தீவிர வலதுசாரி கட்சிக்கு பிரான்ஸ் மக்கள் வாக்களித்ததற்கு 4 காரணங்கள்

பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றிக்கான 4 காரணங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, முன்பு எப்போதும் இல்லாத வகையில் பிரான்ஸ் வாக்காளர்கள் மரைன் லே பென் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர்
    • எழுதியவர், அலெக்ஸாண்ட்ரா ஃபூஷ்ஷே
    • பதவி, பிபிசி உலக சேவை

பிரான்சின் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணிக் கட்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் 33% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது.

இடதுசாரிகள் கூட்டணியான புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணி, 28% வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பிரான்ஸ் அதிபர் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கூட்டணி 21% வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

நாடாளுமன்றத்தில் வலதுசாரிகள் அதிக இடங்களைப் பெறுவதைத் தடுக்க, மையவாத மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமென அதிபர் மக்ரோங் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில் முதல் முறையாக மரைன் லே பென் மற்றும் ஜோர்டான் பர்டெல்லா தலைமையிலான தேசிய பேரணிக் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பிரான்ஸ் வாக்காளர்கள் இந்த கட்சிக்கு ஆதரவளித்ததின் சில முக்கிய காரணங்கள் என்ன?

இது சாத்தியமானது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரான்சின் மூத்த அரசியல் விமர்சகர் அலைன் டுஹாமெல் கூறுகிறார்.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

1) உள்நாட்டுக் காரணம் மற்றும் பொருளாதாரத்தில் நிலை

மக்களின் வாங்கும் திறனைக் குறைத்த விலைவாசி உயர்வு, அத்துடன் எரிபொருட்களின் விலை உயர்வு, மருத்துவ சேவைகள் முறையாகக் கிடைப்பதில் சிக்கல், "பாதுகாப்பின்மை’’ என்று பிரான்ஸ் மக்கள் அழைக்கும் குற்றங்கள் அதிகரித்து வரும் அச்சம் ஆகியவை வாக்காளர்களின் முதன்மை பிரச்சனைகளாக உள்ளன.

பிரான்சின் பொருளாதாரம் நல்ல நிலையிலிருந்தாலும், பெரிய நகரங்களிலிருந்து தள்ளிச் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் வசிக்கும் மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினர்.

நிதியும், கவனமும் பெரிய நகரங்களுக்குச் சென்ற நிலையில், பிற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது. சில இடங்களில் வேலைவாய்ப்பின்மை 25 சதவீதத்தைக் கூட தொட்டது.

உள்ளூரில் சிலரால் வீடுகளை வாங்க முடியாத அளவுக்கு, வீடுகளின் விலை அதிகரித்தது. நிதிப் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன.

நகர்ப்புறங்களில் உள்ள மிகப்பெரிய சுகாதார மையங்களுக்காக, உள்ளூர் சுகாதார மையங்கள் மூடப்பட்டது பலரைக் கவலையடைய வைத்தது.

உலகமயமாக்கலில் பலனடைந்தவர்கள் மக்ரோங்கிற்கு ஆதரவளித்தனர். இதில் கைவிடப்பட்டவர்கள் வலதுசாரிகள் பக்கம் திரும்பினர் என பேராசிரியர் தாமஸ் பிகெட்டி பிபிசியிடம் கூறினார்.

Capital in the Twenty-First Century என்ற அதிக விற்பனையான புத்தகத்தை எழுதிய தாமஸ் பிகெட்டி, ’’ தொழிற்சாலைகள் மூடப்பட்டது, பொதுச் சேவைகளை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டது, ரயில்கள் நிறுத்தப்பட்டது, மருத்துவமனைகள் மூடப்பட்டது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்ட சிறு நகரங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் வலதுசாரிகளுக்கு ஆதரவளித்தனர். பெரிய நகரங்களிலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் மக்களுக்கு, தங்களது குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி வழங்குவது கூட கடினமானதாக உள்ளது’’ என்கிறார்.

பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றிக்கான 4 காரணங்கள் என்னென்ன?
படக்குறிப்பு, 37 வயதான தூய்மைப்பணியாளரான அவுரிலே தனது இரண்டு மகன்களுடன் அமியென்ஸ் நகரில் வசிக்கிறார்

பாரிஸின் கிழக்கே பொன்டால்ட்-கம்பால்ட் நகரில் வசிக்கும் பேட்ரிக், ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் தேசிய பேரணி கட்சிக்கு வாக்களித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், ’’இங்கு வசிக்கும் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அவர்கள் வாக்களிப்பதில் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. சாலைகளில் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள்’’ என்றார்.

