பாலத்தீனத்தைப் பிரித்து இஸ்ரேல் உருவாவதை எதிர்த்த நேரு, பின்னர் அதை அங்கீகரித்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
உலகின் மிகச் சிக்கலான ராஜதந்திர பிரச்சனைகளில் ஒன்றான இஸ்ரேல் - பாலத்தீன விவகாரத்தில் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நிலைப்பாடும் அணுகுமுறையும் என்னவாக இருந்தது?
தற்போது மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதலில், இந்தியா தனது ஆதரவை இஸ்ரேலுக்குத் தெரிவித்திருக்கிறது. இருந்தபோதும் இஸ்ரேலுக்கான இந்த ஆதரவு என்பது, "இறையாண்மையுள்ள, சுதந்திரமான பாலத்தீன நாடு" என்ற நீண்ட கால நிலைப்பாட்டைக் கைவிடவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்த நீண்ட கால நிலைப்பாடு என்பது இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பே வகுக்கப்பட்டுவிட்டது. அது பெரும்பாலும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பார்வையால் வடிவமைக்கப்பட்டது.
1936ல் பிரிட்டனிடமிருந்து விடுதலை கோரியும் யூதர்கள் அந்தப் பகுதியில் நிலம் வாங்குவதை அனுமதிக்கும் கொள்கையை எதிர்ப்பது குறித்தும் மிகப் பெரிய போராட்டத்தை பாலத்தீனர்கள் துவங்கினர். அந்தத் தருணத்தில் ஜவஹர்லால் நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டாா். அந்த அறிக்கையில் அரேபியர்களின் போராட்டத்தின் மீது தனக்கு அனுதாபம் இருப்பதாகக் குறிப்பிட்டார் நேரு.
"பாலத்தீன பிரச்னை என்பது தேசிய வாதத்தின் அடிப்படையிலானது. ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்கும் எதிராக மக்கள் சுதந்திரம் கோரி போராடுகிறார்கள். இது இனம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ இல்லை. யூதர்கள் புத்திசாலிகளாக இருந்தால், அரேபியர்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை ஆதரித்திருப்பார்கள். மாறாக, பிரிட்டிஷ் மேலாதிக்க சக்தியுடன் இணைந்து, அந்த நாட்டின் மக்களிடமிருந்தே பாதுகாப்புக் கோருகிறார்கள்" என்று குறிப்பிட்டார் நேரு.

பட மூலாதாரம், Getty Images
அரேபியர்களுக்கு ஆதரவு அளித்த நேரு
இதற்குப் பிறகு, 1946ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி கல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜவஹர்லால் நேரு, பாலத்தீன விவகாரத்தில் சுதந்திர இந்தியாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார். "அரபு மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாலத்தீனம், நீண்ட காலமாகவே அரபு நாடாகத்தான் இருந்து வருகிறது. ஆகவே அரேபியர்கள் ஏற்றுக்கொள்ளாத எந்த ஒரு தீர்வும் நியாயமானதாக இருக்காது. நீடித்த தீர்வாகவும் இருக்காது" என்று குறிப்பிட்டார்.
அதே நேரம், சமீப காலம்வரை பெரும் துன்பத்தை அனுபவித்த யூதர்களின் தாய்நாட்டிற்கான அபிலாஷையும் புரிந்துகொள்ளக்கூடியதே என்றும் கூறினார். சமீப காலம்வரை ஒன்றாக வசித்த யூதர்களும் பாலத்தீன அரேபியர்களும் எதிர்காலத்திலும் ஏன் ஒன்றாக வாழ முடியாது எனக் கேள்வி எழுப்பினார்.
அந்தத் தருணத்தில் உலகெங்கிலும் இருந்து யூதர்கள் அந்த நிலப்பரப்பில் குடியேறிவந்தனர். அதற்கு பாலத்தீனர்கள் எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இது குறித்து குறிப்பிட்ட நேரு, "யாரும் யூதர்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என சில சக்திகள் கூறிவருகின்றன. அரேபியர்களுக்கும் அதே ஆலோசனை வழங்கப்பட்டுவருகிறது. அது மோசமான யோசனை. யாருமே செய்ய விரும்பாத ஒன்றை அரேபியர்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும்" எனக் கேள்வியெழுப்பினார் நேரு.
இதற்குப் பிறகு, 1947ஆம் ஆண்டின் துவக்கத்தில் 'பாலத்தீனம் குறித்த லண்டன் மாநாடு' ஒன்று நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் குறித்து மீண்டும் பேசிய நேரு, "சுதந்திரத்திற்கான அரேபியர்களின் போராட்டத்தை இந்தியா அனுதாபத்துடன் பார்க்கிறது. அரேபியர்களின் ஒப்புதல் இல்லாமல் பாலத்தீனக் கேள்விக்கு ஒரு தீர்வு இருக்க முடியாது. வெளி சக்திகளின் குறுக்கீடு இல்லாமல் பாலத்தீனத்தின் எல்லா மக்களும் இணைந்து ஒரு உடன்பாட்டுக்கு வர முடியும் என நம்புகிறோம்" என்று குறிப்பிட்டார் நேரு.

பட மூலாதாரம், Getty Images
யூதர்களும் அரேபியர்களும் கூட்டாக வாழ நேருவின் ஆலோசனை
அந்தக் காலகட்டத்தில் பாலத்தீனம் என்பது அடிப்படையில் ஒரு அரபு நாடு என்பதே, இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வந்தது. அதே சமயத்தில் ஐரோப்பாவில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட யூதர்கள் மீதும் அனுதாபம் இருக்கிறது எனக் கூறியது. இந்தக் காலகட்டத்தில், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து பெரும் எண்ணிக்கையிலான யூதர்கள் பாலத்தீனப் பகுதியில் குடியேறி வந்தனர். இதையடுத்து, "யூதர்களின் சுயாட்சிப் பிரதேசத்தை உள்ளடக்கிய ஒரு அரபு நாடு" என்பதை ஒரு தீர்வாக இந்தியா முன்வைத்தது.
1947ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், பாலத்தீன நிலப்பரப்புக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டன் முடிவு செய்தது. அதனை எப்படி வழங்குவது எனத் தீர்மானிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் கமிட்டி ஒன்றை அமைத்தது. இந்தக் கமிட்டி, யூதர்களுக்கு என இஸ்ரேல் என்ற தேசத்தையும் அரேபியர்களுக்காக பாலத்தீனம் என்ற நாட்டையும் உருவாக்குவதாக ஒரு யோசனையை வைத்து.
அந்தத் தருணத்தில் நேரு, ஒரே பாலத்தீன நாடு என்பதுதான் சரியான யோசனை என்றாலும் தற்போதைய சூழலில் அது சரியாக வருமா என்று யோசித்தார். ஆகவே, ஒரு கூட்டாட்சித் தீர்வை இந்தியா முன்வைத்தது.
பிறகு, இது குறித்து சிறப்புக் குழு வாக்கெடுப்பை நடத்தியது. அதில் இந்தியா, இரான், யுகோஸ்லேவியா ஆகிய நாடுகள் ஒரு கூட்டாட்சி தேசத்தை முன்வைத்தன. ஜெருசலம் அதன் தலைநகராக இருக்கும். அரபு மாகாணமும் யூத மாகாணமும் தனித்தனி சுயாட்சித் தன்மையுடன் செயல்படும். பாதுகாப்பு, குடியேற்றம், வெளியுறவு ஆகியவை ஒரு மத்திய அரசால் கவனிக்கப்படும். இது சிறுபான்மை திட்டம் எனப்பட்டது.
பெரும்பான்மையான நாடுகள் பாலத்தீனத்தை இஸ்ரேல், பாலத்தீனம், ஜெருசலம் நகர் என பிரிக்கும் திட்டத்தை ஏற்றன. இந்த நிலையில், அரேபியர்கள் சிறுபான்மை திட்டத்தையும் யூதர்கள் பெரும்பான்மை திட்டத்தையும் ஆதரித்தனர். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பாலத்தீனம் நன்றி தெரிவித்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆசிய அரேபிய நட்பு
இதற்குப் பிறகு நடந்த பேச்சு வார்த்தைகள், கலந்தாலோசனைகள் அனைத்திலும் அரேபியர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகளையே இந்தியா எடுத்தது. பாலத்தீனத்தை பிரிப்பது குறித்து, 1947 நவம்பர் 28ஆம் தேதி வாக்கெடுப்பு நடந்தபோது, பிரிவினைக்கு எதிராக வாக்களிக்கும்படி ஐ.நாவுக்கான பிரதிநிதியிடம் நேரு தெரிவித்தார். இத்தனைக்கும் அதற்கு முந்தைய நாள் யூதர்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செய்ம் வெய்ஸ்மென், யூத தேச உருவாக்கத்தை ஆதரிக்கும்படி கோரி நேருவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
நவம்பர் 28ஆம் தேதி நடந்த வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவாக 33 வாக்குகளும், 13 வாக்குகள் எதிராகவும் விழுந்தன. இந்தியா எதிராக வாக்களித்தது. பத்து நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகி நின்றன.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்து சிரியா, சௌதி அரேபியா ஆகிய நாடுகள் நேருவுக்கு கடிதம் எழுதின.
இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுக்க காரணங்கள் இருந்தன. அந்தத் தருணத்தில் ஆசியா - அரேபிய நாடுகளை ஒருங்கிணைக்கக்கூடிய சக்தியாக உருவெடுக்க இந்தியா விரும்பியது. பாலத்தீனத்தில் அரேபியர்களை அந்தத் தருணத்தில் இந்தியா ஆதரிக்காவிட்டால், அவர்கள் பாகிஸ்தானுக்கு நெருக்கமாகும் வாய்ப்பும் இருந்தது. இந்தியா தொடர்ந்து பாலத்தீனத்தில் அரேபியர்களை ஆதரித்ததால், ஐக்கிய நாடுகள் சபையில், ஒரு வலுவான ஆசிய - அரேபிய குழு உருவெடுத்தது.
1955ல் நடந்த ஆசிய - ஆப்பிரிக்க மாநாட்டிற்குப் பிறகு, நேரு - கமால் அப்துல் நாசர் - மார்ஷல் டிட்டோ ஆகியோரின் ஒருங்கிணைப்பில் அணிசேராக் கொள்கையும் உருவானது.
ஆனால், இதற்கு நடுவில் இஸ்ரேல் குறித்த இந்தியாவின் பார்வை மாற ஆரம்பித்தது. 1950 நவம்பரில் இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்தது. ஆனால், இந்த அங்கீகாரம் என்பது ஒப்புதல் அல்ல என்று குறிப்பிட்டார் நேரு.
இதற்கு அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு இந்த நிலைப்பாடே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது. 1974ல் பாலத்தீன விடுதலை இயக்கத்தை பாலத்தீன மக்களின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக அங்கீகரித்தது இந்தியா. அரபு நாடுகளைத் தவிர்த்து, இந்த அங்கீகாரத்தை வழங்கிய முதல் நாடு இந்தியாதான். 1988இல் இந்தியா பாலத்தீன நாட்டை அங்கீகரித்தது. 1996ல் காஸாவில் இந்தியப் பிரதிநிதியின் அலுவலகம் திறக்கப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












