மதுரையில் மனதை மயக்கும் பிரம்மாண்ட அரண்மனை - தாத்தா கட்டியதை பேரன் இடித்த வரலாறு

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் மிகவும் எழில் வாய்ந்த அரண்மனைகளில் ஒன்றாக மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனை கருதப்படுகிறது. கட்டப்பட்ட காலத்தில் மிகப் பெரிதாக இருந்த இந்த அரண்மனையின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது. இந்த அரண்மனைக்கு என்ன நேர்ந்தது?
நாயக்க அரசின் மன்னராக கி.பி. 1623லிருந்து கி.பி. 1659வரை ஆட்சி செய்த திருமலை நாயக்கர், மதுரையில் தனக்கென கட்டிய அரண்மனை தான் நான்கு நூற்றாண்டுகள் கழித்தும் பலரையும் கவர்கின்ற இடமாக திகழ்கிறது.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களிலேயே திறம்மிக்கவராக கருதப்படும் திருமலை நாயக்கர், நாயக்க மரபின் ஏழாவது அரசராக கி.பி. 1623ஆம் ஆண்டில் பதவியேற்றார். இதற்குப் பிறகு பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகள்வரை திருச்சிராப்பள்ளியே அரசின் தலைநகரமாக இருந்தது.
இதற்குப் பிறகு அவர் தன் தலைநகரை மதுரைக்கு மாற்றிக்கொண்டார். சில வரலாற்றாசிரியர்கள், திருமலை நாயக்கர் கி.பி. 1634ஆம் ஆண்டில் மதுரைக்கு தலைநகரை மாற்றினார் எனக் குறிப்பிடுகிறார்கள். தலைநகரம் மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகு அந்நகரிலேயே தனக்கென ஒரு அரண்மனையைக் கட்ட ஆரம்பித்தார் திருமலை மன்னர். இந்த அரண்மனையின் பெரும் பகுதி கி.பி. 1636ல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அரண்மனை கட்டப்பட்ட காலத்தில் மதுரை நகரைச் சுற்றி மிகப் பெரிய கோட்டை இருந்தது. இந்தக் கோட்டையின் தென்கிழக்குப் பகுதியில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனை வளாகத்தின் பரப்பு சுமார் ஒரு சதுர மைலாக இருக்கலாம் என தனது Madurai Through the Ages நூலில் குறிப்பிடுகிறார் டாக்டர் டி. தேவகுஞ்சரி.
இந்த அரண்மனை கட்டப்பட்டபோது சொர்க்கவிலாசம், ரங்க விலாசம் என இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. திருமலை நாயக்கர் சொர்க்க விலாசத்திலும் அவருடைய தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்க விலாசத்திலும் வசித்தனர். இது தவிர, இசைக்கருவிகள் இசைக்கும் இடம், பூஜைக்கான இடம், அரியணை மண்டபம், நாடகசாலை, மலர் வனங்கள், பணி செய்வோர் வசிக்கும் இடங்கள் ஆகியவையும் அரண்மனைக்குள் இருந்தன.
தற்போது அரண்மனையின் பிரதான வாசல், கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. ஆனால், இது அரண்மனை கட்டப்பட்ட காலத்தில் இருந்த வாயில் அல்ல. இந்த அரண்மனை கட்டப்பட்ட காலத்தில் பிரதான வாயில், வடக்குப் பகுதியில் அமைந்திருந்தது. தற்போதுள்ள வாயில், 19ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. இப்போதுள்ள பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மிகப் பெரிய முற்றமும் அதன் மூன்று பக்கங்களிலும் மிகப் பெரிய தூண்களால் தாங்கப்படும் வராண்டாவும் இருக்கின்றன.
இந்த முற்றத்தைக் கடந்து உள்ளே சென்றால், இரண்டு குதிரைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் படிகளை அடையலாம். அந்தப் படிகளில் ஏறினால், இந்த அரண்மனையின் மிக முக்கியமான பகுதியை அடையலாம். மிகப் பெரிய தூண்களையும் அழகான வேலைப்பாடுகளையும் கொண்ட இந்தப் பகுதிதான் சொர்க்க விலாசம் எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் நடுவில் இருக்கும் கல் மேடையின் மீது, தந்தத்தால் ஆன ஒரு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் மீது ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அரியாசனமும் இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றன.

நாடக சாலையை உள்ளடக்கிய அரண்மனை
இந்த அரண்மனையின் வடமேற்கில் மிகவும் அழகான, வேலைப்பாடுகள் மிகுந்த ஒரு அரங்கம் இருக்கிறது. இது நாடக சாலை எனக் குறிப்பிடப்படுகிறது. மாலை நேரங்களில் அரசர் இங்குதான் தன் தேவியருடன் அமர்ந்து நாடகங்களையும் கலை நிகழ்ச்சிகளையும் தீபந்தங்களின் வெளிச்சத்தில் ரசித்திருக்கக் கூடும் என்கிறது தேவகுஞ்சரியின் நூல்.
அரண்மனையிலிருந்து வடக்கில் சில மீட்டர் தூரத்தில் ஒரு சந்துக்குள் மிகப் பெரிய அளவிலான பத்துத் தூண்கள் இருக்கின்றன. இவை இந்த அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்தவைதான். இந்தப் பகுதிதான் ரங்க விலாசம் என அழைக்கப்பட்ட பகுதி. இந்த 10 தூண்களுக்குக் கிழக்கில்தான் இந்த அரண்மனையின் பிரதான நுழைவாயில் இருந்தது. ஆனால், இந்த 10 தூண்களின் உயரம் ஆச்சரியமளிப்பதாகக் கூறும் தேவகுஞ்சரி, அது யானைகள் கட்டப்பட்டிருந்த இடமாக இருக்கலாம் என்கிறார்.
இந்த அரண்மனையின் பெரும்பகுதி இடிந்துவிட்ட நிலையில், இந்த மாளிகை முழுமையாக இருந்த காலகட்டத்தில் எப்படியிருந்திருக்கும் என்பது Oriental Historical Manuscripts, எஸ்.சி. ஹில்ஸ் எழுதிய Yusuf Khan ஆகிய புத்தகங்களில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அரண்மனையையும் திருமலை நாயக்கரையும் வைத்து பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஒரு நாள் திருமலை நாயக்கர் தன் தேவியருடன் அமர்ந்திருக்கும் போது, அவர் முன்பாக புலிவேடக் காரன் ஒருவன், புலிவேடமிட்டு ஆடினார். புலியைப் போல அங்கும் இங்கும் பாய்ந்து ஆச்சரியமூட்டினார். திடீரென அரண்மனையின் கோட்டைச் சுவரையும் தாண்டிக் குதித்து ஓடினார்.
இதனைப் பார்த்த திருமலை நாயக்கர் ஆச்சரியமடைந்து அவருக்கு பல கிராமங்களில் நிலமும் வாடிப் புலி என்ற பட்டத்தையும் அளித்தார் என்ற செய்தியை கல்வெட்டாய்வாளர் செ. போஸும் காப்பாளர் வெ. வேதாச்சலமும் இணைந்து எழுதிய திருமலை மன்னர் என்ற நூல் தெரிவிக்கிறது.
அதேபோல, திருடன் ஒருவன் உடும்பை வைத்து அரண்மனைக்குள் ஏறி, மேலே உள்ள பகுதியைத் துளையிட்டு திருடியதாகவும் சில கதைகள் உண்டு. அந்தத் திருடன் உள்ளே இறங்கிய இடம் என்ற ஒரு பகுதி இன்னமும் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், இந்தக் கதைக்கு தெளிவான வரலாற்று ஆதரம் ஏதும் இல்லை.

திருமலை நாயக்கர் அரண்மனையின் பெரும் பகுதி அழிந்தது எப்படி?
திருமலை நாயக்கருக்குப் பிறகு அவரது மகன் முத்து அழகாத்ரி என்ற முத்து வீரப்ப நாயக்கர் மதுரையின் மன்னரானார். ஆனால், அவர் சில மாதங்களே ஆட்சியில் இருந்தார். அவருக்குப் பிறகு முத்து வீரப்ப நாயக்கரின் மகனான சொக்கநாத நாயக்கர் மன்னரானார். அந்தத் தருணத்தில் அவருக்கு வயது வெறும் பதினாறுதான்.
ஆகவே, மன்னருக்கு அடுத்த நிலையில் உயர்ந்த பதவிகளை வகித்துவந்த பிரதானியும் ராயசமும் அவர் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தினர். இவர்களது ஆலோசனையின் பேரில் தலைநகரை அவர் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். இது 1666ல் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தான் திருச்சிராப்பள்ளியிலேயே தொடர்ந்து வசிப்பதால், தனக்கென ஒரு அரண்மனையை அங்கே கட்ட அவர் விரும்பினார் சொக்கநாத நாயக்கர். செலவுகளை மிச்சப்படுத்தவோ அல்லது தனது பாட்டனாரின் புகழ் மீது பொறாமை கொண்டோ, மதுரையில் இருந்த அரண்மனையை இடித்து அந்தப் பொருட்களை வைத்து திருச்சியில் அரண்மனையைக் கட்ட விரும்பினார்.
விரைவிலேயே இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரண்மனையை இடிக்கும் பணி துவங்கியது. The Madura Country - A Manual நூலை எழுதிய ஜே.ஹெச். நெல்சனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "ஆசியாவின் மிக அற்புதமான மாளிகை" என்று சொல்லத்தக்க அந்த அரண்மனையிலிருந்து பொருட்கள் வண்டி, வண்டியாக திருச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிற்பங்கள், கறுப்பு நிற சலவைக் கற்களால் ஆன மிகப் பெரிய தூண்கள் உள்பட, அந்த அரண்மனையில் இருந்த மிகச் சிறந்த பொருட்கள் அனைத்தும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. இருந்தபோதும் திருச்சியில் இதற்கு இணையாக ஒரு மாளிகை கட்டப்படவேயில்லை என்கிறார் ஜே.ஹெச். நெல்சன். ஆனால், இந்த நடவடிக்கையால் மதுரையில் இருந்த அரண்மனையின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
இதற்குப் பிறகு 18ஆம் நூற்றாண்டில் நடந்த சில போர்களில் எஞ்சியிருந்த கட்டடங்களும் பெரும் சேதமடைந்தன. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த அரண்மனை ஒரு கைவிடப்பட்ட, பாழடைந்த பகுதியாகவே மாறியது. சில காலம், சிறைக் கைதிகளால் நடத்தப்படும் காகித ஆலை இங்கிருந்து இயங்கிவந்தது. இடிந்துபோன அரண்மனை பகுதிகளில் குடிசைகள் கட்டப்பட்டு, அதில் மக்கள் குடியேறினர். அப்போதும் சில சுவர்கள் இடித்துத் தள்ளப்பட்டன.
19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த அரண்மனை மிகவும் சேதமடைந்துவிட்டது. பல சுவர்கள் விழுந்துவிட்டன. 1866 முதல் 1872வரை சென்னை மாகாண ஆளுநராக இருந்த நேப்பியர் இந்த அரண்மனையை புதுப்பிக்க முடிவுசெய்தார். இரண்டு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1872ல் சேதமடைந்த பகுதிகள் பழுதுபார்க்கப்பட்டன.

விரிசல் கண்ட பகுதிகள் இரும்புக் கம்பிகளைப் போட்டு இறுக்கப்பட்டன. சுதை வேலைகள் புதுப்பிக்கப்பட்டன. 1886வாக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சில காலம் இங்கிருந்து செயல்பட்டது. இதற்குப் பிறகு மாவட்ட நீதிமன்றம் 1970வரை இங்கிருந்து செயல்பட்டது. 1971ல் இந்த அரண்மனை பாதுகாக்கப்பட்ட சின்னமாக மாநில தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டது.
இந்த அரண்மனையில் உள்ள தூண்கள் பாதுகாப்புக்காக பல முறை சுண்ணாம்பால் பூசப்பட்டுவிட்டாலும், இரண்டு தூண்களில், நாயக்கர் காலத்திலேயே வரையப்பட்ட ஓவியங்கள் இன்னும் அழியாமல் கிடைத்தன. இவை தற்போது அந்தத் தூண்களிலேயே பாதுகாக்கப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












