நஞ்சு’ என தமிழில் அறியப்படும்) பிளசன்டாவிலும் காணப்படுகின்றன.
இந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனித உடல் நலனை பாதிக்கின்றனவா என்பது குறித்து இன்னும் போதிய அளவு அறியப்படவில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
2005ம் ஆண்டுக்கு முன்பாக, இந்த கடல் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. எதனால் இப்படி நடந்தது என்பது குறித்து விஞ்ஞானிகளுக்கு உறுதியாகத் தெரியவில்லை; ஆனால், வலுவான சட்டங்கள் இருந்த இடத்தில் விரும்பினால் பின்பற்றும் சட்டங்கள் வந்தது, பிளாஸ்டிக் துகள்கள் மேலும் சிறிய துணுக்குகளாக நொறுங்கியது, போதிய தரவுகள் திரட்டப்படாதது போன்ற பலவிஷயங்கள் 2005க்கு முந்தைய ஏற்ற இறக்கங்களைப் புரிந்துகொள்ள உதவும் என்கிறார் டாக்டர் எரிக்சன்.
ஏற்கெனவே விஞ்ஞானிகள் அறிந்திருக்கும் தகவல்களுக்கு மேலாக கூடுதல் தகவல்களை இந்த ஆய்வு தருகிறது என்கிறார் இந்த ஆய்வில் தொடர்பில்லாதவரும், பிளைமௌத் பல்கலைக்கழகத்தை சேர்ந்தவரான பேராசிரியர் ரிச்சர்ட் தாம்ப்சன்.
"பெருங்கடல்களில் ஏராளமான பிளாஸ்டிக் இருக்கிறது என்பதில் நாம் அனைவரும் உடன்படுகிறோம். விரைவில் நாம் இதற்கு தீர்வு தேடுவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டும்," என்று அவர் பிபிசி நியூசிடம் தெரிவித்தார்.
மாபெரும் பசிபிக் குப்பைத் திரள் (Great Pacific Garbage Patch) உள்ளிட்ட பெரிய கடல் குப்பைத் திரள்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தபோதிலும், வட அட்லாண்டிக் கடல்தான் பிளாஸ்டிக் செறிவு மிகுந்த பகுதியாக உள்ளது.
2000வது ஆண்டுக்கு முன்பாக கடல் மாசுபாடுகளின் அளவு ஏற்ற இறக்கமாக இருந்ததற்கு இந்த மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் அப்போது இருந்த சட்டங்களும் ஒப்பந்தங்களும் காரணமாக இருக்கலாம் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கருதுகிறார்கள்.
கப்பல் சார்ந்த, மீன்பிடி சார்ந்த பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் தூக்கி எறிவதை நிறுத்தவேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள குப்பைகளை சுத்தம் செய்யவேண்டும் என்றும் கூறி, நாடுகளை சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் பல பன்னாட்டு ஒப்பந்தங்கள் 1980களில் நிறைவேறின.
ஆனால், பின்னால் வந்த தன்னார்வ ஒப்பந்தங்கள், மிகுந்த பயனளிக்காதவையாக இருந்தன என்றும், 2000வது ஆண்டுக்குப் பிறகு பிளாஸ்டிக் குப்பைகள் அளவு அதிவேகமாக அதிகரித்த விஷயத்தை இது விளக்கும் என்றும் கூறுகிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள்.
இதற்காகத் தீர்வைத் தேட முயலும்போது, பிளாஸ்டிக் குப்பைகளை கடலில் இருந்து அகற்றுவது, அவற்றை மறுசுழற்சி செய்வது போன்ற மிகுந்த பயனளிக்காத யோசனைகளை முன்வைக்காமல், பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி அளவையும், அவற்றைப் பயன்படுத்தும் அளவையும் குறைப்பது தொடர்பில் அதிக கவனம் வைக்கவேண்டும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்