டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை: தமிழ்நாடு காவல்துறையில் தொடரும் தற்கொலைகளுக்கு என்ன காரணம்?

காவல்துறையில் தற்கொலைகள் தொடர்வது ஏன்?
படக்குறிப்பு, கோவை டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமார் (தற்கொலை செய்து கொண்டவர்)
    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

காவல்துறையில் நடக்கும் தற்கொலைகளைப் பொருத்தவரை, பெரும்பாலும் பணிச்சுமையே காரணமாகக் கூறப்படுகிறது. அது உண்மையா? டி.ஐ.ஜி. விஜயகுமார் விவகாரத்தில் என்ன நடந்தது?

காவல்துறை பணிச் சூழல் எப்படி இருக்கும்? அதற்காக காவலர்கள் எவ்வாறு தயார் செய்யப்படுகிறார்கள்?

காவலர்களின் குறை தீர்க்க காவல்துறையில் என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன? மன அழுத்தத்தில் உழல்பவர்களை எவ்வாறு மீட்பது?

இதுகுறித்த விவரங்களை இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

கோவை டி.ஐ.ஜி. விஜயகுமாரின் தற்கொலை தமிழ்நாடு காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரம் மிக்க பதவியில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையில் தற்கொலைகள் தொடர்வது ஏன்?

காவலர் முதல் டி.ஐ.ஜி. வரை தொடரும் தற்கொலை

இந்தியாவில் அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 2021ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிகபட்சமாக 18,925 பேர் தற்கொலை செய்துகொண்டதாக கடந்த டிசம்பரில் மக்களவையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை தெரிவித்தது. அதிலும் குடும்பம் குடும்பமாகத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகள் தமிழ்நாட்டில்தான் அதிகம்.

வட்டிக்கடன், சீட்டு பிடிப்பது உள்ளிட்ட நிதி மோசடிகளுக்கு இதுபோன்ற தற்கொலைகளில் முக்கியப் பங்கு உண்டு. அத்தகைய தற்கொலைக்கான காரணிகளைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவல்துறையிலேயே தற்கொலைகள் தொடர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கும் விஷயம். தமிழ்நாட்டில் சாதாரண காவலரில் இருந்து டி.எஸ்.பி., டி.ஐ.ஜி. வரை அந்தப் பட்டியல் நீள்கிறது.

காவலர்கள் தற்கொலை அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து வந்தாலும் சில மட்டுமே அதிக கவனம் பெறுகின்றன. சாதிப் பின்னணி கொண்ட கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா 2015ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளப்பியது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படைக் காவலர் அருண் குமார் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஆலோசனை

அதன் தொடர்ச்சியாக, கோவை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த விஜயகுமாரின் தற்கொலை காவல்துறை வட்டாரத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாகியுள்ளது.

காவல்துறையில் நிகழும் ஒவ்வொரு தற்கொலையின்போதும் கூறப்படுவது போன்றே இதற்கும், பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தமே காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

பின்னர், ஓ.சி.டி. மன அழுத்தத்திற்கு சில ஆண்டுகளாகவே அவர் மருந்துகளை எடுத்து வந்தார் என்ற தகவல் வெளியானது. இறுதியாக, டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் அல்ல என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

ஆனாலும், காவல்துறையில் தற்கொலைகள் இனியும் நிகழாமல் தடுக்கும் நோக்குடன், காவலர்களின் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, மதுரையில் காவல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய சங்கர் ஜிவால், "உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்கவேண்டும, பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.

காவல்துறையில் தற்கொலைகள் தொடர்வது ஏன்?
படக்குறிப்பு, சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி.

டி.ஐ.ஜி.க்கு பணிச்சுமை இருக்காது - முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ்

காவலர் தற்கொலை குறித்து தற்போது எழுந்துள்ள விவாதத்திற்குக் காரணமான கோவை டி.ஐ.ஜி. விஜயகுமாரின் தற்கொலைக்கு வழக்கமாகக் கூறப்படும் பணிச்சுமையா அல்லது வேறு காரணமா என்பதைப் புரிந்துகொள்ள அறிய அவரது பணிச்சூழல் குறித்து அறிய முற்பட்டோம்.

அதற்காக, தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜை தொடர்பு கொண்டோம். டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமையைக் காட்டிலும் தனிப்பட்ட விஷயங்களே காரணமாக இருக்கலாம் என்பதே அவரது கருத்தாக இருந்தது.

காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களைப் பொறுத்தவரை, பணிச்சுமை மட்டுமின்றி தனிப்பட்ட காரணங்களும் அதற்கான தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்கிறார் அவர்.

குறிப்பாக டி.ஐ.ஜி விவகாரத்திலும், "ஒரு டி.ஐ.ஜி.க்கு பணிச்சுமை என்பது பெரிதாக இருக்காது. டி.ஐ.ஜி. எந்தவொரு வழக்கையும் நேரடியாகக் கையாள்வதில்லை. அவர் கண்காணிக்கும் அதிகாரி.

அவரது அதிகாரத்தின்கீழ் வரும் பகுதியில் உள்ள முக்கியமான வழக்குகளின் முன்னேற்றமோ பின்னடைவோ அவருக்கு நெருக்கடியைத் தரலாம். ஆனால், அது அந்தந்த சூழ்நிலையைப் பொருத்தது," என்று கூறுகிறார் முன்னாள் டி.ஜி.பி. நட்ராஜ்.

நாட்டிலேயே தற்கொலை அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. "காவல்துறையில் ஆள் தேர்வின் போதே மனநலப் பரிசோதனை செய்யப்படுகிறது. ஏனெனில், மற்ற துறைகளைப் போல காவல்துறை என்பது கோப்புகளைப் பார்வையிடும் பணி அல்ல.

காவல்துறை பணி என்பது மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது, அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் பணி. பல தரப்பட்ட மக்களையும் காவல்துறையினர் எதிர்கொள்ள நேரிடும்," என்று நட்ராஜ் கூறினார்.

மேலும், தற்கொலை என்பது நன்கு யோசித்து எடுக்கப்படும் முடிவல்ல, அது கணநேரத்தில் எடுக்கப்படு முடிவு எனக் கூறுகிறார் அவர்.

ஆகவே, மன உளைச்சல் தரும் நெருக்கடியான தருணங்களில் உறவினர்களிடமோ, நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ மனம் விட்டு பேச வேண்டும் என்கிறார். உரையாடல் என்பது மிகவும் முக்கியம். அதுவே, மன நெருக்கடியைக் குறைக்க வல்லது.

"காவலர் குறைதீர் வழிமுறை சரிவர கையாளப்பட வேண்டும்"

காவல்துறையில் தற்கொலைகள் தொடர்வது ஏன்?

பட மூலாதாரம், FB/Nataraj Ramachandran

படக்குறிப்பு, நட்ராஜ், முன்னாள் டி.ஜி.பி., தமிழ்நாடு காவல்துறை

பொதுமக்களின் நலன் காக்க முதலில் காவல்துறையினர் குறைகளின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும் முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் வலியுறுத்துகிறார்.

அதற்காகவே, வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் காவலர் குறை கேட்கும் நாளாகக் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த நாட்களில் குறிப்பிட்ட உயர் அதிகாரி அங்கே இருந்து காவலர்களின் பணிச்சுமை, குறைகளைக் கேட்டறிந்து, அடுத்த ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது விதி.

இதன் மூலம் ஒவ்வொரு காவலரின் தனிப்பட்ட நலனையும் உயர் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்பது உறுதி செய்யப்படும். ஆனால், "உயர் அதிகாரிகளின் பணிச்சுமை காரணமாகப் பல நேரங்களில் இது முறையாக நடக்காமல் போய்விடுகிறது," என்கிறார் நட்ராஜ்.

காவலர்களின் குறைகளைத் தீர்க்க காவல்துறையில் ஏற்கெனவே இருக்கும் "இந்த செயல்முறை சரிவர செயல்பட்டாலே போதும்.காவலர்கள் சொந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபட்டு, பொதுமக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முனைப்புடன் செயல்பட முடியும்."

எந்தவொரு செயல்முறையும் தொடக்கத்தில் நன்றாக இருக்கும், பின்னர் "காலம் செல்லச்செல்ல தொய்வடைந்துவிடும் என்பதுதான் நம்முடைய பிரச்னையே."

அவ்வாறு இல்லாமல், காவலர்களின் குறை தீர்க்கும் செயல்முறைகளை வழுவாமல் தொடர்ந்தாலே தற்கொலை போன்ற விபரீதங்களை தடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

"தற்கொலை தனிநபர் சார்ந்தது, பணியுடன் தொடர்புபடுத்தக் கூடாது"

தற்கொலை என்பது தனிப்பட்ட மனிதரின் மனநிலை சார்ந்தது என்றும் அதை அவர் செய்யும் வேலையுடன் தொடர்புபடுத்தக்கூடாது என்றும் கூறுகிறார் இவர் டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு பரிச்சயமானவரும் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளருமான கருணாநிதி.

மேலும், "பயிற்சியின் போதே காவல்துறை வேலை எப்படிப்பட்டது, அதில் உள்ள கஷ்டங்கள் என்ன என்பதையெல்லாம் அறிந்துகொண்ட பின்னரே வழக்கமான பணியில் சேர்கிறார்கள்.

காவல்துறையைப் பொருத்தவரை, நாளைய பணி எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூறிவிட முடியாது. காவலரின் பணி ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும்," என்று காவல்துறை பணிச்சூழல் குறித்து விவரித்தார்.

நாள்தோறும் மாறும் பணிச் சூழலை சமாளிப்பது ஒவ்வொரு காவலரின் தனிப்பட்ட புத்திசாலித்தனத்தைப் பொருத்தது என்று கூறிய கருணாநிதி, திறமையற்றவர்கள், பணியில் நேர்மையற்றவர்கள் போன்றவர்களே மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்றும் தெரிவித்தார்.

"விஜயகுமாருடன் பரிச்சயம் உண்டு, அவர் நேர்மையானவர்"

தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாருடனான தனது பரிச்சயம், அவரது குணநலன்கள் குறித்துப் பேசிய அவர், "அவர் நேர்மையானவர், தவறு செய்யாத நல்ல அதிகாரி என்று பெயரெடுத்தவர். அதனால்தான், கோவை போன்ற முக்கியமான பகுதிக்கு டி.ஐ.ஜி.யாக அவர் நியமனம் பெற்றார்," என்றும் கருநாணிந்தி கூறினார்.

மேலும், "பணியில் இருக்கும் சவால்களை சந்திக்கும் புத்திசாலித்தனம் அவருக்கு உண்டு. ஆனால், குடும்ப பிரச்னைகளோ, நாள்பட்ட உடல்நலப் பிரச்னைகளோ இருந்திருக்கலாம். அதுபோன்ற சூழலில்தான், சிலர் இல்லாத ஒன்றை இருப்பது போலக் கற்பனை செய்து கொள்ளும் மாயத்தோற்றம் (Hallucination) கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள்," என்றார்.

தான் காவல்துறையில் பணியாற்றியபோது விஜயகுமாருடன் பரிச்சயம் ஏற்பட்டதாகக் கூறுகிறார் கருணாநிதி.

"அவர் மனநலப் பிரச்னைக்காக மருந்து எடுத்துக் கொண்டதாகக் கூறுகிறார்கள். அவரது உறவினர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் அவரைப் பற்றி தெரிந்திருக்கும். காவல்துறை உயர் அதிகாரிகளின் விசாரணையில் உண்மைகள் வெளிவரும்."

திமுகவோ, அதிமுகவோ எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதுவார்கள். காவல்துறையை நல்லவிதமாகவே கவனித்துக் கொள்வார்கள் என்கிறார் அவர்.

ஏனென்றால், "எந்தவொரு அரசுக்குமே சட்டம், ஒழுங்கை நல்லபடியாக பராமரிக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்று அல்லவா!

என்ன ஒன்று, காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த உயர் பதவிகளைப் பெறுபவர்கள்தான் பதவியில் இருக்கும் கட்சியைப் பொருத்து மாறுபடுவார்கள். இரு கட்சி ஆட்சியிலுமே நல்ல பெயருடன் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்." என்று அவர் தெரிவித்தார்.

"தற்கொலை எண்ணம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்"

ஒரு மனிதனை தற்கொலைக்குத் தூண்டுவது எது? தற்கொலை எண்ணங்களில் இருந்து எவ்வாறு மீள்வது? உங்கள் நேசத்திற்குரிய உறவுகள், நட்புகளை தற்கொலை எண்ணங்களில் இருந்து மீட்பது எப்படி?

தற்கொலை குறித்த ஆக்கப்பூர்வ விவாதங்கள் எழுந்துள்ள இந்த நேரத்தில், இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இதற்காக, மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம். அவரோ, மன அழுத்தத்தில் இருப்பவர் மட்டுமல்ல, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய நபர் உள்பட, யாருக்கு வேண்டுமானாலும் தற்கொலை எண்ணங்கள் வரலாம் என்று கூறி நமக்கு அதிர்ச்சி தந்தார்.

டி.ஐ.ஜி. விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், ஓ.சி.டி. மருந்துகள் எடுத்துக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். கொரோனா காலத்தில் நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்கவேண்டும் என்று எப்படிச் சொல்லப்பட்டதோ, அதேபோல மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம். மனநல சிகிச்சையில் அதையே தாங்கள் பிரதானமாக வலியுறுத்துவதாக அவர் கூறுகிறார்.

"தற்கொலை என்பதை பலரும் புறத்தே நிகழும் எதிர்மறை நிகழ்வுகளுக்கான எதிர்வினையாக எடுத்துக் கொள்கிறார்கள். அது மட்டுமே காரணமல்ல.

நமக்குள்ளேயே நிகழும் சில ரசாயன மாற்றங்கள் (Endogenous depression) காரணமாகவும் தற்கொலை எண்ணங்கள் வரலாம். ஆகவே, தற்கொலை எண்ணம் என்பது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆகவே, மன அழுத்தத்தில் இருப்பவருக்கு மட்டுமே தற்கொலை எண்ணம் வரும் என்று நினைப்பது தவறு," என்று விளக்கினார் அசோகன்.

மேலும், தற்கொலை என்பது கண நேரத்தில் எடுத்துவிடக்கூடிய முடிவு என்பதால், அதற்கு ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்க முடியாது என்று விவரித்தார்.

"பல வகையான காரணங்கள் ஒன்று சேரும் போதே தற்கொலை முடிவுக்கு ஒருவர் தூண்டப்படுவார். பல சுற்றுகள் ஓடவேண்டிய ஒரு நீண்ட தூர ஓட்டத்தில் எத்தனையாவது சுற்றில் இருக்கிறோம் என்றே தெரியாத ஒருவர், திடீரென ஒரு கட்டத்தில் சரிந்து விழுவதைப் போன்றதே இதுவும். அது ஆரம்பத்திலோ, பாதியிலோ அல்லது கடைசிச் சுற்றிலோகூட இருக்கலாம்," என்று கூறினார் மனநல மருத்துவர் அசோகன்.

காவல்துறையில் தற்கொலைகள் தொடர்வது ஏன்?
படக்குறிப்பு, அசோகன், மனநல மருத்துவர்

"மனம் விட்டுப் பேசுவதே மன அழுத்தத்திற்கு நல்ல மருந்து"

தொடர்ந்து, மன அழுத்தத்தில் இருப்பவர்கள் எவ்வாறு அதில் இருந்து மீள்வது, மன அழுத்தத்தில் தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்களை எவ்வாறு கண்டுகொள்வது என்பது குறித்தும் அசோகன் விளக்கம் அளித்தார்.

அப்போது, மிகுந்த மன அழுத்தத்தில் எந்த நேரத்திலும் தற்கொலை எண்ணத்திற்கு ஆட்படலாம் என்ற நிலையில் இருக்கும் நபர்கள் சரியான தூக்கமோ, சாப்பாடோ அல்லது இயல்பான ஆற்றலோ இல்லாமல் சோர்வாக இருப்பார்கள் என்று விவரித்தார்.

"யாருடனும் ஒட்டாமல் எப்போதும் விலகியே இருப்பார்கள். பெரும்பாலும் தனிமையில் அமைதியாக இருப்பார்கள். மற்றவர்களுடன் நெருங்கிப் பழகவே மாட்டார்கள்.

இந்த இடத்தில்தான், அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத பிச்சைக்காரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருப்பதும், சமூகத்தில் அதிகாரம் மிக்க செல்வாக்கான நபர்கள் மன நெருக்கடியில் சிக்கி உழல்வதும் வேறுபடுகின்றது."

ஆகவே, சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாமல், யாருடனும் பேசாமல் தனித்தே அமைதியாக யாரேனும் உங்கள் நட்பு வட்டத்தில் தென்பட்டால் அவருடன் மனம் விட்டு பேச முயலுங்கள் அல்லது அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்களை பேசச் செய்யுங்கள் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

அதுவும் இல்லையென்றால் அவர்கள் மனநல மருத்துவரை அணுகி உதவி பெறச் செய்யலாம். மன உளைச்சலுக்கு நிவாரணம் மற்றவர்களிடம் இருந்து விலகியே இருக்காமல் உங்களை வெளிப்படுத்திக் கொள்வதே, மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசுவதே," என்று மருத்துவர் அசோகன் விளக்கம் அளித்தார்.

தற்கொலை தீர்வல்ல

மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: