You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்கிறது மலேசியா
ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக பணிபுரியும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்யவுள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கி உள்ளவர்களின் மூலம் நோய்த்தொற்று பரவல் அதிகமாவதை தடுக்கவே அவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் காவல்துறை தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு உடைகளை அணிந்திருந்த அதிகாரிகள், ஆவணங்கள் இல்லாத பல வெளிநாட்டுத் தொழிலாளர்களை கைது செய்தது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் வெளிநாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்த நிலையில், புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ள தடுப்பு முகாம்களில் இருந்து குழந்தைகள் மற்றும் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மலேசிய அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுக்குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பை சேர்ந்த பில் ராபர்ட்சன், "காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அடைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் மூலமாகவும், சட்டவிரோதமாக பணியாற்றி வரும் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒத்துழைப்பின்மையாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மலேசியாவில் நோய்த்தொற்று பரவலை மோசமாக்க கூடும்" என்று அவர் எச்சரித்துள்ளார்.
சரிவர ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவில் தங்கியுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் அருகருகே அமர்ந்துள்ளது போன்றும், அவர்களை சுற்றி ஆயுதமேந்திய காவல்துறையினர் சூழ்ந்திருப்பது போன்ற புகைப்படங்களை ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, மலேசியாவில் இதுவரை 6,298 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; அவர்களில் 105 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
மலேசியாவில் பகுதியளவு முடக்க நிலை அமலில் உள்ளது.
சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று
சிங்கப்பூரில் புதிதாக 657 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்கை 18,205ஆக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள விடுதிகளில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இடையே நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தெரிவித்துள்ளது.
இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, இதுவரை சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக தொடர்கிறது..
சிங்கப்பூரில் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் குறைந்த ஊதியத்தில் சுமார் மூன்று லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த அவர்கள் தங்கி வரும் விடுதிகளில் கடந்த மாதத்தின் மத்திய பகுதியில் இருந்து கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: