பட்ஜெட் சுற்றுலா: செல்வந்தர்களின் சொர்க்கமாக கருதப்பட்ட மாலத்தீவு பத்தே ஆண்டுகளில் மாறியது எப்படி?

மாலத்தீவு, பட்ஜெட் சுற்றுலா

பட மூலாதாரம், Carmen Roberts

படக்குறிப்பு, மாலத்தீவில் விளையாடும் சிறுவர்கள்
    • எழுதியவர், கார்மென் ராபர்ட்ஸ்

ஒரு காலத்தில் பெரும் செல்வந்தர்களின் சுற்றுலாத் தலமாக மட்டுமே இருந்த மாலத்தீவுகள், இப்போது உள்ளூர்மயமாக்கப்பட்ட, நீடித்த சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்காத சுற்றுலா மாதிரியை ஏற்றுக்கொண்டுள்ளது. இது சொர்க்கத்தை யாரெல்லாம் அனுபவிக்க முடியும் என்பதை மாற்றியமைக்கிறது.

எங்கள் படகு தோட்டூ (Thoddoo) தீவை அடைந்தபோது, காற்றில் தர்பூசணி மற்றும் உப்பின் லேசான வாசனை வீசியது. பின்னணி ஓசை கடல் விமானங்களின் இரைச்சலாக இல்லாமல், மோட்டார் சைக்கிள்களின் 'புட் புட்' சத்தமாக இருந்தது. 12 ஆண்டுகளுக்கு முன்பு, நான் பிபிசியின் 'தி டிராவல் ஷோ'வுக்காகப் படப்பிடிக்கு சென்றபோது, மாலத்தீவுகள் தண்ணீர் மீது கட்டப்பட்ட வில்லாக்கள், தனிப்பட்ட தீவுகள் மற்றும் பெரும்பாலான பயணிகள் நெருங்க முடியாத செலவு பிடிக்கும் ஒரு கனவு தேசமாக இருந்தது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் லூயி விட்டன் பெட்டிகளை இறக்குவதற்குப் பதிலாக, இப்போது சுற்றுலாப் பயணிகளே தங்கள் பைகளுடன் பொதுப் படகுகளில் இருந்து இறங்கினர். இது நான் நினைவில் வைத்திருந்த மாலத்தீவுகள் அல்ல. அதுதான் விஷயமே.

கடந்த பத்தாண்டுகளில், இந்தத் தீவுக்கூட்டங்களில் ஒரு அமைதியான புரட்சி நடந்துள்ளது. அரசு சீர்திருத்தங்கள், மாலத்தீவு மக்களை அவர்கள் வசிக்கும் தீவுகளிலேயே விருந்தினர் இல்லங்களைத் திறக்க அனுமதித்துள்ளன. இது, மக்கள் வசிக்காத சொகுசு விடுதிப் பகுதிகளுக்குள் மட்டுமே சுற்றுலா என்று இருந்த நீண்டகால விதியை உடைத்தது. இதன் விளைவு, மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்துள்ளது.

மாலத்தீவின் சுற்றுலா அமைச்சகத்தின்படி, இப்போது 90 தீவுகளில் 1,200க்கும் மேற்பட்ட விருந்தினர் இல்லங்கள் செயல்படுகின்றன. பயணிகள் நாட்டின் அன்றாட கலாசாரத்தை அனுபவிக்க முடிகிறது, முதல்முறையாக, உள்ளூர் குடும்பங்கள் நாட்டின் பொருளாதாரத்தை இயக்கும் இந்தத் தொழிலில் இருந்து நேரடியாகச் சம்பாதிக்க முடிகிறது.

எனது மூன்று குழந்தைகளுடன் நான் சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தில், இந்த மாற்றம் நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்பினேன். எங்கள் பயணம், மாலத்தீவின் "பண்ணைத் தீவு" என்று அழைக்கப்படும் தோட்டூவில் உள்ள வீட்டில் சமைக்கப்பட்ட உணவு மற்றும் விருந்தோம்பலில் இருந்து, ஆடம்பரம் என்றால் என்ன என்பதை மறுவரையறை செய்யும் ஒரு நடுத்தர ரிசார்ட் வரை சென்றது. அவை ஒன்றாக சேர்ந்து தங்கள் வரவேற்பைப் பரந்துபட்டதாக்கும் ஒரு நாட்டின் கதையையும், சொர்க்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அமைதியாக மாற்றியமைப்பதையும் சொல்கின்றன.

உள்ளூர் தீவில் வாழ்க்கை

வடக்கு ஆரி அடோலில் உள்ள தோட்டூவில் கால் வைத்தது, தலைநகர் மாலேக்கு அருகிலுள்ள வடக்கு மாலே அடோலில் காணப்படும் சொகுசு ரிசார்ட் வாழ்க்கையின் கட்டமைக்கப்பட்ட கச்சிதத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது. மாலேவிலிருந்து பொது வேகப் படகில் 90 நிமிடங்கள் பயணிக்க வேண்டி இருந்தது. இது, ஒரு சொகுசு ரிசார்ட்டின் கடல் விமானத்திற்கான கட்டணத்தை விட மிகக் குறைவானது. வந்தவுடன், தீவின் வேகம் உடனடியாக வித்தியாசமாக இருப்பதை நாங்கள் கவனித்தோம்.

கார்கள் இல்லை, வெறும் மிதிவண்டிகள் மற்றும் தென்னை மரங்களால் சூழப்பட்ட மணல் பாதைகளில் மின்சார வண்டிகள் எப்போதாவது சத்தம் போட்டுச் சென்றன. பப்பாளி மரங்கள் மற்றும் தர்பூசணி வயல்கள் நிலப்பரப்பில் விரிந்து, மாலத்தீவின் அடையாளமான நீல நிறக் கடலால் சூழப்பட்டிருந்தன.

மாலத்தீவு, பட்ஜெட் சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்போது 90 உள்ளூர் தீவுகளில் 1,200க்கும் மேற்பட்ட விருந்தினர் இல்லங்கள் உள்ளன

மாலத்தீவு விருந்தினர் இல்லங்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் உள்ளூர்-தீவு சுற்றுலா இயக்கத்தில் ஒரு முன்னணி குரலுமாகிய அஹமது கரம் என்பவருக்குச் சொந்தமான 'செரீன் ஸ்கை' என்ற விருந்தினர் இல்லத்தில் நாங்கள் தங்கினோம். இது அந்த தீவின் முதல் விருந்தினர் இல்லமாகும். செரீன் ஸ்கை எளிமையாகவும், குறைபாடற்றதாகவும் இருந்தது.

தலையணைகள் பிரபலமான வடிவமைப்பாளர் உருவாக்கியவை அல்ல, குளியலறை சாதாரணமாக இருந்தது, ஆனால் வரவேற்பு உண்மையானதாக இருந்தது. சில மணி நேரத்திற்கு முன்பு பிடிக்கப்பட்டு வறுக்கப்பட்ட மீன்கள், அருகிலுள்ள பண்ணைகளில் இருந்து வந்த பூசணிக்காயில் செய்த கறி மற்றும் புத்தம் புதிதாக விளைந்த தர்பூசணியிலிருந்து தயாரிக்கப்பட்ட பழச்சாறு என உணவுகள் மிகச் சிறப்பான வீட்டு சமையலாக இருந்தன.

சமூகத்தால் நடத்தப்படும் இந்த புதிய சுற்றுலா அலை இங்கு சுற்றுலா சூழலை மாற்றியமைத்துள்ளது என்று கரம் என்னிடம் கூறினார். "சுற்றுலா தொழிலில் புழங்கும் டாலர் மூலம் உள்ளூர் மக்கள் இப்போது நேரடியாகப் பயனடைகிறார்கள்," என்று அவர் கூறினார், "ஆனால் இது எங்களிடம் உள்ளவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதிக அளவில் எங்களுக்கு உணர்த்தியுள்ளது - தீவு, பவளப் பாறைகள், வனவிலங்குகள். மக்கள் இதைப் பார்க்கத்தான் இங்கு வருகிறார்கள்."

மாலத்தீவு, பட்ஜெட் சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிக் சென்சஸ் லாமு போன்ற சொகுசு ரிசார்ட்டுகள் தனிப்பட்ட தீவுகளில் அமைந்துள்ளன, ஒரு இரவுக்கு 1,000 டாலர்களுக்கு மேல் செலவாகும்.

எனது குழந்தைகள் தீவின் சுதந்திரத்தை விரும்பினர். நாங்கள் அருகிலுள்ள பவளப் பாறையில் உள்ளூர் மக்களுடன் ஸ்நோர்கெலிங் செய்தோம், கடல் ஆமைகளுடன் எங்களின் முதல் அற்புத சந்திப்பை அனுபவித்தோம். அதன் பிறகு, சுற்றுலா பயணிகள் மேற்கத்திய நீச்சலுடையில் நீந்தவும் சூரிய ஒளியில் குளிக்கவும் "பிகினி கடற்கரை" என்ற சிறிய இடங்களில் ஓய்வெடுத்தோம்.

உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள்:

  • உங்கள் தங்குமிடத்தைக் பல்வகைபடுத்துங்கள்: கலாசாரம் மற்றும் வசதி இரண்டையும் அனுபவிக்க ஒரு உள்ளூர் விருந்தினர் இல்லம் மற்றும் ஒரு ரிசார்ட்டுக்கு இடையில் உங்கள் பயணத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்.
  • பயணக் கட்டணம் : தோட்டூ போன்ற தீவுகளுக்குப் பொது வேகப் படகுக் கட்டணம் ஒரு நபருக்கு ஒரு வழிப் பயணமாக 30-70 அமெரிக்க டாலர் (23-53 பவுண்டு). சீசன் காலகட்டத்திற்கு முன்கூட்டியே பதிவு செய்யவும்.
  • புத்திசாலித்தனமாக பயணப் பைகளை நிரப்பவும். பவளப் பாறைக்குப் பாதுகாப்பான சன்ஸ்கிரீன், ஸ்நோர்கெல் உபகரணங்கள் மற்றும் ரீஃப் ஷூக்கள் உங்கள் பையில் இடம் பிடிக்கவேண்டும்.
  • உள்ளூர் பழக்கவழக்கங்களை மதிக்கவும். பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பிகினி கடற்கரைகளைப் பயன்படுத்தவும். கிராமப்புறங்களில் முழுமையான ஆடை அணியவும்; உள்ளூர் தீவுகளில் மது தடை செய்யப்பட்டுள்ளது.
  • நம்பகமான நிறுவனங்களை தேர்வு செய்யவும்: பவளப் பாறைக்கு இணக்கமான நடைமுறைகளை உறுதி செய்யும் ஸ்கூபா டைவிங் மற்றும் சுற்றுலா நிறுவனங்களை பதிவு செய்யவும்.
  • செலவு வழிகாட்டி: விருந்தினர் இல்லங்கள் ஒரு இரவுக்கு 50-60 அமெரிக்க டாலர் முதல்; சன் சியாம் ஒல்ஹுவெலி போன்ற நடுத்தர ரிசார்ட்டுகள் 499 அமெரிக்க டாலர் முதல்; அதி-சொகுசுத் தங்குமிடங்கள் 1,000+ அமெரிக்க டாலர் முதல்.

நாங்கள் ஆண்டி அனிஸ் என்ற உள்ளூர் விவசாயியைச் சந்தித்தோம், அவர் எங்களை அவரது பண்ணைக்கு அழைத்துச் சென்று, அவரது வயலின் நடுவில் ஒரு பொன்னிற சதைப்பற்றுள்ள தர்பூசணியை வெட்டி எங்களுக்குக் கொடுத்தார், வெப்பத்தில் சாறு எங்கள் மணிக்கட்டில் வழிந்தது. பின்னர், அனிஸின் சிறிய பழச்சாறு கடையில், நாங்கள் தேங்காய் ஐஸ்கிரீம் சாப்பிட்டு, தீவு மெல்ல மாலைக்குள் அடங்குவதைக் கவனித்தோம்.

மாலத்தீவுகளில் ஆடம்பரத்தின் மறுவரையறை

எங்கள் பயணத்தின் இரண்டாம் பகுதி ஒரு வேறுபட்ட உலகமாக இருந்தது: சன் சியாம் ஒல்ஹுவெலி, தென் மாலே அடோலில் உள்ள, குடும்பங்களுக்கு ஏற்ற ஒரு ரிசார்ட். படகுத்துறையில் மேளங்கள், குளிர்ந்த துண்டுகள், புன்னகைக்கும் ஊழியர்கள் என வரவேற்பு அன்பானதாகவும், நாடகத்தனமாகவும் இருந்தது. ஆனால் என் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது அதன் எளிமை. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் எங்கள் ரிசார்ட் பிரதிநிதி ராயில், ஸ்நோர்கெல் கருவிகள் முதல் குழந்தைகளுக்கான மருந்து வரை எல்லாவற்றையும் வாட்ஸ்அப் வழியாகக் கையாண்டார்.

நாங்கள் இரண்டு படுக்கையறைகள் கொண்ட கடற்கரை வில்லாவை தேர்வு செய்தோம். அனைத்தையும் உள்ளடக்கிய திட்டத்தை எடுத்தோம். இது பொதுவானது என்று கருதி பெரும்பாலும் நிராகரிக்கப்படும் ஒரு மாதிரி. ஆனால் இங்கே அது விடுதலை உணர்வைத் தந்தது. மூன்று தீவுகளில் பரவியுள்ள 10க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் பார்களிலிருந்து எங்களால் தேர்ந்தெடுக்க முடிந்தது. அதேநேரத்தில் ஈடுபடக்கூடிய செயல்கள் மற்றும் பயணக் கட்டணங்கள் அனைத்தும் அதில் சேர்க்கப்பட்டிருந்தன. இது, ஒன்றாக நேரத்தைச் செலவிடுவதில் கவனம் செலுத்த எங்களுக்குச் சுதந்திரம் அளித்தது.

மாலத்தீவு, பட்ஜெட் சுற்றுலா

பட மூலாதாரம், Carmen Roberts

படக்குறிப்பு, குடும்பங்களுக்கு ஏற்ற ரிசார்ட்டுகளில் பயணிகள் தங்கலாம்,

அதி-சொகுசான, கட்டணம் இல்லாமல் பவளப் பாறை சாகசங்களைத் தேடும் குடும்பங்களுக்கு, சன் சியாம் ஒல்ஹுவெலி திருப்தி அளிக்கிறது. என் குழந்தைகள் கடற்கரையில் சுதந்திரமாக அலைந்தனர். பவளப் பாறைக்கு அருகில் சுறா குஞ்சுகளையும் ஆமைகளையும் கண்டனர், அதே சமயம் நான் ஷார்க் பாய்ண்ட் மற்றும் பனானா ரீஃப்பில் டைவ் செய்ய படகில் சென்றேன். அங்கு மேண்டா ரே மீன்கள் நிழல்கள் போல சறுக்கிச் சென்றன, மற்றும் ஹாக்ஸ்பில் ஆமைகள் பவளங்களின் மேற்பரப்பை மேய்ந்தன.

நிலத்தில் 6 நீச்சல் குளங்கள் (மாலத்தீவின் மிக நீளமான 210 மீ நீச்சல் குளம் உட்பட) விளையாட்டு மற்றும் ஓய்வு இரண்டிற்குமான இடங்களை வழங்கின. இந்த ரிசார்ட்நேர்த்தியான, ஆனால் எளிமையான, ஒருவகை அரவணைப்பை உள்ளடக்கிய ஒரு அரிய சமநிலையை அளிக்கிறது.

'சன் சியாம் கேர்ஸ்' திட்டத்தின் கீழ், விருந்தினர்கள் கடற்கரை சுத்தம் செய்யும் பணிகளில் சேரலாம், பவளங்களை நடலாம் மற்றும் காயல்களை மீட்டெடுக்கலாம். ரிசார்ட்டின் "மறுசுழற்சி-மீண்டும் பயன்படுத்துதல்" முன்முயற்சி, பழைய லினன் துணிகளைச் சுத்தம் செய்யும் துணிகளாக மாற்றுகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் படிப்படியாக முழுமையாக நீக்கப்படுகிறது. ஈரமான நீச்சலுடைக்காக நான் ஒரு பிளாஸ்டிக் பை கேட்டபோதும், "நாங்கள் இப்போது அவற்றைப் பயன்படுத்துவதில்லை" என்ற புன்னகையுடன் பதில் கிடைத்தது.

மாலத்தீவு, பட்ஜெட் சுற்றுலா

பட மூலாதாரம், Carmen Roberts

படக்குறிப்பு, உள்ளூர் தீவுகள் ஒதுக்கப்பட்ட "பிகினி கடற்கரை" பகுதிகளை ஒதுக்குகின்றன, அங்கு பார்வையாளர்கள் சுதந்திரமாக நீந்தலாம் மற்றும் சூரிய குளியல் எடுக்கலாம்

இந்த முயற்சி தனிப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு அப்பாற்பட்டது. சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் கொள்கை இப்போது கைகோர்த்துச் செல்கிறது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், ஆற்றலைப் பாதுகாத்தல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.

அதிபர் முகமது முய்சு தலைமையிலான அரசு ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது: 2028 க்குள் அதன் மின்சாரத்தில் 33 சதவிகிதத்தை புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து உருவாக்குவது. இது நாட்டின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதிலும், அதன் சுற்றுலாத் துறையைத் தாங்கி நிற்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதிலும் ஒரு முக்கிய படியாகும்.

மாலத்தீவு, பட்ஜெட் சுற்றுலா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் தோரிக் இப்ராஹிம் இந்த உத்தியை சுருக்கமாகக் கூறுகிறார்: "எங்களின் தூய்மையான சூழல் எங்கள் அடிப்படை சொத்து. எங்கள் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவித்து அடையும் வளர்ச்சியை நாங்கள் தேடவில்லை."

மாலத்தீவுகள், பரிணாமம் அடைந்து வருகிறது. அதுவும் அமைதியாக அல்ல. விருந்தினர் இல்லங்கள் மற்றும் குடும்பங்களால் நடத்தப்படும் தங்குமிடங்கள் இப்போது உள்ளூர் வாழ்க்கையுடன் அர்த்தமுள்ள சந்திப்புகளை வழங்குகின்றன. அதே நேரத்தில் மாலத்தீவுக்குச் சொந்தமான ரிசார்ட்டுகள் வசதி மற்றும் மனசாட்சி ஆகிய இரண்டும் ஒன்றாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றன.

ஒரு காலத்தில் அதிக கட்டணம் காரணமாக சொர்க்கத்தை நெருங்க முடியாத பயணிகளுக்கு, இந்தத் தீவுகள் இப்போது தனித்துவமானதை விட மிகவும் செழுமையான ஒன்றைக் கொடுக்கின்றன—அது உண்மையான தன்மை. ஒரு காலத்தில் தேனிலவு செல்வோரின் கனவாக இருந்தது, இப்போது குடும்பங்கள் ஆசைப்படக் கூடிய இடமாக இல்லாமல் மீண்டும் செல்லக்கூடிய இடமாக உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு