மாதந்தோறும் ரூ.1.5 கோடி: உத்தரபிரதேசத்தில் மிரட்டிப் பணம் பறித்த போலீஸ் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், X/adgzonevaranasi
- எழுதியவர், சையது மோசிஸ் இமாம்
- பதவி, பிபிசி செய்தியாளர்
உத்தரப்பிரதேச காவல்துறை மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. இந்த முறை காவல்துறையினருக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலியாவில் வாரணாசி ஏடிஜிபி மற்றும் ஆஸம்கர் டிஐஜி இணைந்து எடுத்த நடவடிக்கையால் நர்ஹி காவல் நிலைய சரகப்பகுதியில் மாதந்தோறும் சுமார் 1.50 கோடி ரூபாய் பணம் பறிக்கும் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் 2 போலீசார் உட்பட சுமார் 22 பேரை ஏடிஜிபி டீம் கைது செய்துள்ளது. பல போலீஸார் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த போலீஸார் லாரி ஓட்டுநர்களை மிரட்டி பணம் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களுடன் பல தரகர்களும் கூட்டு சேர்ந்துள்ளனர். இவர்கள் பலியாவின் பரௌலி (Barauli) எல்லையில் லாரிகளை நிறுத்தி சோதனை செய்து அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்ட பிறகே, அந்த லாரியை போக அனுமதிப்பார்கள்.
இந்தச் செய்தி வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, உத்தரபிரதேசத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் அரசு மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
"உத்திரபிரதேசத்தில் ஒரு புதிய விளையாட்டு நடக்கிறது. முன்பு 'திருடன் போலீஸ்’ விளையாட்டு நடக்கும். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் ‘போலீஸ் போலீஸ்’ விளையாட்டு நடக்கிறது. இது தான் இந்த அரசின் குற்றங்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கையின் (Zero Tolerance Policy) உண்மை நிலவரம்,” என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், ஊழலுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கை இது என்று மாநில அரசு கூறுகிறது.
பலியாவில் புதிய காவல்துறை கண்காணிப்பாளரையும் அரசு நியமித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்பியுடன் கூட்டம் ஒன்றையும் டிஐஜி நடத்தியுள்ளார்.
பரௌலி எல்லையில் மோசடி எப்படி நடந்தது?

பட மூலாதாரம், ANI
பிகாரில் உள்ள பக்சர் (Buxar) எனும் பகுதியிலிருந்து வரும் லாரிகள் பரெளலி எல்லை வழியாக உத்தரபிரதேசத்திற்குள் நுழைவது வழக்கம்.
போலீசாருக்கு பணம் கொடுத்த லாரிகள் மட்டுமே எளிதாக அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த எல்லை வழியாக தினமும் சுமார் 1,000 லாரிகள் கடந்து செல்கின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு லாரிக்கும் 500 ரூபாய் பெறப்பட்டதாக டிஐஜியே கூறியதாக ஆஸம்கரின் உள்ளூர் பத்திரிகையாளர் மானவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். ஆனால், "பரௌலி எல்லையில் இந்த மோசடி நடப்பது இன்று தொடங்கியது அல்ல. பல காலமாக போலீஸார் இப்படி பணம் வசூல் செய்து வருகின்றனர். இப்போது பிடிபட்டுள்ளனர்." என்றும் அவர் குறிப்பிட்டார்.
எல்லையில் சிவப்பு மண், மது மற்றும் விலங்குகள் கடத்தல் நடந்து வருவதாகவும், ஆனால் இவ்வளவு பெரிய அளவில் போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது இதுவே முதல் முறை என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
எல்லை காவல் நிலையங்களுக்கு ஏற்கனவே அவ்வளவாக நல்ல பெயர் இல்லை. 'இந்த முறைகேடான பண வசூல் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் ஊழல் இம்மியளவும் பொறுத்துக் கொள்ளப்படமாட்டாது என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கொள்கையின் விளைவு இது என்றும்' மாநில அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ரகசியத்தை அம்பலப்படுத்திய 2 நோட்டுப் புத்தகங்கள்

பட மூலாதாரம், X/digazamgarh
வாரணாசி மண்டலத்தின் ஏடிஜிபி பீயூஷ் மோர்டியா மற்றும் டிஐஜி வைபவ் கிருஷண் ஆகியோர் லாரி உதவியாளர்கள் போல மாறுவேடத்தில் இரவு 1.30 மணியளவில் லாரியில் ஏறி, உ.பி - பிகார் எல்லையில் உள்ள பரெளலி பிளாக் பகுதியை தங்கள் குழுவினருடன் அடைந்தனர். போலீஸார் லாரியை நிறுத்தி பணம் கேட்டபோது, ஏடிஜிபியுடன் வந்த குழுவினர் போலீஸார் மற்றும் புரோக்கர்களை பிடித்தனர்.
இந்த நடவடிக்கையில் போலீஸார் குறி வைக்கப்பட்டனர். திடீரென்று நடந்த இந்த நடவடிக்கையின் போது போலீஸ்காரர்களும் இன்ஸ்பெக்டரும் ஓடத் தொடங்கினார்கள். நர்ஹி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தப்பித்துச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சிலர் பிடிபட்டனர். நர்ஹி மற்றும் கொரந்தடி காவல் நிலைய பொறுப்பாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் பல நாட்களுக்கு முன்பே செய்யப்பட்டதாகவும், பக்சரில் இருந்து வரும் லாரிகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூல் செய்யப்படுவதாக டிஜிபி பிரசாந்த் குமாருக்கு புகார்கள் வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை கீழ்மட்ட அதிகாரிகள் விசாரித்தனர். அதில் புகார் உண்மை என்று கண்டறியப்பட்டது. பின்னர் ஏடிஜி தலைமையிலான 24 பேர் கொண்ட போலீஸ் குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
முக்கிய ஆதாரமாக இரண்டு நோட்டுப் புத்தகங்கள் கிடைத்துள்ளன. இதில் பல மாதங்களாக வசூலிக்கப்பட்ட தொகையின் விவரங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நோட்டுப் புத்தகங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இதில் மேலும் பல பெயர்கள் வெளிச்சத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு போலீசார் உட்பட 22 பேரை ஏடிஜிபி குழு கைது செய்துள்ளது. இன்ஸ்பெக்டர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்று போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த விவகாரத்தில் நர்ஹி காவல் நிலையப் பொறுப்பாளர் பன்னேலால் உள்ளிட்ட 9 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏடிஜிபி குழுவுடன் ஆஸம்கர் டிஐஜி வைபவ் கிருஷணும் இருந்தார்.
"தகவல் கிடைத்தவுடன் முதலில் ஆய்வு செய்யப்பட்டது. விஷயம் உறுதியானதும் ரெய்டு நடத்த முடிவானது. இந்த முடிவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது" என்று இதுகுறித்து வைபவ் கிருஷண் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை பற்றி பலியா எஸ்.பி-க்கு கூட தெரிவிக்கப்படவில்லை. உள்ளூர் எஸ்.பி-க்கும் ரெய்டு முடிந்த பிறகே தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்தார்.
சர்கிள் அதிகாரி மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்களின் சொத்துகள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
முன்னாள் டிஜிபி புகார் அளிக்கச் சென்றபோது..

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு எல்லையிலும் இதுபோன்ற திடீர் சோதனை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் டிஜிபி விக்ரம் சிங் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது போன்ற ரெய்டு நடப்பது இது முதல்முறை அல்ல. காவல்துறையை கண்காணிக்க கடந்த காலங்களிலும் போலீஸார் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
உத்தரபிரதேச முன்னாள் காவல்துறை டிஜிபி விக்ரம் சிங் ஒருமுறை லக்னோவில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணித்து கான்பூருக்குச் சென்றார்.
அங்கிருந்து ஆட்டோவில் காவல் நிலையத்தை அடைந்து புகார் அளிக்க முயன்றார். அப்போது பணியில் இருந்த அதிகாரி புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து பல போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அவர் டிஜிபியாக இருந்தபோது காவல்துறையில் ஊழலைத் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். மீரட் நகரில் லாரியில் பயணம் செய்த விக்ரம் சிங் மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.
பிபிசியிடம் பேசிய விக்ரம் சிங், ஒவ்வொரு எல்லையிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். சாஹிபாபாத் முதல் வாரணாசியின் சையத் ராஜா வரை ஒவ்வொரு எல்லையிலும் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தனது பதவிக்காலத்தில் 555 காவலர்களை பணிநீக்கம் செய்ததாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் விகரம் சிங் குறிப்பிட்டார்.
“கீழ்மட்ட நிலையில் இருக்கும் போலீஸார் லஞ்சம் வாங்க பயப்படும் அளவிற்கு காவல்துறை மேலதிகாரி குறித்த பயம் இருக்க வேண்டும். பிடிபட்டவர்கள் யாராக இருந்தாலும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். பலியா விவகாரத்தில் இடைநீக்கம் செய்தால் மட்டும் போதாது. மாறாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
”சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் போலீஸாரின் பண ஆசையை ஏடிஜிபியின் ரெய்டு நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. எனவே வெளிப்படையாக லஞ்ச ஊழலில் சிக்கியவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். ஏனெனில் ஏடிஜிபி அவர்களை ரெய்டு நடத்தி பிடித்துள்ளார்,” என்றார் அவர்.
இந்த வழக்கில் 16 தரகர்கள் பிடிபட்டுள்ளதாக ஆஸம்கர் காவல்துறை தெரிவித்துள்ளது. 14 மோட்டார் சைக்கிள்கள், 25 மொபைல் போன்கள், 2 நோட்டுப் புத்தகங்கள் மற்றும் 37,500 ரூபாய் ரொக்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சோதனைக்குப் பிறகு மூன்று போலீசார் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
டிஜிபியும் கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். பலியா எஸ்பி தேவரஞ்சன் வர்மா மற்றும் ஏஎஸ்பி துர்கா சங்கர் திவாரி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சர்கிள் அதிகாரி சதர் சுப் சுசிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
"ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 1.50 கோடி ரூபாய் இதன் மூலம் வசூலானது. இது காவல்துறையினருக்கும் அவர்களது தரகர்களுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது" என்று டிஐஜி கூறினார்.
இது முதல் முறை அல்ல

பட மூலாதாரம், ANI
வாரணாசி மண்டலத்தில் போலீசார் குற்றச்செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல.
வாரணாசி நதேசர் சாவடி இன்ஸ்பெக்டர் சூர்ய பிரகாஷ் பாண்டே 42 லட்சம் ரூபாய் பணப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் கடந்த மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. தொழிலதிபர் ஒருவரிடமிருந்து இந்தப் பணம் பறிக்கப்பட்டது.
பேருந்தில் பயணித்த தொழிலதிபரை திரைப்பட பாணியில் சோதனையிட்ட இன்ஸ்பெக்டர், 93 லட்சம் ரூபாயை அவரிடமிருந்து கைப்பற்றினார். பின்னர் அது ஹவாலா பணம் என்று கூறி 42 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மீதி 50 லட்சத்தை தொழிலதிபரிடம் திருப்பி கொடுத்தார்.
போலீஸார் விசாரணையை தொடங்கிய போது சிசிடிவி மூலம் துப்பு கிடைத்தது. ஆனால் இன்ஸ்பெக்டரே பலமுறை போனில் தொடர்பு கொண்டு விசாரணையின் முன்னேற்றத்தை பற்றிக் கேட்டபோது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதேபோல் 2024 ஏப்ரலில் அம்பேத்கர் நகரில் மூன்று போலீஸார் மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவரை அடித்து 80 ஆயிரம் ரூபாயை பறித்துக்கொண்டதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
2020 ஜூலையில், கான்பூரில் பிக்ரு சம்பவம் நடந்தது. இதில் கேங்க்ஸ்டர் விகாஸ் துபே, துணை எஸ்பி உட்பட 8 காவலர்களைக் கொன்றார். இதிலும் சில போலீஸாரின் பங்கு இருப்பதாக சந்தேகம் நிலவியது.
விகாஸ் துபேயை போலீசார் என்கவுன்டரில் கொன்றாலும் கூட காவல்துறையின் மீது படிந்த கறை இன்னும் அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தில் ஐபிஎஸ் அனந்த் தேவ் மாநில அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குஜராத்திலும் இதேபோன்ற விவகாரம்
குஜராத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு தெரிவிக்கிறது. இது குறித்து குஜராத்தில் விசாரணை நடபெற்று வருகிறது. இதில் ஜூனாகட்டின் மூன்று போலீஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமலாக்க இயக்குநரக அறிக்கைக்குப் பிறகு சுமார் 300 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் கேரள தொழிலதிபரின் வங்கிக்கணக்கின் முடக்கத்தை நீக்குவதற்காக 25 லட்சம் ரூபாய் பணம் கேட்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












