ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் விளையாடுவது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட மூன்று அணிகளுமே இறுதி போட்டிக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளன.
எட்டு அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் லீக் சுற்றிலிருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றன.
இந்த நிலையில், எந்த இரு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும், ஒவ்வொரு அணிகளுக்குமான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன உள்ளிட்டவை ரசிகர்களிடைய ஆர்வத்தை தூண்டியுள்ளன.
சூப்பர் 4 சுற்றில் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன.
தற்போது வரை 2 போட்டிகளை விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேசமயம், விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள இலங்கை அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும் பாகிஸ்தான், வங்க தேசம் அணிகள் முறையே 2வது மற்றும் 3வது இடங்களிலும் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
அடுத்து நடைபெறவுள்ள போட்டிகள் என்னென்ன?
செப்டம்பர் 25 (இன்று): பாகிஸ்தான் vs வங்கதேசம்
செப்டம்பர் 26 (வெள்ளிக்கிழமை): இந்தியா vs இலங்கை
இந்தியா இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தானும், வங்கதேசமும் 2 போட்டிகள் விளையாடி அதில், தலா 1 போட்டியை வென்றுள்ளன.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வியாழக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்த இரு அணிகளும் உள்ளன.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற ஒரு அணி குறைந்தபட்சம் 4 புள்ளிகள் பெற வேண்டியது அவசியமாகிறது.

தகுதி பெற்ற இந்திய அணி
பாகிஸ்தான், வங்கதேசத்துடனான இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றதால், 4 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இலங்கை அணியுடன் வெள்ளிக்கிழமை இந்திய அணிக்கு சூப்பர் 4-ல் ஒரு போட்டி விளையாடவுள்ளது.
இந்த போட்டியின் முடிவு இந்திய அணியின் இறுதிப் போட்டிக்கான தகுதியில் எந்த மாற்றத்தையும் செய்யாது.
பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தானும், வங்கதேசமும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.
இந்த இரு அணிகளுமே இன்று நடைபெறும் போட்டியில் விளையாடுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணியே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்தியா - பாகிஸ்தான் இறுதி போட்டி நடப்பது சாத்தியமா?
வங்கதேசத்துடன் இன்று (செப்.25) நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் வென்றால் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறும்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் 2 போட்டிகளை விளையாடிய இந்திய அணி அந்த போட்டிகளில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி, இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












