ஆந்திராவில் அமைக்கப்படும் கூகுள் 'டேட்டா சென்டர்' - இந்த ஏஐ மையத்தில் என்ன நடக்கும்?

கூகுள் மையத்தின் சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், கரிக்கிபாட்டி உமாகாந்த்
    • பதவி, பிபிசிக்காக

விசாகப்பட்டினத்தில் 1 ஜிகாவாட் ஹைப்பர் ஸ்கேல் டேட்டா சென்டர் அமைப்பதற்காக, கூகுளின் துணை நிறுவனமான ரைடன் (Ryden) உடன் ஆந்திரப் பிரதேச அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) செய்துகொண்டுள்ளது.

அக்டோபர் 14 ஆம் தேதி டெல்லியில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், ஆந்திரப் பிரதேச அரசுப் பிரதிநிதிகள், கூகுள் கிளவுட் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் மற்றும் பிற கூகுள் உயர் மட்டப் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பேசிய ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் நாட்டிலேயே ஆந்திரப் பிரதேசத்தை முன்னணியில் நிறுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.

விசாகப்பட்டினத்தில் கூகுளின் முதல் ஏஐ மையம் தொடர்பான திட்டங்களைப் பிரதமர் மோதியுடன் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த ஏஐ மையம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறினார்.

இந்த மையத்தில் ஜிகாவாட் அளவிலான கணினித் திறன் (Gigawatt-scale compute capacity) மற்றும் சர்வதேச நீருக்கடி நுழைவாயில் (International Sub-Sea Gateway) இருக்கும் என்று அவர் விளக்கினார்.

டேட்டா சென்டர் அமைப்பது குறித்துப் பிரதமர் நரேந்திர மோதியும் கருத்துத் தெரிவித்தார்.

"இந்த ஜிகா சென்டரின் உருவாக்கம் 'வளர்ந்த இந்தியா' இலக்குகளுக்கு ஏற்ப உள்ளது. இந்த ஏஐ மையம் ஒரு வலுவான சக்தியாகச் செயல்படும். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு அனைவருக்கும் சென்றடையும். இது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும். உலகளாவிய தொழில்நுட்பத் தலைவராக இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும்" என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி

பட மூலாதாரம், X/@ncbn

படக்குறிப்பு, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஷ்வினி வைஷ்ணவ், ஆந்திரப் பிரதேச ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுப் பிரதிநிதிகள், கூகுள் கிளவுட் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் மற்றும் பிற கூகுள் உயர் மட்டப் பிரதிநிதிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர்கள்

இந்தத் திட்டத்தின் மூலம் விசாகப்பட்டினத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.1.33 லட்சம் கோடி) முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூகுள் கிளவுட் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் கூறினார்.

விசாகப்பட்டினத்தில் அமையவுள்ள கூகுள் டேட்டா சென்டர், இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், விசாகப்பட்டினத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு இணைப்பை வழங்கும் ஒரு தளமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். விசாகப்பட்டினத்திலிருந்து 12 நாடுகளுடன் கடலுக்கடியில் கேபிள் முறை (Sub-Sea Cable System) மூலம் இணைக்கப்படும் என்று குரியன் கூறினார்.

அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் இவ்வளவு பெரிய அளவில் முதலீடு செய்வது இதுவே முதல் முறை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஜெமினி-ஏஐ மற்றும் பிற கூகுள் சேவைகளும் இந்த டேட்டா சென்டர் மூலம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த டேட்டா சென்டர் விசாகப்பட்டினத்தை இந்தியாவின் ஏஐ மாற்றத்தின் மையமாக நிலைநிறுத்தும் என்று ஆந்திர அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறைச் செயலாளர் காட்டம்னேனி பாஸ்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் டேட்டா சென்டர் மூலம் கூகுள் தனது முழுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பைச் செயல்படுத்தி, இந்தியாவில் ஏஐ அடிப்படையிலான மாற்றத்தை விரைவுபடுத்த உள்ளது. இந்த ஏஐ மையம் , அதிநவீன ஏஐ உள்கட்டமைப்பு, டேட்டா சென்டர் திறன், பெரிய அளவிலான எரிசக்தி வளங்கள், ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்குகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, விசாகப்பட்டினத்தை இந்தியாவின் ஏஐ மாற்றத்தின் மையமாக நிலைநிறுத்தும். இந்தத் திட்டம், கூகுளின் உலகளாவிய நெட்வொர்க்குடன் நீருக்கடி மற்றும் நிலத்தடி கேபிள் இணைப்பு மூலம் இணைக்கப்பட்டு, சுத்தமான எரிசக்தியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று காட்டம்னேனி பாஸ்கர் கூறினார்.

அலுவலக ஊழியர்கள் பணியாற்றுவது போன்ற காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

எத்தனை வேலைவாய்ப்புகள் வரும்?

"இந்தத் திட்டத்தின் முதல் கட்டப் பணி இரண்டரை ஆண்டுகளுக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி, 2028 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் பணிகளை முடித்துச் செயல்பாடுகளைத் தொடங்க ரைடன் நிறுவனம் அரசாங்கத்திற்குத் திட்டங்களை அனுப்பியுள்ளது. இந்த காலகட்டத்தில், 2028-2032 வரை சுமார் 1,88,220 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று தகவல் தொழில்நுட்பத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

"கூகுள் கிளவுட் அடிப்படையிலான திட்டங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ.9,553 கோடி கூடுதல் வருமானம் ஈட்டப்படும் என்றும், ஒட்டுமொத்தமாக ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.47,720 கோடி உற்பத்தி இருக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அந்த அரசு அதிகாரி கூறினார்.

எஸ்ஐபிபி ஒப்புதல்

இந்தத் திட்டத்திற்குச் சமீபத்தில் முதலமைச்சர் சந்திரபாபு தலைமையில் நடைபெற்ற மாநில முதலீட்டு மேம்பாட்டு வாரியக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தை விரைவாகத் தொடங்க ஒற்றை சாளர அனுமதி (Single Window Clearance), அதிநவீன உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிளக்-அண்ட்-ப்ளே உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியம் மற்றும் ஐடி மற்றும் மின்னணுவியல் துறைகள் ஒருங்கிணைப்புடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக அரசாங்கம் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தது.

ஏஐ பற்றிய ஒரு படம்

பட மூலாதாரம், Getty Images

ரைடன் நிறுவனம் எங்கிருந்து வந்தது?

சிங்கப்பூரைச் சேர்ந்த ரைடன் ஏபிஏசி இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் கம்பெனி (Ryden APAC Investment Holding Company) அமெரிக்காவைச் சேர்ந்த கூகுளின் துணை நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்த நிறுவனம் 'ரைடன் இன்ஃபோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்'டில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டுள்ளது.

ரைடன் இன்ஃபோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கென்றே ஏற்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவுகளை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. நில குத்தகை, மின்சாரம், பதிவு கட்டண விலக்கு ஆகியவற்றையும் சேர்த்து மொத்தமாக ரூ.22,000 கோடி மதிப்புள்ள சலுகைகளை ரைடனுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அந்த நிறுவனத்திற்கு 480 ஏக்கர் நிலத்தை சலுகை விலையில் ஒதுக்கீடு செய்ய உள்ளது.

விசாகப்பட்டினம் மாவட்டத்தின் அடவிவரத்தில் 120 ஏக்கர், தர்லுவாடாவில் 200 ஏக்கர், ராம்பில்லி அச்சுதாபுரம் தொகுப்பில் 160 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலங்களின் மதிப்பில் 25% சலுகை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அதேபோல், டேட்டா சென்டருக்குத் தேவையான தண்ணீருக்காகச் செலுத்த வேண்டிய கட்டணங்களில் 10 ஆண்டுகளுக்கு 25% சலுகை வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், டேட்டா சென்டருக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் 15 ஆண்டுகளுக்குச் சலுகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ருஷிகொண்டா ஐடி பார்க் அசோசியேஷன் துணைத் தலைவர் ஓ நரேஷ்
படக்குறிப்பு, ருஷிகொண்டா ஐடி பார்க் அசோசியேஷன் துணைத் தலைவர் ஓ. நரேஷ்

ஏன் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது?

"கூகுளின் தரவுகள் அனைத்தும் இதுவரை அமெரிக்காவில் தான் சேமிக்கப்பட்டு வந்தன. கூகுளின் சர்வர் அமெரிக்காவில் தான் இருந்தது. எனவே, இந்தியாவிற்குச் சொந்தமான சர்வர் இங்கேயே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முன்பு கோரியது. அதன்படி, கூகுள் டேட்டா சென்டரை இந்தியாவில் அமைக்க முடிவு செய்து இப்போது விசாகப்பட்டினத்திற்கு வருகிறது," என்று விசாகப்பட்டினம் ருஷிகொண்டா ஐடி பார்க் அசோசியேஷன் துணைத் தலைவர் ஓ. நரேஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த டேட்டா சென்டரை அமைக்க நீருக்கடி கேபிள் தேவை. விசாகப்பட்டினத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளுடன் நீருக்கடி கேபிள் மூலம் கூகுள் ஏஐ டேட்டா சென்டர் இணைக்கப்பட உள்ளது. விசாகப்பட்டினம் ஒரு கடலோர நகரமாக இருப்பதால், நீருக்கடி கேபிள் இணைப்பு நிலையங்களுடன் (Under-Sea Cable Landing Stations) இணைவது மிகவும் எளிதானது.

விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் டேட்டா சென்டருக்குச் சிங்கப்பூரிலிருந்து ஒரு நீர்மூழ்கிக் கேபிள் அமைக்கப்பட உள்ளது. இது அதிவேக உலகளாவிய இணைய இணைப்பை வழங்கும், டேட்டா பரிமாற்ற தாமதத்தைக் குறைக்கும். ஏற்கனவே மெட்டா நிறுவனம் தனது 'வாட்டர்வேர்த்' நீருக்கடி கேபிள் திட்டத்தின் கீழ் மும்பை மற்றும் விசாகப்பட்டினம் நகரங்களைத் கேபிள் இணைக்கும் தளங்களாகத் தேர்ந்தெடுத்துள்ளது," என்று நரேஷ் தெரிவித்தார்.

விசாகப்பட்டினம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விசாகப்பட்டினம்

நீர்ப் பிரச்னை பற்றி..

உண்மையில், டேட்டா சென்டர் இயங்க அதிக அளவு மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீர் தேவைப்படுகிறது.

அதிக அளவில் மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம், மையத்தில் பயன்படுத்தப்படும் அமைப்புகள் உருவாக்கும் வெப்பத்தால் சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற வாதங்கள் உள்ளன. இது குறித்து மென்பொருள் நிபுணர்களின் வாதம் வேறு விதமாக உள்ளது.

"இந்த டேட்டா சென்டர் இயங்க 1 ஜிகாவாட் சக்தி தேவை. இருப்பினும், மாநிலத்தில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தி அதிகமாகக் கிடைப்பதால், மின்சாரப் பிரச்னை வராது என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும், கடல் இருப்பதால், உப்புநீரை நீக்கி (Desalination) நல்ல நீரை விநியோகிக்கலாம். அதேபோல், போலாவரம் திட்டம் நிறைவடைந்தால் விசாகப்பட்டினத்திற்கு 5 டிஎம்சி நீர் வரும். அதில் ஒரு பகுதியையும் ஒதுக்கலாம். டேட்டா சென்டர் மலைப் பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதால், அதிக வெப்பம் உருவாகாமல் போகலாம்," என்று ஆந்திரப் பிரதேச தொழில்நுட்பச் சேவைகளின் முன்னாள் தலைவர் கொய்யா பிரசாத் ரெட்டி பிபிசியிடம் கருத்துத் தெரிவித்தனர்.

ஆந்திரா ஐடி துறை அமைச்சர் லோகேஷ்

பட மூலாதாரம், https://x.com/naralokesh/status

படக்குறிப்பு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் லோகேஷ்

விசாகப்பட்டினத்திற்கு மேலும் என்னென்ன வருகின்றன?

விசாகப்பட்டினத்தில் சிஃபி (Sify) நிறுவனத்திற்குச் சொந்தமான முதல் ஏஐ எட்ஜ் டேட்டா சென்டர் மற்றும் ஓபன் கேபிள் இணைப்பு நிலையத்திற்கு அக்டோபர் 12 ஆம் தேதி தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் லோகேஷ் அடிக்கல் நாட்டினார்.

விசாகப்பட்டினத்தில் 1000 மெகாவாட் டேட்டா சென்டர் அமைக்க டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் முன்வந்துள்ளது என்று அரசு அறிவித்தது.

அதேபோல், 'ஆக்சென்ச்சர் (Accenture), காக்னிசென்ட் (Cognizant) நிறுவனங்கள் விசாகப்பட்டினத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன' என்று அமைச்சர் லோகேஷ் சமீபத்தில் தெரிவித்தார்.

புவியியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கொள்கை சார்ந்த அம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பல நிறுவனங்கள் தங்கள் டேட்டா சென்டர் மையமாக விசாகப்பட்டினத்தைத் தேர்ந்தெடுப்பதாக லோகேஷ் தெரிவித்தார். இந்த டேட்டா சென்டர்கள் மருத்துவம், கல்வி, விவசாயம், தொழில்கள் போன்ற துறைகளில் சேவைகளை வழங்கும் என்று அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் குடிவாடா அமர்நாத் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Facebook/Gudivada Amarnath

படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் குடிவாடா அமர்நாத் (கோப்புப் படம்)

மாசுபாடு குறித்து அரசு பேசாதது அநியாயம்: குடிவாடா அமர்நாத்

"சந்திரபாபு முதல்வராக இருந்தபோது இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்வது வழக்கம். இப்படிப்பட்டவைகளை எத்தனை பார்த்திருக்கிறோம். இதுவும் அப்படித்தான். வந்த பின்னர்தான் வந்தது என்று நினைக்க வேண்டும்," என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் மற்றும் முந்தைய அரசாங்கத்தில் ஐடி துறை அமைச்சராகப் பணியாற்றிய குடிவாடா அமர்நாத் பிபிசியிடம் கருத்துத் தெரிவித்தார்.

இந்த டேட்டா சென்டர்களில் இருந்து வரும் அதிகப்படியான மாசுபாடு குறித்து உலகம் முழுவதும் கவலைகள் எழுப்பப்படும் நிலையில், அது குறித்து அரசு பேசாதது அநியாயம் என்று அமர்நாத் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு