You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆறாவது பேரழிவு யுகத்தில் நுழைகிறோம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
- எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
- பதவி, பிபிசி
இந்த நூற்றாடின் இறுதியில் எத்தனை பாலூட்டி இனங்கள் அழியும் என்பதை ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் அழிந்த உயிரினங்களின் புதைபடிவங்களை கொண்டு இது கணக்கிடப்பட்டுள்ளது.
அவர்களது கணிப்புப்படி மாமோத் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாமத யானை இனம் அழிந்ததைப் போல குறைந்தது 550 உயிரினங்கள் அழியலாம்.
ஒவ்வொரு உயிரினம் அழியும் போதும் நாம் இந்த பூமியின் இயற்கை வரலாற்றின் ஒரு பகுதியைத் தொலைக்கிறோம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கணிப்புகள் இப்படிக் கூறினாலும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் நாம் நூற்றுக்கணக்கான உயிரினங்களை காக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த பதிற்றாண்டுகளில் அழிந்து ஒழிந்த பாலூட்டி இனங்களின் அழிவுக்கு கிட்டத்தட்ட முழு காரணம் மனிதர்களே என்று ஜர்னல் ஆஃப் சயின்ஸ் அட்வான்சஸ் என்ற சஞ்சிகையில் வெளியான இந்தப் புதிய ஆய்வு கூறுகிறது.
நாம் உரிய முயற்சிகள் எடுக்காவிட்டல், அழியும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வு எச்சரிக்கிறது.
சூழ்நிலை ஆபத்தாக இருந்தாலும்கூட திட்டமிட்ட, திறமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் ஆயிரக் கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியாவிட்டாலும் நூற்றுக்கணக்கான உயிரினங்களையாவது காக்க முடியும் என்கிறார் ஆய்வாளர் ஆண்டர்மென். இவர் கோத்தன்பெர்க் பல்கலைக்கழகம் மற்றும் கோத்தன்பெர்க் குளோபல் பயோடைவர்சிட்டி சென்டரை சேர்ந்தவர்.
ஏராளமான புதைபடிவங்களின் தரவுகளை விஞ்ஞானிகள் தொகுத்துப் பார்த்தனர். சமீப கால உயிரின அழிவுகளின் காலம் மற்றும் அளவு குறித்த ஆதாரங்களை இவையே வழங்கின.
தற்போதைய உயிரின அழிவு அச்சுறுத்தல் நிலைமைகளைக் கொண்டு கணினி அடிப்படையில் ஒப்புருவாக்கம் (சிமுலேஷன்) செய்துபார்த்தபோது 2100ம் ஆண்டு வாக்கில் உயிரின அழிவு விகிதம் பெருமளவு அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த நூற்றாண்டில் நேர்ந்த உயிரின அழிவுகள் அடுத்த பதிற்றாண்டுகளில் நேரவிருக்கிற பேரழிவின் முன்னோட்டம் மட்டுமே என்கின்றன இப்படி உருவாக்கப்பட்ட கணினி மாதிரிகள்.
நாடுகளுக்கு இடையேயான குழு ஒன்றின் ஆய்வாளர்கள், 10 லட்சம் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக கடந்த ஆண்டு எச்சரித்தனர்.
ஆறாவது பேரழிவு என்று அழைக்கப்படும் யுகத்தில் நாம் நுழைகிறோம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர், இப்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் மனிதகுலத்தின் எதிர்காலத்தை வரையறுக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: