அமைச்சர்கள் மீதான முடிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கலாமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி செய்தியாளர்
சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன் வந்து மேலும் இரண்டு அமைச்சர்களை விடுவித்த வழக்குகளை விசாரிக்கவுள்ளது. ஏற்கெனவே, அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன்பாக விடுவித்த வழக்கை எடுத்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
தற்போது அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்குகளையும் மறு விசாரணை செய்யவுள்ளது.
இப்படி தீர்ப்பு வழங்கப்பட்ட முடிந்துபோன வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்துவது வழக்கமான ஒன்று அல்ல என நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில் இந்த வழக்குகளை மறு விசாரணை செய்வதாக நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தங்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து கீழமை நீதிமன்றங்களால் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.
அந்த வழக்குகளில் வழக்கு தொடுத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில், தற்போது மறுவிசாரணைக்கு இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்துள்ளது.
அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

பட மூலாதாரம், THANGAM THENNARASU FB
அமைச்சர்கள் மூவரும் விடுவிக்கப்பட்ட வழக்குகளில் அரசியல் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நியாயமாக இல்லை எனவும், கீழமை நீதிமன்றங்கள் முறையாக விசாரிக்காமல் ஆட்சியில் இருப்பவர்கள் என்ற காரணத்தினால் அவர்களை விடுவித்தன என்றும் நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ் தனது உத்தரவுகளில் விமர்சித்துள்ளார்.
கடந்த 2006-2011ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சிக் காலத்தில் தங்கம் தென்னரசு கல்வி அமைச்சராக இருந்தார்.
அவர்மீது, 2006ஆம் ஆண்டு மே15ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 74.58 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீதும் அவரது மனைவி மீதும் 2012ம் ஆண்டு வழக்கு போடப்பட்டது. பத்து ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், KKSSR Ramachandran
அதேபோன்று, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், 2006ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி முதல் 2007ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி வரை சுகாதாரத்துறை அமைச்சராகவும், பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44.59 லட்சம் சொத்து குவித்ததாக அமைச்சர், அவரது மனைவி, மற்றும் ஒரு நண்பர் மீது 2011ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.
பல்வேறு நீதிமன்றங்களுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு வந்த நிலையில், இறுதியாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அமைச்சர் பொன்முடி மீதான வழக்கும் சொத்து குவிப்பு வழக்கே.
கடந்த 1996-2001ம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது, வருமானத்திற்கு அதிகமாக 1.36 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2002ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இருபது ஆண்டுகளாக நடைபெற்ற அந்த வழக்கில் வேலூர் நீதிமன்றம் கடந்த ஜூன் 28ஆம் தேதி அமைச்சரை விடுவித்து தீர்ப்பளித்தது.
இந்த மூன்று வழக்குகளுமே திமுக ஆட்சி நடைபெற்றபோது சொத்து குவித்ததாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட வழக்குகள். அதே போன்று இந்த மூன்று வழக்குகளுமே மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முடித்து வைக்கப்பட்டவை.
ஆட்சி மாற்றத்துக்குப் பின் முடிக்கப்பட்ட வழக்குகள்
ஆட்சி மாற்றம் 2021ஆம் நடந்த பிறகு வழக்கு தொடுத்த மாநில அரசின் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையும், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களும் தற்போது விளையாட்டில் ஒரே அணியில் விளையாடுபவர்களாக மாறிவிட்டார்கள், எனவே விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று சுட்டிக் காட்டுகிறார் ஆனந்த் வெங்கடேஷ்.
“குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றம் சாட்டியவர்கள் அனைவரும் ஒரு விளையாட்டில் ஒரே அணியிலிருந்து விளையாடுபவர்களாகி விட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதை உணர்ந்த போட்டி நடுவர், அதாவது சிறப்பு நீதிமன்றம் தன்னையே ஆட்டத்தில் தோற்கடித்துக் கொள்வதுதான் உகந்த வழி என்று முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது. எனவே, இது, ஆட்சி அதிகாரத்தின் காரணமாக சீர்குலைக்கப்பட்ட மற்றொரு கிரிமினல் விசாரணையின் உதாரணம்,” என்று தனது உத்தரவில் கடுமையாக சாடியுள்ளார்.
அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரின் வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய காரணங்களை நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் விளக்குகிறார்.
இரண்டு வழக்குகளிலும் திட்டமிடப்பட்ட ஒரே மாதிரியான அணுகுமுறைகள் வெளிப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக இருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.
மேலும், ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையை, 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு மாற்றத்துக்கு, “சில மாதங்கள் கழித்து, அரசு தாராள மனதுடன் முன்வந்து, “மேலும் விசாரணை” செய்தது. இந்த “மேலும் விசாரணை”யின் விளைவாக அவர்கள் விடுவிப்பதற்கு தகுந்த இறுதி அறிக்கையை அளித்தது.
ஏற்கெனவே அளித்திருந்த விசாரணை அறிக்கையிலிருந்து மாறுபட்ட விசாரணை இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டதாகவும் இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் விசாரணை அறிக்கைகள் முரணாக இருந்தாலும், சமீபத்தில் சமர்ப்பிக்க அறிக்கையை ஏற்றுக்கொண்டு அவர்களை விடுவித்தாகவும் தெரிவிக்கிறார்.
ஏன் திமுக அமைச்சர்களை மட்டும் குறி வைக்க வேண்டும்?
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுட்டிக்காட்டியுள்ள சட்டரீதியான குளறுபடிகளை யாரும் மறுக்கவில்லை என்றாலும், ஏன் திமுக அமைச்சர்களின் வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன, என கேள்வி எழுப்பப்படுகின்றது.
சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்ற வகையில், நீதிபதிக்கு இவற்றை விசாரிக்க அதிகாரம் உண்டு என்று ஒப்புக்கொள்ளும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ். பாரதி, ஏன் திமுக அமைச்சர்கள் குறி வைக்கப்படுகின்றனர் எனக் கேட்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “விசாரணைக்கு வழக்குகளை எடுத்துக் கொள்ளும்போது, அவற்றில் உள்நோக்கம் இருக்கக்கூடாது என்பது விதி.
அதிமுக அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களோ, அதே முகாந்திரத்தின் அடிப்படையில்தான் இவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏன் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு தொடுக்கவில்லை,” எனக் கேள்வி எழுப்புகிறார் அவர்.
மேலும், எடப்பாடி பழனிசாமி மீது தான் போட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கு தன் முன் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதையும் சுட்டிக்காட்டினார் ஆர்.எஸ். பாரதி.
முரண்பட்ட அறிக்கைகளைக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்குகளில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது.
“டென்மார்க் அரசில் ஏதோ ஒன்று அழுகியுள்ளது என ஷேக்ஸ்பியர் கூறுவார், அதுபோல, ஆவணங்களை ஆராய்ந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஏதோ ஒன்று மிகவும் அழுகியுள்ளது,” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.
சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எழுதிய தீர்ப்பை, எழுதிய நீதிபதி உட்பட யாருமே புரிந்துகொள்ள முடியாத படி இருக்கிறது என விமர்சனம் செய்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
அமைச்சர் தங்கம் தென்னரசு சம்பந்தப்பட்ட வழக்கில், 2016ஆம் ஆண்டு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று எந்த விசாரணை அதிகாரி கூறினாரோ, அதே அதிகாரி தற்போது, அவர் மீது குற்றம் இல்லை என்று கூறுவதாக நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக் காட்டினார்.
“நிறைய ஆவணங்களைத் திரட்டி உச்சநீதிமன்ற முடிவுகளை எல்லாம் சுட்டிக்காட்டி குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படக் கூடாது எனக் கூறிய அதே அதிகாரி 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் திடீரென, குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சரான பிறகு, ‘மேலும் விசாரணை’ நடத்தி மாறுபட்ட அறிக்கையை அளித்துள்ளார்” என்று கூறுகிறார்.
“ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் அரசியல்வாதிகளின் தாலாட்டுக்கு நடனமாட ஆரம்பித்தால், பாரபட்சமற்ற விசாரணை என்பது நாடகமாகிவிடும்,” என்று கடுமையாக சாடியுள்ளார்.
இதே போன்று அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட வழக்கையும் தாமாக முன் வந்து எடுத்திருக்கும் நீதிபதி என் ஆன்ந்த் வெங்கடேஷ், இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த கீழ் நீதிமன்ற நீதிபதியை கடுமையாக சாடியிருந்தார்.
முடியும் தருவாயில் இருந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது உரிய நடைமுறைகள் பின்பற்றவில்லை எனத் தனது உத்தரவில் தெரிவிக்கிறார்.
“இந்த வழக்கின் இறுதி வாதங்கள் எழுத்து வடிவில் ஜூன் 23ஆம் தேதி வேலூர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கே நாட்களில் 176 சாட்சியங்கள், 381 ஆவணங்களை சரி பார்த்து நீதிபதி 28ஆம் தேதி 228 பக்கத் தீர்ப்பு வழங்கினார்.
இது சாதனையாகும், அரசியல் சாசன நீதிமன்றங்களில் இருப்பவர்கள்கூட இதுபோன்ற சாதனை படைக்க கனவு மட்டுமே காண முடியும். அடுத்த இரண்டு நாட்களில் நீதிபதி நிம்மதியாக ஓய்வு பெற்றுவிட்டார்,” என்று சாடியிருந்தார்.
நீதிபதி முன்முடிவுடன் இருக்கலாமா?

பட மூலாதாரம், ADV VIJAYAKUMAR
இப்படி வெளிப்படையாகத் தனது கருத்துகளைத் தெரிவிக்கும் நீதிபதி எப்படி இந்த வழக்குகளை விசாரிக்க முடியும் என்கிறார் மூத்த வழக்கறிஞர் விஜயகுமார்.
பிபிசி தமிழிடம் பேசியபோது, “இந்த வழக்குகளில் இப்படி கருத்துகளை வெளிப்படுத்துவது, அவர் முன்முடிவுடன் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. விசாரணைக்கு முன்பே, முன்முடிவுடன் இருப்பவர் எப்படி வழக்கை விசாரிக்க முடியும்,” என்கிறார் அவர்.
இதுபோன்று நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து முடிந்தபோன வழக்குகளை மறு விசாரிணை செய்ய சட்டத்தில் இடம் இருந்தாலும், இது வழக்கமான ஒன்று அல்ல என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன்.
“வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், நீதிபதியின் நோக்கத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சிலரது வழக்குகளை மட்டும் விசாரிக்கிறார் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும்,” என்கிறார் அவர்.
"ஆட்சிக்கு அதிகாரத்துக்கு சாதகமாகவே அரசு இயந்திரங்கள் செயல்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகும்."
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்-ன் நோக்கத்தை கேள்வி கேட்ட அதே செய்தியாளர் சந்திப்பில், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, அவர் மீது தான் தொடுத்த வழக்கு குறித்து பேசிய ஆர் எஸ் பாரதி, “எடப்பாடி மீது போடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் அவர் மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சென்றார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது.
மாநில காவல்துறையே விசாரிக்கட்டும் எனக் கூறி, உச்சநீதிமன்றத்தில் எனது வழக்கை வாபஸ் வாங்குவதாகத் தெரிவித்து விட்டேன்,” என்றார்.
லஞ்ச வழக்குகள் எதை எடுத்தாலும் இதுபோன்ற பல சிக்கல்கள் இருக்கலாம், என்கிறார் மூத்த வழக்கறிஞர் விஜயகுமார். எல்லாவற்றையும் மறு விசாரணை செய்துகொண்டே இருக்குமா உயர்நீதிமன்றம் என்று கேட்கிறார் அவர்.
“மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னைகள் பல இருக்கும் போது, அதைவிட்டு இந்த வழக்குகளை எதற்காக எடுத்து விசாரிக்க வேண்டும்?
கீழமை நீதிமன்றங்களில் நீதி கிடைக்காமல் உயர்நீதிமன்றங்களுக்கு வரும் பொதுமக்களின் வழக்குகள் பட்டியலில் இடம் பெறுவதுகூட கடினமாக உள்ளது. ஆனால் இந்த வழக்குகள் உடனடியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன” என்றும் கூறும் வழக்கறிஞர் விஜயகுமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 2 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சுட்டிக்காட்டுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












