ஷி ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்றழைத்த பைடன்

அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் சந்தித்துப் பேசினர்.

ஒரு வருடத்திற்குப் பின் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடந்திருக்கும் இந்தச் சந்திப்பு, அமெரிக்க-சீன உறவைச் சுமூகமாக்குவதற்கான முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இந்தச் சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களுடன் பேசிய பைடன், ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்று குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

பல தடைகள் கடந்து, அமெரிக்க-சீன உறவுகளில் முன்னேற்றம் நிகழ்வதுபோல் தோன்றியபோது, அதை ஒரே வாக்கியத்தில் பைடன் தகர்த்துவிட்டதாகப் பலரும் பேசி வருகின்றனர்.

என்ன நடந்தது இந்தச் சம்பவத்தில்?

என்ன நடந்தது?

சந்திப்பு முடிந்து நடந்த செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டு, பைடன் விடைபெறவிருந்த போது ஒரு நிருபர் அவரிடம் ‘இன்னும் ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அழைப்பீர்களா?’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த பைடன் “இங்கு பாருங்கள், அவர் ஒரு சர்வாதிகாரி தான். அதாவது, அவர் கம்யூனிஸ்ட் நாடான ஒரு நாட்டை வழிநடத்துகிறார். அது நம்முடைய அரசாங்கத்தின் வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது," என்றார்.

இதற்கு முன்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம், பெய்ஜிங்கில் அமெரிக்க மற்றும் சீன உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதற்கு ஒரு நாளுக்குப் பிறகு பைடன் ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்று குறிப்பிட்டிருந்தார். அது சீனத் தரப்பைக் கோபப்படுத்தியிருந்தது.

அந்த நேரத்தில், சீன அதிகாரிகள் பைடனின் கருத்து ‘மிகவும் அபத்தமானது, பொறுப்பற்றது’ என்று கூறியிருந்தனர்.

அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சந்திப்பின் ஒரு பகுதியாக பைடனும், ஜின்பிங்கும் சந்திப்பு நடந்த இடத்திலிருந்த தோட்டத்தில் ஒன்றாக நடந்தனர்

சீன மக்கள் எப்படி எதிர்வினை ஆற்றினர்?

ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்று பைடன் குறிப்பிட்டது இன்னும் சீன அரசு ஊடகங்களில் அல்லது சீன சமூக ஊடகங்களில் பரவவில்லை. ஆனால் அதில் ஆச்சரியமில்லை, ஏனெனில், சீனாவில் ஊடகங்கள் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இந்தக் கருத்தைப் பார்க்கக் கிடைத்த சீன மக்கள் சிலர் இதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.

சீனாவின் சமூக வலைதளமான ‘வெய்போ’வில் ஒருவர், "பைடன் முதுகுக்குப் பின்னால் தவறான விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். இது சரியானது இல்லை,” என்று பதிவிட்டிருக்கிறார்.

மற்றொரு பதிவர், "பைடனுக்கு என்னதான் பிரச்னை? இவ்வளவு முயற்சிக்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றம் அனைத்தும் அவரது ஒரே வாக்கியத்தால் இல்லாமல் போய்விடும்," என்று எழுதியிருக்கிறார்.

மேலும் ஒரு பயனர், ‘பைடன் ஜின்பிங்கை சீனாவின் பேரரசர் என்று சொல்லியிருந்தால் ஷி ஜின்பிங் அதை விரும்பியிருப்பார்,’ என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் கேலியாகப் பதிவிட்டிருந்தார். எக்ஸ் சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனாவில் தணிக்கை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. பீஜிங்கில் உள்ள ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் நிருபரான ஜேம்ஸ் மேகர், தனது எக்ஸ் பக்கத்தில், பைடனின் செய்தியாளர் சந்திப்பின் ப்ளூம்பெர்க் டிவியின் நேரடி ஒளிபரப்பின் இறுதிப் பகுதி சீனாவில் துண்டிக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார். அதில்தான் பைடன் இந்தச் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.

அமெரிக்கா, சீனா, ஜோ பைடன், ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராணுவத் தகவல்தொடர்புகளை மீண்டும் தொடங்குவதுடன், அண்மைக் காலங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய சில விஷயங்களிலும் இரு தரப்பும் பல ஒப்பந்தங்களை அறிவித்திருக்கின்றன

என்ன ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன?

செய்தியாளர் சந்திப்பில் பேசிய பைடன், இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், அமெரிக்கா-சீனாவுக்கு இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் இருநாட்டு ராணுவங்களும் தங்கள் தொடர்புகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டதாக பைடன் கூறினார்.

மேலும், ‘நாங்கள் நேரடியான, திறந்த, தெளிவான பேச்சுவார்த்தைக்குத் திரும்பியுள்ளோம்," என்று அவர் கூறினார்.

தகவல்தொடர்பு இல்லாதது தான் ‘பிரச்னைகள் ஏற்படுவதற்குக் காரணம்’ என்று பைடன், இனிமேல் இரு அதிபர்களும் ‘தொலைபேசியில் உடனடியாகப் பேச முடியும்’ என்றும் கூறினார்.

ராணுவத் தகவல் தொடர்புகளை மீண்டும் தொடங்குவதுடன், அண்மைக் காலங்களில் பதற்றத்தை ஏற்படுத்திய சில விஷயங்களிலும் இரு தரப்பும் பல ஒப்பந்தங்களை அறிவித்திருக்கின்றன.

அமெரிக்காவிற்குள் ‘ஃபெண்டானில்’ எனும் மருந்து மீண்டும் இறக்குமதி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதில் அடங்கும். இந்த மருந்து அமெரிக்காவில் இறப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

சீனத் தரப்பு என்ன சொன்னது?

பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு ராணுவத்தினருக்கும் இடையேயான தகவல் தொடர்புகள் 'சமத்துவம் மற்றும் மரியாதையின் அடிப்படையில்' மீட்டெடுக்கப்பட்டதாக சீனா கூறியது.

"பூமி இரண்டு நாடுகளும் ஒரே நேரத்தில் வெற்றிபெறும் அளவுக்குப் பெரியது, ஒரு நாட்டின் வெற்றி மற்ற நாடுகளுக்கு ஒரு வாய்ப்பாகும்," என்று ஷி ஜின்பிங் தனது தொடக்க உரையில் கூறினார். "மோதல் இரு தரப்பினருக்கும் தாங்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது," என்றார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டின் சமயத்தில் நடந்த இந்தக் கூட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு தரப்பு அதிகாரிகளும் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பைக் குறைத்துவிட்டனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)