37 வயதான தூய்மைப்பணியாளரான அவுரிலே தனது இரண்டு மகன்களுடன் வடக்கு பிரான்ஸின் அமியென்ஸ் நகரில் வசிக்கிறார். இங்குதான் பிரான்ஸ் அதிபர் மக்ரோங் வளர்ந்தார். தேசிய பேரணி கட்சியினருடன் தான் உடன்படுவதில் ’பாதுகாப்பின்மை’ முதன்மையானது என்கிறார்.

'’நான் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து வேலைக்குச் செல்வேன். முன்பு சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்வேன். ஆனால் இப்போது காரில் செல்கின்றேன்’’ என பிபிசியிடம் கூறினார்.

‘’இளைஞர்கள் எப்போதும் வெளியே சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பயமாக உள்ளது’’

ஓய்வூதியம் வழங்குவதற்கான வயதை 62-இல் இருந்து 64-ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மக்ரோங் அரசு கொண்டுவந்த சட்டம் வாக்காளர்களிடையே பிரச்சனையாக உருவெடுத்தது.

ஓய்வூதிய திட்டத்தை நிலைக்க வைக்க, சீர்திருத்தம் அவசியம் என்று மக்ரோங் கூறினார்.

குளிர்காலத்தில் வீடுகளை வெப்பப்படுத்தும் எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலை சமீப காலத்தில் கடுமையாக உயர்ந்தது.

100 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மின்சாரம்/எரிவாயுவின் விற்பனை வரி குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும், சில மாதங்களில் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தேசிய பேரணி கட்சியின் தலைவர் ஜோர்டான் பர்டெல்லா கூறினார்.

2) தற்போது உள்ள அமைப்பின் மீதான வெறுப்பு

பிரான்ஸில் தற்போது உள்ள அரசியல் அமைப்பு தங்களுக்கு ஏற்றதாக இல்லை என வாக்காளர்கள் அடிக்கடி கூறி வந்துள்ளனர்.

"நான் திருப்தி அடைகிறேன், ஏனென்றால் எங்களுக்கு மாற்றம் தேவை," என்று மரைன் லே பென் கட்சியின் வடக்கு பகுதி கோட்டையான ஹெனின்-பியூமண்டில் வசிக்கும் ஜீன்-கிளாட் கெயில்லெட் ஞாயிற்றுக்கிழமையன்று வாக்களித்த பிறகு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

’’எந்த விஷயமும் மாறவில்லை. அவை மாற வேண்டும்’’

’’மக்கள் சோர்ந்து போனதால் அவர்களால் [தேசிய பேரணி] வாக்குகளைப் பெற முடிந்தது. எங்களுக்குக் கவலை இல்லை, அவர்களுக்கு வாக்களித்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்’’ என்கிறார் தேசிய பேரணி கட்சியின் மற்றொரு ஆதரவாளரான 80 வயதான மார்குரைட்.

'’ஆனால் இப்போது ​​நான் பயப்படுவது என்னவென்றால், மற்ற அரசியல் கட்சிகள் தடைகளை ஏற்படுத்தும். நாங்கள் வாக்களித்தோம், இவைதான் முடிவுகள். அவற்றை ஏற்றுக்கொண்டு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.’’ என்கிறார் அவர்.

ஆனால், யமினா அட்டோ தேசிய பேரணி கட்சியின் வெற்றியைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.

தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவாக வாக்காளர்கள் தவறாக வழி நடத்தப்பட்டதாவும், அவர்களின் முடிவு பிரான்ஸ் சமுதாயத்தில் ஆபத்தான பிளவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

’’அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. நான் மிகவும் வருத்தமாக உணர்கிறேன். ஏனென்றால் என்ன நடக்கிறது என்பதை மக்கள் உணரவில்லை. அவர்கள் வாங்கும் திறன் குறித்தும், பிற குறுகிய கால விஷயங்களை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளனர்’’ என்கிறார் யமினா.

பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றிக்கான 4 காரணங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சிக்கு அதிபர் மக்ரோங்கே காரணம் என கூறப்படுகிறது

நாடு தற்போதுள்ள நெருக்கடிக்கு அதிபர் மக்ரோங்கை பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

எகனாமிஸ்ட்டின் பாரிஸ் அலுவலக தலைவரான சோஃபி பெடர், “அனைத்து விதமான அரசியல் சார்பு மக்களையும் ஒன்றிணைக்க மக்ரோங் ஒருமித்த இயக்கத்தை உருவாக்கினார். அது பலனளித்தது. நாடாளுமன்றத்திலும் இரு தரப்புக்கும் இடையே நடந்த முடிவில்லாத சண்டைக்கு இது முற்றுப்புள்ளி வைத்தது''

"ஆனால் விளைவு என்னவென்றால், இடது மற்றும் வலது மிதவாதிகள் அனைவரும் மக்ரோங் கட்சியில் சேர்ந்தனர். அவருக்கு மாற்றாக, தீவிர வலதுசாரிகள் மட்டுமே இருந்தனர்’’ என பிபிசியிடம் கூறினார்.

