You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆழ்கடல் பகுதியில் பெருமளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுப்பு - செத்து மடியும் கடல்வாழ் உயிரிகள்
- எழுதியவர், ஜோனதன் அமோஸ்
- பதவி, பிபிசி
இதுவரை இல்லாத வகையில் கடலின் படுக்கையில் அதிகபட்ச நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இத்தாலிக்கு அருகிலுள்ள மத்தியத் தரைக் கடலின் அடிப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட படிவுகளில் இந்த மாசுபாடு காணப்பட்டது.
மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில், ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பில் 1.9 மில்லியன் பிளாஸ்டிக் துகள்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டன.
ஆடை மற்றும் பிற துணிகளிலிருந்து வரும் இழைகளும், காலப்போக்கில் உடைந்த பெரிய பொருட்களின் சிறிய துண்டுகளும் இந்த கழிவில் அடங்கும்.
இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் (ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அளவு) பெருங்கடல் நீரோட்டத்தால் கடலின் அடித்தள பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
"இந்த நீரோட்டங்கள் நீருக்கடியில் மணல் திட்டுகள் போன்ற அமைப்பை உண்டாக்கியுள்ளன" என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட குழுவின் தலைவரான டாக்டர் இயன் கேன் கூறுகிறார்.
"அவை பத்துக்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் நீளமும், நூற்றுக்கணக்கான மீட்டர்கள் உயரமும் கொண்டிருக்கலாம். அவை பூமியில் உள்ள மிகப்பெரிய வண்டல் குவியல்களில் ஒன்றாகும். மிகச் சிறந்த மண்ணால் ஆன அந்த சேற்றுப்படிவின் உள்ளே இந்த நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கக்கூடும் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று பிபிசியிடம் அவர் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் முதல் 1.2 கோடி டன் வரையான பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன; பெரும்பாலும் இவை ஆறுகளின் வழியே கொண்டுவரப்படுகின்றன.
அவ்வபோது கடற்கரைகளிலும் கடற்பரப்பின் மீதும் மிதக்கும் அதிகளவிலான கழிவுகள் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக வருகின்றன.
ஆனால், அவை கடலில் கலந்துள்ள மொத்த பிளாஸ்டிக்குகளில் வெறும் ஒரு சதவீதமே ஆகும். எனவே, மீதி 99% கழிவுகள் கடலில் எங்கே உள்ளன என்பது அறியப்படாமல் உள்ளது.
மீதம் உள்ள கழிவுகளில் குறிப்பிடத்தக்க அளவு கடல்வாழ் உயிரினங்களால் உண்ணப்பட்டிருக்கும். அதில் எஞ்சிய பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் கடலின் அடித்தளத்தை அடைந்திருக்கும்.
ஆழ்கடல் அகழிகள் மற்றும் கடல் பள்ளத்தாக்குகளில் காணப்படும் வண்டல்களில் அதிக அளவு நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருக்கக்கூடும் என்பதை டாக்டர் கேனின் குழு ஏற்கனவே கண்டறிந்துள்ளது.
"கடல் அடித்தளத்தில் ஏற்படும் மிகப்பெரும் நீரோட்டங்கள் ஒரே நேரத்தில் பெருமளவிலான வண்டல்களை நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் கொண்டு செல்லும்" என்று கூறுகிறார் டர்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஃப்ளோரியன் பொல்.
"இந்த பெருங்கடல் நீரோட்டங்கள் எப்படி நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களை ஓரிடத்தில் புதைக்கின்றன என்பது குறித்து சமீபத்திய ஆய்வக சோதனைகளின் வாயிலாக புரிந்து கொண்டு வருகிறோம்."
உலகின் பல பகுதிகள் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை முரண்பாடுகளால் இயக்கப்படும் வலுவான, ஆழமான பெருங்கடல் நீரோட்டங்களைக் கொண்டுள்ளன. அடிப்படையில் இந்த நீரோட்டங்கள்தான் ஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன என்பதால் இது கவலைக்குரிய விடயமாகும். ஏனெனில், இந்த நீரோட்டங்களில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை உண்ணும் உயிரிகள் விரைவில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் காட்டப்படும் அதே தீவிரமும், முக்கியத்துவமும் கடலில் கலக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுப்பதில் காட்டப்பட வேண்டும் என்று இந்த ஆராய்ச்சியில் அங்கம் வகித்த மற்றொரு ஆராய்ச்சியாளரான ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர் எல்டா மிரமோன்ட்ஸ் வலியுறுத்துகிறார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், "கொரோனா வைரஸிடமிருந்து தற்காத்து கொள்வதற்காக நாம் நமது வாழ்க்கைப்போக்கில் எண்ணற்ற மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம். அதே அளவு முக்கியத்துவத்தை கடலை காப்பாற்றுவதற்கும் நாம் கொடுக்க வேண்டும்" என்று கூறுகிறார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மேலாண்மை பள்ளியின் தொழில்துறை சூழலியல் பேராசிரியராக உள்ள ரோலண்ட் கெயர், பிளாஸ்டிக் துகள்கள் கடலுக்குள் எப்படி கலந்து அதன் இயற்கையான நீரோட்டத்தில் இணைகின்றன என்பது குறித்து நீண்டகாலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
"கடலில் எந்த அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளன என்பது குறித்து நம்மிடம் சரிவர தகவல் இல்லை. பெரும் எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் துகள்கள் கடலின் மேற்பரப்பில் மிதப்பது இல்லை என்பதால் அதன் ஒட்டுமொத்த அளவையும் கண்டறிவது என்பது சவாலாக உள்ளது" என்று அவர் கூறுகிறார்.
"எனினும் நாம் உடனடியாக கடலில் புதிதாக பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்; கடலின் எந்த பகுதியில் எவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன என்பதை கண்டறிவது இரண்டாம் கட்ட பணியாக இருக்க வேண்டும்."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: