You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடகொரியாவில் ஒரே வாரத்தில் 2 சூறாவளி: ”பொறுப்பற்று செயல்பட்ட” அதிகாரிகளுக்கு கடும் தண்டனை
புதன்கிழமையன்று வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியை மைசக் சூறாவளி தாக்கியபோது ”பொறுப்பற்று செயல்பட்ட” அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தொழிலாளர் கட்சியின் செய்தித்தாள் ஒன்று அதிகாரிகள் மைசக் சுறாவளிக்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும், மேலும் ”பொறுப்பற்று நடந்து கொண்டதாகவும்” குற்றஞ்சாட்டியுள்ளது.
சுறாவளியால் எத்தனை பேர் காயமடைந்தனர், சரியாக எத்தனை பேர் உயிரிழந்தனர், எத்தனை பேரை காணவில்லை என்பதையெல்லாம் அந்த செய்தித்தாள் குறிப்பிடவில்லை ஆனால் ”டஜன் கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட வோன்சன் பகுதியில் “உடனடியாக சேதமடைந்த இடங்களை கணக்கிடவும், சிக்கியுள்ளவர்களை வெளியேற்றவும்” உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது என ரோடாங் சின்முன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
“கட்சி ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் தங்களின் ஆணையை செயல்படுத்தவில்லையா அல்லது மக்களை அமைதிப்படுத்த அவர்கள் ஆளும்கட்சியால் வேண்டுமென்றே தண்டிக்கப்படுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்கிறார் பிபிசியின் ஆசியா பசிபிக் ஆசிரியர் சிலியா ஹேட்டன்.
அரசு ஊடகமான கேசிடிவியில், பாலங்கள், சுவர்கள் வெள்ளத்தால் இடிந்து விழுவதுபோன்ற காட்சிகள் இந்த வார தொடக்கத்தில் ஒளிபரப்பாயின.
வட கொரியாவை ’பாவி’ என்ற சூறாவளி தாக்கிய ஒரே வாரத்தில் மைசக் என்ற சூறாவளி தாக்கியது.
வட கொரியாவில் மலைகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால், வெள்ளம் ஏற்படும் ஆபத்து அதிகம். மேலும் அதன் கட்டமைப்பும் இயற்கை சீற்றங்களை தாங்கக்கூடியதாக இல்லை.
மைசக் சூறாவளி தென் கொரியாவின் பூசன் என்னும் நகரையும் தாக்கியது. இதனால் 2200 பேர் வெளியேற்றப்பட்டனர் . இருவர் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: