பதவி பறிப்பு, விவாகரத்து: ஒரே நேரத்தில் கிரிக்கெட், தனிப்பட்ட வாழ்க்கை சவால்களை சமாளிப்பாரா ஹர்திக்?

ஹர்திக் பாண்டியா: பறிபோன கேப்டன் பதவி, விவாகரத்து, ஏற்ற தாழ்வுகள்.. அடுத்தடுத்து புதிய சவால்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹர்திக் பாண்டியா
    • எழுதியவர், நவீன் நேகி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் பரபரப்பான இறுதிக்கட்டம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஓவரை இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசினார். பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் சிறப்பாக விளையாடினார். பந்து கோட்டைத் தாண்டி சிக்ஸர் ஆகிவிடும் என்று அனைவரும் கருதினர். ஆனால் சூர்யகுமார் யாதவ் ஒரு அற்புதமான கேட்ச் பிடித்து ஆட்டத்தை மாற்றினார். இந்திய அணியின் பெயர் உலகக் கோப்பையில் பொறிக்கப்பட்டது.

இந்த டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஹர்திக் பாண்டியா தனது கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

எங்கும் குதூகலமான சூழல் நிலவியது. உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணி வீரர்கள் அனைவரும் வீடியோ கால் மூலம் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஹர்திக் பாண்டியா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். "கடந்த ஆறு மாதங்கள் எனக்கு மிகவும் முக்கியமானக் காலக்கட்டம். நான் கடினமாக உழைத்தால், என்னால் அற்புதமாக விளையாட முடியும் என்பதை உறுதியாக நம்பினேன்," என்று அவர் கூறினார்.

ஆனால் அடுத்த சில தினங்களில் (ஜூலை 18), ஹர்திக்கிற்கு மிகவும் கடினமான நாளாக இருந்தது. இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் பாண்டியா துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இது கிரிக்கெட் வட்டத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதையடுத்து, ஹர்திக் கேப்டன் பதவிக்கு வருவார் என்ற பேச்சு எழுந்தது. ஏனெனில் இதற்கு முன்பும் ஹர்திக் டி20-யில் கேப்டன் பொறுப்பைக் கையாண்டிருந்தார்.

ஆனால், ஹர்திக்கிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி மட்டுமின்றி துணை கேப்டன் பதவியும் கிடைக்கவில்லை. மேலும், ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம் பெறவில்லை.

அன்று மாலை, ஹர்திக் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு கசப்பான செய்தியைப் பகிர்ந்தார். அவர் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை விட்டுப் பிரிவதாகப் பதிவிட்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. தற்போது ஹர்திக்கும், நடாஷாவும் தாங்கள் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா: பறிபோன கேப்டன் பதவி, விவாகரத்து, ஏற்ற தாழ்வுகள்.. அடுத்தடுத்து புதிய சவால்கள்

பட மூலாதாரம், Getty Images

தொடர் ஏற்றத் தாழ்வுகள்

டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஹர்திக் தனது வாழ்க்கையில் கடந்த ஆறு மாத காலம் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். ஏனெனில், இந்த ஆறு மாதங்களில் ஹர்திக்கின் வாழ்க்கையில் உச்சக்கட்ட ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்தார்.

ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது.

முதலில் 2022-க்கு வருவோம். அந்த ஆண்டு, டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்து நாடு திரும்பியது.

உலகக் கோப்பை போன்ற ஒரு போட்டியின் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டனர். இந்திய அணிக்குத் தலைமை மாற்றம் தேவை என்றும், புதிய தலைமை அணியின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசப்பட்டது.

இதையடுத்து இந்திய யூத் அணியின் கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. ஹர்திக்கும் இதற்கு தயாராக இருந்தார். 'இது எனது அணி’ என்று உற்காசமாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதன் பிறகு ஹர்திக் முழுவீச்சில் கிரிக்கெட்டில் களமிறங்கப் போகிறார் என்று தோன்றியது. ஹர்திக்கின் கிரிக்கெட் கிராஃப் வலுவாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே ஆண்டில், அதாவது 2022 ஐ.பி.எல்-லில், ஹர்திக் மும்பை இந்தியன்ஸிலிருந்து விலகி குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்ந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஆனார்.

ஹர்திக் பொறுப்பேற்று, குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐ.பி.எல் தொடரின் முதல் ஆண்டிலேயே வெற்றி அணியாக மாற்றியது முக்கியமான விஷயம். அவரது அடுத்த சீசனில் அதாவது 2023-ஆம் ஆண்டிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டியை எட்டியது.

அதன் பிறகு 2023 உலகக் கோப்பை வந்தது. இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெற்றது.

இந்த உலகக் கோப்பையில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் காயம் அடைந்து, துரதிஷ்டவசமாக உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால், உலகக் கோப்பையில் இந்திய அணி தொடக்கம் முதல் அரையிறுதி வரை தோல்வியை சந்திக்காமல் இருந்ததுதான் முக்கியமான விஷயம்.

ஆனால், இறுதிப் போட்டியில் இந்த போக்கு மாறியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

அதன்பிறகு, 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் இருப்பார்களா இல்லையா என்ற வதந்திகள் கிளம்பின.

ஹர்திக் பாண்டியா: பறிபோன கேப்டன் பதவி, விவாகரத்து, ஏற்ற தாழ்வுகள்.. அடுத்தடுத்து புதிய சவால்கள்

பட மூலாதாரம், Getty Images

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவி

அதன் பிறகு 2024 ஐ.பி.எல் போட்டி தொடங்கியது. ஆனால் ஐ.பி.எல் சீசன் தொடங்கும் முன் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஹர்திக் பாண்டியாவின் அந்தக் கடினமான 'ஆறு மாதங்கள்' இங்குதான் தொடங்கின.

மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உடனான ஒப்பந்தத்தில் ஹர்திக்கை மீண்டும் அணியில் சேர்த்தது. அதுமட்டுமின்றி அந்த அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வழங்கப்பட்டது.

ரோஹித் சர்மா பல சீசன்களில் மும்பை இந்தியன்ஸை வழிநடத்தினார். ஆனால் அவரை நீக்கிய பின்னர் ஹர்திக்கிற்கு அந்த அணியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து ரோஹித் இதுவரை பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், ரோஹித்தின் மனைவி ரித்திகா சச்தேவ் சமூக வலைதளங்களில் வெளியிட்ட சில பதிவுகள், மும்பை இந்தியன்ஸின் இந்த முடிவால் ரோஹித் மற்றும் அவரது குடும்பத்தினர் வருத்தத்தில் இருப்பதைப் பிரதிபலித்தது.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, சமூக வலைதளங்களில் அணியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை திடீரென குறைந்தது.

ஐ.பி.எல் 2024 சீசன் முழுவதும், மும்பை அணி எங்கு விளையாட சென்றாலும், ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை குறிவைத்தனர். ஹர்திக்கின் பேச்சு நடை, பீல்டிங் ஸ்டைல் ​​குறித்தும் மக்கள் கேள்வி எழுப்பினர்.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரவரிசையில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. ஹர்திக்கால் கூட சிறப்பாக செயல்பட முடியவில்லை.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஹர்திக் ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் தோல்வியடைந்தார். அவரது ரசிகர்களும் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.

ஹர்திக் பாண்டியா: பறிபோன கேப்டன் பதவி, விவாகரத்து, ஏற்ற தாழ்வுகள்.. அடுத்தடுத்து புதிய சவால்கள்

கடினமான காலகட்டம்

அதே நேரத்தில், மக்கள் ஒரு விஷயத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர். அதாவது, ஐ.பி.எல் போட்டிகளில் எப்போதும் ஹர்திக்குடன் காணப்படும் அவரது மனைவி நடாஷா இந்த சீசனில் தென்படவில்லை. ரசிகர்கள் ஹர்திக்கை கடுமையாக விமர்சித்தாலும், அவரது மனைவி எந்த எதிர்வினையையும் வெளியிடவில்லை.

அதன் பிறகு டி20 உலகக்கோப்பை அணிக்கானத் தேர்வு தொடங்கியது. இந்திய அணியின் தலைமை ரோஹித் சர்மாவின் கையிலேயே இருக்கும் என பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.

அதாவது ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த நிலையில், அவருடன் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளையாட இருந்தார்.

ஐ.பி.எல்-லில் நடந்த நிகழ்வுகள் இருவருக்கும் இடையேயான உறவை பாதித்திருக்குமா? இருவரும் எப்படி நடந்து கொள்வார்கள்? இது அணியை பாதிக்குமா? இப்படி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இணைந்து விளையாடியது. இந்த போட்டியில் ஹர்திக் ஆல்ரவுண்ட்டராக களமிறங்கினார். ரன்கள் மட்டுமின்றி 11 முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

அதன் தொடர்ச்சியாக, பார்படாஸ் மைதானத்தில் ஹர்திக்கின் வாழ்க்கை தலைக்கீழாக மாறியது. அவர் தனது தொழில் வாழ்க்கையில் புகழின் உச்சத்தில் இருந்தார்.

முன்பு வருத்தத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது அவரை உற்சாகப்படுத்தினர். ஐ.பி.எல் சீசனில் வான்கடே மைதானத்தில் ஹர்திக் விமர்சிக்கப்பட்டார். உலகக் கோப்பையை வென்றதும் அதே மைதானத்தில் ஹர்திக்கின் பெயர் முழங்கப்பட்டது.

ஆனால், ஹர்திக்கின் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் சரியாகவில்லை. ஹர்திக்கின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு கருமேகம் சூழ்ந்தது. ஜூலை 18 மாலை, அவர் இந்திய அணியின் துணைத் தலைவர் பதவியை இழந்தார், அதே நேரத்தில், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தனிமையாகிவிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)