ஆவின் சர்ச்சை: குறைந்த கொழுப்பு பால் அதிக விலைக்கு விற்பனையா? - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

மனோ தங்கராஜ் விளக்கம்
படக்குறிப்பு, ஆவின் நிறுவனம் வளர்வதைப் பொறுக்க முடியாமல் சிலர் அவதூறுகளைப் பரப்புகிறார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் கூட்டுறவு பால் இணையமான ஆவின் தொடர்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. கொழுப்பு குறைந்த பால் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது, குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் போன்ற தீவிர குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசினார் தமிழக பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.

பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் அவர் பேசியதிலிருந்து:

கேள்வி: கடந்த சில மாதங்களாக ஆவின் பால் கொள்முதல் குறித்தும் விற்பனை குறித்தும் பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகின்றன. ஆவினில் உண்மையில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது?

ப. நான் இதை வரவேற்கிறேன். கடந்த சில நாட்களில் ஆவின் மிகப் பெரிய பேசு பொருளாகியிருக்கிறது. இது எங்களுக்கு லாபம்தான். பல கோடி செலவு செய்தாலும் இந்த அளவு விளம்பரம் கிடைக்காது.

ஆவின் தமிழ்நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்திற்கு பல ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கலாம். ஆனால், இரண்டு விதங்களில் மக்களுக்கு மிகப் பெரிய உதவியை இந்த நிறுவனம் செய்துவருகிறது.

முதலாவதாக, எந்த விவசாயியை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் தங்கள் உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என நினைப்பார்கள். ஆவின் இருப்பதால்தான் பால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கிறது.

அதேபோல, விவசாயப் பொருட்கள் எல்லாம் உடனடியாக விற்றாக வேண்டிய பொருட்கள். அந்தக் கட்டமைப்பு முழுக்க முழுக்க தனியாரிடம் இருந்தால், மிக ஆரோக்கியமற்றதாக இருக்கும். ஆவின் இருப்பதால் உத்தரவாதப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பு இருக்கிறது.

மற்றொரு பக்கம், தனியார் எப்படி பாலின் விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது தெரியும். அவர்கள் நிச்சயம் லாபத்துடன்தான் விலையை நிர்ணயிப்பார்கள். அரசு அமைப்பு அப்படிச் செய்யாது.

இது நடுத்தர வர்க்கத்திற்கு கீழே உள்ள மக்களுக்கு மிகுந்த பொருளாதார பலனுடையதாக இருக்கும். இதைத்தான் ஆவின் செய்துவருகிறது. இந்த நிறுவனத்தை மிகக் கவனமாக கையாண்டு வருகிறோம்.

மனோ தங்கராஜ் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழகத்தில் தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.

பால் கொள்முதல் குறைந்துவிட்டதா?

கேள்வி: கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஆவினின் சராசரி பால் கொள்முதல் 35 லட்சம் லிட்டராக இருந்ததாகவும் தற்போது 29 - 30 லட்சம் லிட்டராகக் குறைந்துவிட்டதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் உண்மை என்ன?

பதில்: இப்போது சராசரியாக தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறோம். இது ஒரு நல்ல அளவு. ஏனென்றால் பால் உற்பத்தி என்பது எப்போதுமே ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கும்.

மழை பெய்வது, தீவனம் கிடைப்பது, மாடு சினையாக இருப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் இதனைப் பாதிக்கும். ஆகவே, சராசரியாக தினசரி 30 லட்சம் லிட்டர் பால் என்பது ஒரு நல்ல அளவுதான்.

ஒரு கட்டத்தில் தினசரி 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் இருந்தது உண்மைதான். அதற்குக் காரணம் உற்பத்தி அதிகரிப்பு அல்ல. கோவிட் பரவல் இருந்தபோது, வாங்குவதற்கு தனியார் இல்லாததால், இங்கே கொள்முதல் அதிகரித்தது. இதை வைத்துக்கொண்டு, தவறான பிரச்சாரத்தை இப்போது செய்கிறார்கள்.

கேள்வி: ஆவின் பாலுக்கு தமிழ்நாடு முழுவதுமே நல்ல தேவை இருக்கிறது. ஆகவே கொள்முதலை அதிகரித்து, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யலாமே? அதில் என்ன சவால் இருக்கிறது?

பதில்: அந்த சவாலை எதிர்கொள்ள பல விஷயங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆறு மாத காலத்திற்குள் கால்நடை பராமரிப்புக்கு ஒரு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் அளித்திருக்கிறோம்.

புதிய கால்நடைகளை வாங்குவதற்கான கடனாக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இவை தொடர்பாக தற்போது 1,06,000 விண்ணப்பங்களை நாங்கள் பெற்றிருக்கிறோம். மிகக் குறுகிய காலகட்டத்திற்குள் இதைச் செய்திருக்கிறோம்.

அடுத்ததாக, மாடுகளுக்கு நல்ல தீவனத்தை அளிப்பதற்காக புதிய நிறுவனம் ஒன்றை விருதுநகரில் துவங்கப்போகிறோம். இன்னும் மூன்று தீவன நிறுவனங்களுக்கான முன்னெடுப்புகளைச் செய்துவருகிறோம். எந்த ஊருக்கு வேண்டுமானாலும் சென்று எந்த விவசாயிடம் வேண்டுமானாலும் கால்நடை பராமரிப்பில் அரசு செயல்படும் விதம் குறித்துக் கேளுங்கள்.

கொள்முதல் செய்யும்போதே, பாலின் தரத்தைப் பரிசோதித்து, அந்த இடத்திலேயே அதன் மதிப்பை நிர்ணயித்து சீட்டு அடித்துக் கொடுக்கப்பட்டுவிடுகிறது. பாலுக்கு பணம் பாக்கியிருக்கிறது, பாலைக் கொட்டி போராட்டம் போன்ற எதையாவது இப்போது பார்க்க முடிகிறதா? அந்த அளவுக்கு பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்.

மனோ தங்கராஜ் விளக்கம்

பட மூலாதாரம், AAVIN TN/TWITTER

படக்குறிப்பு, பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் பல சவால்கள் ஏற்பட்டாலும், அதை சிறப்பாகக் கையாண்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

ஆவினில் உண்மையில் என்ன பிரச்னை?

கேள்வி: நீங்கள் சவாலை சமாளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். ஆனால், உண்மையான பிரச்சனை என்ன? ஆவினால் கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்ய முடியாததால் பால் கொள்முதலை அதிகரிக்க முடியவில்லையா?

பதில்: எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், கோரிக்கைகள் இருக்கின்றன. பாலின் விலையை அதிகரித்துத் தர வேண்டுமென விவசாயிகள் கோரிவருகிறார்கள். அதேபோல, பாலின் சப்ளையில் எங்கேயும் இடைவெளி இல்லை. யாராவது பால் கேட்டு இல்லை என சொன்னதில்லை.

சென்னை நகரத்தைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக 14,30,000 - 15,00,000 லிட்டர் பால் விற்பனையாகியிருக்கிறது. ஆனால், இப்போது இந்த அளவு 15 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது. இது அதிகரிக்கலாம்.

15 லட்சம் லிட்டர் தேவையிருக்கும்போது, ஆவினால் அந்த அளவுக்குக் கொடுக்க முடியவில்லையென்றால், பிரச்சனை இருக்கிறதென்று சொல்லலாம். ஆனால், அப்படியில்லையே.

இப்போது அதிகமாக கொள்முதல் செய்து, அதிகமாக விற்பதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறோம்.

ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் வழங்கப்படுகிறது. வாங்கிய பாலுக்கு விலை நிலுவையில்லாமல் கொடுக்கப்பட்டுவிடுகிறது. சப்ளை ஒழுங்காக இருக்கிறது. பிறகு என்ன பிரச்சனை?

கேள்வி: சமீபகாலமாக பரவலாக விற்கப்பட்டுவரும் 4.5% கொழுப்புச் சத்தைக் கொண்ட பச்சைப் பாலை நிறுத்திவிட்டு, 3.5% கொழுப்பைக் கொண்ட ஊதா நிறப் பாலை அதிகமாக விற்க வற்புறுத்துகிறீர்கள் என குற்றச்சாட்டு இருக்கிறது...

பதில்: எல்லாப் பாலிலும் ஏதோ ஒரு விதத்தில் எதையாவது சேர்க்க வேண்டியிருக்கிறது அல்லது நீக்க வேண்டியிருக்கிறது. பால் கொள்முதல் செய்யப்படும்போது, அதில் சராசரியாக 3.5% கொழுப்புச் சத்து இருக்கும்.

பிறகு அந்தப் பால், பண்ணைக்குக் கொண்டுவரப்பட்டு அதில் ஒரு சதவீதம் கொழுப்பு அதிகமாக சேர்க்கப்பட்டு, பாக்கெட் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஒருவர் எதுவும் சேர்க்காத பாலை விரும்புவார்களா, அல்லது கொழுப்பு சேர்த்த பாலை விரும்புவார்களா?

ஆகவே, ஒரே ஒரு தயாரிப்பில் மட்டும் பாலை வாங்கி, கொழுப்புச் சத்தை மாற்றாமல் விற்க முடிவுசெய்தோம். அந்த அளவு கொழுப்புச் சத்து போதும் என மருத்துவர்களும் சொன்னார்கள். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இப்போது அந்தப் பால் 3 லட்சம் லிட்டர் வரை விற்பனையாகிறது.

எங்களுடைய நோக்கம் விவசாயியிடம் பாலை வாங்கி, தரமாக நுகர்வோருக்கு அளிப்பதுதான். அந்தப் பாலின் விற்பனையை நாங்கள் ஊக்குவித்தால், அப்படிச் செய்யக்கூடாது என யார் சொல்ல முடியும்?

விலையை அதிகரித்திருப்பதாக அடுத்த குற்றச்சாட்டைச் சொல்கிறார்கள். இதே 3.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள வேறு நிறுவனங்களின் பால் லிட்டருக்கு 12 ரூபாய் முதல் 16 ரூபாய்வரை அதிகம். ஆகவே விலையை அதிகரித்ததாகச் சொல்வது பொய்.

கொழுப்பை எடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எந்தக் கொழுப்பை எடுத்தோம்? எந்த அளவுக்கு கொழுப்புடன் பால் வருகிறதோ, அதே அளவுக்கு கொழுப்புடன் விற்கிறோம்.

ஆவின் நிறுவனம் வளர்வதைப் பொறுக்க முடியாமல் சிலர் அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

மனோ தங்கராஜ் விளக்கம்

பட மூலாதாரம், AAVIN TN/TWITTER

படக்குறிப்பு, குறைந்த கொழுப்புள்ள பாலை கூடுதல் விலைக்கு ஆவின் விற்பதாக புகார் எழுந்துள்ளது.

‘பச்சைப் பால் பாக்கெட்’ பிரச்னை

கேள்வி: புதிய தயாரிப்புகளை விற்பதை யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால், ஏற்கனவே விற்றுக்கொண்டிருந்த பச்சைப் பாலை நிறுத்திவிட்டு, இந்தப் புதிய பாலின் விற்பனையை அதிகரிக்க வற்புறுத்துகிறீர்கள் என்பதுதான் குற்றச்சாட்டு..

பதில்: விற்பனையை நிறுத்தினோம் என்று சொல்வது தவறு. குறைக்க முயற்சி செய்தோம் என்பதை நான் தைரியமாகச் சொல்வேன். அந்தப் பால் தேவையில்லை என்று சொல்வேன். என்னுடைய வாடிக்கையாளருக்கு இது தேவை, இது தேவையில்லாதது என்று சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறதா இல்லையா?

நான் பாலை வாங்கி அப்படியே தருகிறேன். இது உடலுக்கு நல்லது என்று சொல்லும் உரிமை இருக்கிறதா இல்லையா?

தவிர, இதைவிட அதிக கொழுப்புள்ள பாலை விற்றுக்கொண்டிருக்கிறோமே... 6.5 சதவீத கொழுப்புள்ள பாலை ஆரஞ்சு வண்ணத்தில் கொடுக்கிறோமே.. கொழுப்பு மிக மிகக் குறைவான பாலையும் விற்கிறோமே...

கேள்வி: பாலில் இருந்து ஒரு சதவீத கொழுப்பை எடுத்தால், அதன் விலை 10 ரூபாய். அந்த அளவுக்கு கொழுப்பை எடுத்துவிட்டு அதே விலைக்கு விற்பது குறித்துத்தான் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கேள்வியெழுப்புகிறார்..

பதில்: இதே கேள்வியை அமுலிடம் கேட்க வேண்டியதுதானே. அமுல் நாங்கள் 44 ரூபாய்க்கு விற்கும் பாலை 56 ரூபாய்க்கு விற்கிறதே..

கேள்வி: ஆனால், கொழுப்புச் சத்து குறைக்கப்பட்ட பாலை அதே விலைக்கு விற்பது சரியா?

பதில்: அரை லிட்டர் பாலை எடுத்து, நிலைப்படுத்தி, பாக்கெட் செய்யுங்கள். எவ்வளவு செலவாகிறதென்று பாருங்கள். அந்தப் பாலுக்கு நாங்கள் வைத்திருக்கும் 44 ரூபாய் என்பது நியாயமான விலையா, அதிகமான விலையா என்று பாருங்கள். அது நியாயமான விலையும் இல்லை, அதிகமான விலையும் இல்லை. அது குறைந்த விலை.

மனோ தங்கராஜ் விளக்கம்

பட மூலாதாரம், AAVIN TN/TWITTER

'ஆவின் கோல்டு' எதற்காக?

கேள்வி: அதேபோல நிறை கொழுப்புள்ள ஆரஞ்சு வண்ண பாக்கெட் பாலை சில மாவட்டங்களில் நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது..

பதில்: அந்த பால் எவ்வளவு வேண்டுமென சொல்லுங்கள். எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்.

கேள்வி: இந்த ஆரஞ்சு வண்ணப் பாலுக்குப் பதிலாக ஆவின் கோல்டு என்ற பாலை சந்தைப்படுத்துவதாக சொல்லப்படுகிறது...

பதில்: ஆவின் கோல்டு என்பது இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட பால் அல்ல. ஏற்கனவே சில மாவட்டங்களில் மட்டும் விற்கப்பட்டுவந்தது. மாநிலம் முழுவதும் அது கிடைக்காது. இப்போதுதான், இது போன்ற பிராண்டுகளை ஒரே மாதிரி ஆக்கிக்கொண்டிருக்கிறோம்.

ஒரே பிராண்ட், ஒரே விலை, ஒரே தரம் எனக் கொண்டு வர முயற்சிக்கிறோம். இனிமேல் மாவட்டங்களில் புதிய புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, அதனை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து, தேவையைக் கணித்துத்தான் அறிமுகம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இனிமேல் மூன்று தயாரிப்புகளை மட்டுமே வெளியிடலாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது. குறைந்த கொழுப்புள்ள பால், சாதாரண கொழுப்புள்ள பால், நிறை கொழுப்புள்ள பால்.

கேள்வி: ஆகவே, 4.5% கொழுப்புள்ள பச்சை நிற பால் தேவையில்லை எனக் கருதுகிறீர்களா..?

பதில்: தேவையில்லை என மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதை மீறி யாருக்காவது தேவைப்பட்டால் தருவோம்... ஆனால், அதன் விற்பனை குறைந்து வருகிறது.

மனோ தங்கராஜ் விளக்கம்

பட மூலாதாரம், AAVIN TN/TWITTER

ஆவினில் 'பால் பவுடர்' பாலா?

கேள்வி: ஆவின் பாலின் விற்பனையில் பச்சை நிறப் பாலின் விற்பனை 40 சதவீதம் என்று சொல்கிறார்களே?

பதில்: அந்தப் பாலைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஹோட்டல்களில்தான் வாங்குவார்கள். கூடுதலாக தண்ணீர் சேர்க்கலாம் என்பதால் அந்தப் பாலை விரும்புகிறார்கள். இதைத் தவிர அந்தப் பாலை விரும்ப வேறு எந்தக் காரணமும் இல்லை.

ஆனால், 3.5% கொழுப்பு போதுமானது என்பது மருத்துவர்களின் கருத்து. ஆகவே அப்படி ஒரு பாலை அறிமுகப்படுத்த, அதன் நன்மையைப் பற்றிப் பேச எனக்கு உரிமை இருக்கிறது.

கேள்வி: ஆவினின் விற்பனைக்கு ஏற்ற அளவுக்கு பாலைக் கொள்முதல் செய்ய முடிவதில்லை என்பதால் வேறு மாநில கூட்டுறவு சங்கங்களின் பால் பண்ணையில் இருந்து பால் பவுடரை வாங்கி, பால் தயாரித்து அளிப்பதாக சொல்லப்படுகிறது...

பதில்: உலகம் முழுவதுமே உள்ள வழக்கம்தான் இது. எப்போதெல்லாம் பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் பால் பவுடரையும் வெண்ணையையும் சேர்த்து பாலை மீண்டும் உருவாக்குவார்கள். காரணம், திடீரென பால் உற்பத்தி அதிகரித்து பால் பண்ணைக்கு வரும். அதனை பாலாகவே எத்தனை நாட்களுக்கு சேமித்து வைக்க முடியும்? அப்போது அதனை பால் பவுடராகவும் வெண்ணையாகவும் பிரிப்பார்கள்.

தேவை அதிகரிக்கும்போது மீண்டும் இந்த இரண்டையும் சேர்த்து பாலாக்குவார்கள். ஆவினைப் பொறுத்தவரை, இதுபோலச் செய்ய வேண்டிய தேவை எப்போதாவது வரும். உதாரணமாக, 6.5% கொழுப்புள்ள பாலை விற்கிறோம். அதற்கு கண்டிப்பாக கொழுப்பை சேர்க்க வேண்டியிருக்கும். அதேபோலத்தான் இது.

கேள்வி: இல்லை, இதுபோல பால் பவுடரை வைத்து பாலை உருவாக்குவதைக் குற்றம் சொல்லவில்லை. அதற்கான பால் பவுடர் வேறு மாநில பால் நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுவதைத்தான் சொல்கிறார்கள்..

பதில்: அது எப்போதுமே உள்ளதுதானே. நெருக்கடி ஏற்படும்போது ஓபன் டெண்டர் முறையில் பால் பவுடர் வாங்கப்படும். தமிழ்நாடு மட்டுமல்ல, எல்லா மாநிலங்களுமே இதைச் செய்கின்றன. இதில் குற்றம் சுமத்த என்ன இருக்கிறது?

கேள்வி: எல்லா பால் நிறுவனங்களும் லாபகரமாக இயங்கும்போது, ஆவினால் ஏன் அப்படிச் செய்ய முடியவில்லை..? இத்தனைக்கும் ஆவின் பாலுக்கான தேவை எப்போதுமே இருக்கிறது...

பதில்: இப்போது நிறைய விற்பனை நிலையங்களை அமைக்கச் சொல்லியிருக்கிறோம். யாருக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு தரத் தயாராக இருக்கிறோம். தவிர, கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஆவினையும் ஒப்பிடக்கூடாது.

தனியார் நிறுவனங்களில் ஊழியர்களுக்கு என்ன சம்பளம் கொடுப்பார்கள், அவர்களுக்கு என்ன சலுகைகள் இருக்கும், ஊழியர் நலத் திட்டங்கள் எப்படியிருக்கும்? அதே நேரம் ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் முறை எப்படியிருக்கும்? அதுபோல ஆவினில் செய்ய முடியுமா?

அதனால், எப்போதுமே ஆவினில் தயாரிப்புச் செலவு அதிகம். முடிவுகளை விரைவாக எடுக்க முடியாது. அரசு நடத்தும் நிறுவனம் என்பதால், லாபம் என்பது இதன் நோக்கமல்ல. அதனால், அவர்களைப் போல இங்கே விலை வைக்க முடியாது. தனியார் பால் நிறுவன பாலின் விலை என்ன, இங்கே என்ன விலைக்கு விற்கப்படுகிறது?

இங்கே 44 ரூபாய்க்கு விற்கப்படும் பாலை 64 ரூபாய்க்கு விற்கிறார்கள். 20 ரூபாய் விலை அதிகம். ஆகவே கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஆவினையும் ஒப்பிட முடியாது. தவிர, இதைப் பற்றியெல்லாம் பா.ஜ.க. பேசவே கூடாது.

லாபத்தில் இயங்கிய பல பொதுத் துறை நிறுவனங்களை விற்றவர்கள் அவர்கள். நாங்கள் ஒரு பொதுத் துறை நிறுவனத்தை இழப்பு இல்லாமல் நடத்திவருகிறோம்.

மனோ தங்கராஜ் விளக்கம்

பட மூலாதாரம், AAVIN TN/TWITTER

ஆவினில் குழந்தை தொழிலாளர்களா?

கேள்வி: சமீப காலமாக வெளி மாநிலங்களில் இயங்கக்கூடிய சில பால் கூட்டுறவு அமைப்புகள், தமிழ்நாட்டில் பாலைக் கொள்முதல் செய்ய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறார்கள் என செய்திகள் வருகின்றன. அதைப் பற்றி உங்கள் பார்வை என்ன?

பதில்: பால் சந்தையில் ஆவின் ஒரு பெரிய நிறுவனம். ஆனால், போட்டியாளர்கள் வருவார்கள். அதனை சந்தித்துத்தான் ஆக வேண்டும். அதை எப்படி நிறுத்த முடியும்?

சிறப்பான சேவையின் மூலம்தான் அதைச் செய்ய முடியும். நாங்கள் ஒரு திட்டத்தை வகுத்து வருகிறோம். அது செயல்படும்போது இந்தப் போட்டிகள் அடிபட்டுவிடும்.

கேள்வி: ஆவின் பால் பண்ணையில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதாக சமீபத்தில் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். உண்மை என்ன?

பதில்: ஆவினில் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள், பாலில் யூரியாவையும் ப்ளீச்சிங் பவுடரைக் கலப்பதாகச் சொன்னார்கள். இவர்கள் ஜோக் அடிக்கிறார்களா, விளையாடுகிறார்களா? என்ன திட்டத்தோடு இதை அவர்கள் செய்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும்.

இதெல்லாம் எவ்வளவு அபத்தமான குற்றச்சாட்டு? ஆவினில் குழந்தைத் தொழிலாளர்களை வைத்திருக்க முடியுமா? யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கட்டும். ஆவின் ஒரு அரசு நிறுவனம். இங்குள்ள தயாரிப்புகள் மத்திய அரசின் fssi தர விதிமுறைகளின் படி தயாரிக்கப்படுகின்றன. நான் அமைச்சரான பிறகு, ஒப்பந்த ஊழியர்களுக்கான சம்பளம்கூட, வங்கி மூலம்தான் அளிக்கப்படுகிறது.

யார் யாருக்கு சம்பளம் அளிக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் வயது என்ன என்பதை அண்ணாமலை ஆராயட்டும். இதெல்லாம் மிகத் தவறு. லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய நிறுவனத்தைப் பற்றி இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்வது உள்நோக்கம் கொண்டது. அவர்களது விரக்தியின் வெளிப்பாடுதான் இது.

கேள்வி: தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் 3 ரூபாய் அளவுக்கு பாலின் விலை குறைக்கப்பட்டது. அதைச் செய்யாமல் இருந்திருந்தால், நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்காதல்லவா..

பதில்: நிதி நெருக்கடி இல்லையென சொல்ல முடியாது. ஆனால், சம்பளம் தரவில்லையா, பாலுக்கு பணம் தரவில்லையா? அரசு விலை குறைப்பை அறிவித்ததோடு, அதற்கான இழப்பீட்டைத் தருகிறது. பணத்தைத் தருவதில் கால தாமதம் இருக்கலாம். ஆனால், தந்துவிடுகிறது. விலை குறைப்பின் சுமையை அரசுதான் ஏற்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)