மின்சாரத்துறை மீது ரூ.397 கோடி ஊழல் புகார்: செந்தில் பாலாஜிக்கும் தொடர்பா? அரசு என்ன சொல்கிறது?

செந்தில் பாலாஜி
    • எழுதியவர், இரா.சிவா
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை எழுப்பி பரபரப்பை கிளப்பி உள்ளது அறப்போர் இயக்கம்.

ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், அவர் வகித்த துறை மீது எழுந்துள்ள புதிய ஊழல் குற்றச்சாட்டு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இது தொடர்பாக 288 பக்க ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் புகாரும் அளித்துள்ளது.

அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு என்ன?

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 45 ஆயிரம் மின் விநியோக மாற்றிகள் (Distribution transformer) கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த மின்விநியோக மாற்றிகள் 25kva, 63kva, 100kva, 200kva, 250 kva, 500 kva என பல கொள்திறனில் கோரப்பட்டுள்ளன.

இதற்கான பல ஒப்பந்தங்கள் கடந்த 2021 அக்டோபரில் கோரப்பட்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டன.

இந்த ஒப்பந்த கோரலில்தான் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாகவும், ஒப்பந்ததாரர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் இணைந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டிருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டுகிறது.

கூட்டுச்சதியா?

இந்த டெண்டர்களில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களும் அந்தந்த டெண்டரில் ஒரே தொகையில் டெண்டர் கோரி இருப்பதை கூட்டுச் சதியாக சந்தேகிக்கிறது அறப்போர் இயக்கம்.

உதாரணமாக, 2022 ஆகஸ்ட் 12ஆம் தேதி திறக்கப்பட்ட 1,000 எண்ணிக்கையிலான 200 கிலோவோல்ட் ஆம்பியர் (200KVA) மின் விநியோக மாற்றிக்கான டெண்டரில் 30 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த 30 நிறுவனங்களுமே ரூ.7,07,823-ஐ ஒப்பந்த தொகையாக கோரியுள்ளன.

2022 ஆகஸ்ட் 11ஆம் தேதி திறக்கப்பட்ட 3,000 எண்ணிக்கையிலான 100 கிலோவோல்ட் ஆம்பியர் (100KVA) மின் விநியோக மாற்றிக்கான டெண்டரில் 31 நிறுவனங்கள் கலந்துகொண்டன. இதில், ஒருவர் ரூ.4,63,858க்கு டெண்டர் கோர, மற்ற 30 பேரும் ஒரே தொகையாக ரூ.4,69,935-க்கு கோரியுள்ளனர்.

இது போல பல்வேறு டெண்டரில் ஒரே தொகையை பலர் கோரியிருப்பதை அறப்போர் இயக்கத்தால் தொகுக்கப்பட்ட கீழ்காணும் ஆவணங்களில் காண முடிகிறது.

அறப்போர் இயக்கம்

பட மூலாதாரம், Arappor Iyakkam

அறப்போர் இயக்கம்

பட மூலாதாரம், Arappor Iyakkam

டெண்டருக்கு முன்னதாக அனைவரும் இணைந்து கூட்டுச் சதி செய்தால் மட்டுமே இது சாத்தியம் என்கிறது அறப்போர் இயக்கம்.

இது தொடர்பான அரசு தரப்பு விளக்கத்தை அறிய தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ராஜேஷ் லகானி ஐ.ஏ.எஸ்.ஸை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசுத் தரப்பில் விரிவான விளக்கம் விரைவில் அளிக்கப்படும் என சுருக்கமாக முடித்துக் கொண்டார் ராஜேஷ் லகானி ஐ.ஏ.எஸ்.

இந்த நிலையில், 18 பக்க அரசுத் தரப்பு விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரே தொகையை பல ஒப்பந்ததாரர்கள் கோரியிருப்பது தொடர்பான குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துள்ள அரசு, இந்த நடைமுறை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டுவருவதாகக் கூறுகிறது.

இந்த நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இயங்கிவருவதால் அவர்களுக்கு மற்ற நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் தெரிய வாய்ப்புள்ளதாகவும் அரசு கூறுகிறது.

சந்தைவிலையைவிட அதிகம்

ஆனால், அந்தக் குற்றச்சாட்டோடு நில்லாமல் அனைத்து மின்மாற்றிகளும் சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டுகிறது.

உதாரணமாக, 800 எண்ணிக்கையிலான 500 kva மின் விநினியோக மாற்றிக்கான டெண்டர் 12,49,800 ரூபாய்க்கு இறுதி செய்யப்பட்டு 16 ஒப்பந்ததாரர்களுக்கு தலா 50 வீதம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

ஆனால், அதே காலகட்டத்தில் அதே தரத்தில் 500 kva மின் விநினியோக மாற்றியை ராஜஸ்தான் அரசு 7,87,311 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.

அதேபோல, மத்திய அரசின் ஜெம் போர்டலில் இந்த மின்மாற்றி ரூ.8,91,000-க்கே கிடைப்பதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.

இவை அனைத்தையும் ஒப்பிடும் அந்த இயக்கம், 500 kva மின் விநியோக மாற்றிக்கான ஒப்பந்தத்தில் மட்டும் ரூ.34 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டுகிறது.

அந்த வகையில், 7 டெண்டர்கள் மூலம் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக கூறும் அறப்போர் இயக்கம், டெண்டர் வாரியாக அதைப் பட்டியலும் இட்டுள்ளது.

அறப்போர் இயக்கம்

பட மூலாதாரம், Arappor Iyakkam

இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் அரசு, தமிழ்நாட்டில் காப்பர் மின்சுருள் மின்மாற்றி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்தக் குற்றச்சாட்டில் விலை குறைந்த அலுமினிய மின்சுருள் மின்மாற்றியோடு அதன் விலை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள மின்மாற்றிகள் 3 ஆண்டுகள் மட்டுமே உத்திரவாதம் கொண்டவை எனவும், தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்துள்ள மின்மாற்றிகள் 5 ஆண்டுகள் உத்திரவாதம் கொண்டவை எனவும் அரசு கூறுகிறது. எனவே கொள்முதல் விலை சற்று கூடுதலாக இருக்கும் என்பது அரசின் வாதம்.

அதோடு, ஜெம் போர்டலில் ஒப்பீடு செய்யப்பட்டுள்ள விலை டெண்டர் கோரப்பட்ட காலத்தில் இருந்த விலை அல்ல என்றும் அரசு கூறுகிறது.

அரசு தரப்பு விளக்கம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம், அரசு அளித்துள்ள விளக்கம் அபத்தமாக உள்ளதாகக் கூறுகிறார்.

''63KVA மற்றும் 100KVA மின்மாற்றி தவிர அனைத்து மின்மாற்றிகளையும் காப்பர் மின்மாற்றி விலையுடன்தான் நாங்கள் ஒப்பிட்டுள்ளோம். காப்பர் மின்மாற்றி விலை அலுமினியை மின்மாற்றியைவிட 3 மடங்கு அதிகம் என்று சொல்வது மிகவும் அபத்தமானது. காப்பர் மின்சுருளின் விலை வேண்டுமானால் அலுமினிய மின்சுருளைவிட 3 மடங்கு அதிகமாக இருக்கலாம். ஒரு மின்மாற்றியில் 25 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் மின்சுருள் இருக்கும். அப்படி இருக்கும் போது மொத்த மின்மாற்றியின் விலையும் 3 மடங்கு அதிகம் என்று எப்படி சொல்ல முடியும்'' எனக் கேள்வி எழுப்புகிறார் ஜெயராம்.

அரசு தரப்பு விளக்கத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஆதாரத்துடன் விரிவான அறிக்கை அறப்போர் இயக்க தரப்பிலிருந்து வெளியிடப்படும் என்றும் ஜெயராம் கூறுகிறார்.

காப்பர் மின்மாற்றி, அலுமினிய மின்மாற்றி என்ன வித்தியாசம்?

காப்பர் மற்றும் அலுமினிய மின்மாற்றிக்கு இடையே என்ன வித்தியாசம் என தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க தலைவர் எஸ். காந்தியிடம் கேட்டோம்.

''மின் விநியோக மாற்றியில் (Distribution Transformers) உயர் அழுத்தம், தாழ்வு அழுத்தம் என வயர்களாலான இரண்டு சுற்றுகள் இருக்கும். காப்பர் மின்மாற்றியில் இந்த சுற்றுகள் தாமிர வயர்களால் ஆனது; அலுமினிய மின்மாற்றியில் இந்த சுற்றுகள் அலுமினிய வயர்களால் ஆனது.

காப்பர் மின்மாற்றியோடு ஒப்பிடும் போது அலுமினிய மின்மாற்றி விலை குறைவு. ஆனால், அலுமினிய மின்மாற்றி வழியாக மின்சாரம் அனுப்பப்படும் போது கூடுதல் மின்சார இழப்பு ஏற்படும்.'' என்றார் எஸ். காந்தி.

அலுமினிய மின்மாற்றி பராமரிப்பு செலவுமிக்கது என்பதால் பெரும்பாலும் காப்பர் மின்மாற்றியே இன்று அதிகம் பயன்படுத்தப்படுவதாக எஸ்.காந்தி கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: