தக்காளி விலை திடீரென உயர காரணம் என்ன? விலை எப்போது குறையும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மாயகிருஷ்ணன். க.
- பதவி, பிபிசி தமிழுக்காக
தற்போது தமிழ்நாட்டில் சமையல் கூடங்களில் மிகவும் பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டிய பொருளாகவே தக்காளி மாறிவிட்டது, என்றால் மிகையாகாது. அந்த அளவுக்கு தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. கிலோ ரூபாய் நூறிலிருந்து நூற்று முப்பது வரை விற்கப்படுகிறது. இதனால் வீடுகளில் தக்காளி பயன்பாடு குறைந்துள்ளது. அதேபோல் ஓட்டல்களிலும் தக்காளி கொண்டு செய்யப்படும் உணவு வகைகளான தக்காளி சாதம், தக்காளி சட்னி, காரத்தொக்கு உள்ளிட்டவை தவிர்க்கப்பட்டு வருகிறது.
தமிழர்களின் உணவில் புளிப்பு சுவை சேர்க்க புளிக்கு மாற்றாக பயன்படுத்த தொடங்கிய தக்காளி கொஞ்சம்கொஞ்சமாக தமிழ்நாட்டு மக்களின் உணவுக் கூடங்களில் பிரிக்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது. இதனால், தக்காளி இல்லாமல் சமையல் எப்படி? என்கிற அளவுக்கு உணவில் முக்கிய இடம் பிடித்துவிட்ட தக்காளியின் விலை திடீரென ஏன் இந்த அளவுக்கு உயர்ந்தது? தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? தக்காளி விலை மீண்டும் எப்போது குறையும்?
தக்காளி விலை கடும் உயர்வு
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து சமீப நாட்களில் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் தக்காளியின் விலை விலை ஒரு கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.
தக்காளியின் விலையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து வியாபாரி கோயம்பேடு சந்தை பகுதியில் வணிகம் நிர்வாகம் செய்து வரும் முத்துக்குமாரிடம் பேசினோம்.
"தற்பொழுது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளியினுடைய வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா பகுதி விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காததால் அவர்கள் மாற்று பெயரை செய்ய தொடங்கி விட்டனர். அதன் காரணமாகவே தக்காளி விலை தற்பொழுது உயர்ந்துள்ளது." என்று அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், "தக்காளி விலை அதிகமானதற்கு காரணம் விளைச்சல் குறைந்தது தான் முக்கிய காரணம். இந்த விலை ஏற்றமானது சிறிது காலம் வரை நிச்சயமாக இருக்கும். தற்பொழுது கூட்டுறவு கடைகள் மூலமாக அரசு தக்காளி வழங்கும் என்று கூறுகிறார்கள். அவர்கள் எப்படி விற்பனை செய்வார்கள்? நாங்கள் ஆந்திரா, கர்நாடகா பகுதியில் வாங்கும் இடத்திலேயே 60 முதல் 80 வரை கிலோ விற்கப்படுகிறது.
அரசாங்கம் அமைச்சர்கள் மற்றும் வேறு சிலரை வைத்து மட்டும் ஆலோசனை கேட்காமல் நேரடியாக கோயம்பேடு பகுதி வியாபாரிகள் சங்கத்தினரையும் அழைத்துப் பேசி எப்படி செய்தால் விலையை குறைக்க முடியும்" என்று அவர் கூறினார்.
"இயற்கையின் சீற்றமே காரணம்"
கோயம்பேடு தந்தை பெரியார் தக்காளி வியாபாரிகள் நலச் சங்க செயலாளர் குமரேசன் பேசிய போது, "தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கும் போது கோயம்பேடு சந்தைக்கு 50 முதல் 80 வண்டிகள் தக்காளியை ஏற்றி வரும். ஆனால் தற்பொழுது விளைச்சல் குறைவு என்பதால் 20-30 வண்டிகள் வரை மட்டுமே வருகின்றன. இயற்கை சீற்றத்தின் காரணமாக, அதிக வெயில் தாக்கத்தின் காரணமாக தக்காளியின் விளைச்சல் ஆந்திரா, கர்நாடகாவில் மிகவும் குறைந்துவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கிலோ ஐந்து ரூபாய் பத்து ரூபாய் என தக்காளி விற்பனை செய்யப்பட்டது. அதை சந்தோஷமாக பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தினார்கள்.ஆனால் அப்பொழுது விவசாயிகள் நஷ்டப்பட்டார்கள், அதை நாம் மறக்க முடியாது." என்றார்.
தோட்டக்கலைத் துறை என்ன செய்கிறது என்று கேள்வி
அவரைத் தொடர்ந்து இயற்கை வேளாண் ஆர்வலரும், சுற்றுச்சூழல்துறை பேராசிரியர் ரமேஷ் கருப்பையாவிடம் பேசினோம்.
"கோடைகாலத்தில் எப்பொழுதுமே பயிர் நடவு முறை நம் பகுதியில் குறைவாகத்தான் இருக்கும். தற்பொழுது பருவநிலை மாறுபாடும், வெயில் காரணமாக நடவு பணிகள் தாமதமானதும் ஒரு காரணமாகும். மேலும் தமிழ்நாடு முழுவதும் பயிர் செய்யப்படும் காய்கறிகள் தொடர்பாக கண்காணித்து வருவது தோட்டக்கலை துறை தான். ஆனால் இதை அவர்கள் வருடம் தோறும் புள்ளி விவரத்தின் மூலம் எளிதாக அறிவார்கள். தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் தட்டுப்பாடு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மாற்று திட்டங்களை உட்பகுத்தியிருந்தால் தக்காளி விளைச்சலை அதிகரித்திருக்கலாம் ஆனால் இதை அவர்கள் செய்கின்றார்களா? என்று தெரியவில்லை.
தக்காளி விலை மலிவாக இருக்கும் காலகட்டங்களில் அதை கொள்முதல் செய்து வற்றலாக மறு பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தால் வற்றலை கொண்டு சமாளித்து இருக்கலாம். இதை தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் செய்யவில்லை என்பது வேதனை தருகின்றது." என்றார் ரமேஷ் கருப்பையா.

தோட்டக்கலைத் துறை விளக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சசிகலாவிடம் தக்காளி விலையேற்றம் குறித்து விளக்கம் கேட்டோம். அவர் பேசுகையில், "தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கோடைகாலத்தில் பயிர் செய்யும் பொழுது மகசூல் குறையும் என்ற போதிலும், இந்த வருடம் கூடுதல் வெப்பம், காலநிலை மாற்றத்தின் காரணமாகவும் போதிய மழையின்மை காரணத்தினாலும் பெரும்பாலான மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைவாகவே இருந்தது.
தோட்டக்கலைத் துறை மூலமாக காய்கறி உற்பத்தியை அதிகரிப்பதற்காக மாடி தோட்டம் அமைத்தல், வீட்டுத்தோட்டம் அமைத்தலுக்காக மானிய விலையில் விதைகள் மற்றும் உபகரணங்களையும் வழங்கி வருகின்றோம். தற்பொழுது தக்காளி நாற்றுகளை உருவாக்கி அதை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை
தக்காளி விலை தடாலடியாக அதிகரித்ததும், மக்களின் சுமையைக் குறைக்க பசுமை பண்ணைக் கடைகளில் சந்தையைக் காட்டிலும் குறைந்த விலையில் அரசு விற்பனை செய்து வருகிறது. தற்போது, ரேஷன் கடைகளிலும் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
"இன்று முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். பசுமை பண்ணை கடைகளில் தக்காளி கொள்முதலை அதிகரித்துள்ளோம். 10 நாட்களுக்கு தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று தக்காளி விலை உயர்கிறது.அடுத்தாண்டு தக்காளி விலையேற்றம் வராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