3) குடியேற்றம் மற்றும் பிரான்ஸ் அடையாளத்தைச் சுற்றியுள்ள அச்சம்

தேசிய பேரணியின் நாடாளுமன்ற தலைவரான மரைன் லே பென், தனது கட்சியை பிரதான அரசியல் நீரோட்டத்துடன் இணைக்கவும், மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றவும் பல ஆண்டுகளாக பணியாற்றினார்.

தனது தந்தை ஜீன்-மேரி லே பென் மற்றும் சிலர் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி கட்சியை தேசிய பேரணி என்று மறுபெயரிட்டதுடன், கட்சியின் கொள்கையை யூத எதிர்ப்பு மற்றும் தீவிர கொள்கையிலிருந்து நகர்த்தினார்.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான கட்சியாகவே இது உள்ளது.

புலம்பெயர்ந்தோருக்கான சமூக நலனை மட்டுப்படுத்தவும், வெளிநாட்டில் பிறந்த பெற்றோரைக் கொண்ட குழந்தைகளுக்கு பிரான்ஸ் குடியுரிமைக்கான உரிமையை அகற்றவும் தேசிய பேரணி கட்சியின் தற்போதைய தலைவர் ஜோர்டான் பர்டெல்லா வலியுறுத்துகிறார்.

புலம்பெயர்ந்தோர், குறிப்பாக முஸ்லீம்கள், பிரான்ஸ் சமுதாயத்தில் இணைய மாட்டார்கள் என்ற அச்சத்தை வைத்து இக்கட்சி அரசியல் செய்கின்றது.

எடுத்துக்காட்டாக, இக்கட்சியின் வேட்பாளரான இவான்கா டிமிட்ரோவா,’’பிரான்ஸ் தேசத்தின் சட்டங்களுக்கு மேலாக தங்கள் மதச் சட்டத்தை வைத்திருக்க விரும்பும் குடியேறிகளுக்கு எதிராக தங்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்’’ என்று பிபிசியிடம் கூறினார்

தேசிய பேரணி கட்சியின் நேட்டோ எதிர்ப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு கொள்கைகள் மென்மையாக்கப்பட்டுள்ளன.

விளாடிமிர் புடினில் ரஷ்யாவுடனான தேசிய பேரணியின் நெருங்கிய உறவுகள் அமைதியாகக் கைவிடப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முழுக்கத்தை 2022 முதல் தேசிய பேரணி கட்சி முன்னிலைப்படுத்தவில்லை.

பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றிக்கான 4 காரணங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புலம்பெயர்ந்தோர், குறிப்பாக முஸ்லீம்கள், பிரான்ஸ் சமுதாயத்தில் இணைய மாட்டார்கள் என்ற அச்சத்தை வைத்து தேசிய பேரணி கட்சி அரசியல் செய்கின்றது.

4) சமூக ஊடகத்தில் தீவிர பரப்புரை

பிரான்ஸ் தேர்தல்: தீவிர வலதுசாரி கட்சியின் வெற்றிக்கான 4 காரணங்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோர்டான் பர்டெல்லாவை டிக்டோக் அரசியல்வாதி என்று அழைக்கின்றனர்

தேசிய பேரணி கட்சி எளிய முழக்கங்கள் மற்றும் யோசனைகளில் வெற்றிகரமாகப் பிரசாரம் செய்தது.

மக்கள் தங்கள் பிரெஞ்சு அடையாளத்தை இழக்க நேரிடும் என்ற அச்சத்தையும்,விலைவாசி உயர்வையும் முன்னிலைப்படுத்தி இக்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

வாக்காளர்களை இடையே தாங்கள் நம்பகமானவர்கள் மற்றும்ன் பரிச்சயமானவர்கள் என்பதை உணர வைக்க சமூக ஊடகங்களை மிகவும் திறம்படப் பயன்படுத்தினர்.

"பிரான்சில், ஜோர்டான் பர்டெல்லாவை டிக்டோக் அரசியல்வாதி என்று அழைக்கிறோம். ஏனென்றால் அவர் சமூக ஊடகங்களில் மக்களைத் திரட்டும் அரசியல்வாதி" என்று பிரான்ச்-காம்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வின்சென்ட் லெப்ரூ பிபிசியின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் கூறினார்.

’’பெரும்பாலான மக்கள் இனவெறி கொண்டவர்கள் அல்ல. அவர்கள் தற்போது உள்ள அமைப்பால் சோர்வடைந்துவிட்டனர். அவர்கள் மக்ரோங்கின் கொள்கைகளால் சோர்வடைந்துள்ளனர்’’ என்கிறார் தேசிய பேரணிக்கு எதிராகப் போட்டியிடும் புதிய பாப்புலர் ஃப்ரண்ட் கூட்டணியின் வேட்பாளர் சார்லஸ் குலியோலி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)